பயணிகள் பேருந்தில் பாலச்சந்திரனோடு ஒரு பயணம்


   பயணிகள்
 பேருந்தில்
 பாலச்சந்திரனோடு  
 ஒரு பயணம்

                                                                                                ஏகாங்கி
சென்னையில் இருந்த வேலையைவிட்டு வந்து ஒரு வாரமாகியிருந்தது. மனம் முழுவதும்  அந்த வேலையின் கசப்பை ஆழமாக இறங்கிட மெல்ல கனமாகிகொண்டிருந்தது. இலக்கியவாதியாக இருந்து பின் சிறந்த வியாபாரியாகி பல தொலைக்காட்சி நேர்காணல்களில் சமூக அக்கறையை வெளிப்படுத்தி மேதாவித்தனத்தை செவ்வனே உரக்க தலையாட்டி அறைகூவுபவர் நான் வேலை செய்த இதழின் ஆசிரியர் மற்றும் நிறுவனர்.! நான் வேலைக்கு சேரும் இடங்களிலெல்லாம் இந்த இருவேட நாடகங்களை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.
இனி வேறு ஏதாவது வேலை தேடவேண்டும் என்ற நினைத்து  மெல்ல  இமைகளை திறந்தபோது, வெளிச்சம் அதிகமாகிக்கொண்டிருந்தது வானில். ஏறுவெயில் மெல்ல தன்பரப்பை சுவற்றில் அதிகரித்தபடி இருந்தது. தென்னந்தோப்பில் காக்கைகள் குரலெழுப்பி ஊருக்கே இவைதான் அலாரமோ என நினைக்க வைத்துக்கொண்டிருந்தன. எழுவதற்கே மிகச் சோம்பலாக இருந்தது. ஈரோட்டில் ஒரு வேலையில் சேர்த்துவிடுவதாக அண்ணன் சொல்லியிருந்தான். ஒரு வீடியோ கடையில்தான் வேலை என்று சிபி அண்ணா சொல்லியிருந்தார். மெல்ல கட்டிலிலிருந்து போர்வை விலக்கி எழுந்தேன். நினைவு முழுவதும் வேலை பற்றியே இருந்தது. ஒவ்வொருவாpடம் என்னைப்பற்றிய விளக்கங்களை சொல்லி அலுப்பாய் இருந்தது. கட்டிலை எடுத்து சுவற்றில் சாய்த்து வைத்தேன். ஆசாரத்தில்  போர்வை வைக்க மெதுவாக தூக்க கலக்கத்தோடு நடந்தேன். ஆத்தா எழுந்து பல் விலக்கிக்கொண்டிருந்தது. எச்சிலை துப்பிவிட்டு குற்றம் நடந்தது என்ன? பாணியில் விசாரிக்க ஆரம்பித்தது. பதில்களையெல்லாம் ரெண்டுதடவை சொல்லவேண்டும் அதுக்கு.
குட்டி எப்படா வேலைக்கு போவோணும்?”
ஆத்தா இப்பத்தான வந்தன். அதுக்குள்ள எப்ப  போவீனு கேக்கற? இப்படி ஓவரா கேள்வி கேட்டதுனாலதான் எங்க அய்யன்  உன்னைவிட்டு ஓடிட்டாரு
ஆத்தா இதற்கெல்லாம் அசருவதாகவே இல்லை. அடுத்த கேள்வியைப்போட்டது.
எத்தன்ரூபா சம்பளம் தருவாங்களாம்  நீ  செய்யற வேலைக்கு
நான் உன்னும் வேலயிலயே சேருல. என்ன வேலயின்னு கூட உன்னும் தெரியில. அதுக்குள்ள சம்பளம் எவ்வளவுன்னு கேட்கற? உனக்கு உன்னமுமே வாய் அடங்கமாட்டேங்குதே காசு வாங்குனதும் கறிவாங்கித் தரோணுமா?
சரிதான் போ உங்கிட்ட கேக்கறன் பாரு நா ஒரு கிறுக்கி! மொட்ட நாடாம் பேரன் வேற எப்படி பேசுவே! ஏழு ஊரு நாயம் கண்டவனோட பேசுவ எங்கூட பேசறக்கு என்ன இருக்குஎன்றவாறு கையில் சின்னக்குடத்துடன் செடிக்கு தண்ணீர் ஊற்ற கிளம்பிவிட்டது.
வெளியே வந்து சீமப்புல் காட்டைப்பார்த்தவாறு பல் விளக்கிக்கொண்டிருந்தபோது கொடுமுடிக்கு அம்மன் மினிபஸ் வேகமாக கடந்து சென்றது. காட்டுவேலைக்கு கரட்டாம்பாளையத்து பெண்கள் ஒருவரோருவரோடு குழுவாக பேசியபடி கடந்து சென்றனர். சீமப்புல் காட்டுக்குள் நாய் ஒன்று வேகமாக ஓடியது. முருகேச கவுண்டர் வரும் புல்லட்டின் ஓசை கேட்டது. உடனே வேகமாக உள்ளே ஓடினேன். ஒருவரின் சிறு விவரம் கூட விடாது அமெரிக்காவின் சிஐஏக்கு அடுத்து விசாரிப்பதில் இவரளவு தேர்ச்சி பெற்றவர்கள் சுற்றுவட்டாரத்தில் யாருமில்லை  பாலாமணி சித்தியை தவிர.
பாலாமணி ஏறத்தாழ எங்களது கிராமத்தின் தூதரக அதிகாரியாக செயல்பட்டு வந்ததுடன் அதை எங்களது மனதில் பதிவு செய்வதிலும் வெற்றி பெற்றிருந்தார். வழுவங்காடு வருபவர்களின் அனைத்து விபரங்களும் அவர்களின் வாய்மூலமாகவே கறந்துவிடுவார். அவர் குடத்தோடு கிளம்பினாலே தேங்காய் பொறுக்க கிளம்பிவிட்டார் என்பதை நாங்கள் உணர அதிக காலமாகவில்லை.
