எனக்குப்பிடித்த சிறுகதை

எனக்குப்பிடித்த சிறுகதை

ஆத்ம ருசி
                      சுகா

வாகையடி முக்கு லாலா கடை, கல்பனா ஸ்டூடியோ திண்ணை, சுடலைமாடன் கோயில் தெருமுனையிலுள்ள கோயில்வாசல், நெல்லையப்பர் கோயிலின் வசந்த மண்டபம், ஜோதீஸ் காப்பித்தூள் கடை, நயினார் குளம் பிள்ளையார் கோயிலை ஒட்டிய மரத்தடி என இவை எல்லாவற்றிலும் கந்தையா பெரியப்பாவைப் பார்க்கலாம்.

வட்டமாக நெற்றியில் சந்தனமும், அதில் குங்குமமும் வைத்து தொளதொளவென வெள்ளைக் கதர்ச்சட்டையும், நாலுமுழ வேட்டியும் அணிந்திருப்பார்.

சட்டைக்குள்ளே வேட்டிக்கு மேலே, இடுப்பில் துண்டை இறுக்கமாக கட்டியிருப்பது வெளியே தெரியாது. ஆற்றில் குளிக்கவரும்போது, மதியப்பொழுதில் சிறிதுநேரம் கட்டையைச் சாய்க்கும்போதுதான் என அபூர்வமான தருணங்களில்தான் அந்த துண்டை அவிழ்த்து உதறுவார். ஒட்டவெட்டிய மிலிட்டரி கிராப்புக்கு நேர்மாறான நாலுநாள்தாடி நிரந்தரமாக கந்தையா பெரியப்பாவின் முகத்தில் உண்டு.
எல்லோருமே அவரை பெரியப்பா என்று அழைத்தார்கள். கந்தையா பெரியப்பாவின் குடும்பம் ரொம்பப் பெரியது. மூன்று தம்பிகளின் குடும்பங்களுடன், வெள்ளந்தாங்கிப் பிள்ளையார்கோயில்  தெருவில் ஒரு பழைய சுண்ணாம்புச்சுவர் வீட்டில்தான் எல்லோரும் குடியிருந்தார்கள். வாடகை வீட்டில் இருப்பவர்களைத்தான் குடியிருந்தார்கள் என்று சொல்லவேண்டும் என்பதில்லை. சொந்த வீட்டில் இருப்பவர்களையும் அப்படிச் சொல்லலாம்தான்!

கந்தையா பெரியப்பாவுக்கு வாரிசு இல்லை. மூன்று தம்பிகளின் குழந்தைகளையும் கூட்டிப்பார்த்தால் எப்படியும் ஒரு பன்னிரெண்டு, பதிமூன்று பேர் தேறுவார்கள். எல்லாப்பிள்ளைகளையும் கந்தையா பெரியப்பாதான் வளர்த்தார். பிள்ளைகளை மட்டுமல்ல… தகப்பன்களையும்தான். தம்பிகளுக்கும், கந்தையா பெரியப்பாவுக்கும் நிறையவே வயது வித்தியாசம். அண்ணன் சொல்லைத்தட்டாத தம்பிகள். தம்பிகள் அனைவருக்கும் தகப்பனார் ஸ்தானத்தில் இருந்து கந்தையா பெரியப்பாதான் திருமணம் செய்துவைத்தார். தனக்கு பிள்ளைகள் இல்லை என்ற குறையை தன் மனதுக்குள் புதைத்துவிட்டு, தம்பி பிள்ளைகளை தன் பிள்ளைகளாகவே வளர்த்தார். கந்தையா பெரியப்பாவின் மனைவி மங்கையர்க்கரசியும் கணவருக்கு இணையாக தம் கொழுந்தனார்களின் பிள்ளைகளை சீராட்டினார்.

எல்லாப்பிள்ளைகளும் சிறு வயதிலிருந்தே தங்கள் அப்பாவையோ, அம்மையையோ தேடியதில்லை. எல்லாவற்றிற்கும் பெரியப்பா, பெரியம்மைதான்.
‘’ கந்தையா பெரியப்பா வீட்டு பிள்ளேழு, வாயத்தொறந்து பேசுன மொத வார்த்தயே பெரியப்பாதானேடே !’’ திருநெல்வேலியில்  இப்படிச் சொல்லிக்கொள்வார்கள்.

