அரிதாரம். அவதாரம்.. அரங்கேற்றம்…

அரிதாரம். அவதாரம்.. அரங்கேற்றம்…
                       ஜனனி சம்பத்
                        தமிழில்: ஹெலன் ஃபாக்ஸ்

அறுபது வயதான நாடகக் கலைஞர் பி.கே சம்பந்தம் வியாசரின் மகாபாரதத்தில் வரும் துச்சாதனன் வேடம் தரித்து அந்த கதாபாத்திரத்தினை கண்முன் நிகழ்த்திக் காண்பித்தார். திருவண்ணாமலையைச் சேர்ந்த துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றத்தை சேர்ந்த கலைஞர்கள் ‘வஸ்திராபரணம்’ எனும் திரௌபதியினை மையப்படுத்திய நாடகத்தை அரங்கேற்றி பல்வேறு மக்களை காட்சியில் உருக்கமும், உணர்வுமாக நடித்து மெய்மறந்து போக வைத்திருக்கிறார்கள்.  சென்னையில் ஸ்பிக்மெகே ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் தமது நாடகத்தை நிகழ்த்தியபின் அவரிடம் பேசினேன்.
தன் அண்ணன் துரியோதனின் கட்டளைக்கு இணங்க சூதாட்டத்தில் தோற்றுப்போன பாண்டவர்களின் மனைவியான திரௌபதியை அவளின் கூந்தலைப்பிடித்து அனைவரும் கூடிய சபைக்கு இழுத்து வருகிறான் துச்சாதனன். அவளின் ஆடையை உருவி பலர் முன்னிலையில் அவமானப்படுத்துகிறார்கள் கௌரவர்கள். வஸ்திராபரணம் என்ற பகுதியில் நாடகமாக நிகழ்த்தப்படும் இந்த சம்பவங்கள் பின்னால் நிகழும் குருஷேத்ரம் எனும் பெரும் போருக்கும் ,கௌரவர்களின் மீதான கடும் வன்மத்திற்கும் வித்தாக பாண்டவர்களின் மனதில் விழுகிறது.
தெருக்கூத்து மரபின்படி பெண்களுக்கான வேடத்தையும் ஆண்களே பூணுகிறார்கள். தெருக்கூத்து கலைவடிவம் ஒரு தலைமுறையிடமிருந்த அடுத்த தலைமுறைக்கு மெல்ல கைமாறி பயணித்து வருகிறது.
‘’ முறையான பயிற்சியினை நான் பெறவில்லை. என் தாத்தா, அப்பா ஆகியோரிடமிருந்து கற்றேன் என்றாலும் கவனித்துத்தான் நானாக கற்றுக்கொண்டேன். பல நடிகர்கள் இருந்தால் நாடகம் மெருகேறும் ’’ என்று கூறும் சம்பந்தனின் குழு பத்து நடிகர்கள் என்ற நிலையிலிருந்து விரிவடைந்திருக்கிறது. திருவிழாக்கள், மத நிகழ்ச்சிகள், நகரத்திலுள்ள கல்லூரி அரங்கங்கள் என்று தெருக்கூத்தினை நடத்தியிருக்கிறார்கள். மரபான கலை அம்சங்கள் விடுபட்டு போகாமல் தங்களின் கூத்தினை நிகழ்த்துவதுதான் இதில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய முக்கியமான அம்சம்.
புரிசை எனும் கிராமத்தில் வாழும் இக்கலைஞர்கள் குழு பல்லாண்டுகளாக தெருக்கூத்துக்கலையினை நடத்தி அதனை அழியாமல் பாதுகாத்து வருகிறார்கள். சென்னையில் நடத்திய நிகழ்ச்சி இவர்களுக்கு புதிய அனுபவத்தைத் தந்திருக்கிறது. பார்வையாளர்களை அண்மையில் சந்தித்து நிகழ்ச்சிகளை நடத்தியவர்களுக்கு, அரங்கில் மேடையில் நாடகத்தை இவர்கள் நடத்த, பார்வையாளர்கள் இருளில் தள்ளி அமர்ந்து அதனை ரசித்துக்கொண்டிருப்பார்கள் என்பது புதுமையாகத்தான் இருந்திருக்கவேண்டும். ‘’ இந்த நிகழ்ச்சி சவாலான ஒன்றுதான். தெருக்கூத்திற்கு பல வடிவங்கள் உண்டு. நாடக அரங்குகளில் பொருந்திக்கொள்வதும் அதன் சிறப்பில் ஒன்று. தெருக்கூத்து இசை, நடனம், நாடகம் என மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த மூன்று பகுதிகளைக் கையாளும்போது பல கதைகளை நாம் சிறப்பாக உருவாக்கி கூற முடியும் ‘’ என்று கூறுகிற சம்பந்தத்திற்கு இக்கலையில் நாற்பது ஆண்டுகள் அனுபவம் உண்டு. சம்பந்தம் தலைமையிலான குழு விரைவில் ஃப்ரான்சில் நடைபெறும் விழாவில் நிகழ்ச்சியினை நடத்த செல்லவிருக்கிறார்கள்.