அப்பன் கிணத்துமுக்கு அருகில் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். சைக்கிள் கிரீச்சிட மெதுவாக என்னை கடந்து வீட்டு கொட்டத்திற்கு சென்றார். அப்பன் நான் வந்ததிலிருந்து என்னிடம் இரண்டொரு வார்த்தை பேசுவதோடு நிறுத்திக்கொண்டார். நான் சென்னையிலேயே வேலையில் சேரவேண்டும், அங்கேயே நான் நிரந்தர வாழ வேண்டும் என்பதுதான் அவரின் பிரார்த்தனையாக இருந்தது. நேருக்கு நேராக இருவரும் பார்ப்பதை கூட அண்மையில் தவிர்த்துவந்தோம்
குளித்துவிட்டு துண்டை தலையில் துவட்டிக்கொண்டு ஆசாரத்திற்கு வந்தேன். அப்பன் ஆசாரத்தில் பேப்பா; படித்துக்கொண்டிருந்தாh;.
லுங்கியை கட்டிக்கொண்டு சாப்பிடுவதற்கு உட்கார்ந்தேன். அம்மா  சாப்பாடு கொண்டு வந்தாள்.
அம்மா அந்த பேன போடுமாஎன்றேன்.
உங்களுக்கும் சோறு கொண்டாரதா? ” என்ற கேள்விக்கு அம்மாவை புத்தகத்திலிருந்து நிமிர்ந்து பார்த்தவர்கொட்டத்தூட்டுக்காரரை போய் பாக்கோணும்  சோறு  கொண்டா என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார்.
ஏந்தம்பி  மறுபடியும் மெட்ராசுகீது போறயா? ”
இல்லைங்பா நா இங்கயே ஏதாவது வேல பாத்துக்கிட்டு இருக்கலாம்னு பாக்கறன்
நான் சொன்னதை கேட்டதும் அப்பனின் முகம் சுருங்கிவிட்டது. அடுத்து வந்த வார்த்தைகள் நம்பிக்கையின் சிறு கீற்றுமின்றி ஒலித்தன.
செரி இங்க நீ படிச்ச படிப்புக்கு வேல இருக்குமா? சம்பளமுமே கம்மியாதான தருவாங்க
பையன் இங்கயே நம்மோட இருக்குட்டுமே ஒடம்பும் அவனுக்கும் ஒத்துக்க மாட்டேங்குது என்றது அம்மா இடையில்.
இங்க இருக்கறவங்களை இவனால சமாளிக்கமுடியுமா? மெட்ராசுலேயே வேல பாத்து செட்டில் ஆயிருவான்னு நெனச்சன். நீ இங்க வேலக்கி போறன்னு சொல்ற
அண்ணன் ஒரு வேலக்கி சொல்லிருக்கானுங்பா. அதைப்போய் பாக்கறங்பா எப்படி இருக்குதுன்னு…”
அப்பன் வேகமாக இடைமறித்து
தம்பி இங்க பாரு நம்முளுது தேங்காவெட்டு ஒரு மாசமாட்ட நடக்கும். ஆளுகளும் இல்ல. நீ வந்தியின்னா சம்பளம் தந்தர்றன். என்னாலயும் இப்பல்லாம் முன்னமாறி வேல செய்யறக்கு முடியறதில்ல. எனக்கும் ஒத்தாசையா இருக்கும்”  
நான் எந்த பதிலும் சொல்லாமல் வட்டலை எடுத்துக்கொண்டு கழுவ பைப்புக்கு போனேன். சட்டையையும் ஜீன்ஸையும் மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.
அம்மா நா கௌம்பறங்மா
டேய் இப்ப போற எடத்திலாச்சும் கொஞ்சம் தகிரியமா பேசி சம்பளத்த கரக்டா பேசி சரியா வாங்கு. வாய்க்குள்ளயே மொனவாம சத்தமா பேசு
ரோட்டுக்கு வந்தேன். சுப்பைய கவுண்டாpன் பேரன் முன்னால் டிராக்டா; ஓட்டிக்கொண்டு வர  சுப்பைய கவுண்டர் பின்னால் வந்துகொண்டிருந்தார். அவர்கள் வேகமாக கடந்து சென்றதும் கிணற்று முக்கில் மாதாரி ஏசு பாப்பா வந்துகொண்டிருந்தது. நான் கிணற்றினருகே போனதும் யாரென சற்று நின்று பார்த்து முகம் தெளிந்து புன்னகைத்தது.
ஏசப்பா! அட  ஐயா எப்ப வந்தே சாமி? நல்லாருக்கியா?”
ஸ்தோத்திரம!; ஸ்தோத்திரம!; எப்படியிருக்கீங்க? அல்லேலூயா அழுவாச்சி கூட்டமெல்லாம் ஒழுங்கா நடக்குதா?”
