இந்தியாவில் மக்கள் பங்களிப்புடன் இயங்கும் ஒரு மக்கள் நூலகம்
இந்தியாவில் மக்கள் பங்களிப்புடன் இயங்கும் ஒரு மக்கள் நூலகம்
தீப்சிகா புன்ஞ்
தமிழில்:
அன்பரசு சண்முகம்
புஷ்பேந்திர பாண்டியாவின் வீட்டுக்குள் நுழைந்தால்
கண்ணுக்கு தெரிவது நான்கு மீட்டர் உயரமுள்ள சுவரின் சிலபகுதிகளே. அறை முழுக்க இரண்டாயிரத்திற்கும்
மேற்பட்ட மக்களிடம் தானமாகப் பெற்ற புத்தகங்கள் பெரும் குவியலாய் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
பாண்டியா புத்தகங்களைப் படிப்பதும், அவற்றை தன்
நண்பர்களுடன் பரிமாறிக் கொள்வதுமாக இருந்த காலத்தில் மக்கள் பங்கேற்புடன் ஒரு நூலகம்
தொடங்கினால் என்ன என்று ஒரு சிந்தனை தோன்றியிருக்கிறது. முதலில் மும்பையிலுள்ள புத்தகப்பிரியர்களுக்காகத்
தோன்றிய மக்கள் நூலகம் இன்று ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி, புனே என பல இடங்களில் தன்
புத்தகச்சிறகுகளை விரித்துள்ளது.
‘’ புத்தகங்கள் செய்தித்தாள்களைப்போல
மலிவாகவும், எளிதாகவும் அனைவருக்கும் படிக்கக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
மும்பை எவ்வளவு அதிகவசதி கொண்டதாக, அலங்காரமாக தோன்றுகிறதோ அதேயளவு அதனுள் குளிர்ந்த
தனிமை உறைந்து கிடக்கிறது. நிறைய பணமோ, வளர்கின்ற வணிகமோ எளிய புத்தகம் தரும் மகிழ்ச்சியை,
புத்துணர்வை தர முடியாது என்பதை உணர்ந்தேன். புத்தகங்களை மக்களுக்கு படிக்கத்தருவதன்
மூலம் பெரு மாநகரத்தில் வசிக்கும் மக்களின் மனதில் நிறைந்துள்ள தனிமைத்துயரைப் போக்கி
நம்பிக்கையின் ஒற்றைக் கீற்றை பரிசளிக்க விரும்பினேன் ‘’ என்று உறுதியாகப் பேசுகிறார்
முப்பத்திரெண்டு வயதான பாண்டியா.
இந்த முயற்சிகளைத் தொடங்கும் முன் பைகுல்லாவிலுள்ள
ராணிபாக் வனவிலங்கு காட்சி சாலையில் புத்தக ஆர்வலர்கள், மக்களுடன் பல்வேறு உரையாடல்கள்,
கருத்துக்களின் அடிப்படையில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்கள் நூலகத்தை கட்டமைத்து,
ராணிபாக்கிலேயே நண்பர்களுக்கும், புத்தகப்பிரியர்களுக்கும் நூல்களை வாடகைக்கு தரத்தொடங்கினார்.
‘’ மக்கள் தங்களிடமிருந்த நூல்களையும் நாளிதழ்களையும் கொண்டுவரத்தொடங்கினார்கள். அவர்கள்
புத்தகங்களை குழப்பமில்லாமல் பார்த்து தேர்ந்தெடுக்க பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்த
முயற்சித்தேன் ’’ என்று கூறும் பாண்டியா ஃபேஸ்புக், இணையதளம் என்று தொடர்ந்த சிறப்பான
பரப்புரை செயல்பாடுகளின் காரணமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் மக்கள்
பங்கேற்பு நூலகம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
பாண்டியா இவ்வளவு புத்தகங்களையும் பெறும் முயற்சியும்,
உழைப்பும் அசாதாரணமானவை. நண்பர்கள், புத்தகக்கடைகள், உள்ளூர் ரயில் நிலையங்கள், நடைபாதைக்
கடைகள், பேருந்து நிலையங்கள் என எங்கு அவரினால் போகமுடிகிறதோ அங்கெல்லாம் புத்தகங்களைத்
தேடி அலைந்து வாங்கியிருக்கிறார்.
