எழுத்தும் வாழ்வும் ஒன்றிணைந்து வாழ்ந்த ஒற்றைப்புள்ளி

எழுத்தும் வாழ்வும் ஒன்றிணைந்து வாழ்ந்த ஒற்றைப்புள்ளி

(ஆகஸ்ட் 22, 2014 அன்று மறைந்த எழுத்தாளர் யூ. ஆர் அனந்தமூர்த்தி பற்றிய இரங்கல் குறிப்பு)

·        அன்பரசு சண்முகம்


     எழுத்தும், அதை எழுதுகிறவரின் வாழ்வும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் கவிஞர் கண்ணதாசன் எழுதியவனைவிட எழுத்தை பின்பற்று என்று தன் வாழ்வை மற்ற மனிதர்களுக்கு மிக விசாலமாக திறந்து தன் தவறுகளை மிக வெளிப்படையாக சுட்டிக் காட்டியவர் என்று கூறலாம். மோகன்தாஸ் காந்தியையும் இதில் நிச்சயமாக சேர்த்துக்கொள்ளலாம். உடுப்பி ராஜகோபாலாச்சாரிய அனந்த மூர்த்தி எனும் யூ.ஆர்அனந்தமூர்த்தி தன் வாழ்வினையும் எழுத்தினையும் வேறு வேறாக பாகுபாடு செய்துகொண்டவரில்லை.
     எழுத்தாளன் என்பவன் தன் நாட்டின் அரசியலையோ, சமூகத்தைக்குறித்தோ கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது. அனந்தமூர்த்தி தன் மனம் ஏற்றுக்கொண்ட கருத்துக்களை எந்த இடத்திலும் முன்வைக்க தயங்கியதில்லை.
     யூ. ஆர் அனந்தமூர்த்தி தன் அனைத்து படைப்புகளையும் கன்னடமொழியில்தான் எழுதினார். அவரது குறிப்பிடத்தக்க அனைத்து படைப்புகளுமே மொழிபெயர்ப்பு பேறு பெற்றுவிட்டன. அவர் எழுதிய அனைத்து நாவல்களுமே எழுத்தின் அடுத்த கட்டமான காட்சி ரூபத்தை எட்டிப்பிடித்தன. இதில் 1965 ல் எழுதி வெளிவந்த ‘சம்ஸ்காரா’ நாவலை முக்கியமாக குறிப்பிடலாம். இந்நாவல் 1970 ல் திரைப்படமாகவும் வெளிவந்து தேசிய விருது பெற்ற திரைப்படமாகும். இதில் மைய பாத்திரமாக நாடக இயக்குநர் கிரிஷ் கர்னாட் நடித்திருந்தார்.
பாரதிபுரம் நாவலில் வருகிற இங்கிலாந்தில் படித்துவிட்டு வரும் நாயகன் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வு மேலே வர கோயில் நுழைவுதான் ஒரே வழி என்று முடிவுக்கு வரும்வரை பல்வேறு முயற்சிகள் செய்து அவர்களுக்கு மனதில் மாற்றம் ஏற்படுத்த முயல்வான். அந்த கதை மாந்தரை அனந்தமூர்த்தியின் ஆத்மாவாகவும் கொள்ளலாம். அதில் அவர் இறுதி முடிவாக சாதி என்பதை தாங்கி நிற்பது அந்த ஊரின் தெய்வம்தான் என்று முடிவுக்கு வந்து அதன் புனிதத்தை, சக்தி இருப்பதாக நம்பும் மக்களின் நம்பிக்கையைத் தகர்க்கவேண்டும் என்று முடிவு செய்வான். ஆனால் கடைசியில் அவன் நினைப்பதற்கு மாறாக சூழல்கள் செல்லும். அந்த நாவலை முடிந்துவிட்டது என்று நினைக்கமுடியவில்லை இன்றுவரையிலுமே. அந்த போராட்டமானது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அவர் தொடர்ந்து வகுப்புவாதிகளின் பிரிவினைவாத முயற்சிகளை கடுமையாக விமர்சித்து வந்த்தோடு சக மனிதனின் துயரத்தை தீர்க்க முயற்சித்த கவலைகளையும், மன உணர்வுகளையும் ஒன்றாக கோர்த்து அவர் கதையாக்கினார்.