கிண்டலு பண்றயாய்யா! நீ சொன்னாலுஞ் சொல்லுலினாலும் கர்த்தருனாலதான் உலகமே சுத்துது தெரிஞ்சுக்கோ
ஆடு மேய்ச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கறவர  புடிச்சு சிலுவயில அறஞ்சு ரத்தமொழுவ வுட்டுட்டு அதக்குடு இதக்குடுன்னு ஏன் அழுது பொலம்பறீங்க? ”
ஆண்டவர்தான் சாமி என் தெய்வம். நீயே என் பரமபிதாவை கும்பிடுவ பாரு. செரி நா வாறன்
பேசிவிட்டு முக்கு கிணற்றை பார்த்தேன். கிணற்றின் ஒரு பாதி இடிந்து சரிந்து விழுந்திருந்தது. கிணற்று சுவற்றை ஒட்டியிருந்த செம்மண் ஈரமுடன் கள்ளிச்செடியோடு  மினுமினுத்தது. கிணற்றின் சுவர்பகுதியை சுற்றி மலம் ஏகமாக விரவி கிடந்தது. மல நாற்றம் காற்றில் ஆதிக்கத்துடன் பரவி மூக்கில் ஏறி குமட்டியது. அந்த இடத்தை கடக்கும் எண்ணத்துடன் வேகமாக நடந்தேன். ரோடு முழுவதும் சிதைவுற்று குண்டும் குழியாய் கிடந்தது. மாட்டாஸ்பத்திரி கொறையில் வெளிக்கிருக்கும் ஆட்களின் நடமாட்டம் சற்று குறைந்திருந்தது.
 முச்சந்திக்கு வந்து வெட்டுப்பாளையம் போகும் வழியை பார்த்தேன். என்னைப் பார்த்ததும் வெளிக்கிருந்து கொண்டிருந்தவள் வேகமாக சேலையை கீழிறக்கி முகம் திருப்பி நடக்க ஆரம்பித்தாள். செவிடியாயா சூளையின் அடியில் தென்ன மட்டைகளையும் பனங்கொட்டைகளையும் தள்ளிக்கொண்டிருந்தாள். சூளையிலிருந்து எழுந்த எரிச்சல் மணம்கொண்ட வெண்புகை மெதுமெதுவாக பரவி அந்த இடத்தை குளிர்பிரதேசம் போல் மாற்றிக்கொண்டிருந்தது. மாட்டாஸ்பத்திரியில் அப்போதுதான் டாக்டர் வந்து ஸ்கூட்டியில் இறங்கியிருந்தார். மாட்டாஸ்பத்திரியின் எதிரே தேங்காகாரரின் தோப்பில் கொய்யா கன்றுகள் பெரியதாக வளர்ந்துவிட்டிருந்தன. வாட்சில் மணி 8:35 ஆகியிருந்தது. எட்டேமுக்காலுக்கு 15பி வந்துவிடும் என்று அம்மா சொல்லியிருந்தது நினைவுக்கு வர வேகமாக நடந்தேன். அப்போதே பார்வைக்கு மாரியம்மன் கோயிலின் குதிரை தெரிய ஆரம்பத்திருந்தது. கோயிலின் சிற்பங்களின் பெயிண்ட் உதிர ஆரம்பித்திருந்தது. புரட்டாம்பாளைய வேட்டுவ கவுண்டர்களிடையேயான ஆதிக்கப் போட்டியினால் இரண்டு வருடங்களாக பொங்கலில்லாமல் மெல்ல பொலிவிழந்து உட்கார்ந்திருந்தாள் மாரியம்மன். ஸ்டாப்பில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். சாலையில்தான் அன்றைக்கான பரபரப்பே மனிதனில் உருவாகி அதை உணரவும் முடிகிறது. கரும்புலோடு ஏற்றிய லாரிகள் பெரும் திணறலோடு போய்க்கொண்டிருந்தன. பள்ளி வண்டிகள் அவற்றை ஓவர்டேக் செய்து குழந்தைகளை மூட்டைகளைப்போல ஏற்றிக்கொண்டு பாய்ந்து போய்க்கொண்டிருந்தன. இருபுறமும் பார்த்துக்கொண்டே போய் சிமெண்ட் பலகையில் உட்கார்ந்தேன். பக்கத்தில் அண்ணனின் ப்ரெண்ட் தீனதயாளனும் செவிலி செல்வியக்காவும் நின்றிருந்தாh;கள். பார்த்தால் ஏதாவது கேட்பார்கள் என 15பி வரும் வழியைப்பார்த்தே உட்கார்ந்திருந்தேன்.
டேய் கருவாயா எப்படா மெட்ராசுலேந்து வந்தே?”
கூப்பிட்டது யாரென தெரியாதா என்ன? செல்வியக்காதான்.
வந்து ஒரு வாரமாவுதுங்க
மெட்ராசுலதான படிச்சீனு சொன்னாங்க,இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கற?”
வேலக்கி எக்ஸ்பீரியன்ஸ் கேட்கறாங்க செரி இங்க கொஞ்ச நாளு ஏதாவது வேல செஞ்சுட்டு அப்பறம் போலாம்னுட்டுனுங்கஒரு வீடியோ கடைக்கு வேலக்கி போறனுங்க
சம்பளம் எவ்வளவு தா;றாங்கடா?”
ஐயாயிரம் தாறாங்க
சொல்லிமுடித்தவுடனே அவா; போவதற்கான ஈரோட்டுக்கான சேரன் பஸ் வந்தது. உடனே ஓடிப்போய் ஏறி கூட்டத்தில் ஒருவரானார். அப்பாடா என வடக்கே திரும்பிப் பார்க்கையில் 15பி பெரியகாண்டியம்மன் கோயிலருகில் வந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்தான் கணபதிபாளையத்தில் மருந்துகடைகாரரை இடித்து வம்பில் சிக்கியிருந்தது. அதற்குள் வந்துருச்சே என சற்று தெம்புடன் தெற்கே பார்த்தேன். வியாபாரி ஒருவர் பெரிய வெள்ளை மூட்டையுடன் டிவிஎஸில் வந்து இறங்கி மூட்டையை கீழே தள்ளிக்கொண்டிருந்தார். தன் மகளை 15பிக்கு கொண்டு வந்துவிடவந்த வடிவேலண்ணனை உதவிக்கு அழைத்தார்.
