தமிழன் முற்றத்து நாகரிகக் கொடிமரம்


     தமிழன் முற்றத்து நாகரிகக் கொடிமரம்

·        அன்பரசு சண்முகம்

இன்றைய சமகாலத்தில் வடமொழி, மூத்ததது என்று அதன்மேல் பற்றுகொண்டவர்கள் அந்த அதனை பரப்ப, பரவலாக்க முயன்றுவருகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட மேல்அடுக்கு மக்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று கூறி கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் மொழி என்ற தகுதியை இழந்ததால் சமஸ்கிருதம் தன்னை தக்கவைத்துக் கொள்ளமுடியவில்லை என்ற உண்மையை இவர்கள் பேசாமல் திட்டமிட்டே மறைக்கிறார்கள். மக்களிடம் தொடர்ந்து புழங்கும் மொழிகள் மட்டுமே நிலைத்து நிற்கமுடியும் என்பது யதார்த்த உண்மை.
தமிழ் பழங்குடி மக்களின் மொழியான தமிழ் மொழி குமரிக்கண்டத்தில் தோன்றியது  ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எனவும், தமிழர் நாகரிகமும், தமிழ் இலக்கணவிலக்கியமும் தோன்றியது  இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எனவும்,  தேவநேயப்பாவாணர் தமிழ் வரலாறு நூலில் தெளிவுற கூறியுள்ளார்.
தமிழ்மொழி தேய்வதற்கு முக்கியகாரணமாக வடமொழிச்சொற்களைப் பேச்சில் கலப்பது, தெய்வ வழிபாட்டில் அர்ச்சனைகள் வடமொழியில் செய்வது, தமிழர்களின் பெயர்களில் வடமொழி கலப்பு என இவையே நம்மிடம் உள்ள குறைபாடுகளாக கூறலாம். இன்னொன்று இழந்த ஒன்றை நினைவின் எச்சமாக சிலைசெய்து அதற்கு மாலையிடுவது எனும் ஆபாசம் பெரியாரின் தொண்டர்கள் வரை பரவிவிட்டது.
இந்திய நாகரிகத்தின் அடிப்படை தமிழர் நாகரிகமே என்றாலும் அதனை அனைவரும் அறியச்செய்ய இயலாததன் காரணம் அன்றைய சிறந்த இலக்கியங்கள் பலவும் அழிந்துபட்டுபோனதே. அதோடு அதனை மொழிபெயர்த்ததுதான் சமஸ்கிருத இலக்கியங்கள் இன்றிருப்பது அதனை பெருமைபடுத்தியும், தமிழர் நாகரிகத்தை கீழாகவும் நினைக்கச் செய்துவிட்டது.
தமிழர்களின் அடையாளம் வேட்டி என்பதைவிடவும் மொழி என்பதுதான் முக்கியமானது. அதோடு தமிழர்களின் மரபான உணவுப்பழக்கங்கள், கலாச்சாரங்களில் தாவரங்களுக்கும், மரங்களுக்கும் இருந்த பங்கு முக்கியமானது.
நகரங்கள் தோன்றியது உழவுத்தொழிலில் சிறந்த மருத நிலத்தில்தான். உழவுத்தொழிலில் வேளாண்மையும், பதினெண்பக்க தொழில்களும், பிறதொழில் செய்வோர்க்கும் போதிய உணவும், வாணிகமும் ஏற்பட்டன. பல்வேறு அடையாளங்களை தன்னகத்தே கொண்ட தமிழர்களுக்கு மிக நெருங்கிய உறவு கொண்ட அழிந்துவரும் பனைமரம் குறித்துப் பேசுவோம்.
பனை என்றால் நமக்கு மனதில் உடனே தோன்றுவது வெயில் காலத்தில் நாம் தள்ளுவண்டிக்கடைகளில் உறிஞ்சும் நுங்குதான். அதற்குமேல் அதில் அறிவது அதன் ஓலைகளில் செய்து வைத்திருக்கும் விசிறிகள் மற்றும் பனங்கற்கண்டு ஆகியவையே. அவற்றை நம்பி வாழ்ந்த சமூகம் ஒன்றுண்டு. பல மனிதர்களுக்கு தாயாக இருந்த பனைமரம் இன்று செங்கல்சூளைகளில் வெறும் ஐம்பது ரூபாய்க்கு விற்கப்பட்டு தரையில் அதன் பசிய குருதி வீச்சம் நாசியில் ஏற வெட்டப்பட்டு கிடக்கிறது. அதனை நம்பியிருந்தவர்கள் என்னவானார்கள்? அதனை மூலமாகக் கொண்டு இருந்த தெளுவு(பதநீர்), கருப்பட்டி ஆகிய தொழில்கள் என்னவாயின?
