உரிமைக்காக வண்ண உடையில் புரட்சி

உரிமைக்காக 
வண்ண உடையில் புரட்சி
                -மொகித்ராவ்

                 தமிழில்: வின்சென்ட் காபோ

‘குலாபி கேங்’ எனும் மகளிரின் உரிமைக்காக சமரசமின்றி போராடும் அமைப்பின் தலைவியான சம்பத் பால் தேவி பெங்களூர் வந்திருந்தபோது கண்ட ஒரு நேர்காணல்.
‘’ குலாபி கேங் எனும் அமைப்பைத் தொடங்கும்போது நான் என்னை ஒருவரின் மனைவியாக நினைக்கவில்லை. சமூகத்தில் வாழும் சாதாரண ஒரு மனித இயல்பாகத்தான் உணர்ந்தேன் ‘’ என்று உறுதியாகப் பேசும் சம்பத் பால் தேவியின் சிந்தனை மற்றும் செயல்திறன் கொண்ட முயற்சிகளால் குலாபி கேங் எனும் அமைப்பின் பெருமை இன்று உலகமெங்கும் பரவி வருகிறது. பிங்க் நிறத்திலான சேலை அணிந்து வலம் வரும் இவரது தலைமையிலான பெண்கள் குழுவானது, தொடர்ந்து சமூகத்தின் ஆதிக்க மனநிலை விதிகளுக்கு எதிராக இடையறாது போராடி வருகிறார்கள். அவரிடம் கேட்ட கேள்விகளின் தொகுப்பு இதோ.