15பி மெதுவாக புரட்டாம்பாளைய இறக்கத்தில் ஒரு யு டர்ன் அடித்து திரும்பியது. லாரிகள் இரண்டு ஓவர்டேக் எடுத்துக்கொண்டு வந்ததால் எங்களுக்கு கொஞ்ச தூரம் தள்ளி நின்றது. பக்கத்திலேயே வரும் என நானும்,ஒரு சிறுமியும் நிற்க, கண்டக்டர் படிக்கட்டில் நின்றபடிகண்ணு வந்து ஏறுங்க சீக்கறம் என்றார்.
வேகமாக பின்புறமாக வந்து நின்றேன். டிவிஎஸில் வந்தவர் வெள்ளை மூட்டையை தம் கட்டி நெஞ்சோடு அணைத்து மேலேற்றிக்கொண்டு இருந்தார். ஸ்டெப்னி இருந்த இடத்தில் மூட்டையை போட்டுவிட்டு அழுக்கை தட்டிவிட்டு நிமிர்ந்து சட்டை பாக்கெட்டிலிருந்து பணம் எடுப்பதை பார்த்த கண்டக்டா;
ஏனுங்க நீங்க வல்லையா? லக்கேஜ் எப்படி எடுப்பீங்க?”
இந்த வண்டி ரயில்வே ஜங்சனு போவுமாங்க? ஜங்சனுல ஆளு இருக்கறாங்க
லக்கேஜ் இவ்வளவு பெருசா கிடக்குது நா இத எப்ப எறக்கி எப்ப வண்டிய எடுக்கறது, நீங்க லக்கேஜ எடுத்துக்குங்க
ஏனுங்க டிரைவரு நீங்களாவது சொல்லுங்க ஆளுங்க வந்து எடுத்துக்குவாங்கன்னு  சொன்னாலும் கண்டக்டர் கேட்க மாட்டேங்கறாரு
செரி செரி கரக்டா போன அடிச்சு அவருக்கு சொல்லிருங்க கடசில என்னப்போட்டு சீராழிக்கக்கூடாது சொல்லீட்டன் ஆமா! என அடம்பிடித்த கண்டக்டர் அவர்  முன்னாலேயே போன் செய்து சொல்லிய பின்னே அவரை கீழிறங்க விட்டார். அவர் இறங்கியபின் பஸ் மெதுவாக நகரத்துவங்கி செங்காலிகாட்டுபள்ளம் வந்தபின் டிக்கெட் கொடுக்க என் பக்கத்தில் வந்தார். நீளமான முகம், சற்று தொந்தியான உடம்பில் பேன்ட் கணுக்காலுக்கு மேலேறியிருக்க காலில் பேரகானின் ரப்பர் செருப்பு.
எங்க கண்ணு ஈரோட்டுக்கா?”
ஆமாங்க என்றதும் எச்சிலைத்தொட்டு சர்ரென டிக்கெட்டை கிழித்துதந்துவிட்டு பின்சீட்டில் உட்கார்ந்துகொண்டார். செங்காலிகாட்டுபாலத்தில் இரண்டுபேர் கால்கழுவிக் கொண்டிருந்தார்கள். கறிக்கோழியின் கழிவுகளுக்கு வைத்த நெருப்பு புகைந்து கருவல்வாடை அடித்துகொண்டிருந்தது. பஸ் மெதுவாக வண்ணார் காலனி முக்கு கடந்து மரைப்பாளையம் நோக்கி முன்னேறத் துவங்கியது. தோண்டிபோட்டிருந்த குழிகளிலும் நரவல்களாய் நிரம்பிக்கிடந்தன. மரைப்பாளையத்தின் புதிய அடையாளமாக பேக்கரி ஒன்றும் .டி.எம் ஒன்றும் உருவாகியிருந்தன. பேக்கரிக்கு சற்று தள்ளி கை இல்லாத வெள்ளைபனியனும் கறுப்பு பெர்முடாசுமாய் புரட்சிநாயகன் முரடன் செந்தில்  முத்தையன் வலசு ஊரின் ஒற்றை முகமாய் நின்றிருந்தார். அங்கு வருகிற எல்லோரும் அவரை ஒருமாதிரியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். பின்னே கோவணத்தைக் கட்டிக்கொண்டிருக்கிற ஊரில் ஸ்லீவ்லெஸ் பனியனும், பெர்முடாசும் அணிந்து தனது ஆப்பிரிக்க நிற உடலின் புஜபலத்தை காட்டியபடி நின்றுகொண்டிருந்தால் சும்மாவா! நான் வேகமாக தலையை உள்ளிழுத்துக்கொண்டேன். ஆள் மட்டுமா பேச்சு இன்னும் முரட்டுத்தனமாக இருக்கும். பஸ்சில் ஆட்கள் வேகமாக ஏறத்துவங்கியிருந்தனா;.
அட ஏறு வழிவுட்டாத்தான ஏற முடியிம்”;
எனக்கு வழி வுடுங்க
அட மெதுவா ஏறு கால எதுக்கு முதிக்கற
நெரிசலின் மொழியாக குரல்கள் ஒலித்தன. வேகமாக ஏறி சீட்களை பிடிக்க அலைந்தார்கள். தியானத்தில் கூட இவ்வளவு களிப்பு ஏற்பட்டிருக்காது. அவ்வளவு மகிழ்ச்சியும் அடேய் புடேய் என பதறி சீட் போட்டாலே போதும் கிடைத்துவிடுகிறது. அவ்வளவு கனிவு, இரக்கம் எல்லாம் அதன்பின்தான் வாய்க்கால் தண்ணீர் போல பெருக்கெடுத்து வர மெல்ல சயனத்தில் ஆழ்கிறார்கள்.
