வனங்களில் சுடர்ந்து ஒளிரும் அறிவுக்கொடி
வனங்களில் சுடர்ந்து ஒளிரும்
அறிவுக்கொடி
மானசி மத்கர்
தமிழில்:
அர்க்காதியோ பெர்ஸீ
சவுர் மர்லினா மனுரங் எனும் ப்யூடெட் மனுரங் எனும் பெண்மணி, தன் லட்சியத்தை தளராத
மனோதிடம், அர்ப்பணிப்பு உணர்வோடான உழைப்புடன் அடைந்து சாதனை புரிந்திருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு ராமன் மகசேசே விருதினை இந்தோனேஷியாவில் வாழும் பழங்குடி மக்களுக்கிடையே
சிறப்பாக பணியாற்றியதன் காரணமாக பெற்றிருக்கிறார் மனுரங்.
இவரது அமைப்பான சொகோலா வனத்தில் வாழும் பழங்குடி மக்களுக்கான கல்விப்பயிற்சி, தொழிற்பயிற்சி
ஆகியவற்றை வழங்கி அவர்களுடைய வாழ்வினை மேம்படுத்த முயற்சித்து உழைத்துவருகிறது. இந்த
நேர்காணலில் தனது காட்டுப்பள்ளி குறித்தும், அப்பெரிய நிலப்பரப்பில் வெற்றி பெற்ற அனுபவங்களையும்
பகிர்ந்து கொள்கிறார் மனுரங். அதன் தொகுப்பு உங்களுக்காக இதோ.
பழங்குடி
மக்களுக்கு உதவ உங்களைத் தூண்டியது சக மனிதர்களின்
மீதான பரிவா? (அ) லட்சியவாதத்தின் காரணத்தினாலா?
எனது பணியை நான் அம்மக்களிடம் தொடங்கும்போது என் மனதினுள்ளே
பல்வேறு கேள்விகள் எழுந்தன; அவர்கள் மாற்றத்தை
விரும்புகிறார்களா இல்லையா என்பதும், எனது பணி அவர்களது கலாச்சாரத்தை அழித்துவிடுமா?
அல்லது காப்பாற்றுமா? என்ற கேள்விகளும்தான் அவை. அவர்களிடமே தங்களின் கலாச்சாரத்தை
கடைபிடித்து இந்த உலகில் தாக்குபிடித்து வாழ முடியுமா? என்று கேட்டேன். வேறு வழியே
இல்லை. பதிலைக் கண்டறிய அவர்களுக்கு காலமானாலும் அவர்களின் வாழ்வை இவ்வுலகில் நிலைநிறுத்த
அதனை செய்தே ஆகவேண்டும் என்பதை உணர்ந்தேன்.
அவர்கள் முடிவெடுக்க அனுமதித்து நீங்கள் அவர்களை
விட்டு விலகி வந்தீர்கள் அல்லவா?
ஆமாம். இதில் பல ஆபத்துகள் நிச்சயம் இருக்கிறது.
முதலில் அவர்களை சந்தித்தபோது, ‘’ நான் ஏன் ஆரங் ரிம்பா( பழங்குடி மக்களின் குலப்பெயர்)
வாக பிறந்தேன்? ’’ என்று கேள்வியைக் கேட்டுவிட்டு தங்களின் பிறப்பை எண்ணி வருத்தப்பட்டதோடு,
அதனை அவமானமாக கருதினார்கள். அவர்களை சுய கழிவிரக்கத்திலிருந்து வெளியே மீட்டு வந்து,
தம்மைப்பற்றி பெருமையாக நினைக்க வைப்பது என்பதே என் முதல் பணியாக இருந்தது.
அவர்களுக்கு மாநகர மனிதர்களின் வாழ்வை நன்மை தீமை
என இருபுறங்களையும் காண வைத்தபோது, அவ்வாழ்வு தமக்கு மிக அந்நியமாக இருப்பதை உணர்ந்து
கொண்டார்கள். வனத்தில் வாழும் வாழ்வினை சிறந்ததாக அவர்கள் உணருவதற்கான வாய்ப்புகளை
உருவாக்கினோம். எனது மாணவர்கள் பலரும் வனத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை என்பது
பெரிய ஆச்சர்யமான ஒன்றில்லை. வனப்பகுதிகளில் திரைப்படம் எடுப்பது குறித்து கற்றுக்கொண்ட
அவர்கள், நமது மரபை, பண்பாட்டை ஆவணமாக்க முயற்சிக்கிறோம் என்று தாம் கற்ற கலையை வனத்தில்
செயல்படுத்தி வருகிறார்கள்.
தங்களின் கல்வி கற்றுக்கொடுக்கும்
முறைகள் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்?
நாங்கள் சிறப்பு முறையிலான திட்டமாக ஒலியின் மூலம்
கற்றுத்தர முயற்சிக்கிறோம். குழந்தைகளுக்கு படிக்க இம்முறை இரண்டுவாரங்கள் நடைமுறையிலிருக்கும்.
குழந்தைகளின் சிந்தனை முறையின்படி இயங்குகிறோம். பள்ளியும் செயல்படுவது அப்படித்தான்.
