மரபிற்கு திரும்பும் பாதையைத்தேடி….
மரபிற்கு திரும்பும் பாதையைத்தேடி….
ஷிபா
மொகந்தி
தமிழில்: அன்பரசு சண்முகம்
தன் நெல் வயலில் நெற்கட்டைகளுக்கிடையே நிலையில்லாது
தடுமாறும் நடபார சாரங்கிக்கு உதவ கைகொடுத்தால் சிறிய புன்னகையுடன் நம் உதவியை மறுதலிக்கிறார்.
தினமும் ஆறு கி.மீ தொலைவு நடந்து வந்து தன் இரண்டு ஏக்கர் நிலத்தை பார்வையிட்டு வேலை
செய்யும் இளைஞனுக்குரிய ஆற்றல் கொண்டிருக்கும் சாரங்கியின் வயது வெறும் 81 தான் நண்பர்களே.
ஓய்வு பெற்ற ஆசிரியரான சாரங்கி மற்ற தனது வயதொத்தவர்கள்
போல தேநீர் பருகிக்கொண்டு செய்தித்தாள் புரட்டிக்கொண்டிருக்காமல், தனது நிலத்தில் உள்நாட்டு
வகையைச் சேர்ந்த நெல்வகைகளைக் கண்டறிந்து வந்து பயிரிட்டு இயற்கை வேளாண்மை செய்துவருகிறார்.
கடந்த இருபதாண்டுகளாக சாரங்கி நானூற்று அறுபது உள்நாட்டு நெற்பயிர் ரகங்களைக்
தேடிக் கண்டறிந்து அவற்றை தன் நிலத்தில் பயிரிட்டும் விதை நெல்வகைகளை பாதுகாத்தும்
வருகிறார். புவனேஸ்வரிலிருந்து ஐம்பத்தைந்து கி.மீ தொலைவிலுள்ள தான் வாழும் நரிசோ கிராமத்திலுள்ள
தன் வீட்டிலிருந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் பயணித்து உள்நாட்டு நெற்பயிர் வகைகளை
சேகரித்து வந்து அவற்றை நிலத்தில் பயிரிட்டு பெருக்கியிருக்கிறார்.
‘’ மாநில அரசு அதிக விளைச்சல் தரும் கலப்பின நெல்விதைகளை
பயிரிட விவசாயிகளை ஊக்கப்படுத்தி வந்தாலும், மரபான நெற்பயிர்களைப் போல் பல்வேறு காலநிலைகளுக்கும்,
சூழல்களுக்கும் தாக்குப்பிடித்து கலப்பினப்பயிர்கள் நிற்பது இல்லை ‘’ என்று ‘கேடர்கவ்ரி’
எனும் வலுவான தண்டுடன் உயரமாக காற்றுக்கும் உடையாது இருக்கும் நெற்பயிரினைச்சுட்டிக்
காட்டியபடி பேசுகிறார் சாரங்கி.
‘’ உள்நாட்டு ரகங்களான இந்த நெற்பயிர்களை விவசாயிகள்
விளைவிக்க தொடர்ந்து அரசு ஊக்கப்படுத்தவேண்டும். விவசாயிகளில் பெரும்பாலானோர் குறைந்த
வள ஆதாரங்களையே கொண்டுள்ளனர். கலப்பின பயிர்களைவிட அதிக விளைச்சலும், குறைந்த முதலீடும்,
எவ்வித சூழலையும் தாங்கி வளரும் தன்மையும், மண்ணுக்கேற்ற பயிர் என்பதும் இதன் சிறப்பு
’’ என்று கூறியவர் கடலி பெந்தி எனும் நெற்பயிர் ரகத்தை சுட்டிக்காட்டினார். அதன் கதிர்களில்
முந்நூறுக்கும் அதிகமான நெற்கள் இருந்தன. இந்த
நெற்பயிரின் மூலம் ஏக்கருக்கு பதினைந்திலிருந்து பதினேழு குவிண்டால் விளைச்சல் கிடைக்கிறது
என்றும் தெரிவித்தார் சாரங்கி.