அடசீக்கறம் ஏறுங்கப்பா நேரமாவுதுல்லஎன பள்ளிக்கூட பையன்களை முடுக்கினார். பள்ளிப்பையன்களுக்கு பின் பெரிய மூட்டையோடு ஒருவர் ஏறினார்.
மூட்டையை அரும்பாடுபட்டு தள்ளிக்கொண்டுவந்தவரிடம் கண்டக்டர்,
இப்புடி வழிய மறைச்சிக்கிட்டு நின்னீனா மத்தவங்கல்லாம் உம் பொடனி மேல காலு வச்சிதாம் வரோணும்,உள்ள கொண்டுபோயி ஸ்டெப்னி டயரு மேல போடு இல்லனா சீட்டுக்கு அடியில தள்ளிவுட்ரு
மூட்டையை எனக்கு பின்னாலிருந்த சீட்டினடியில் தள்ளிவிட்டு நிமிர்ந்தவரிடம்
லக்கேஜ் பார்க்குக்குத்தான? ” என்றபடி டிக்கெட்டை கிழித்துகொடுத்துவிட்டு முன்னாடி டிக்கட்டு.. டிக்கெட்டு.. என்றபடி கிளம்பி பின்சீட்டின் கம்பியில் சாய்ந்து நின்றார். கடைசி சீட்டிலிருந்தவர் பேச்சை துவக்கி வைத்தார்.
ஏனுங்க கண்டக்டரே ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜைக்குனாலும் பஸ்ச கழுவுவீங்களா? வண்டி ரொம்ப குப்பையா கிடக்குதுங்களே!”
இத எல்லாம் எப்படி கழுவறது? காவிரியாத்துல கொண்டி தள்ளிர வேண்டிதுதான். வேறவழி? அவ்வளவு அழுக்கு!” என்ற கண்டக்டரை விடாமல்
ஏனுங்க ரயில்வே ஜங்சனு நேரு ஒரு டவுன்பஸ் டயர் கழண்டு ஓடுச்சாம் உண்மையா?”
சடாரென சுதாhpத்த கண்டக்டா; “அப்படியெல்லாம் இல்ல. வண்டி கொஞ்சம் கண்டிசனா இல்லையாட்ட ரோட்டு தடுப்பு மேல கொண்டோயி லைட்டா இடிச்சுபுட்டான் அந்த டிரைவரு

மேலும் கேள்வி கேட்க வாயெடுப்பதற்குள் டிக்கெட் எழுதுவதில் மும்முரமானார்.
லஷ்மிபுரத்தை தாண்டி போய்க்கொண்டிருந்தது. உள்ளே கட்டியிருந்த விநாயகரின் கோயிலை பார்த்ததும் ஏகத்துக்கும் கொதித்தார் என் பக்கத்திலிருந்தவர்.        
காசு இல்லாம படிக்கறக்கு சிரமப்படற புள்ளைவளுக்கு ஒருரூவா தரமாட்டானுவோ! கோயில்னா அள்ளி வீசறான் பாரு அதுவும் டைல்ஸு! காசு கொடுக்குறவனுக்கு பைல்ஸு இருந்தாலும் பாத்ரூமு புல்லா டைல்ஸு .என்ன செய்யறம்னு பாக்கறவனுக்கும் தெரீல, செய்யறவனுக்கும் தெரீல என்று கம்மிய குரலில் முணுமுணுத்தார்.
15பி மெதுவாக பெட்ரோல்பங்கை கடந்து பனப்பாளையம் நோக்கி நகரத் துவங்கி இருந்தது. பெட்ரோல் பங்கை கடந்ததும் டாஸ்மாக் கடை உள்ளதைச்சொல்லும் வண்ணம் இருபுறங்களிலும்  வாட்டர் பாக்கெட்டுகளும் பிளாஸ்டிக்கப்புகளுமாய் இறைந்துகிடந்தன.
டாஸ்மாக்கை ஒட்டி செம்மண்ணில் ஜட்டி தெரிய வெள்ளை வேட்டி மண்ணில் புரள போதையில் மயங்கிகிடந்தார் ஒருவர்.
பிராந்திக்கடை வந்ததிலிருந்து ஏக்சிடென்டு அதிகமாயிருச்சுங்க. தண்ணி போட்டுட்டு அவஞ் சாவறதுமில்லாம நம்ம மேலயுமில்ல கொண்டாந்து உடறான்என்றார் அருகிலிருந்த கறுப்பாக ஒடிசலானவார்.
பின்னாடி டிக்கெட்டேய்டிக்கட்டு என ஏலமிட்ட கண்டக்டர் பேச்சில் கலந்துகொண்டு சமூகநீதிபோராளியாகி கொந்தளித்தார்.
பிராந்திக்கடையை கவர்மென்டே நடத்துது. தண்ணிய போட்டுட்டு ரோட்டுக்கு வந்தா குடிச்சிருக்கறான்னு பைனு போட்டு பணம் புடுங்கறாங்க. எப்படி பாருங்க ரெண்டு வருமானமல்லோ! சரக்கையும் வித்துட்டு நம்மு சட்டையும் புடிக்கறாங்க என்ன கவர்மென்டோ?”
இதைக்கேட்டுக்கொண்டிருந்த அதிமுக விசுவாசி நீயா நானாவில் குதித்தார்.
கண்டக்டரே எஸ்மாவை மறந்துடீரோ! இப்ப உங்களுக்கு போனஸு தாறதும் எங்க அம்மாதான். மறந்தராதீங்க ஆமாஎன ஏகத்துக்கும் எகிற
அப்பா முன்னாடி டிக்கட்டு இருக்குதாப்பா? டிக்கெட்டேடேடேய்;…. வனப்பாளையம் எறங்குதா? எனக்கேட்டபடி மெல்ல நழுவி கண்டக்டா; முன்னாடி போனார்.