தன் தம்பிகளின் பிள்ளைகள் அனைவரும் ‘பெரியப்பா…பெரியப்பா…’ என்றழைப்பதால் வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் தெருவில் அந்த வீடே கந்தையா பெரியப்பா வீடு என்று அடையாளம் சொல்லப்படலாயிற்று. அண்டை வீட்டுக்காரர்கள், மைத்துனிகளின் உறவினர்கள் என உற்றார், உறவினரில் தொடங்கி, ஊரில் இருக்கும் அனைவருக்கும் பெரியப்பா ஆனார் கந்தையா.

‘’ நீங்க மிலிட்டரில இருந்தது நெசந்தானா பெரியப்பா’’  பழக்கடை மந்திரம் ஒருமுறை கேட்டான்.

‘’ நெசமில்லாம என்ன? பென்ஷன் வருதுல்லா! ஆனா நீ நெனைக்குற மாரி துப்பாக்கிய தூக்கிட்டுப் போயி சண்டல்லாம் போடல. எலக்ட்ரீஷியனா இருந்தேன். தம்பிங்க படிச்சு நிமிர்ற வரைக்கும் பல்ல கடிச்சுட்டு இருக்க வேண்டியதாயிட்டு. பெரிய தம்பிக்கு முனிசிபாலிட்டில வேல கெடச்ச ஒடனேயே காயிதம் போட்டுட்டான். போங்கலே, ஒங்க ரொட்டியும், சப்பாத்தியும்னு வடக்கே பாக்க ஒரு கும்பிடு போட்டுட்டு அன்னைக்கே திருநவேலிக்கு ரயிலேறிட்டம்லா…’’
கந்தையா பெரியப்பா ஓர் உணவுப்பிரியர். வாயைத்திறந்தால் சாப்பாட்டுப் புராணம்தான். எதையும் எவரையும் உணவோடு சம்பந்தப்படுத்தித்தான் பேசுவார்.
‘’ தீத்தாரப்பன் பாக்கறக்குத்தான் உளுந்தவடமாதிரி மெதுவா இருக்கான். ஆனா மனது ஆமவட மாதிரிடே அவ ஐயா செத்ததுக்கு பய ஒரு சொட்டு கண்ணீர் விடலயே! ‘’
அத்தனை உணவுப்பிரியரான கந்தையா பெரியப்பா, ஏனோ ஹோட்டல்களில் சாப்பிட விரும்புவதில்லை.
‘’போத்தி ஓட்டல் என்னைக்கு இளுத்து மூடுனானோ, அன்னைக்கே வெளிய காப்பி குடிக்கிற ஆச போயிட்டுடே ‘’
ஆனால் கல்யாண விசேஷ வீட்டுப் பந்திகளில் சாப்பிடுவதில் அலாதிப்பிரியம்.
‘’ செய்துங்கநல்லூர்ல ஒரு சடங்கு வீடு. நான் கை நனைக்காம பஸ் ஏறிரணும்தான் நெனச்சேன். ஏன்னா சடங்கான பிள்ளைக்கு அப்பன்காரன் ஒரு கொணங்கெட்ட பய பாத்துக்கோ. ஆனா அவம் பொண்டாட்டி நல்ல பிள்ள. எப்ப வீட்டுக்கு போனாலும் ஒண்ணும் இல்லேன்னாலும் சின்ன வெங்காயத்த வதக்கி, கூட ரெண்டு கேரட்ட போட்டு கண்ண மூடி முளிக்கறதுக்குள்ள ரவையைக் கிண்டி சுடச்சுட உப்புமா தயார் பண்ணிருவா. சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள, கருப்பட்டி காப்பியும் போட்டிருவா. அவ மனசுக்கேத்த மாரியே, ஆக்குப்புரைல இருந்து வந்த மணமே சுண்டி இளுத்துட்டு. அப்பறந்தான் வெவரம் தெரிஞ்சுது. தவிசுப்பிள்ளைக்கு ரவண சமுத்திரமாம்…’’
எங்கு சாப்பிடவேண்டும், எங்கு சாப்பிடக்கூடாது என்கிற தெளிவு அவரிடத்தில் இருந்தது.