தன் நண்பர் யுவ்ராஜ் ஸ்வைனுடன் இணைந்து பல்வேறு
இடங்களுக்கு பயணித்து மரபான உள்நாட்டு ரகங்களைப் பெற்று வந்திருக்கிறார். இந்த இருவரும்
ஆந்திரப்பிரதேசத்திலிருந்து ‘நைனிடால் பாஸ்மதி’, மேற்கு வங்கத்திலிருந்து ‘கோவிந்த்
போகா’ எனும் நெற்பயிர் ரகங்களை பெற்று வந்திருக்கிறார்.
சாரங்கி எனும் ஓய்வு பெற்ற ஆசிரியர் விவசாயியாக
மாறி இயற்கை விவசாயம் செய்கிறார் என்பதை விட மரபான வேளாண்மை முறைகளை காப்பாற்றும்,
மீட்டெடுக்கும் முயற்சி அல்லது செயல்பாடு என்றே இதனைக் கூற முடியும்.
‘’ நம் இந்திய நாட்டின் சுயசார்பான பொருளாதாரத்திற்கு
உகந்தது உள்நாட்டு நெற்பயிர் வகைகளே என்றாலும், அரசு இதனை ஊக்கப்படுத்துவதில் ஏனோ பெரிய
ஆர்வம் காட்டுவதில்லை ’’ என்று கவலையோடு கூறுகிறார் சாரங்கி.
வேதிப்பொருட்களை இட்டு கலப்பின அதிக விளைச்சல் தரும் என்று கூறப்படும்
கலப்பின நெற்பயிர் ரகங்களை பயிரிட்டால் 20000 ரூபாயிலிருந்து 30000 ரூபாய் வரை செலவாகிறது.
இதே நாட்டு ரக நெற்பயிர்களுக்கு 8000 ரூபாயிலிருந்து 9000 ரூபாய் வரை மட்டுமே செலவாகிறது.
1992 ஆம் ஆண்டு சாரங்கி
தன் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவற்றைப்
பயன்படுத்தி நல்ல வருமானம் பெற்றிருக்கிறார். 1996 ஆம் ஆண்டு நிலத்தில் பெருகிய பூச்சிகளின்
தாக்குதலை சமாளிக்க பூச்சிக்கொல்லியினை தன் நிலத்தில் தெளித்து இருக்கிறார்.
‘’ பூச்சிக்கொல்லியினை அடித்த
மறுநாள் பல்வேறு எண்ணிக்கையில் பாம்புகள், தவளைகள், மண்புழுக்கள், மீன் என பலவும் இறந்துகிடந்தன.
கடும் மன உளைச்சலுக்கு உள்ளானவனாக அன்றிலிருந்து எந்த பூச்சிக்கொல்லிகளையும் நிலத்தில்
பயன்படுத்தக்கூடாது என்று முடிவெடுத்தேன் ‘’
என்கிறார் சாரங்கி.
சாரங்கி தான் சேகரித்த பல்வேறு
நெற்பயிர் ரகங்களை ஆவணப்படுத்தியும், மற்ற விவசாயிகள் பயன்படுத்தும் விதமாக வைத்திருக்கிறார்.
அரசின் ஆதரவு கிடைக்காவிட்டாலும், பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவிகளும், ஆதரவும்
கிடைத்திருக்கிறது. சட்டசபை அங்கத்தினரான சசி பி பெஹ்ரா வுடன் இணைந்து ஆராய்ச்சி மையம்
ஒன்றினையும், விதை வங்கியையும் கிராமத்தின் அருகிலேயே அமைத்து வருகின்றார் சாரங்கி.
நன்றி: தி இண்டியன் எக்ஸ்பிரஸ் 7 செப்டம்பர் 2014
கருத்துகள்
கருத்துரையிடுக