வனப்பாளையம் ஸ்டாப்பில் 15பி வேகம் குறைந்து நின்றது.காட்டு வேலைக்கு போகும் பெண்கள் ஏற சாப்பாட்டுக்கூடையோடும் பான்ஸும் வியர்வையும் கலந்த நெடியாய் பஸ்ஸில் பரவியது. பஸ்ஸில் ஏறிய பெண்களில் இருவர் என் முன்னால் இருந்த சீட்டில் உட்கார்ந்து கூடையை கீழே வைத்துவிட்டு பேச ஆரம்பித்தார்கள்.
என்ன பூரணா எப்பவுமே நேரமே வந்துருவே இன்னைக்கி நேரமாயிருச்சு? வீட்டுல வேலயா?”
உடம்பு முடியில பொன்னக்கா.காலயில எந்திரிச்சு சோறு வக்கறதே சிரமமா இருக்குது. எம் புருசன் வெங்காயம் அரியறவகிட்டபோயி இளிச்சிக்கிட்டு நின்னுக்கறான். ஏதாவது வேல செய்யலாமுல. ஏதாவது கேட்டா என்னப்போட்டு அடிக்கறான்.நான் என்னதாம் பண்றது? ”
செரி, பூரணா உம் பயன் என்ன பண்றான்?”
பயந்தான அந்த கட்டித்தினி கொழம்பு வக்கிற குண்டாவவுல சோறு வெச்சிருக்கறான்.என்னதாம் நா பண்றது? எனக்கு ஒண்ணும் உருப்படியில்ல பொன்னக்கா என்றபடி பூரணா வெளியே பார்க்க ஆரம்பித்திருந்தாள்.
பின்சீட்டில் உட்கார்ந்திருந்தவர்கள் செல்போனில் பாட்டுகேட்டபடி வந்தனர். டிக்கெட் கொடுத்துவிட்டு வந்த கண்டக்டர் செல்போனைப் பார்த்தபடி
ஏய்யா இது சைனா போனுதான?”
ஆமாங்ணா நேத்துதா வாங்குனோம் 1200ரூபாயுங்க.”
என்னய்யா வாங்கறதுதா வாங்கறீங்க கம்பெனிச்செட்டா வாங்கறதுதான?”
அண்ணா கம்பெனிச்செட்டு 2000 ரூவா போடோணும் கொரியா செட்டுல 1200 ரூவாயுக்கே எல்லா வசதியும் இருக்குது.”
அது கரக்டுதான் தம்பிகளா எங்கிட்டயே நாலு செட்டாட்ட கிடக்குது. ஏதாவது ஒண்ணு அதுல போய்க்கிட்டே இருக்குது
ஆமாங்க கொஞ்சநாளு யூஸ் பண்ணிட்டு தூக்கிபோட்டுட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டிதா
அதுஞ்செரிதாம்பா புதுசுபுதுசா போனு வந்துக்கிட்டே இருக்குதே.மாசம் ஒரு போனு டிவில அந்த பல்லன் பேரு என்ன ..மாதவன் வாங்கச்சொல்றான் அப்பறமென்ன நடத்துங்க
பஸ்ஸில் மருந்தடிக்கும் நெடியின் வீச்சம் அதிகரித்துக்கொண்டுவந்தது. மெல்ல கம்பனையன்புதூர் நிறுத்தத்தில் நின்றது. வெங்காய வயல்களுக்கு முகத்தில் துணி கட்டிக்கொண்டு மருந்தடித்துக்கொண்டு இருந்தார்கள். வெங்காயம் லோடு ஏற்றிய டிராக்டர்கள் வேகமாக பஸ்சைக்கடந்து போய்க்கொண்டிருந்தன.
இரண்டு பைகளில் கனமான இரும்புசாமான்கள் போல சிரமப்பட்டு ஏறினார் பஸ்ஸில். பின்னாடி ஒருவர் நெற்றி நிறைய சந்தனம் குங்குமத்துடன் ருத்ராட்சத்துடன் ஏறினார். இரும்புச்சாமான்காரர்  பைகளை சீட்டில் நிறைத்தார். பைகளை வைத்துவிட்டு மெதுவாக எழுந்தார். பக்கத்திலிருந்த சீட்காராரிடம் கையை நீட்டியபடி
அய்யா எம்பையன் ஒரு புள்ளய கூட்டிக்கிட்டு ஓடிப்போயிட்டானுங்க கருந்துறைப்பக்கம் போயிப்பாக்கறக்கு கூட பணம் இல்லங்க தர்மம் பண்ணுங்க சாமிஎன ஒவ்வொரு சீட்டுக்கும் வர ஆரம்பித்தார்.ஆள் வற்றலாய் தலையில் சிவப்புதுண்டு கட்டியிருந்தார்.கண்கள் சிவந்து கிடந்ததை பாh;த்ததுமே தண்ணி போடறதுக்கு பஸ்ஸிலியே ஏறி காசு வசூல் பண்ண ஆரம்பிச்சிட்டாரே என நினைத்துகொண்டிருந்தேன்.
முன்னால் போய் டிக்கெட் போட்டுவிட்டு பின்னால் வந்து அவரிடம் டிக்கெட் கேட்கவும் சிவப்புதுண்டுக்காரர் தன் கதையை சொல்லவும் ரணகளமானது கண்டக்டர் முகம்.