தங்கள் குழுவின் செயல்பாடுகளின் இன்றைய நிலை எப்படியிருக்கிறது? தங்கள் அமைப்பின் நோக்கத்தை அடைந்துவிட்டீர்களா?
     உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களிலிருந்து நான்கு லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் குலாபி கேங்கில் இணைந்திருக்கிறார்கள். மேலும் பல்வேறு இடங்களிலும் அமைப்பினை உருவாக்க வேண்டுகோள்கள் எங்களுக்கு வருகிறது. வட கர்நாடகா வந்தபோது இங்கு ஒரு பிரிவை தொடங்கலாம் என்று ஆசை இருக்கிறது. மக்களின் ஆதரவு கிடைத்தால் இதனைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன்.
     2006 ல் குலாபி கேங் அமைப்பினைத் தொடங்கும்போது பந்தேல்கண்ட் பகுதியில் பத்திற்கும் அதிகமான புகார்கள், பெண்களுக்கு நிகழும் அநீதி, வன்முறை ஆகிய பிரச்சனைகள் குறித்து வந்து கொண்டிருந்தன. அமைப்பின் தொடக்கத்திற்குப் பின் தங்களுக்கான உரிமையைப்பெற, அநீதிகளை எதிர்க்க பெண்கள் தானே தயாராகி விட்டார்கள்.
பிரச்சனைகளை எப்படி கையாளுகிறீர்கள்? அரசியலுக்கு அமைப்பினைப் பயன்படுத்துவீர்களா?
     ஒவ்வொரு மாவட்டத்திலும் பணிகளை குறித்த உத்தரவுகளை கூற தலைவர் ஒருவர்  நியமிக்கப்பட்டிருப்பார். உறுப்பினர்களின் தவறான செயல்பாடுகளை நாங்கள் அறிந்துகொண்டால் அவர்களின் மீது நடவடிக்கை எடுத்து அமைப்பை விட்டு நீக்கிவிடுவோம். இதுவரை நான்கு தலைவர்களை நீக்கியிருக்கிறோம். இதில் ஒருவர் என் பெயரைக் கூறி மக்களிடம் பணம் வசூல் செய்ய முயன்றிருக்கிறார்.
     மக்கள் எங்கெங்கு உள்ளார்களோ அங்கு அரசியல் நிச்சயம் இருக்கும். 2012 ல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் நிற்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றாலும் குலாபி கேங் அமைப்பு எந்த அரசியல் சார்புமின்றி தனித்தே இயங்கும். நாட்டில் நிகழும் கொடுமைகளை நாடாளுமன்றத்தில் கூற விரும்புகிறேன். நல்ல மனிதர்கள் அரசியல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
அரசியல் சட்ட அமைப்பு குற்றவாளிகளை கையாளுவதற்கான முறையான தீர்வுகளைக் கொண்டிருக்கும்போது, தங்களது போராட்ட முறையை எப்படி நியாயப்படுத்த முடியும்?
     சட்டங்கள் முறையானவை என்றாலும் அவை இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் தேங்கியுள்ளன. சட்டத்தின் மூலம் ஒருவருக்கு நீதி கிடைக்கவேண்டுமென்றால் அவரிடம் நிறைய பணமும், பல ஆண்டுகளுக்கு நீதிமன்றங்கள் மற்றும் பல்வேறு அலுவலகங்களுக்கு அலையும் தெம்பும் இருக்கவேண்டும். தவறு செய்யும் மனிதனுக்கு நாங்கள் சரியான பாடத்தைப் புகட்டுகிறோம். மீண்டும் அதே தவறை அவன் செய்யும்போது காவல்துறையிடம் ஒப்படைக்கிறோம்.
சாதி மறுப்பு திருமணங்களை எதிர்த்து வன்முறையில் ஈடுபடுபவர்களும் சமூகத்திற்கு தாங்களும் நன்மையைத்தான் செய்வதாக நம்புகிறார்கள். அவர்களின் செயல்பாட்டிற்கும் தங்களுடைய சிந்தனைக்கும் என்ன வேறுபாடு?
     நூறு பிரச்சனைகள் எங்களிடம் வந்தால் அதில் மூன்று மட்டுமே சரியானதாக இருக்கும். நாங்கள் அந்த பிரச்சனை குறித்து நன்கு ஆராய்ந்து குடும்பம், உறவினர்கள் ஆகியோரிடம் பேசிய பின்பே குடும்பவன்முறை, வரதட்சணை ஆகிய விஷயங்களில் நடவடிக்கை எடுக்கிறோம். எங்கள் குழுவை மதவிவகாரங்களில் ஈடுபடுத்துவதில்லை. குடும்பத்தின் உறுப்பினர்களை அழைத்து வந்து பேசி பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்கிறோம். நமது சமூகத்தின் அடிப்படைவாத சரிநிகரில்லாத நெறிகள்தான் பெரும் பிளவுகளை சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அதற்காகத்தான் குலாபி கேங் அமைப்பு தொடங்கப்பட்டு, பாதிக்கப்படும் தம்பதிகளுக்கு உதவி வருகிறோம்.
தொடர்ந்த சில வாரங்களாக பெண்களின் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதில் தங்களுடைய நிலைப்பாடு என்ன?
சமூகத்தில் பெரும் மாற்றம் தேவை. அரசைக் குற்றஞ்சாட்டி பயன் ஏதுமில்லை. நிகழ்ச்சி நடந்த பின்தான் அரசுக்கு தெரிந்து நடவடிக்கை எடுக்கிறது. இந்த கேடுகளுக்கு சமூகம்தான் காரணம். கேடுகளுக்கான மூலம் எதுவென்றால் சமூகத்திற்குத்தான் முதலிடம் கொடுப்பேன்.
தங்களுடைய வாழ்வினை அடிப்படையாகக் கொண்ட குலாபி கேங் திரைப்படத்தினை ஆட்சேபித்தீர்களே என்ன காரணத்திற்காக என்று கூறுங்கள்?
முதலில் என்னுடைய அனுமதி பெறாமல் அப்படத்தினை உருவாக்க முனைந்தார்கள். வணிகத்திற்கான தேவையில்லாத மசாலா அம்சங்கள் அதில் இருந்தன. படத்தில் மூன்று மாற்றங்கள் செய்யுமாறு கோரினேன். துப்பாக்கிகளை பயன்படுத்தக்கூடாது என்று கூறினேன்; ஏனென்றால் நாங்கள் குச்சிகளைத்தான் பயன்படுத்துகிறோம். மைய கதாபாத்திரத்தின் பெயரான லஜ்ஜோ என்பதை சம்பத் என்று மாற்றக்கோரினேன். அவளுடைய வாழ்க்கை என்னுடைய வாழ்வைத்தான் பிரதிபலிக்கிறது. ஆனால் மேலே கூறப்பட்ட மாற்றங்கள் எதுவும் படத்தில் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக சேலையின் நிறம் மட்டும் மாற்றப்பட்டு, குலாபி கேங் என்னும் எங்கள் அமைப்பிற்கும் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லாமல் வெளிவந்தது.
                     நன்றி: ஹிந்து ஆங்கிலம் செப்.14, 2014.


    




கருத்துகள்