உதாரணமாக, ஒரு குழந்தை பந்தினை எறிந்தபடி, கேள்வியினை கேட்கிறது என்றால், நான் அதனைப்
பின்பற்றி பந்தினை எறிந்தபடி பதில் கூறுவது. அவர்களின் பார்வையிலே, அவர்களின் வழியிலேயே
அறிவை தெரியவைப்பதே எங்கள் நோக்கம். எப்படி ஒரு செய்தியைக் கொடுக்கிறீர்கள், எப்படி
செய்தியை ஏற்றுக்கொள்ள வைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமே ஒழிய எந்த வழியில் அதை செயல்படுத்துகிறீர்கள்
என்பதல்ல.
ஒன்றாக பணிபுரியும் தன்னார்வத்தொண்டர்களை எப்படி உற்சாகப்படுத்துவீர்கள்?
பதினான்கு
பள்ளிகளில் பதினெட்டு ஆசிரியர்களும், முப்பது தன்னார்வ தொண்டர்களுமாக நம்பிக்கையோடு
பணியாற்றி வருகிறோம். தொடக்கத்தில் நான் மட்டும்தான் பள்ளி பற்றிய கனவு பற்றிய கனவுகளைக்
கொண்டிருந்தேன் என்றாலும் பின்னாளில் அதனை எழுதியதைப் படித்த பலரும் அதனை பகிர்ந்துகொள்கிறேன்
என்றார்கள். ஒவ்வொருவரும் அவரவரின் கனவை பின்தொடர்ந்து செல்லுங்கள் என்று கூறிவிட்டேன்.
அர்ப்பணிப்பு மனம் கொண்ட தன்னார்வலர்களை கண்டறிவது சிரமம் என்றாலும் எங்களுக்கு கிடைத்திருப்பவர்களோடு
சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம்.
பெண் என்பதால் இப்பணியில் ஏதாவது சிக்கல்களை
எதிர்கொண்டீர்களா?
ஆரங்
ரிம்பா கூட்டத்தினரிடையே ஆண்களைவிட பெண்களுக்கு அதிக மதிப்பு உண்டு என்பதால் என் பணிகள்
எளிமையாகத்தான் இருந்தது. வனத்தில் கரடியிடம் ஒரு பெண் மாட்டிக்கொண்டுவிட்டால் ஆண்
தன் உயிரைப் பயணம் வைத்தாவது அவளை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த
ஆணை எந்தப்பெண்ணும் திருமணம் செய்ய மாட்டாள் என்பதோடு அவன் ஆணாகவும் கருத மாட்டார்கள்.
பழங்குடி மக்களின் சமூகத்தில் ஆண்கள் கடுமையாக உழைக்கவேண்டும். இளைஞர்கள் பசி, கோபம்,
காமம் போன்றவற்றை கட்டுப்படுத்த பழகுகிறார்கள். பெண்கள் தங்கள் ஆசைகளை பின்தொடர்ந்து
செல்வது என்பது, அவள் பின்னாளில் தன் குழந்தைகளை பேணி வளர்க்க உதவுகிறது.
சொகோலா மாதிரிப்பள்ளிகளைப்
போலவே மற்றோரு இடத்தில் அதனை உருவாக்கச்சொன்னால் என்ன விஷயங்களை கருத்தில் கொள்வீர்கள்?
இந்த நிலப்பரப்பு மக்கள் சிக்கலான சூழலை பல இடங்களில் எதிர்க்கொள்ள
நேருகிறது. அரசுகளோடு அல்லது வெளியுலக மக்கள் என யாருமே அவர்களின் இயற்கை சூழலியல்
அறிவை மதிப்பதில்லை. நாங்கள் அவர்களது அறிவை பதிவு செய்து அதனை வெளியுலகுடன் பகிர்ந்து
கொள்கிறோம். பாதுகாக்க இயலும் வழிகளில் பழங்குடி மக்களை பாதுகாப்பதன் மூலம் இயற்கை
சூழலை பாதுகாக்க முடியும். பழங்குடி மக்கள் மொத்த உலகத்தின் மக்கள் தொகையில் 0.6 விழுக்காடுதான்
உள்ளார்கள் என்றாலும், 1/3 அளவு சாகுபடி செய்யக்கூடிய பகுதியில் அவர்கள் வசித்துவருகிறதோடு
அப்பகுதியினை பாதுகாத்தும் வருகிறார்கள் என்பதும் முக்கியமானதாக உள்ளது.
தங்களின் கற்றுக்கொடுத்தல்
முறைகள் நன்கு வடிவமைக்கப்படாத முறையாக உள்ளதே? இதில் தரம் எப்படி வரும்?
நிச்சயம் உண்டு. எங்களது குறிக்கோளே
அவர்களது வழக்காடல் தன்மையை வளர்க்க முயற்சிப்பதுதான். தங்களின் உரிமையை மீட்க பாதுகாக்கவும்,
உதவிகளை எப்படி கோரி பெறுவது என்பதையும், ஒருங்கிணைந்த குழுவாக ஒன்றிணைந்து பிரச்சனையை
தீர்ப்பது குறித்தும் இன்று அவர்களால் சாத்தியப்பட்டிருக்கிறது. முதலில் நீங்கள் சொல்வதை
அவர்கள் கவனிக்க மாட்டார்கள். இயல்பான அப்பாவித்தன்மை கொண்ட அம்மனிதர்களை உங்களின்
மனதிலிருக்கும் தன்னியல்பான செயல் நேர்மையும், உள உண்மையும்தான் ஈர்க்கமுடியும்.
நன்றி: ஹிந்து செப்.21, 2014
கருத்துகள்
கருத்துரையிடுக