கலைதான் என் தாய்

‘’ கலைதான் என் தாய், என் உதிரம் முழுக்க நாடகத்திற்குத்தான் ‘’

·        அன்பரசு சண்முகம்


நாடகம், கூத்து போன்ற கலைகள் போன்றவை தொடர்ந்து அழிந்துவருகின்ற நிலையில் அதைக் காப்பாற்ற நினைக்கும் தனிப்பட்ட மனிதர்களின் முயற்சிகளினால்தான் இன்றிருக்கும் சில விஷயங்களாவது காப்பாற்றப்பட்டு இருக்கின்றன. தன் வாழ்வின் பெரும்பாலான ஆண்டுகளை நாடகத்திற்காக செலவழித்துவிட்டு  இன்றும் நாடகத்தில் பங்கேற்று நடிக்க விரும்பும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பரப்பு கிராமத்திலுள்ள நாடக கலைஞர் சண்முகம் அவர்களின் நேர்முகம் இது.
நாடகத்தில் எந்த வயதில் நடிக்க ஆரம்பித்தீர்கள்?
என்னோட பதிமூணாவது வயசுலன்னு நெனைக்கிறேன். அது எந்த வருஷம்னா 1967 ன்னு  ஞாபகம் இருக்குது. அல்லி அர்ஜூனா நாடகத்துல புலேந்திரன்னு ஒரு வேஷம்.  அல்லிக்கும், அர்ஜூனனுக்கும் பொறக்குற புள்ளதான் புலேந்திரன்.
உங்களின் நாடக ஆசிரியராக இருந்தவர் யார்?
எனக்கு நாடகத்துல பல விஷயங்கள சொல்லிக்குடுத்தவருன்னா கொடுமுடி அரசுங்கறவரைத்தான் சொல்லுவன். இவர் சமூக நாடகங்களை இயக்குனவரு. சரித்திர நாடகங்களை இயக்குனவரு கணபதிங்கறவரு. அப்பறம் மின்னப்பாளையம் அமுத கணேசன், ஆறுமுகம், பெரிய செட்டிபாளையம் னு பல இயக்குநருகிட்ட நடிச்சேன். அரிச்சுவடிய கத்துக்கிட்டது  கொடுமுடி அரசு அப்படீங்கறவர்கிட்டத்தான். அவர்கிட்ட நான் முப்பத்தி ஆறு நாடகம் நடிச்சிருக்கேன்.
நடிகர் சரி, எழுத முயற்சி செய்திருக்கிறீர்களா?
நாடகம்னா எல்லாரும் அப்படியே பேசி நடிக்கறதில்ல. டைமிங்குல சில வசனம் வேளைக்கு ஏத்தாப்போல யோசிச்சு பேசுவோம். நான் எழுதி இயக்கி நடித்து ஆறு நாடகங்கள் பண்ணியிருக்கறன்.
எவ்வளவு படித்திருக்கிறீர்கள்?
அஞ்சாவது வரதாம்ப்பா. எல்லாமே அனுபவப் பாடந்தான். அதுக்கு மேல படிக்கறக்கு முடியல. வீட்டுல சோத்துக்கு  இல்ல. பஞ்சம். மூணு மூட்ட ராய்க்காக என்ன சின்னவயசுல மச்சுவீட்டுக்காரரு வூட்டுல ஆளுக்காரனா சேத்திவுட்டுட்டாரு எங்கப்பன்.
நாடகத்தின் மேல் எப்படி  இவ்வளவு ஆர்வம் வந்தது?
அந்தக்காலத்துல வேற என்ன பொழுதுபோக்கு இருக்குது? வேஷங்கட்டி நடிக்கறது, பாட்டு படிக்கறதுன்னு பாக்கும்போதே நாமளா இருந்தா எப்படி பண்ணியிருப்போமுன்னு தனியா நடிச்சு பாப்பேன். அதென்னமோ நம்மு மண்டைல நாடகம்னா ஒடனே ஓடி பாக்கணும்னு நெனப்பேன். அப்பறமா நாம மத்தவங்ககிட்ட பாராட்டு வாங்கணும்னு ஒரு வெறி. அதனாலதா அறுபது வயசான இப்பவும் ஏதாவது ஒரு வேஷங்கட்டி கெடைக்கற வாய்ப்புல நடிக்கிறதெல்லாம். ரத்தோ சுண்டிப்போற இந்த வயசுலயும் எதுவுமே கொறையல.
வாழ்வாதாரத்திற்கு என்ன செய்தீர்கள்?
     நாடகத்துல ஒரு ஆர்வத்துல, வெறில நாமளே நடிக்கறதுதான். அதுல புகழ் கெடைக்கும், பணத்த எதிர்பாக்க கூடாது. நா பதிமூணு வயசுல நாடகத்துல நடிக்கும்போதே எங்கப்பா நாச்சிமுத்து எனக்கு மரமேறக்கத்து குடுத்துட்டாரு. அதுதே வருமானம்.

