‘குடி’மக்கள் தேசம் இந்தியா!

‘குடி’மக்கள் தேசம் இந்தியா!

              ச.ஜெ அன்பரசு

கேரள அரசின்  முதல்வரான உம்மன் சாண்டி 418 மதுபான பார்களை புதுப்பிக்கும் உரிமத்தை தடைசெய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இதே ஆண்டு உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்திருக்கும் 312 மதுபான பார்களின் உரிமமும் தடை செய்யப்பட்டு இருப்பதோடு 730 பார்கள் மூடப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்த சூழலை கேரளாவில் பலரும் ஆதரித்திருக்கையில் இந்நிலை தொடர்ந்து எவ்வளவு தூரம் சிறப்பான சூழலை ஏற்படுத்தப்போகிறது? தடை என்பது கள்ளச்சாராயத்தை அதிகம் பயன்படுத்த தூண்டுமா? சுற்றுலா மற்றும் மது விற்பனை மூலம் கிடைத்த வருமானத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய என்ன அரசிடம் திட்டமிருக்கிறது? என்று பேசுகிறது இந்தக்கட்டுரை.
மது அருந்துவது ஒரு தகுதி
     தமிழர்கள் தம் கொண்டாட்ட மனநிலையில் மட்டும் பருகிய உற்சாக பானங்கள் இன்று ஆங்கில கலாச்சாரத்தின் வழியே தினசரி நாம் பருகவேண்டிய அத்தியாவசிய உணவுப்பொருட்கள் போலாகிவிட்டன. இதற்கு காரணம் நமது நாட்டில் ஊடுருவிய மேற்கு கலாச்சாரங்களின் பெரும் ஆதிக்கம் என்றும் கூறலாம். அதோடு நடுத்தர மக்களின் பெரும் நுகர்வு பசிக்கு இறுதியில் இரையாகும் அடித்தட்டு மக்கள் இறுதியில் தம்மை துன்பங்களிலிருந்து மீட்டெடுக்க, வலியை மறக்க சென்றடையும் இடமாக இன்றைய வாழ்வு துரத்துவது மதுபான கடைகளுக்குத்தான்.
     மது அருந்துவது என்பது தனிமையை துரத்துவது, துக்கத்தை தணிப்பது என்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் நான்கு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடுவோம் என்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும்போது அங்கு அவர்களின் மத்தியில் நீக்கமற இடம்பெற்று விடுவது மதுபானங்கள்தான். மது அருந்துவது என்பது உடல்நலத்தை பாதிக்கிறது என்பது அதன் தீமைகளை திரையிட்டு காட்டும் அரசாங்க செய்திப்படத்தை ஒத்து கேலியாகவும், பழமையானதாகவும் நினைக்கப்படுகிறது. மது அருந்துபவர்களை விட அதனை அருந்தாதவர்கள் இன்று நண்பர்களால் கேலியும், ஏளனமும் செய்யப்படும் வாய்ப்புகள்தான் அதிகம். மதுபானக்கடைகளை அரசே தற்சார்புடன் நடத்தி மக்களின் உடல் நலம் கெடுத்து, சிந்தனைகளை அழிக்கின்ற நேரத்தில், மக்களின் உடல்நலனைப் பாதுகாக்க மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தித் தருவது எவ்வளவு காருண்ய அரசு நமது என்று கூறத்தோன்றும். மதுவிலக்கு சாத்தியமா என்று கேள்வி எழும்பும் போதெல்லாம் அதற்கு சாத்தியமில்லை என்று அமைச்சர் கூறிக் கொண்டிருக்கும்போது, மதுவிலக்கு பிரிவின் ஆதரவில் சாலையில் பேரணிகள் நூற்றாண்டுகளுக்கான மதுபானத்தின் தீமைகளை எடுத்துக்கூறி  கடமை உணர்ச்சியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள். கேரள அரசின் தடையுத்தரவு அம்மாநிலத்தில் பெரும் ஆதரவை பெற்று வருகின்றது என்ற நிலையிலும், பார் உரிமையாளர்கள் இதற்கு எதிராக தடையுத்தரவை நீதிமன்றத்தில் பெற்றுள்ளார்கள்.
மதுவெடு  கொண்டாடு
      இந்தியாவில் மது அருந்துபவர்களின் தோராய அளவு ஆண்டிற்கு 28.7 லி. ஆகும். இதில் பதினைந்து வயதிற்கும் மேற்பட்டு மது அருந்துபவர்களில் எண்பத்தைந்து சதவீதம் ஆகும். 2011 – 2012 தேசிய புள்ளியல் ஆய்வுப்படி, 8.74 லி. ஆண்டிற்கு இந்தியர்கள் மதுபானங்களை பருகுகிறார்கள். மேலும் நாட்டு சாராயம், கள் ஆகியவற்றின் பயன்பாடு மதுபானங்கள்(wine), சாராயம்(spirit) இவற்றின் பயன்பாட்டு அளவை விட அதிகமாகும்.
