மந்திரக்கோலும் தொப்பியும் நோய் தீர்க்கிறது

மந்திரக்கோலும் தொப்பியும்  நோய் தீர்க்கிறது
                               சாலேட் ஜிம்மி

                     தமிழில்: அன்பரசு சண்முகம்

சில ஆண்டுகளுக்கு முன்  கேரளா பெண்கள் கல்லூரியில் தன் நிகழ்ச்சியை முடித்திருந்த மந்திரக்காரர் நாத்தை மூன்று மாணவர்கள் சந்தித்து பேசும்போது அவர்களின் வெளிப்படையான உரையாடலினால் அவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி அதற்கு அடிமையானவர்கள் என்று அவர் அறிந்துகொள்கிறார்.
அவர்கள் பேசுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு நாத் தன் நிகழ்ச்சி வழியே போதைப்பொருட்களினால் ஏற்படும் கொடும் விளைவுகளை அவர்கள் முன் காட்சிப்படுத்தியிருந்தார். அது அந்த மாணவர்களின் மனதில் பெரும் பயத்தை ஏற்படுத்தி அழியாது பதிந்துபோயிருந்தது. அதற்கு பின்தான் மேற்கூறிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்பின்னால் அவர்கள் போதைப்பொருட்களை தூக்கியெறிந்து தமது உடல்நலத்தையும், மனநலத்தையும் பாதுகாத்துக்கொள்ள முயற்சித்தால் நாத் அதனால் பெரிய ஆச்சர்யத்திற்கு உட்பட மாட்டார்.
தன் முப்பத்தைந்து ஆண்டு கால பணியில் இதுபோன்று பலரின் வாழ்க்கையினை நலமாக்கி தொடர்ந்து முயற்சித்துக்கொண்டிருக்கும் மற்ற மந்திரக்காரர்களிடமிருந்து வேறுபடுவது தன் நிகழ்ச்சிகளை வெறும் பொழுதுபோக்குக்காக நடத்தாமல் சமூகத்தின் கேடுகளைக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற தனித்தன்மையான அர்ப்பணிப்புஉணர்வை கொண்டிருப்பதனால்தான். நாம் அவரைப்பற்றி எழுதுவதற்கும் அது ஒன்றேதான் காரணம்.
போதைப்பொருட்கள், மதுபானங்கள், எய்ட்ஸ் ஆகியவற்றுக்கு எதிராக பல ஆண்டுகளாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு நிறுவனங்களான கேரளா மாநில எய்ட்ஸ் தடுப்புக் கழகம், தேசிய ஊரக உடல்நலத்திட்டம், மாநில புற்றுநோய் மையம், மாநில சுகாதாரத்துறை ஆகியவற்றுக்காக நடத்தி தந்திருக்கிறார் மந்திரக்காரர் நாத்.
‘’ நான் எனது நிகழ்ச்சிகளின் மூலம் யாருக்கும் அறிவுரை கூறுவதில்லை. அதன் விளைவுகளை மட்டும் காட்சிப்படுத்த முயற்சிக்கிறேன். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அறியாமையைக் களைய இது சிறந்த வழியாக உள்ளது. இருபது ஆண்டுகளுக்குப்பிறகும் பெரிய மாற்றங்கள் இங்கு ஏற்படவில்லை. கலாச்சாரம்தான் மக்களின் பழக்கவழக்கங்களின் மீது தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதில் குழந்தைகள்தான் அடித்துச்செல்லப்படுகிறார்கள். அதனால் குழந்தைகளின் மேல்தான் இனி என் முழுகவனமும் இருக்கும் ‘’ என்று கூறியவர் தன் தொப்பியின் உட்புறமிருந்து பல புகையிலைப் பாக்கெட்டுகளை தன் மந்திரக்கோலால் எடுத்துக்காட்டி அதனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மோசமான விளைவுகளை ஒவ்வொன்றாக விளக்குகிறார் நாத்.