உங்க வீட்டில் நீங்கள் நடிப்பதற்கு ஆதரவளித்தார்களா?
எது ஆதரவா? எங்கப்பன் என்ன அடிக்காம வுட்டதே பெருசு. ஆனா எங்கப்பாரு எனக்கு சப்போட்டா இருந்தாரு. கத்த வித்த காலத்துக்கும் ஒதவும்பாரு. அவன வுட்டுரு ஏதோ செஞ்சிட்டுப் போறாம் போம்பாரு. அப்பறமா அப்பனும் நாடகத்த பாப்பாரு. எதுஞ் சொல்லமாட்டாரு. ஒருதடவை மட்டும் நடி; ஆனா பொம்பள புள்ளயோடவெல்லா நெருங்கி நடிக்காதன்னு சொன்னாரு. (இடையில் அவரது அம்மா பற்றிக் கேட்கவும்) ஆனா எங்கம்மா எட்டுவயசிலேயே ஏதோ சீக்குல தவறிட்டாங்க அதுதே இப்ப நெனச்சாலும்… (கண்ணீர் பெருகி வர நிலம் பார்த்து அழுகிறார்)
உங்க மனைவி நடிப்பிற்கு ஆதரவா இருந்தார்களா?
     1979 ல் எனக்கு கல்யாணம் ஆச்சு. அவங்க ஆதரவில்லாம என்ன செஞ்சிருக்க முடியும்? நா நடிக்கறது அவங்களுக்கு  புடிக்கும். என்னால நடிக்காம இருக்கமுடியாது. ஏன்னா உதிரமெல்லாம் நாடகத்துக்குத்தான். என்னோட தாயா இந்தக் கலையைத்தான் நெனைக்கறேன்.
எத்தனை நாடகம் நடித்திருப்பீர்கள்? என்னென்ன வேடம் ஏற்றிருக்கிறீர்கள்?
     நூறு நாடகத்துக்கு பக்கமாக இருக்குமுன்னு நெனைக்கறன். எனக்கு காமெடின்னா புடிக்கும். அதிகமா பபூன் வேஷங்கட்டுவன். பல வேஷம் போடுவன். கெடைக்கற எதையும் என்னோட பாணில பண்ணப் பாப்பேன்.
நாடகத்துக்கு செய்த பிரயத்தனங்களில் ஒன்றைச் சொல்லுங்களேன்?
ஒரு பொண்ணோட கால்ல நா வுழுவுற மாரி காட்சி. செயற்கையா இருக்கக் கூடாதுன்னு விழுந்ததுல நெத்திக்கு மேல கல்லு தரயில பட்டு மண்டை ஒடஞ்சிருச்சு. நடிச்சிட்டிருக்கும்போது தெரீல. ரத்தம் அப்படியே தண்ணி மாரி வாயில ஒழுவுது. என்னடா நாக்குல தொட்டுப்பாத்தா உப்புகரிப்போட ரத்தக்கவுச்சி. கையில தொட்டுப்பாத்தா பிசுபிசுன்னு ரத்தம். ஒடனே ஒத்திகைய நிறுத்தீட்டு ஆஸ்பத்திரி கொண்டீ தையல்போட்டாங்க என்று  (நெற்றியில் இருக்கும் நீளத்தழும்பை தலைமுடி விலக்கி காண்பிக்கிறார்). ஆனா மேடையில் பிரச்சனை இல்ல நல்லா பண்ணீட்டன். நெறைவா எதையுமே பண்ணோனுமுனு நெனப்பன். அப்பத்தானப்பா எனக்கு ஒரு  நிம்மதி.