யோவ் என்னய்யா நெனச்சிட்டிருக்கே காசு இல்லாம ஏறிட்டு எகத்தாளபழமை பேசறயா அடுத்த ஸ்டாப்புல எறங்கிரு ஆமா
என்னமோ முனகிவிட்டு இறங்கும் வழியில் படிக்கு அருகிலேயே நின்றுகொண்டார். எல்லோரும் அவரது முகத்தையே பார்த்துகொண்டிருந்தார்கள். பின் சிறிது நேரம் சென்றதும் சீட்டிலிருந்த சாமான்களை எடுத்துக்கொண்டு கருமாண்டம்பாளையம் ஸ்டாப் வந்து நிற்கவும் இறங்கிக்கொண்டார். நாலு பேர் வேகமாக ஓடி வந்து ஏறினார்கள். விருமாண்டம்பாளையத்தின் சாலைகள் நன்கு நீண்டு விரிவாக இருந்தது. பஸ்ஸ்டாப்பினருகில் வந்து நின்ற மஞ்சலூர் வழி செல்லும் தனியார் பஸ்ஸில் தலைமுடி திரிதிரியாய் தொங்கியபடி சேலை கிழிந்து அலங்கோலமாகி இருந்த முதியவள் சுருங்கிய முலைகள் பெண்டுலமாய் ஆட பிச்சை கேட்டபடி அலைந்து கொண்டிருந்தாள்.
ஒருவாய் நல்ல சோற்றுக்காக ஸ்ரீராம் அண்ணனின் வீட்டுக்கு நடந்தது நினைவுக்கு வந்தது. வயிறு குளிர்ந்தால்தான் புத்தியால் வேறு ஏதாவது யோசிக்கவே முடிகிறது. இப்படி யோசித்துக்கொண்டிருக்கையில் அழுகிய முட்டைவாடையின்  அடர்த்தி கூடுவது  விகேஎம் முட்டைப்பண்ணை தொழிற்சாலை அருகில் பஸ் சமீபிப்பதை உணர்த்தியது. ஏழ்மையில் இருப்பவர்களை உடலளவிலும் மனதளவிலும் கசக்கி பிழிந்து வேலை வாங்கும் இந்திய நாஜிகளின் கொட்டடி அது.
அவரின் அச்சேவையைப் பாராட்டி அரசு வழங்கியிருந்த விருது குறித்த பிரமாண்ட பேனர் கட்டவுட் அருகிலேயே இருந்தது. பிரமாண்டமான பெரிய கட்டிடம் அனைத்தையும் உள்ளடக்கியபடி வெள்ளைநிறத்தில் நின்றிருந்தது. கட்டம் போட்ட சட்டையோடு கொம்பனையில் ஏறியவர் பாலிதீனில் மடக்கிய டிபன்பாக்சோடு தயங்கி படிக்கட்டில் நின்று முட்டைப்பண்ணை எதிரேயே இறங்கினார். சோளங்காபாளையம் செல்லும் வழியில் பாலம் தோண்டும் வேலை நடந்து வந்ததால் இரண்டு வேகத்தடை அமைக்கப்பட்டிருந்ததால் பஸ் ஏறி இறங்கியது.சோளங்காபாளையத்தில் பஸ் நின்றபோது இரண்டுபேர் ஏறினார்கள்.
கடைசி சீட்டில் உட்கார்ந்திருந்தவர் தன் அருகிலிருந்த நண்பரிடம் பேச தொடங்கினார்.
ஏண்டா சுரேசு பிரபாகரன் பயன சுட்டுகொன்னாங்க அத நேத்து பாத்தியா?”
கணபதியண்ணா அவம்  பயன சுட்டுக்கொல்றத டிவில போட்டாங்களா? எப்போ?  பேப்பர்ல எதும் போடுலியே!”
பேப்பர்ல போட்டா சும்மா வுடுவானுவளா கைகார  நாய்வ
அப்ப எதுலீங்ணா பாத்தீங்ணா கன் நியூஸா,பயா நியூஸா?”
அவனுவளுக்கு அவந்தப்ப மறைச்சு அடுத்தவன நோண்டறதே வேல அவம் போடுவானா இதையெல்லாம். நா வூட்டுல சேனல் 4 னு ஒரு சேனல்ல பாத்தன். அதுல இரண்டுநாளக்கி முன்னாடியே போட்டானுவ இதுமாரி ஒரு வீடியோ போடறம்னு. அலாரம் வெச்சிருந்து நைட்டு ஒரு மணிக்காட்ட பாத்தன்.”
சேனல் 4! அந்த சேனல்லாம் எடுக்குதா உங்கூட்டுல. எங்கூட்டுல அந்த சேனல்லாம் தெரியறதில்லீங்களே
டேய் சுரேசு அந்த சேனலுக்கெல்லாம் நா பணம் கட்டறன்டா. பங்கிலாந்து நாட்டு சேனலு அந்த ஊரு டைமுபடி காலைலில போட்டாங்களாட்ட. எப்படியோ பாத்துட்டன்
ஏனுங்க அந்த வீடியோவுல எனனங்கண்ணா போட்டாங்க?”
பிரபாகரம்புள்ளய நெஞ்சுலயே சுட்டு கொல்றானுவோ மிலிட்டரிகாரங்க சாமி பாக்கவே முடில. எல்லாம் கண்டாரோலி முண்ட மானியாபேடினாலதா..”
நம்மூரு டிவில எல்லா எப்ப போடுவாங்க?”
குலைஞரு,பயா,கன்னுலல்லாம் போடமாட்டானுவ. போட்டா ஜெனரேஷன் டிவியில கீது போடுவான். இந்தியாவுல கைகாரன் ஆட்சி நடக்குது அவ்வளவு சீக்கறம் போடவுற்றுவானா?”
