எளியகரங்களின் ஒன்றிணைப்பில் சாத்தியமான பசுமை வெளி

எளியகரங்களின் ஒன்றிணைப்பில் சாத்தியமான பசுமை வெளி

                           ஸ்வாதி சர்மா

                தமிழில்: அன்பரசு சண்முகம்


1989 வரை ஆந்திரப்பிரதேசத்திலுள்ள அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள சென்னாகோத்தப்பள்ளி கிராமமானது விவசாயத்திற்கு பயன்படாத பூமியாக இருந்தது எதுவரையென்றால் சி.கே கங்குலி(பப்லு) மற்றும் மேரி வட்டமட்டம் ஆகிய தம்பதிகள் 1991 ஆம் ஆண்டு  இந்த நிலத்தை பார்வையிட்டு தம் நண்பர்களோடு இணைந்து இதனை பசுமை வெளியாக மாற்றும்வரைதான்.
இந்த தம்பதிகளோடு இணைந்து இவர்களின் நண்பரான ஜான் டி சூசா வும் உதவி செய்ததால் முப்பத்திரெண்டு ஏக்கர் நிலமான பயன்பாடு பூமியை வாங்கினார்கள். ஜப்பானிய இயற்கை விவசாயியான மாசானபு ஃபுகோக்கா எழுதிய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ எனும் வேதிப்பொருட்கள் இல்லாமல் இயற்கை வேளாண்மை செய்வது பற்றி பேசும் நூலானது இவர்களின் இந்த முயற்சிக்கு பெரிதும் தூண்டுகோலாய் அமைந்திருக்கிறது. நிலம் தன்னை இயல்பாக புதுப்பித்துக்கொள்ள உதவும் வகையில் மரக்கன்றுகளை நிலத்தில் ஊன்றி வைத்திருக்கிறார்கள்.
     இப்பகுதியை வளமாக்க ஒத்திசைவான சிந்தனைகளைக் கொண்ட நண்பர்களோடு இணைந்து பணிபுரிந்து நிலத்தை பசுமையான வெளியாக மாற்றியிருக்கிறார்கள். இந்நிலத்திற்கு திம்பக்டு என்று பெயரிட்டிருக்கிறார்கள். தமிழில் வானமும் பூமியும் இணையும் தொடுவானம் என்று குறிப்பிடலாம்.
‘’ இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் முயற்சியில், மீட்டெடுக்கும் தருணத்தில் மனிதர்களின் தலையீடு குறைவாக இருந்தாலே போதும் ‘’ என்று புன்னகைக்கும் ஐம்பத்தேழு வயதாகும் பப்லு பெங்களூர் பல்கலைகழகத்தில் வணிகம் தொடர்பான படிப்பை நிறைவு செய்தபின், நாடகம், அரசியல் ஆகியவற்றில் செயற்பாட்டாளராக பனிரெண்டு ஆண்டுகளாக பணிபுரிந்திருக்கிறார்.
     நண்பர்களின் கூட்டு முயற்சியால் உருவான திம்பக்டு குழுவினரும், தொண்டு நிறுவனம் ஒன்றும் இணைந்து கிராமத்தில் உள்ள மக்களுக்கான தற்சார்பான வாழ்வை உருவாக்க முடிவு செய்து, குறைவான மழை பெய்யக்கூடிய அப்பகுதியில் மழைநீரை சேமிக்கும், தேக்கும்படியான அமைப்புகளை உருவாக்க முயற்சித்தார்கள்.
     ‘’ வேலைக்கு உணவு எனும் அரசு திட்டத்தின் அடிப்படையில் மழைநீரைத்தேக்கும் அமைப்புகளை நான்கு கிராமத்தில் மேம்படுத்தி அமைத்தும், இருநூற்று அறுபது  அமைப்புகளை புனரமைத்தும் பணிகளை தொடங்கினோம். முதலில் சிறிய ஏரிகளையும், தடுப்பணைகளையும் உருவாக்கினோம் ‘’ என்கிறார் திம்பக்டு அமைப்பின் தலைவரான பப்லு.