ஆரெம்கேவியில் வேலை பார்க்கிற ராமலிங்கம் ஒருநாள் கொதிப்புடன் சொன்னான். ‘’ நம்ம லெச்சுமணன் தங்கச்சி கல்யாணத்துக்குன்னு லீவ போட்டுட்டு, நாங்குனேரிக்கு போனேன் பெரியப்பா. போற வளில பஸ்ஸூ வேற பிரேக் டவுனாகி நல்ல பசில போயி சேந்தேன். கேட்டேளா! மண்டபத்த சுத்தி தெரிஞ்ச மனுஷாள் ஒருத்தரயும் காணோம். லெச்சுமணப்பய மணவறைல நிக்கான். கையக் கையக் காட்டுதென். திரும்பிப் பாப்பெனாங்கான். சரி, தாலி கட்டுறதுக்குள்ளே காலைச்சாப்பாட்ட முடிச்சிரும்வோம்னு பந்திக்குப் போனேன். ஒரு பய எலையப்போட்டான். தண்ணி தெளிக்கதுக்குள்ளே இன்னொரு பய வந்து எலைய எடுத்துட்டுப் போயிட்டான் பெரியப்பா ‘’ இதைச் சொல்லி முடிப்பதற்குள் அழுதே விட்டான் ராமலிங்கம்.
‘’ அட கூறுகெட்ட மூதி, அந்த லெச்சுமணன் சந்திப்பிள்ளையார் முக்குல டீக்குடிக்கும்போதே யாரும் பாத்திருவாங்களோன்னு அவசர அவசரமா வேட்டிக்குள்ள சம்சாவ ஒளிச்சு வச்சுத்திங்கற பயல்லா. நீ அவன் வீட்டுக்கல்யாணத்துக்கு போனதே தப்பு. மதியாநர் தலைவாசல் மிதியாதேன்னு கெளவி சும்மாவா சொல்லிட்டுப் போயிருக்கா, யார் யார் வீட்டு விசேஷங்களுக்கு போகணும்னு ஒரு கணக்கு இருக்குடே ‘’
கந்தையா மாமாவின் ருசிப்பழக்கம் அவர் தாயாரிடமிருந்து தொடங்கியிருக்கிறது.
‘’ எங்கம்மை ஒரு புளித்தண்ணி வப்பா பாரு. ரெண்டு சீனியவரக்காய நறுக்கிப்போட்டு தொட்டுக்கிட எள்ளுப் போல பொரிகடலத் தொவயலயும் வச்சு சோத்த உருட்டிக்குடுப்பா. தின்னுட்டு அந்தாக்ல செத்துரணும்போல இருக்கும்வே. அதெல்லாம் அவளோடயே போச்சு, மாப்ள ! ’’
     மாப்பிள்ளை என்று அவரால் அழைக்கப்படுகிறவர்களுமே கூட, ‘’அப்படியா பெரியப்பா? ‘’ என்றே கேட்பார்கள். பெரியப்பா என்பது கந்தையாபோல திருநெல்வேலிக்காரர்களுக்கு ஒரு பெயராகிப்போனது.
     கலியாண வீட்டுப் பந்திகளில் கந்தையா பெரியப்பாவின் தலை தென்பட்டுவிட்டால் போதும். ‘தவிசுப்பிள்ளை’ வீரபாகு அண்ணாச்சி தானே பரிமாற வந்துவிடுவார்.
‘’ தண்ணிப் பானைல நன்னாரி வேர் கெடக்கும்போதே நெனச்சேன். தவிசுப்பிள்ளை நீதான்னு….’’
கந்தையா பெரியப்பா சாப்பிட்டு முடிக்கும் வரை வீரபாகு அண்ணாச்சி அவரது இலையைவிட்டு அங்கே இங்கே நகரமாட்டார். ‘’ நீ பரிமாறினேன்னா ஒண்ணும் சொல்லாம சாப்பிடலாம்! வேற யாரும்னா ‘ பருப்புக்கு மேல சாம்பார ஊத்தாதே’ ,  ‘ரசத்த கலக்காம ஊத்து’ , ‘தயிர்பச்சடிய தடியங்காக் கூட்டு மேல படாம வையின்னு மாறிமாறி சொல்லிக்கிட்டேல்ல இருக்கணும்! சமையல் படிச்சா மட்டும் போதுமாவே! பருமாறவும் தெரியணும்லா! என்ன சொல்லுதே?’’