சினிமாவுக்கு முயற்சித்தீர்களென்றார்கள். என்னவானது அம்முயற்சி?
     மரமேறி ஏதாவது வேல செஞ்சு பணஞ் சம்பாரிப்பன். அத வூட்டுக்கு குடுத்தது போக சேத்திவெச்சு மெட்ராசு போறது. அங்கே நண்பர் கோபால்னு ஒருத்தரு இருக்கறாரு. வீட்டுல தங்கிக்கிட்டு வாய்ப்பு தேடறதுன்னு அலைவன். ஆனா காசு தீந்தப்பறம் அந்தவூருல இருக்கறது தீக்கங்குக்குள்ள கால வெச்சிட்டு இருக்கறமாரி. ஊருக்குவந்தருவன். போறது வர்றதுன்னு இப்படித்தே நம்மு முயற்சி வெட்டியாப் போவுது.
உள்ளூருக்காரர்கள் பலரும் நாடக நடிப்புக்காக உங்களை பாராட்டுகிறார்கள் அப்புறம் ஏன் சினிமா முயற்சி?
     நெஜம்தான். ஆனா இந்த ஊருல முப்பத்தாறு வருஷமா நா நடிக்கறன்னுனாலும் இது குறுகின எடம்தான். குறிப்பிட்ட ஆளுக இருப்பாங்க. ஆனா சினிமாங்கறது பெரிய ஒலகம். பதிவு மாரி ஆச்சு. யாரும் அத பாத்துக்கலாமல்லோ. பணங்கறதவட கைதட்டறாங்கல்லோ.. அதத்தான எந்த கலைஞனுமே முக்கிய நெனைப்பான். இன்னிக்கு கேள்வி கேட்கற பத்திரிக்க காரரா இருக்கற நீங்க இப்படியே இருப்பீங்களா என்ன? அடுத்த கட்ட வளர்ச்சியா இத வட பெரிசா ஒண்ணுக்கு போவணும்னு நெனப்பீங்கள்ல அதே மாரிதே இதுவும்.
இன்றைய நாடகங்களை கவனிக்கிறீர்களா?
இன்னிக்கு நடக்கற நாடகங்கள்ல சினிமாப்பாட்டுத்தே சத்தமா கேட்குதே ஒழிய வசனமல்லா எதுவுமே கேட்கறது இல்ல. அப்பறம் நாடகம் போடறதுக்கு இன்னிக்கு ஆசயிருந்தாலும் அத சரியா செய்யறக்கு ஆளுக இருந்தாலும் பாக்கறதுக்கு யாரு தயாரா இருக்கறாங்க? ஆடலும் பாடலும்தா எல்லா ஊரிலும் இப்ப பரவிக்கிட்டு வருது.
பழைய நாடகங்களில் பாடல்களையெல்லாம் எங்கிருந்து எடுத்து பயன்படுத்துவீர்கள்?
அங்கிங்க இருந்த எடுக்கறதுன்னாலுமே யாராலும் ஒருத்தன் யோசிச்சு எழுதித்தான ஆவோணும். பாட்டல்லா நாமளா யோசிச்சு எழுதறதான். மூணு நிமிஷம் அப்படி பாட்டு வரும். நாமளே தாளத்த நெனச்சிக்கிட்டு கொஞ்சோ சந்தமா தட்டாம வர்ற மாரி எழுதறதுதே. வேறொண்ணுமேயில்ல இதுல. இந்தப் பாட்டப் பாருங்க.. இப்ப யாரு இப்படியெல்லா பாடறாங்க? மைக்கு எல்லா இல்லாமயே பாடுனா நெறயா பேருக்கு கேக்கோணும். அப்படி பாடறவங்கதா நாங்கல்லாமே.