கம்பராமாயணம், மகாபாரதம், தெனாலிராமன், காப்ரியல் கார்சியா மார்க்வஸின் வெரி ஓல்டுமென் வித் ஹியூஜ் விங்க்ஸ், பெர்டோல்ட் ப்ரெச்டனின் காகஸியன் சாக் சர்க்கிள் ஆகியவற்றிலிருந்து சில பகுதிகளை நாடகமாக மாற்றி அரங்கேற்றியிருக்கிறார்கள் பி.கே சம்பந்தம் குழுவினர்.
     ‘’ மார்க்வஸின் எழுத்தினை மையமாகக் கொண்ட நாடகத்தினை பொகோடாவில் நிகழ்த்தினோம். 1985 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு கலை, வடிவங்களை ஃப்ரான்ஸ் திருவிழாவில் நிகழ்த்தி வருகிறோம் என்றவரிடம் வஸ்திராபரணம் குறித்து கேட்டபோது, வஸ்திராபரணம் கிருஷ்ணன்  திரௌபதிக்கு உடை தந்து காப்பாற்ற வரும்போது நாடகம் நிறைவுபெறுகிறது. நன்மை எப்படி தீமையை வெல்கிறது என்பதை விளக்கும் படைப்பு இது. புராணங்களினூடே சமூகத்திற்கான கருத்துக்களை கூறும்போது, பார்வையாளர்களிடையே அது குறிப்பிட்ட கவனம் பெறுகிறது. ராமாயணத்தில் தன் தம்பி சுக்ரீவனுக்கு எதிராக வாலி செய்யும் குற்றங்களுக்காக ராமன் அவனை தண்டிப்பான். வாலி ராமனிடம் பிற்கால மனிதர்கள் தம் மனைவியிடமிருந்து சீதனத்தைப் பெற அவர்களை கொல்லவும் தயங்க மாட்டார்கள் என்று கூறுவான் என்கிறார் பி.கே சம்பந்தம்.
     மரபான கலையான தெருக்கூத்தில் பாடப்படும் பாடல்கள் கர்நாடக சங்கீதத்திலிருந்து பெறப்பட்டவையாகும். இதற்கு தாள இசை மிருதங்கம், தாளவாத்தியம், ஹார்மோனியம் ஆகிய மரபான  இசைக்கருவிகளிலிருந்து பெறப்படுகிறது. நடன அசைவுகள் பரதநாட்டியம் சார்ந்து அடவுகள் என்று கூறப்படுகின்றன. குரலின் ஏற்றத்தாழ்வுகளோடு இசையும் இணைந்து மனங்களில் ரசவாதம் நிகழ்த்துகிறது. மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறமானது ஒப்பனையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்கள்  எதிர்மறை கதாபாத்திரங்களை சித்தரிக்க பயன்படுகிறது.
தலையின் கிரீடம், மினுமினு தோள்பட்டைகள், மூன்று வடிவ அளவிலான புள்ளிகள், மூகமூடிகள் வேடங்களில் கதாபாத்திரத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
     ஐந்தாவது தலைமுறையாக இக்கலையில் ஈடுபட்டிருக்கும் பி.கே சம்பந்தம் தலைமையிலான குழுவினர் கிராமங்கள், நகரங்கள், பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் பயிற்சிப்பட்டறைகள் நடத்தி  நடிகர்களை உருவாக்கி வருகிறார்கள். ‘’ ஏழு குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறோம். பயிற்சியில் கற்றதை வெளிப்படுத்த அரங்கேற்ற நிகழ்ச்சியும் உண்டு ‘’ என்று நம்பிக்கையின் குன்றாத ஒளியோடு மனம் நிறைந்து புன்னகையோடு விடைதருகிறார் தெருக்கூத்து நாடகக் கலைஞரான பி.கே சம்பந்தம்.





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்