     நீரைத் தேக்கி வைப்பதற்கான ஏரி, குளங்களை தோண்டுவது என்பது கோகிரா, கம்பளப்பள்ளி, சியாபுரம், கிராமங்களைக் கொண்ட ரோட்டம் மண்டலம் மற்றும் முஸ்டீக்கோவேலா, சுப்பரயுனிபள்ளி, குவவலாகோவிந்தம் பள்ளி கிராமங்களை உள்ளடக்கிய உள்ளடக்கிய சென்னகோதம்பள்ளி மண்டலம் வரை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
‘’ இந்த விஷயங்களை செயல்படுத்தியவுடன் மழைநீர் வீணாவது தடுக்கப்பட்டு மழைநீர் மண்ணில் மெல்ல கசிந்து பரவி உள்ளிறங்கத் தொடங்கியது. பிறகு ஏரிகள், தடுப்பணைகள் கட்டமைக்கப்பட்டு எவ்வளவு மழைநீரை சேமிக்க முடியுமோ அவ்வளவு மழைநீரை சேமித்தோம். இன்று திம்பக்டு பகுதியிலுள்ள தடுப்பணை மூலம் பெறும் பருவமழை நீரை மழைக்காலம் முடிந்தபின்னும் மூன்றிலிருந்து ஐந்து மாதங்கள் வரை சேமிக்க முடிகிறது ‘’ என்று அந்த இடங்களை சுட்டிக்காட்டியபடி கூறுகிறார் பப்லு.
     முப்பத்திரெண்டு ஏக்கர் நிலமாக இருந்த நிலப்பரப்பு இன்று 2800 ஹெக்டேர் நிலப்பரப்பாக ஏழுகிராமங்களை உள்ளடக்கிய வனப்பகுதியாக மாற்றப்பட்டு புத்துயிர் பெற்றிருக்கிறது.
     திம்பக்டு பகுதி அதன் மாசுபாடு இல்லாத சூரிய ஒளி மின்சாரம் மற்றும் இயற்கை வேளாண்மை பண்ணைக்காகவும் புகழ் பெற்றுள்ளது. 1190 குடும்பங்கள் 3570 ஏக்கர் நிலத்தில் இயற்கையான காய்கறிகளை, தானியங்களை விளைவிக்கிறார்கள்.
     வறண்ட நிலத்தில் சிறு தானியங்களை வேளாண்மை செய்து வந்த விவசாயிகள் பின்னர்தான் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்தமுடியாமல் கடன்வாங்கி அதனைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருப்பதை உணர்ந்தார்கள். விவசாயிகளுக்கு இயற்கையான இடுபொருட்களை இட்டு விளைபொருட்களை விளைவிப்பதை கற்றுக் கொடுத்தோம். இன்று அவர்கள் சிறுதானியங்கள், சோளம், துவரை, பாசிப்பயறு, நிலக்கடலை, உள்ளிட்டவற்றை இயற்கையான இடுபொருட்களைப் பயன்படுத்தி மண்ணுக்கும், மனிதர்களுக்கும் கேடு இல்லாத காய்கறிகளை, தானியங்களை விளைவிக்கிறார்கள் ‘’ உற்சாகம் வழிந்தோட பேசுகிறார் பப்லு.
     சூரிய ஆற்றலைப்பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது. அவசரத்தேவைகளுக்கு சேமிக்கப்பட்ட ஆற்றல் ஜெனரேட்டர் மூலம் வழங்கப்படுகிறது. இரவில் லாந்தர் விளக்குகளைப் பயன்படுத்துகிறார்கள்.
     திம்பக்டுவில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பதற்கான சந்தையாக தரணி  வேளாண்மை மற்றும் விற்பனை நிறுவனமானது, அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் போல செயல்பட்டு விவசாயிகளிடமிருந்து பொருட்களை கொள்முதல் செய்து திம்பக்டு எனும் பெயரில் வெளியில் கொண்டு செல்லப்பட்டு சென்னை, ஆந்திரா, பெங்களூரு ஆகிய இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