பேச்சு பேச்சாக இருந்தாலும் சாப்பிட்டுக்கொண்டேதான் சொல்வார் கந்தையா பெரியப்பா. வீரபாகு அண்ணாச்சி பதிலேதும் சொல்லமாட்டார். அவரது கவனம் முழுக்க கந்தையா பெரியப்பாவின் இலைமீதுதான் இருக்கும். என்ன காலியாகியிருக்கிறது, என்ன வைக்க வேண்டும் என்கிற யோசனையிலே இருப்பார்.

சாப்பிட்டு முடித்து கைகழுவி, வெற்றிலை பாக்கு போட உட்காரும்போது கந்தையா பெரியப்பா சொல்வார்.. ‘’ நம்ம பளனியப்பன் மனம்போல அவன் வீட்டுக் கல்யாணச் சாப்பாட்டுல ஒரு கொறையுமில்ல! ’’
இப்படித்தான் கந்தையா பெரியப்பா சர்ட்டிஃபிகேட் கொடுப்பார். எல்லோருக்கும் இப்படி அவர் சர்ட்டிஃபிகேட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கமுடியாது. கிருஷ்ண பிள்ளையின் கடைசி மகள் கல்யாணத்திற்காக மதுரையிலிருந்து கேட்டரிங் சர்வீஸ்காரர்களை வரவழைத்து, தடபுடலாக விருந்துச் சாப்பாடு போட்டார். வழக்கமான கல்யாணச் சாப்பாட்டில் பார்க்கமுடியாத வெஜிடபிள் பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், ரொட்டி, பன்னீர் பட்டர் மசாலா, கோபி மஞ்சூரியன், விதம்விதமான ஐஸ்கிரீம்கள், பீடா என அமர்க்களப்படுத்தியிருந்தார். இவைபோக சம்பிரதாயச் சாப்பாடும் இருந்தது. கந்தையா பெரியப்பா பெயருக்கு கொஞ்சம் கொறித்துவிட்டு சட்டென்று பந்தியை விட்டு எழுந்துவிட்டார்.

கல்யாண மண்டபத்தை விட்டு வெளியேறும்வரை ஒன்றுமே பேசவில்லை. கல்பனா ஸ்டூடியோ திண்ணையில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருக்கும்போது சொன்னார். அப்போதும் கூட சொல்லியிருக்கமாட்டார். கிருஷ்ண பிள்ளை வீட்டுக் கல்யாணச் செய்தி செய்தித்தாளில் வந்திருந்தது. பேப்பரை மடித்து வைத்து விட்டு சொன்னார்.
‘’ மந்திரி வந்தாரம்லா, மந்திரி! எவன் வந்தா என்னத்துங்குங்கேன்! பந்தில ஒண்ணையாவது வாயில வக்க வெளங்குச்சா! எளவு மோருமாய்யா புளிக்கும்? ‘’

கொஞ்ச நேரம் அமைதியா இருந்தவர் தொடர்ந்தார்… ‘’ புது பணக்காரம்லா! அதான் பவுசக்கொளிக்கான். பெத்த அம்மைக்கு சோறு போடாம பட்டினி போட்ட பய வீட்டுச்சாப்பாடு எப்பிடி ருசியா இருக்குங்கேன்? ’’

கந்தையா பெரியப்பா அப்படிச் சொல்வதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. சாப்பிடும் உணவின் ருசிக்கும், அதற்குப்பின்னணியிலுள்ள மனிதர்களின் ஆத்மாவிற்கும் சம்பந்தம் உள்ளது என்பார். ‘’ ஒலயக்கொதிக்க வச்சு, அதுல அரிசிய யாரு போட்டாலும் அது வெறும் சோறாத்தான் ஆகும். அது அன்னமா மாறுறது, பொங்குற மனுஷி கைலயும், மனசுலயும்தான் இருக்கு!’’

அந்ந நம்பிக்குறிச்சியில் கற்குளத்தம்மா இறந்த பதினாறாவது நாள் விசேஷத்துக்கு போயிருந்தபோது பந்தி முடிந்தவுடன் சொன்னார்.

‘’ கற்குளத்தம்மா ஆளுதான் கருப்பு. மனசு பூரா தங்கம்லா!  எத்தன குடும்பத்த வாள வச்சிருக்கா! இன்னைக்கு இங்கெ இருக்கற வெள்ளத்துர, கண்ணம்மா, மாயாண்டி குடும்பம்லாம் எதுக்கு கெடந்து இந்த அளுக அளுதாங்கங்கே! இந்தக் குடும்பம்லாம் அவ போட்ட சோத்த தின்னுதானவெ வளந்துது! அதான் இன்னைக்கு பந்திய விட்டு எந்திரிக்கவே மனசு வரமாட்டேங்கு. தாயளி, சோறே மணக்கே! கற்குளத்தம்மா ஆத்மா, அந்த மாதிரில்லாவே! ’’

நூற்றுக்கு நூறு கந்தையா பெரியப்பா சொன்ன வார்த்தைகளை எல்லோராலுமே உணர முடிந்தது. நல்ல வேக்காடில் வெந்த அரிசிச்சோறு, உருக்கின பசுநெய், பதமாய் வெந்த பருப்பு, மணக்க மணக்க முள்ளங்கி சாம்பார், வெள்ளைப் பூண்டின் நெடி முகத்தில் நெடி முகத்தில் அடிக்காத ரசம், சம அளவில வெங்காயமும், வாழைக்காயும் சரியாகக் கலந்த புட்டு, தேங்காயை தாராளமாக தாரளமாகப் போட்டு செய்த தடியங்காய்கூட்டு, அரிசிப்பாயாசம், பொரித்த அப்பளம் என அனைத்துமே அத்தனை ருசி.

வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவிலுள்ள கந்தையா பெரியப்பா வீட்டில் அவரது பதினாறு நாள் விசேஷத்தின் பந்தி முடிந்ததும் எல்லோருமே சொன்னார்கள்.

‘’ கந்தையா பெரியப்பா ஆத்மா அந்த மாரில்லா! அதான் சாப்பாடு இந்த ருசி ருசிக்கி ‘’.

சிறுகதை பற்றி….
தினகரன் தீபாவளி மலர் 2013 ல் வெளிவந்த போதிலிருந்து இந்த சிறுகதையை நான்குமுறைக்கு மேல் படித்துவிட்டேன். அந்த தொகுப்பின் எனக்குப்பிடித்த ஒரே சிறுகதை எதுவென்றால் சுகா எழுதிய ‘ஆத்ம ருசி’ தான் என்று ஐயமில்லாது கூறுவேன். சிறுகதையைப்படித்து முடித்தபோது பல வீடுகளுக்குச் சென்று சாப்பிட்ட நினைவுகள் அலைமோதிக்கொண்டிருந்தன. சில சங்கட நினைவுகளின் ஊடே மகிழ்ச்சியான நினைவுகளும் உண்டு. சோறு பற்றிய விளக்கம் நூற்றுக்கு நூறு உண்மை. நான் மனநிலை சரியில்லாத தருணங்களில் சமையலை தொடவே மாட்டேன். வேண்டாம் என்று கூறியும் காதலியை இழந்த மன அழுத்தத்தில் சிக்கியிருந்தவன் விடாப்பிடியாய் தானே  சமைத்த பாசிப்பயறு குழம்பு வேம்பம் பிசின் போல இறுகியிருந்தது. அன்று ஒரு கவள சோற்றுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் வாயில் ஊற்றிக்கொண்டு சாப்பிட்டோம்.
மண்ணைக் கரைத்து மனதில் ஊற்றிய மனிதர்களினால் மட்டுமே இப்படி பெரும் அன்பு சொரியும் கதைகளை எழுதமுடியும். மூங்கில் மூச்சு தொடரை விகடனில் இவர் எழுத்தை தொடர்ந்து வாசிப்பேன். பின் சுகாவை வாசிப்பது என்பது இணையத்தில் சாத்தியம் என்றானபோது என்னால் அவரது எழுத்தை பின்தொடர முடியவில்லை. தாள் என்பது எனக்கு பெரும்வசதியாகவும், திரும்பத்திரும்ப படிக்கவும் உதவியாக இருக்கிறது. தாயார் சன்னதி எனும் இவரது நூலை ஏவிஎம் சரஸ்வதி ஸ்டோரில் வாங்க நினைக்கும்போது கையில் அந்த சமயம் பணமில்லை. இன்றுவரையிலும் அந்நூலை என்னால் வாங்க முடியவில்லை. நிச்சயம் கண்டுபிடித்து வாங்கிவிடுவேன்.
எழுத்தில் அவர் மனது சுடர் விட்டு ஒளிரும் தன்மை தான் தொடர்ந்து அவர் எழுத்தை நோக்கி என்னை இழுக்கிறது என்று நம்புகிறேன். இயக்குநராக சுகா வெற்றிபெறுவாரா இல்லையா என்று தெரியாவிட்டாலும் எழுத்தில் பல்வேறு மனங்களை வென்று வசப்படுத்திவிட்டார் என்று கூறலாம். ‘நாறவாயன் வீட்டில் பொண்ணெடுத்தாலும் நச்சு வாயன் வீட்டில் பொண்ணெடுக்கக் கூடாது’ என்பதை தனது அப்பன் ஆத்தாளுக்கு சில நாட்களிலேயே நிஜமாக்கி தன் வீட்டுக்கு வந்த நண்பர்களுக்கு விருந்தோம்பி ஆரெம்கேவி ராமலிங்கத்தின்  நிலைமையில் அவர்களை தவிக்கவைத்த  குணம் கெட்ட புதுப் பணக்கார தந்திரக்கார சென்னை உறவினன் உபசரிப்பு நினைவு ஏனோ வருகிறது.



கருத்துகள்