பல தலைமுறைகளாக, தெளுவு இறக்கிக்கொண்டிருந்த, பனம் கருப்பட்டி தயாரித்துக்கொண்டிருந்த குடும்பத்தில் மூத்தவரான தொண்ணூறு வயதான பழனியம்மாளிடம் இதுபற்றிக் கேட்டபோது,
‘’ பனமரமே பனமரமே ஏ வளந்தே
நா வளந்த காரணம்
பசிக்கு பழமாவேன், பட்டினிக்கு நொங்காவேன்
கட்ட கயிறாவேன், கன்னு கட்ட தும்பாவேன்
தூரத்துப் பொன்னாளுக்கு கணக்கோலை நானாவேன் ‘’
என்ற பாடலைப் பாடினார். இந்தப் பாடலிலே பனைமரத்தின் பல பொருட்களும் வந்துவிட்டன என்பதைக் கவனியுங்கள். ‘’ தென்ன மரம் ஏறறதுக்கு முன்னாடி பன மரம்தே ஏறமுடியும். ஏன்னா பன மரத்தோட அமைப்பு அப்படி. தென்னமரத்தவிட பிடிமானம் அதிகம். பதினாலு வயசிலிருந்து மரமேற பழக்குவாங்க அப்பத்தே உடம்பு பயமில்லாம பழவமுடியுங்கறதுதே காரணம். எங்க அப்பனெல்லா பன மரம் நெறையா ஏறினவருதே. எம்பையனு ஏறுறவந்தா. ஆனா ஐம்பது வயசாயிட்டா அப்பறமெல்லா மரத்துல அவ்வளவு ஒசராம ஏறமுடியாது. இப்ப யாரும் ஏறமாட்டீங்கறான்னா மரம் எங்க இருக்குது? தெளுவு எறக்கறக்கே லைசென்சுன்னு வாங்கணுங்கறாங்க. அப்பறமா இதுல இருக்கற வருமானங்கறது கம்மி. நிலையில்லாதது. பனம் கருப்பட்டி, இல்லன்னா பனங்கல்கண்டுனு விளைக்கிற நாம வெல சொல்ல முடியாது. தையிலிருந்து ஆடிமாச வரையில பன மரத்தில தெளுவிருக்கும்; அதுக்கப்பறம் ஒரு வருஷம் ஆனா அதாவது அடுத்த தையிலதே மரம் ஏறோணும் ‘’ என்று கூறும் இவரது மகன் தேங்காய் வியாபாரம் செய்கிறார். இந்த வயதிலும் தென்னை ஒலையைக் கிழித்து வாசல் கூட்டும் துடைப்பம் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.    இப்போதும் வேலை செய்யணுமா என்று கேட்டால் ‘’ தெம்பிருந்தப்ப ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்தனப்பா. இப்ப முடியில ஏதோ ஒரு வேல செய்யோணுமல்ல ’’ என்று பேசிக்கொண்டே ஈர்க்கமாறுகளை கவனமாக கிழிக்கிறார்.