கிராமங்களில் நாட்டு சாராயம் பரவலாக 7.7 விழுக்காடும், சாராயம் 3.6 விழுக்காடும், வாற்கோதுமை கள் 1 விழுக்காடும் அருந்தப்படுகிறது. கிராமத்தில் 340 லி. இதில் பெரும்பாலும் கள்ளின் பயன்பாடு அதிகமாக 2.7 விழுக்காடாக, சராசரியாக ஒருநாளுக்கு அரை லிட்டர் மற்றும் அதற்கு மேலாக பருகப்படுகிறது.
     நகர்புறங்களில் சாராயம் 3.9 விழுக்காடும், நாட்டு சாராயம் 3.8 விழுக்காடும், வாற்கோதுமை கள் 2.1 விழுக்காடும் பருகப்படுகிறது என்றாலும் இங்கும் கள்ளின் அளவு மதுபானங்கள் பருகப்படும் அளவில் பாதி அளவாக 150 லி. என்றளவில் ஒருவர் பருகும் தோராய அளவாக மதிப்பிட பட்டுள்ளது.
 உற்சாகத்தில் மிதக்கும் தேசம்
      அதிகம் மது பருகுபவர்களில் தடை விதிக்கப்பட்டிருக்கும் கேரளாவைவிட முன்னே இருப்பது ஆந்திர தேசம்தான். 665 லி. மதுவினை ஒரு வாரத்தில் ஒருவர் பருகும் அளவாகவும், ஆண்டிற்கு 34.5 லி. பருகித்தீர்க்கிற தேசம் ஆந்திராவாக உள்ளது. கேரளா இதன் பின்னேதான் உள்ளது. வாரத்திற்கு 192 மி.லி வாரத்திற்கு என, ஆண்டிற்கு 10.2 லி. என்பது கடவுளின் தேச அளவாக உள்ளது.
தடை உத்தரவு என்ன செய்யும்?
     கேரளாவில் 730 பார்களின் உரிமம் தடை செய்யப்படுவதாக வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பு சமூகத்தளத்தில் பல்வேறு மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. ஆனாலும் காங்கிரசின் அமைச்சர்களே இனி அரசிற்கு கிடைக்கும் வரிவருவாய் மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட மற்ற சிக்கல்களும் உள்ளன என்று கூறிவருகின்றனர். தனிமனிதரின் சுதந்திரத்தினை கட்டுப்படுத்துவதாக, தலையிடுவதாக மது அருந்துபவர்கள் நினைக்கும்படி அரசின் உத்தரவு இருந்தாலும், இது சமகால பிரச்சனைகளை விட எதிர்காலத்தில் சமூகம் எதிர்கொள்ளவிருக்கும் பல பிரச்சனைகளை களையும் விதமாக எடுக்கப்பட்ட முடிவு என்று கொள்ளலாம்.
கேரளாவில் மது அருந்தும் வயது 18 – 19 லிருந்து தற்போதைய கால கட்டத்தில் பதினான்காக குறைந்துள்ளது என்பது மது அருந்தும் நிலையின் தீவிரத்தை உணர்த்த போதுமானது. மேலும் கேரளாவிலுள்ள பலரும் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் என்பதால் மது அருந்துவது தவிர்க்க முடியாது அவர்களின் வாழ்வில் இடம்பெறும் ஒன்றாக மாறிவிட்டது.
முதல்வரா? கட்சி தலைவரா?
     உரிமம் கோரியிருக்கும் 312 பார்களின் உரிமங்களை புதுப்பிக்கக் கூடாது என்று கேரளா காங்கிரஸ் கட்சியின் தலைவரான வி. எம் சுதீதரன்தான் முதலில் அரசிற்கு வேண்டுகோள் விதித்தவர் என்றாலும் பின் முதல்வர் உம்மண் சாண்டி 418 பார்களின் உரிமமும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துவிட்டார். பார் உரிமையாளர்கள் அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்று தடையுத்தரவு பெற்றுவிட்டநிலையிலும், அரசின் இம்முடிவு அரசியல் பலன்கள் என்பதையும் தாண்டி நிலையாக அமல்படுத்தப்பட்டால் சிறந்த உடல்நலம், மனநலம் கொண்ட தலைமுறையை உருவாக்க முடியும். இன்று சமூகத்தில் நிகழும் பல்வேறு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, சமூக சீர்கேடுகளுக்கு தொடர்ந்து மதுவருந்தும் பழக்கம் பின்னணியாக இருந்துவருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. அரசிற்கு கிடைக்கும் மதுவின் மூலமான வருமானத்தை விட மக்களின் நலனை முன்னிருத்தி செயல்படும் அரசிற்கு முக்கியமானது அந்த சமூகத்தை தொடர்ந்து வழிநடத்தும் மனிதர்களை உருவாக்குவதுதான் என்பதை மனிதர்களை நேசிக்கும் யாரும் ஒப்புக்கொள்ளும் ஐயமில்லாத உண்மையாகும்.