‘’ ஆங்கிலம் கற்பது தவறில்லை. ஆனால் அது அறிவின் வாயில் அல்ல. நாம் நமது தாய்மொழியை மதித்து அதற்கு மரியாதை கொடுத்து எழுதுவதுதான் நமது மொழியைப் பாதுகாக்கும் ஒரே வழி. தாய்மொழி தாயிடமிருந்து கிடைக்கும் பால் போல. அதற்கு மாற்று வேறு கிடையாது. கிடைக்கும் வேறு ஒரு மொழி என்றும் அதனை ஈடு செய்யமுடியாது. வேறு மொழியில் பேசினாலும் நாம் சிந்திப்பது என்பது தாய்மொழியில்தான் முடியும். மொழி என்பது கலாச்சாரத்தையும் உள்ளடக்கியது. வேறு மொழி உள்ளே வந்தால் அதன்வழியே அந்த கலாச்சாரமும் உள்ளே வருகிறது. நம் பள்ளிகளில் குழந்தைகளுக்கான மொழியை நாம் உருவாக்கவேண்டும் ’’ என்று பல கருத்தரங்கு உரைகளில் தவறாது குறிப்பிட்டும், எழுதியும் வந்தவர் யூ.ஆர் அனந்தமூர்த்தி ஆவார்.
தான் உடல்நலம்  குன்றி டையாலிஸிஸ் செய்துகொண்டிருந்த நிலையிலும் வகுப்புவாதிகளின் விஷமப் பிரச்சாரம் எப்படி பேரினவாதமாக உருக்கொண்டு நம் தேசத்தை பிரிக்கும் என்பதை அவர் பேசத் தவறவில்லை. அவரது இந்தப்பேச்சு மதஅடிப்படைவாத பிழைப்பு சக்திகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அவர் இறந்ததும் அதை பட்டாசு வெடித்து கொண்டாடும் ஒரு மோசமான மனநிலையில் இருந்தார்கள். கீழ்மையான உணர்ச்சிகளைத் தூண்டி அதனை தனது சுயநலனுக்கு பயன்படுத்திக்கொள்ளும் சக்திகள் குறித்து தொடர்ந்து மக்களிடம் பேசி வந்தவர்.
கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான மனநிலைகள், போராட்டங்கள் உருவாகும்போதும், வீட்டில் தமிழ் பேசும் மாஸ்தி வெங்கடேஸ்வர ஐயங்காரை விட கன்னடமொழிக்கு பங்களித்தவர்கள் யாருமில்லை என்று கூறி அந்த போராட்டத்தை தணித்தவர்.
அவரது நூல்களை ஆழ்ந்து படிக்கின்றவர்களுக்கு மனிதர்களின் நேசம் பொழியும், நம்பிக்கை இழக்காத இழைகள் அதில் நெருக்கமாக பின்னப்பட்டு இருப்பதை அறியமுடியும். தன் மனதில் சரியென்று படுவதை பெரும்பான்மை கருத்துக்கு எதிராக இருந்தாலும் கூறத்தயங்காத அரிதான எழுத்தும், வாழ்வும் ஒன்றிணையும் ஒற்றைப்புள்ளி அவர். காகங்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் நம் நாட்டிற்கு மயில்தானே தேசியப்பறவை. அவருக்கான இரங்கல் என்பதும், அவரை கௌரவப்படுத்துவது என்பதும் அவருடைய படைப்புகளைப் படித்து சக மனிதனை நேசிக்கத்தொடங்குவதும், நம் மொழியைப் போற்றுவதும், பிரிவினை சக்திகளை எதிர்ப்பதுமாகவே இருக்க முடியும். தன் எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும் இதனைத் தொடர்ந்து இடையறாது வலியுறுத்தி வந்தவர் இந்த உலக சமூகத்திற்கான கலைஞன். இந்தியாவைப் பற்றிய பல்வேறு கோணங்களை, பார்வையை விரும்புவர்களுக்கு யூ. ஆர் அனந்தமூர்த்தி மிகச்சரியான நேர்மையான தேர்வாக இருப்பார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.



     

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்