பனங்கற்கண்டு எப்படித் தயாரிப்பது பற்றி. ‘’ மொதல்ல மரத்துல இருந்து தெளுவ கொண்டாந்து கொப்பறையில  கொட்டி ஒரு துளிப்பதம் வர்ற அளவு( நீரைத் தொட்டு பாவைக் கையில் எடுத்தால் கையில் படாமல் உருளும் பக்குவம்) காய்ச்சினதும் எடுத்து பாவுபுட்டியில்(வாயகன்ற ஒரு குடம் தண்ணீர் பிடிக்கும் பானை) ஊத்தி வெச்சிரோணும். பன மரத்துப் பட்டையை நல்லா கல்லுல அடிச்சு நாரை மோதிரம் மாரி பாவுக்குள்ள பக்குவம், நெறத்துக்கும், சீக்கிரமா வெளையறதுக்கும் போட்டுவப்பாங்க. ரெண்டு இல்ல மூணு நாளுல கல்கண்டு வெளஞ்சதும் மேலயிருக்கற பாவை வெலக்கிட்டு பானையை ஒடச்சு எடுத்துக்கலாம். பனங்கல்கண்டு ஆடி மாசக்கடசீல தெளுவு முடியிறப்போ வீட்டுல பிள்ளைவலெல்லாம் சாப்படறதுக்கு போட்டுக்கொடுப்பாங்க. கருப்பட்டி காச்சறதுன்னா பக்குவம் இன்னுங்கொஞ்சநேரம் காய்ச்சி ஊறுற தெளுவுக்கேத்தமாறி குழி பண்ணிவெச்சு அதுல நல்ல பருத்தித்துணி விரிச்சு வெச்சு அதுல ஊத்தி எடுக்கோணும். பன ஒலயில பாவ ஊத்தி பிள்ளைகளுக்கு குடுப்பாங்க. அதுதான் ஒலக்கருப்பட்டிம்போம். அவ்வளவு தித்திப்பா இருக்கும் பனந்தெளுவுல வர்ற கருப்பட்டி. தென்னங்கருப்பட்டி கொஞ்சோ உப்பொறச்சமாரி இருக்கறதுனால அத சாப்பிடமுடியாது. அதோட பனங்கருப்பட்டி மருந்து தயாரிக்கறக்கும் ஆவும். ஆனா இப்ப வர்ற கருப்பட்டில வெள்ளச்சர்க்கரைய கலந்தர்றாங்க. ஒரு கிலோ நூறு ரூபாயிக்கு போறதுனால சக்கரய கலக்கறதுக்கு விக்கறவங்களே சொல்லீர்றாங்க. நாங்க கருப்பட்டி செய்யும்போது எதையுமே கலக்கமாட்டோம் இந்தக்காலத்துல அந்த நேர்மைதா தவறிப்போச்சு ‘’ என்று பல உணர்வெழுச்சிகள் அலையடிக்க தொடர்ந்து பேசியபடி ஓலையை விடாமல் கிழித்துக்கொண்டிருந்தார்.
கருப்பட்டியில் கலப்படத்தை அறிய அதனை நன்கு கவனித்தாலே போதும் சர்க்கரை கலந்து கருப்பட்டி தயாரித்திருந்தால மினுமினுப்பாக இருக்கும்.
முதிர்ந்து மரத்திலிருந்து விழும் பனம்பழத்தை எடுத்து தீயில் சுட்டு பக்குவப்படுத்தி சாப்பிடலாம். பச்சையாக சாப்பிட்டால் தலைசுற்றல், காய்ச்சல், வயிற்றுப்பிரட்டல் ஏற்படும். பனம்பழத்தை நடுத்தர பதத்தில் வெட்டி எடுத்தால் அதை வேக வைத்து சாப்பிட முடியும். சேவாய்காய் என்று குறிப்பிடும் இந்தப்பழம் முதிர்ந்த பழம்போல வாசம் வரும் பக்குவத்தில் இருக்கும். இதனை வெட்டி எடுத்து வந்து கொட்டை உள்ள பகுதிகளாக அரிந்து முந்தையகாலத்தில் சிவகிரி சந்தையில் ஒரு துண்டு இவ்வளவு காசு என விற்று வந்திருக்கிறார்கள். இது பற்றி பழனியம்மாள் ‘’ எங்க அம்மாவெல்லாம் மூட்ட மூட்டயா சேவாயக்கொண்டுபோய் சந்தையில் துண்டு இருபத்தைந்து காசுன்னு பத்துரூபா, பன்னண்டு ரூபாவுக்கு வித்துட்டு வருவாங்க. நானும் ரெண்டு மூணு தடவை கூட போயிருக்கேன். சேவாய்க்காயை  கொட்டைகொட்டையோடு அரிஞ்சிக்கிட்டு பாத்திரத்தில் போட்டு வேகவைக்கோணும். வேகவைக்கும் நீர் பாவு மாரி மாறுன ஒடனே சேவாய எடுத்து ஆற வைக்கோணும். ஆறினதும் மேல்தோல உறிச்சிட்டு சாப்பட வேண்டியதுதான் ’’ என்கிறார்.