முன் நிற்கும் விளைவுகள்
அரசு மதுபானத்தொழிற்சாலையின் உற்பத்தியை தொடர்ந்த வரும் ஆண்டுகளில் சிறிது சிறிதாக குறைத்து நிறுத்துவதாக திட்டமிட்டிருக்கிறது. இரண்டு மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் நடந்து வந்த 730 பார்களில் ஆல்கஹால் அதிகளவு கொண்ட மது பானங்கள் விற்கப்பட்டுவந்தன.
     உடனடியாக மதுவிற்பனையை நிறுத்துவதன் மூலம் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வாற்கோதுமை கள் மற்றும் ஆல்கஹால் அளவு குறைந்த மது பானங்களை விற்பனை செய்வதின் மூலம் சுற்றுலா வருமானத்தை வீழ்ச்சியடையாமல் காப்பாற்ற அரசு சிந்தித்து வருகிறது. மதுவுக்கு எதிராக போராடுபவர்கள் இதனையும் தடை விதிக்கக் கூறி வற்புறுத்திவருகிறார்கள். என்றாலும் அரசிற்கு தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கான மாற்று பணிவாய்ப்பு, வருமானம் இழப்பு, சுற்றுலாவின் மூலமாக வரும் வருமான இழப்பு உள்ளிட்ட பல சிக்கல்கள் முன்நிற்கின்றன.
கள் இதற்கு உதவுமா?
      கள் விற்பனை, மதுபான விற்பனை என்ற நிலையில் இது அரசின் மக்களைக் கொண்ட சமூக நலனுக்கான முடிவு என்பது மேலோட்டமாக தெரியலாம். ஆனால் உள்ளே பார்த்தால் இரு இனக்குழுக்களான ஈழவர் மற்றும் கிறிஸ்துவர்கள் என இருவருக்குமான அதிகாரம் கைப்பற்றுதலுக்கான பெரும் போர்க்களமாக இந்த தடை உத்தரவை எடுத்துக்கொள்ள முடியும். மதுவிற்பனையை தடை செய்வது என்பதன் மூலம் ஈழவர்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டினை முதல்வர் எடுத்துள்ளார் என்று எண்ணவும் வாய்ப்பிருக்கிறது. ஆட்சி மீது பெருகும் குற்றச்சாட்டுகளை திசை திருப்ப நினைக்காமல்  முதல்வர் இம்முடிவை மக்களின் நலன்கருதி எடுத்திருந்தால் நிச்சயம் இதனை பாராட்டலாம்.
     கள்ளினை மதுவின் தடைக்கு மாற்றாக முன்னிருத்த தடையாக இருப்பது ஆண்டிற்கு ஆண்டு குறைந்து வரும் கள்ளின் அளவுதான். கள்ளினை விற்பனை பெரிய அளவில் விற்பனை செய்யும்போது, அதில் போலிகள் அதிகம் பெருக வாய்ப்பு உள்ளது. அதிக அளவு அல்லது குறைந்த அளவு ஆல்கஹால் கலந்துள்ள எந்த பானமும் மக்களின் உடல், மனநலனை குலைத்துவிடும் என்பது மருத்துவ உண்மை என்ற நிலையில் சிறிது சிறிதாக அவை பற்றிய விழிப்புணர்வை கற்பித்து அதனை முழுமையாக நிறுத்துவதே சரியானதாக இருக்கும்.
தடைமுயற்சிகளை தடுக்கும் வருமானம்
     1995 – 96 ல் முதல்வராக இருந்த ஏ.கே அந்தோணி சாராய விற்பனையை தடுப்பதற்கான பாதையை தேர்ந்து எடுத்தாலும், சாராய அதிபர்கள் இந்தியாவில் வெளிநாட்டு மது வகைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கிவிட்டதனால் மது அருந்துபவர்களின் விழுக்காட்டினைக் குறைக்க முடியவில்லை. அரசிற்கு இதன் மூலம் வரி வருவாய் இருநூறு கோடி ரூபாய் என்ற அளவில் கிடைத்தது.
     2012 – 2013 ஆண்டில் 7,240.89 கோடி வரிவருவாய் இந்தியத் தயாரிப்பான வெளிநாட்டு மதுவகைகள் பிரிவில் கிடைத்திருக்கிறது. அரசின் தடை பெறும் வரையிலான வரி வருவாய் 3,757 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. தடை இல்லாத போது ஆண்டின் இறுதியில் 9000 கோடி ரூபாய் வருமானம் அல்லது அதற்கு மேல் அரசுக்கு கிடைத்திருக்க கூடும்.