     ‘’ தொடர்ந்து மரபான விவசாயிகள் உரங்களைப் பயன்படுத்த அரசின் மானியங்கள் கிடைக்கின்றன. ஆனால் இயற்கை வேளாண்மையை முன்னெடுக்கும் விவசாயிகளுக்கு மண்ணைக்கெடுக்காமல் இருப்பதற்காக சிறு ஊக்கத்தொகை வழங்கினால் வேதிப்பொருட்களால் விளையும் காய்கறிகளை விட விரைவில் கெடும் உயிர்சத்து கொண்ட இயற்கை காய்கறிகளினால் இழப்பை ஈடு செய்ய முடியும். வேதிப்பொருட்களை தொடர்ந்து மண்ணில் இடும்போது மண் தன் இயல்பான ஊட்டத்தை இழந்து மலட்டுத்தன்மை கொண்டதாகிறது. விளைச்சலை நம்பியிருக்கும் விவசாயிகள் இதனால் பெரும் நம்பிக்கையின்மையினால் பாதிக்கப்பட்டு, கடன் சுமை நெருக்கடி தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் அனந்தப்பூரில் தற்கொலை செய்துகொண்ட 700 விவசாயிகள் பற்றிய செய்தி உறுதிப்படுத்துவது இதைத்தான் ‘’ என்று தங்களின் உழைப்பில் உருவான மரத்தின் நிழலில் அமர்ந்து தீர்க்கமாக உரையாடுகிறார் பப்லு.
     2012 ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் பிரிவில் திம்பக்டு குழுவினரின் செயல்பாடுகளை பதிவு செய்த ஆவணப்படம்  தேசியவிருது வென்றிருக்கிறது.
     திம்பக்டு குழுவினர் தற்போது இயற்கை வேளாண்மை மூலம் சூழலில் உள்ள கார்பனின் அளவைக்குறைக்க முடியுமா என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
     திம்பக்டு குழுவினரின் செயல்பாடுகள் சென்னகோதம்பள்ளி, ரோட்டம், ராமகிரி, பெனுகொண்டா மண்டலம் உள்ளிட்ட 156 கிராமங்களில் 20000 குடும்பங்களை வளமாகவும், உயிர்ப்புடனும்  வாழ்விக்கிறது.
     திம்பக்டு பகுதியைப் பார்வையிடும் பார்வையாளர்களுக்கான தங்குமிடமாக ஏகாந்தமான கூரை வேய்ந்த மண்குடில்கள் கட்டப்பட்டுள்ளன. சுவர்களில் வெள்ளை, பச்சை, நீலம், சிவப்பு என உற்சாகமான மனநிலையை ஏற்படுத்தும் வண்ணம் பூசப்பட்டுள்ளன. உணவு நேரத்தில் ஒரு பெரிய மரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கற்பலகைகளில் அமர்ந்து குறைந்த விலையிலான மணம் நிறைந்த அரிசி, பருப்பு, காய்கறிகளை உண்ணுகிறார்கள். சாப்பிட்ட தட்டுகளை அவரவரே கழுவி வைக்கும் முறை இங்கு பின்பற்றப்படுகிறது. இயற்கையிலான பொருட்களை பயன்படுத்துவது என்பது பெயரளவு அல்ல என்பதை பாத்திரங்கள் கழுவ திம்பக்டு குழு வைத்திருக்கும் படிகாரத்திலிருந்து தயாரிக்கப்ப்பட்ட சோப்பிலிருந்து அறிந்துகொள்ளலாம் நண்பர்களே.
                           நன்றி: தி இண்டியன் எக்ஸ்பிரஸ்

                                8 ஜூன் 2014 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்