‘’ நூலகத்தை தொடர்ந்து
நடத்த எனது சேமிப்புகளின் பெரும்பகுதியை செலவிட்டிருக்கிறேன். இதோடு எனக்கு இதில் இணைந்த
கட்டண உறுப்பினர்களும் உதவுகிறார்கள் என்றாலும் இலவச உறுப்பினர்களும் பங்கேற்று ஏற்ற
இறக்கமாக இவ்விரு பிரிவினரும் இணைந்திருக்க நூலகம் மெல்ல பயணித்துக்கொண்டிருக்கிறது.
நூலகத்திற்கு ஐயாயிரம் ரூபாயிற்கும் குறைவான தொகைதான் கிடைக்கிறது என்றாலும் மக்கள்
தொடர்ந்து தங்களிடமுள்ள புத்தகங்களை அள்ளித்தந்து மும்பையிலுள்ள வீட்டின் மற்ற இடங்களையும்
நிறைக்குமளவு தானமாக வழங்கி வருகிறார்கள். நூலகத்தில் ஒரு மாதத்திற்கு வாசகர்கள்
250 ரூபாயும், மூன்று மாதங்களுக்கு 500 ரூபாயும், ஆறு மாதங்களுக்கு 900 ரூபாயும், ஒரு
ஆண்டிற்கு 1900 ரூபாயும் கட்டணமாக நிர்ணயித்து பெற்று வருகிறோம். நாளிதழ்களின் ஆண்டு சந்தாவை விட இது குறைவான தொகைதான்.
மற்ற பகுதியிலுள்ள மக்கள் நூலகங்களுக்கும் இது பொருந்தும் ’’ என்று கூறுபவருக்கு துப்பறியும்
உளவாளிகளின் கதை மேல்தான் பிரியமாம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் பாண்டியா புத்தகங்களை உறுப்பினர்களிடமிருந்து
பெறவும், புதிய நூல்களை வாங்க முயற்சித்தும் பயணிக்கிறார். ‘’ பெரிய பைகளில் முழுக்க
அடைத்த நூல்களை நெருக்கடி நிறைந்த மும்பை போக்குவரத்தில் எடுத்துச்செல்வது பெரும் போராட்டம்தான்
என்றாலும் புத்தகங்களின் மூலம் வாசிப்பவர் பெறும் மகிழ்ச்சியை, புத்துணர்ச்சியை, உயிர்ப்பை
நினைக்கும்பொழுது என்னுடைய சிரமங்கள் பெரிதல்ல என்று உணர்வேன் ’’ என்று புன்னகை நிறைய
கூறும் பாண்டியா விவகாரத்து பெற்றவர்களுக்கும், முதியோர்களுக்குமான கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்
இணையதளங்களை மும்பையில் உள்ளவர்களுக்காக தொடங்க உள்ளார்.
‘’ டிசம்பரில் செயல்படுத்தப்படும்
இந்த இணையதளங்கள் உற்சாகமற்ற, மனந்தளர்ந்த பெருமாநகர மனிதர்களின் முகத்தில் புன்னகையையும்,
நம்பிக்கையின் ஒரு துளியையாவது தருவதாக இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை ’’ என்று
நம்பிக்கையின் குன்றாத ஒளியுடன் பேசி மலர்ச்சியோடு விடைதருகிறார் புஷ்பேந்திர பாண்டியா.
நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
20
ஏப்ரல் 2014
கருத்துகள்
கருத்துரையிடுக