ஏங்ணா கண்ண கட்டி சுடுவானுவளாமா அப்படியெல்லாம் வந்துதா?”
மொத்தம் ஒருமணி நேரமாட்ட போட்டானுவ இதுவரயில என்னென்ன பண்ணியிருக்கறான்னு பயங்கரஞ் சாமி பயங்கர கோரம். அதிலீம் ஏதோ ஒரு அழகான பொண்ணு மிலிட்டாரகானுவ சுத்தி நின்னு மேல வுழுந்து அலங்கோலம் பண்றானுவ அப்பறம் அம்மணமா நிற்கவச்சு சுட்டுகொல்றானுவ. அவம் பண்ற சின்னத்தனத்தை அவனுவளே வீடியோ எடுக்கறானுவ.”
ஏறத்தாழ அந்த சேனல் நாலுக்காரர் போட்ட கூச்சலில் பஸ்ஸே திகைத்து அவரையே திரும்பி பார்த்தபடி இருந்தார்கள்.கேள்வி கேட்டு உசுப்பேற்றியதால் வைகோ போல உணர்ச்சிவசப்பட்டு அழும்நிலைக்கே வந்துவிட்டார். அப்போதான் பஸ்ஸில் ஏறியவர் சேனல் நாலை மேலும் உசுப்பேற்றினார்.
ஏனுங்க அந்த வீடியோ எல்லாம் உண்மையா என்ன?”
பின்ன புரடையா பேசிக்கிட்டு இருக்கறன்.அழுகோ ஒரு சிடி வெளியிட்டார் தெரியுமா எலக்சன் டைமுல அதும் எங்கிட்ட இருக்குது.”
கணபதியண்ணா அந்த சிடில என்ன சொல்றாங்க
அதுல என்னன்னா அழுகோ பேசுவாப்ல அத முதல்ல கொஞ்ச நேரம் போடுவாங்க. அப்பறம் பலோன்ல மிலிட்டரிக்காரனுவ நம்மாளுவளை குண்டுபோட்டு  கொல்றதுன்னு ஓடும்.”
பஸ்ஸில் இடம்கிடைக்காமல் கடைசியில் நின்று கொண்டு வந்தவர்களெல்லாம் பொழுதுபோக அவரிடம் ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டு வந்தனர். அவரும் சளைக்காமல் சொன்னதையே சொல்லிக்கொண்டு வந்தார். இவரையே தீவிரமாக பார்த்தபடி வந்த கண்ணாடி போட்டிருந்தவர் சந்தேகமாய் தீர்க்கமாய் கேட்டார்.
தமிழ்நாட்டுல அகதியா கெடக்கறவன பத்தியெல்லாம் உங்களுக்கு  அக்கறையில்ல அவனும்தான் பட்டினில சாவறான். அத எல்லா வுட்டுட்டு இலங்கையில தமிழர்கள கஷ்டப்படறாங்கன்னு வீடியோ பாருங்கிறீங்க
கேள்வி கேட்டவரை ஏளனமாய் பார்த்தவர் பின் பேசினார்.

தம்பி எல்லாம் செரிதான். இங்கிருக்கறவனுக்கும் வயித்துபாடு பிரச்சனைதா. ஆனா அவனுக்கு அவம் புள்ளயோட மானமும் உயிர்வாழற பாடுமே பிரச்சனை. நா வேணா நாளைக்கு டிவிடி கேசட்டு கொண்டாந்து தாறன். பாத்துட்டு அப்பறமா பேசு.”
ஓலப்பாளையம் பெட்ரோல் பங்கில் சேனல்காரர் இறங்கிக்கொண்டதும் பஸ்சில் பெரும் அமைதி சூழ்ந்தது.
15பி மெதுவாக போக்குவரத்தில் ஊர்ந்தது. காற்றே டீசல்,பெட்ரோலின் கலவையாக மாறி மூக்கை அடைப்பதுபோலிருந்தது. காற்றில் ஈரப்பதம் குறைந்து வறட்சியை முகத்தில் இறைத்து போனது. ஈரோடு ஜங்சனில் வடமாநில ஆட்கள் குவியலாய் ஏறினார்கள். 15பி மெதுவாக காளைமாட்டுசிலை தாண்டி பன்னீர்செல்வம் பார்க் மார்கெட்டிற்கு போய் நின்றது. கண்டக்டர் பின்படிக்கட்டில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார்.
ஒரு பெண் தலையில் சுமையும் கையிரண்டில் இரு சுமைகளுமாய் ஏற வந்தாள். கண்டக்டர் நகரவே இல்லை.
ஏனுங்க கொஞ்ச நவுருங்க சொமயோட ஏறோணுமுல்ல
நீ ஏறவே வேண்டாம் இவ்வளவு சொமயோட எப்பிடி எறங்குவே போனொடனே திரும்போணும். நீ வேற பஸ்சு புடிச்சு வா. சீக்கறம் எறங்குன்னா ராங்கு பண்ணுவே
எனச்சொல்லி கண்டக்டர் விசிலூத 15பி நிற்காமல் சென்றது. மெல்ல சத்திரோட்டில் இணைந்து பஸ்ஸ்டாண்டில் தயங்கி தயங்கி நுழைந்தது. டவுன்பஸ்ஸ்டாண்டில் 15பிக்காக நின்றவர்கள் பஸ்ஸை பார்த்ததும் பக்கத்தில் வர ஆரம்பித்தார்கள். பஸ் நிற்கவும் மெதுவாக இறங்கினேன். நேரே சிந்தாமணி பார்த்து நடக்க ஆரம்பிக்க மழையின் மென்தூறல்கள் சட்டையில் விழத்தொடங்கியது.


   



கருத்துகள்