சிறகசைத்து ஓய்ந்த நீலகண்டப் பறவை

சிறகசைத்து ஓய்ந்த
நீலகண்டப் பறவை

(செப். 7, 2014 அன்று மறைந்த மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத்தாளர் சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவுக்கான இரங்கல் குறிப்பு)
                                     அன்பரசு சண்முகம்


கிளை நூலகத்தில் வேகமாக செய்தித்தாளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது ஒரே ஒரு நாளிதழில் சு.கிருஷ்ணமூர்த்தி காலமான செய்தி கண்டு சிறிது நேரம் எனக்கு தலையில் எந்த சிந்தனைகளும் ஓடாமல் சூனியமானது போல் இருந்தது. அவரைப் பற்றிய எந்த செய்திகளும் என்னால் படிக்க முடியவில்லை. அவரது புகைப்படத்தைப் பார்த்தவாறே இருந்தேன். அவரின் முகவரி நான் படித்த அவரது பெரும்பான்மை புத்தகங்களில் இருந்தது இல்லை. அவருக்கு நான் கடிதம் ஒன்றினை எழுதியிருப்பதாக ஒரு நினைவு மிச்சமிருந்தது. சென்னையில் மயிலாப்பூரில் சகோதரருடன் அறையில் தங்கி வேலை தேடி பத்திரிகைகளுக்கு அலைந்து கொண்டிருந்த போது, எழுத்தாளர் ஸ்ரீராம் அவர்களிடம் படிக்க புத்தகங்கள் கோருவேன்.
அவரிடமிருந்துதான் சு.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கமலாதாஸ் எனும் (புத்தகத்தின் பெயர் தவறாக இருக்கக்கூடும்) பெண்ணின் வாழ்க்கை சுயசரிதத்தை மொழிபெயர்த்திருந்தார். அதில் இருந்த சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் முகவரிக்கு அந்த நூலைக்குறித்தும், அதற்கு முன் அவருடைய மொழிபெயர்ப்பில் படித்திருந்த ‘சிப்பியின் வயிற்றில் முத்து’ – போதி சத்வ மைத்ரேய, ‘திருமணமாகாதவள்’, தேவதாஸ் – சரத் சந்திரர் ஆகிய நூல்களைப் பற்றியும், அவர் மொழிபெயர்ப்பு குறித்தும் எனது கருத்துக்களை அவருடன் பகிர்ந்துகொண்டு கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். வாசகர்கள் பதிலெழுதுவது இயல்பானது என்றாலும் எழுத்தாளர்கள் அந்த கடிதத்திற்கு மதிப்பளித்து கடிதம் எழுதுவது என்பது என்னைப் பொறுத்தவரை நான் கடிதம் எழுதியவர்களில் வண்ணதாசன், ஜெயமோகன் அடுத்து நிகழ்ந்தது சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம்தான்.
மூல ஆசிரியனை புகழ்பெற வைப்பது அதனை குறிப்பிட்ட மொழியில் மொழிபெயர்ப்பவரின் தனித்திறமை என்பதில் எந்த சந்தேகமுமில்லை. தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தவர் வங்கத்து இலக்கியங்களைப் படிப்பதற்காகவே வங்க மொழியினை கற்றுக்கொண்டார் சு.கிருஷ்ணமூர்த்தி என்பது உண்மையிலே இலக்கியத்தின் மேல் அவர் கொண்டிருந்த பெரும் காதலைத்தான் நமக்கு உணர்த்துகிறது. மூல ஆசிரியனுக்கு கிடைக்கும் மரியாதையில் ஒரு பங்கு கூட அதனை தமது மொழித்திறமையால் ஒவ்வொரு மொழியிலும் அறிமுகப்படுத்தும் மொழிபெயர்ப்பாளனுக்கு கிடைப்பதில்லை என்று உலகமெங்கும் உணர்ந்த உண்மை.
மூல மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பது என்பது மிகக் கடினமான பணி. எந்த மொழியிலிருந்து நூல் வெளியானாலும் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க பலர் உண்டு. ஆனால் பல முக்கிய படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்க இன்றும் யாரும் முன்வரவில்லை. மூல மொழியிலிருந்து மொழிபெயர்க்கும் திறமை பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் என்று வெ.ஸ்ரீராம், சரஸ்வதி ராம்நாத், அரும்பு சுப்பிரமணியன் என்று சிலரைக் குறிப்பிட முடியும்.
     தமிழ்மொழிபெயர்ப்பிற்கான ஒரு ஆதரவான நிலை உருவாக காலத்திலிருந்து பெரும் உளவுந்துதலுடன் தான் முதல் ரசிகனாக ரசித்த ஒரு நாவலினை, படைப்பை மற்றவர்களுக்கு அவர்களது மொழியிலே அறிமுகம் செய்து வைக்கும் முயற்சி எவ்வளவு அர்ப்பணிப்பான உழைப்பைக்கோருகிற பணி. பெரும்பாலான வங்கத்து நூல்களை சு.கிருஷ்ணமூர்த்தி அல்லது த.நா. குமாரசாமி ஆகியோரின் மொழிபெயர்ப்பினால்தான் நான் படித்திருக்கிறேன்.
     தமிழிருந்து திருக்குறள் உள்ளிட்ட தமிழ்நூல்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டவற்றை வங்கமொழியில் மொழிபெயர்த்து வங்கத்து மொழிக்கான செழுமையை ஏற்படுத்தியதோடு பல்வேறு முக்கியமான வங்க இலக்கிய நூல்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் சு.கிருஷ்ணமூர்த்தி என்று தயக்கமின்றி சர்வ நிச்சயமாக கூறலாம். மொழிபெயர்ப்பு என்ற சொல்லைவிட மொழியாக்கம் என்பது நல்ல அர்த்தம் தரக்கூடிய சொல்லாகப் படுகிறது. நான் என் எழுத்துப் பணிக்கான பேனாவை ஒவ்வொரு முறை எடுக்கும்போதும் சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களை நினைப்பேன். அவரது எழுத்திலான கடிதம், மொழிபெயர்ப்பு நூல்களும் சிறகசைத்த நீலகண்ட பறவையை தொடர்ந்து ஓயாமல் மனதிலும் நினைவிலும் என்றும் பறக்கவைத்துக் கொண்டிருக்கும்.
(புதுக்கோட்டையைச்சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி செப்டம்பர் ஏழாம்தேதி 2014 ஞாயிறன்று தன் எண்பத்து நான்காவது வயதில் இயற்கை எய்தினார்)


 


கருத்துகள்