புகையிலை எவ்வாறு உடலின் உள்ளுறுப்புகளை சிதைத்து உடல் மனநலன்களையும், குடும்ப உறவுகளையும் அழிக்கிறது என்பதைக்குறித்து சிந்திக்க வைக்க முயற்சிக்கிறேன். இதற்காக குழந்தைகளின் கற்பனைத்திறன் வடிவத்தை பயன்படுத்துகிறேன் என்கிறவர் கேரளா மாநில எய்ட்ஸ் தடுப்புக் கழகமும், ஹிந்துஸ்தான் லேடக்ஸ் நிறுவனமும் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி பற்றி
 ‘’ எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பான வரவேற்பை மக்களிடம் பெற்றதன் சாட்சியாக ஆணுறைகளை வாங்க மக்கள் வரிசையில் நின்றிருந்தார்கள். கல்வியில்லாத அறியாமைதான் மக்களை பெரும் நெருக்கடியில் தள்ளுகிறது ‘’ என்ற நாத் கேரளா மாநில எய்ட்ஸ் தடுப்புக்கழகத்திடமிருந்து அந்நிகழ்ச்சியின் வெற்றிக்குப்பிறகு ஐந்நூறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறார். பல இடங்களுக்கு மக்களோடு பயணித்து எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.
மதுபானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பத்தாயிரம் நிகழ்ச்சிகளை தயாரித்து நடத்தியிருக்கிறார். ‘’ பலரும் கேரளாவில் மதுபானங்களால் கடும் பாதிப்பிற்கு ஆட்பட்டிருந்தனர். இன்று வரையும் மது அங்கே விலக்கப்படவில்லை.  இந்த நிகழ்வுகள் என்னை கடுமையாக பாதித்தன. மதுவிற்கு எதிரான நிகழ்ச்சிகளை நான் எனது சுயநலன் பாராது நடத்த தொடங்கினேன். மதுவருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்துகளை திட்டமிட்டே உருவாக்குகிறோம் ’’ என்று மதுவின் அபாயங்களோடு சாலைபாதுகாப்பு பற்றியும் அக்கறையோடு விளக்குகிறார் மந்திரக்காரர் நாத்.
முன்பு சாலையில் பேருந்தின் ஒருபக்கத்தை மேடைபோலாக்கி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும், பின் போக்குவரத்து நெருக்கடியினால் அதனை தொடரமுடியாமல் போகிறது. இந்த மந்திரக்காரரின் பணி தொடங்கியது 1980 ஆண்டிலிருந்துதான். தன் மந்திரக்கோலை சுழற்றி மக்களிடம் இருந்த மூடநம்பிக்கைகளை களைந்து அறிவியலை அவர்களிடம் கொண்டுபோய் சேர்க்க முயற்சித்தார்.
‘’ எனது நிகழ்ச்சியின் மூலமாக நெருப்பில் நடப்பது, உடலில் துளையிட்டு அலகு குத்துவது போன்ற நிகழ்ச்சிகளை பக்தர்கள் தம் நேர்மை அல்லது உண்மை பக்தியை உணர்த்த செய்தாலும் அதை தவறு என்று உணர்த்த முயற்சித்து வெற்றி பெற்றேன் ‘’ என்று கூறும் நாத்திற்கு இருக்கும் வருத்தம் முன்பு போல அரசு சமூகக்கேடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை என்பதுதான். தற்போது தனியார் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியோர்களின் ஆதரவில்தான் நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார் நாத்.
மந்திரக்காரர் நாத்தின் அடுத்த நிகழ்ச்சி எதை மையமாக வைத்து இருக்கும் என்று கேட்டபோது, என் சட்டைப்பையிலிருந்த கைபேசி ஒளிர்ந்து அழைக்க, பேசிவிட்டு அவர் முகம் பார்க்க,
‘’ இளைஞர்களிடம் தற்போது பெரிதும் பரவிவரும் கைபேசி பற்றிய கருதான் அடுத்த நிகழ்ச்சி மையப்படுத்தும் ’’ என்று புன்னகை மாறாமல் விடைதருகிறார் தனித்துவமான மந்திரக்காரர் நாத்.
                     நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
                           20 ஏப்ரல் 2014





கருத்துகள்