னானன்னே… தானன்னா
ஆடிக்கடுத்து ஆவணியப்பா
ஆடுவது நாடக கம்பெனியப்பா
பாடிப் புகழ் பப்பூனுமானேன் பன மரத்த தூக்கிப்போட்டு
தொப்புனு வுழுந்தேன்
பப்பள.. பப்பள.. பப்பள பளாபளா பப்புனும் வந்தேன் நா
குடுகுடு குடுன்னு குண்டனும் வந்தேன்.
கோட்ட தலவாசலிலே நண்டனும் வந்தேன்.
பப்பள.. பப்பள.. பளாபளா பாங்கா பாட்ட பாடி
பப்புனும் வந்தேன்.
இது பபூனுக்கான பாட்டு. இது மாரி பாடித்தே பபூனு சிரிப்பு பண்ணுவாங்க.
உங்களுக்கு பெயர் வாங்கித்தந்த நாடகங்கள் என்னென்ன? அவற்றை பகிர்ந்துகொள்ளுங்களேன்?
வள்ளி திருமணம்னு ஒரு நாடகம் அதுல முருகனாக வேஷங்கட்டுனாலும் ஊருக்குள்ள வள்ளின்னுதா பேரு கெடச்சுது. அர்ப்பணிப்பா செஞ்சா அது எல்லோரையுமே திரும்பி பாக்க வெக்கும். அதுல ஒரு பாட்டு
‘’ எல்லையில் முதல் வேங்கிடம் தவழ்ந்து வந்தேன்
ஆறு வயதே ஆன ஒரு அழகிய பெண்மான்
அறுத்து வலை மீறி இங்கு வந்தது என் மான்
பதினாறு வயதான ஒரு அழகிய பெண்மான்
அறுத்து வலை மீறி இங்கு வந்தது என் மான் ‘’ அப்படீன்னு
முருகன் பாட, வள்ளி பதிலுக்கு திட்ட
‘’ காயாத கானகத்தில் நின்றுலாவும் புல்லை மேயாத மான்
புல்லைதனை மேய்ந்திடாத புதிய மானது, புனுகு சவ்வாது புல்
மேயாத மானது, வள்ளி மானது, புள்ளி மானது ‘’
என்று முருகன் பாடுவது மாரி வரும் என்பவர் நீளமாய் அதே போல தாளத்தை இசைத்து பாடுகிறார்.
நீங்கள் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் உதவி செய்வதாக கூறுகிறார்கள்?
மொதல்ல இருந்த அதுமாரியான விஷயமெல்லா செஞ்சிட்டு வர்றோம். இந்த வேலய நா மட்டுமில்ல. ஏறத்தாழ எண்பது பேருக்கு மேல நண்பர்கள் எல்லாரும் ஒண்ணா சேந்து என்ன முடியுமோ அத செஞ்சிக்கிட்டு வர்றோம். வலுவா இருக்கறவங்க பலவீனமா இருக்கறவங்களா காப்பாத்தோணுமல்ல. அவ்வளவுதான். என்றவர் உற்சாகமாய் கும்மி பாட்டு ஒன்றை தன்னிச்சையாகப் பாட, அந்த பாடலைக் கேட்டபடி நாடகக் கலைஞர் சண்முகம் அவர்களிடம்  விடைபெற்றுக்கொண்டேன்.


    







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்