மதுவிலக்கு மாநிலம்
      1958 ல் குஜராத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டாலும், சட்டவிரோத நாட்டு சாராய விற்பனை அதிகம் உள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது. கள் மற்றும் நாட்டு சாராயம் குறைவான விலைக்கு விற்கப்பட்டாலும் மற்ற மது வகைகள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அறிமுகமானவர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படும் இந்த சட்டவிரோத மதுவிற்பனைக்கான மதுபானங்கள் பல்வேறு நவீனமாக புதுப்புது வழிகளில் மாநிலத்தின் உள்ளே கடத்திவரப்படுகிறது.
     குஜராத்தைச் சுற்றியுள்ள ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகராஷ்டிரா, டாமன் டையூ ஆகிய பகுதிகளில் மதுவிலக்கு இல்லை என்பதை நாம் முக்கியமாக கவனிக்கவேண்டும். அரசு தொடர்ந்து மக்களுக்கு மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த முயற்சிப்பதே இதற்கு தீர்வாக இருக்கமுடியும்.
தமிழகத்தின் நிலை
     தமிழகத்தில்  கள் மற்றும் சாராயம் முன்பு விற்கப்பட்டு வந்தது. சாராயம் தனியார் வியாபாரிகளால் விற்கப்படும் நிலை வந்த போது கள் இறக்கி விற்பது தடை செய்யப்பட்டு பதநீர் இறக்குவது என்பதற்கு உரிமம் வழங்கப்பட்டு அத்தொழில் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டது. பின் இதில் தனியாருக்கு வந்த வருமானத்தைப் பார்த்த அரசு அதைத்தானே ஏற்று நடத்த தொடங்கியது. இன்று மக்கள் பெறும் பல்வேறு விலையில்லாத அல்லது இலவச திட்டப்பொருட்கள் மதுபான விதையில் விளைந்தவைதான். அரசு மக்களுடைய வரிப்பணத்தில் இலவசம் என்று எதைக்கொடுத்தாலும் பின் மெல்ல அதை மக்களிடம்தான் வசூலித்துக்கொள்ளும். இங்கு மதுபான விஷயத்திலும் அரசின் செயல்பாடு இப்படித்தான் உள்ளது. தொழிலாளிகள் பெறும் சிறிய அளவிலான தொகையையும் அரசு தன் மதுபான கடைகள் மூலம் எடுத்துக்கொண்டு பின், அதிருப்தியை சீர்படுத்த  அரசு தன் குடிமக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளான உணவு, உடை, உணவு உள்ளிட்ட கடமைகளைக்கூட ஆட்சியிலிருக்கும் தலைவர்கள் தம் கருணையால் கிடைக்கச்செய்வது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி தம்மை காருண்யம் மிக்கவர்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.
     ஆனால் இதே தருணத்தில் குறிப்பிட்ட கட்சிக்காரர்கள் தயாரிக்கும் மதுபானத்தொழிற்சாலை என்றாலும் அதற்கு எதிர் கட்சிக்காரர்கள் ஆட்சிக்கு வந்தாலும், உடன்பாடு ஒன்றினை ஏற்படுத்திக்கொண்டு தங்களது தொழிலை ஆட்சியாளர்களின் ஆசிர்வாதத்தோடு மக்களின் நலம் காக்க உழைக்கிறார்கள். இதில் உண்மை இல்லாமல் இல்லை. கொள்கை என்ற ஒன்று இருந்தால்தானே? இம்மண்ணை அறிந்த எந்த மக்களும் ஆட்சியைப் பெறாமல் குறிப்பிட்ட பொழுதுபோக்கு துறையினைச் சார்ந்தவர்கள்  அதைக் கைப்பற்றும்போது மக்கள் தம் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு போராடும்போதும் அதை ஆட்சியாளர்கள் சட்டம் ஒழுங்கு என்று கூறி அதனை முடக்கவே, மழுங்கடிக்கவே நினைக்கிறார்கள். 
     கேரள அரசின் மதுவிலக்கு எனும் முயற்சி வெற்றியடையும் தருணத்தில் மதுவிலக்கு சாத்தியமேயில்லை என்று கூறும் மாநிலங்கள் மதுவிலக்குக்கு ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். இந்தக்காரணங்களால் கேரளா அரசின் இந்த தடை உத்தரவின் விளைவுகள் மீது பல்வேறு மாநில அரசுகளின் கவனம் குவிந்துள்ளது.

     நன்றி: ‘ஹிந்து’ நாளிதழ் மற்றும் அந்திமழை மாத இதழ் 

கருத்துகள்