தனியாக வாங்குகிறவர்களிடம் கருப்பட்டி போடுபவர்கள் கருப்பட்டியில் சர்க்கரை கலக்கச்சொல்வது எதற்கு என்று கேட்டால் ‘’ வேறென்னங்க எட கூடி வரதுக்குத்தே வாங்கற ஆளுங்களே இப்பிடிச் செய்யச் சொல்றாங்க. அதோட சக்கர போடாம பண்ணற கருப்பட்டிய பக்குவமா வெச்சுக்காட்டி கெட்டுப்போயிரும். சக்கர கலந்துட்டா அவ்வளவு சீக்கரம் கொட்டுப் போகாதுங்கறதும் ஒரு காரணம். இன்னொண்னு என்னன்னா இந்த வேலய செய்யறக்கு ஒரு ஆளு பத்தாது. இரண்டுபேராட்ட செய்யோணும். மரமேறறதுக்கு கூலி, பாவு காய்ச்சி கருப்பட்டி பண்றதுன்னு வேல அதிகம். கிடைக்கற காசு ரொம்ப கம்மி. அதுக்கு பயந்துட்டே எங்க பயங்கூட இந்த வேலயிலிருந்து ஒதுங்கீட்டான்.  கமிட்டில கொண்டீ போட்டா நல்ல காசு கெடைக்குமுன்னாலும் போயிட்டு வர்ற செலவு இருக்குது. அப்பறம் நம்மு வேல கெடும். அதுதா பக்கத்துலயே கருப்பட்டியக் குடுத்துட்டு கெடைக்கற காச வாங்கிக்கறது.  ஈஸியா இருக்குதல்லோ அதனாலதான் இப்படி செய்யறோம் என்கிறார் பல ஆண்டுகளாக கருப்பட்டி காய்ச்சி வரும் சண்முகம். அரசின் கூட்டுறவு விற்பனையகத்தில் பனம் கருப்பட்டி பத்து கிலோ அதாவது ஒரு மனு ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதுவே தனியாரிடம் மனுவுக்கு எழுநூற்று ஐம்பது ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. பணத்திற்கு விற்பது தவிர இழப்பைத் தவிர்க்க பணமில்லாமல் ஐந்து கிலோ கருப்பட்டியை தனியார் பெற்றுக்கொள்வார்கள் என்பதும் இதில் கவனிக்க வேண்டும்.
பனைமரம் தொடர்ந்து செங்கல்சூளைகளுக்கு அதன் ஆயுளைக்காட்டிலும் குறைவான தொகைக்கு வெட்டப்படுவதோடு மரம் ஏறும் ஆள்களுக்கு சமூக அந்தஸ்து குறைவு என்பதால் யாரும் அதுபோன்ற வேலையில் இருப்பவர்களுக்கு பெண்கொடுக்க தயங்கிவரும் நிலையில் பலரும் வெவ்வேறு பாதையில் சென்றுவிட்டார்கள். மரம் ஏறுபவர்களுக்கு கருப்பட்டி கொண்டுபோய் விற்கும் கூட்டுறவு விற்பனையகத்திலே சாதிசங்கம் சார்பில் தெளுவு இறக்குவதற்கு உரிமம்பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கு அறுநூறு ரூபாய் கட்டணம் பெற்றுக்கொள்ளப்படுகிறது. மற்றபடி அரசின் உதவிகளில்லாமல் இவர்கள் காப்பீடு போன்றவையும், மரம் ஏறுவதற்கான கருவிகள் முதற்கொண்டு முந்தைய காலத்தில் வழங்கிவந்திருக்கிறார்கள். அரசின் பனைவாரியம் தொடர்பான எந்த தகவலும் மக்களுக்கு தெரியவில்லை. அதைக்காப்பாற்றுவதற்கு எடுத்த முயற்சிகளும் நடைமுறையில் என்ன பலன் கொடுத்தது என்பதும் தெரியவில்லை. தென்னை மரம் ஏறுபவர்களுக்கு இன்று ஏக கிராக்கி என்றாலும், பணம் அதிகம் கிடைக்கிறது என்றாலும் யாரும் அதைச்செய்ய வருவதில்லை. செய்துகொண்டிருப்பவர்களும் வயதான மூத்த தலைமுறைதான். விதிவிலக்காக சிலர் இளம்வயது ஆட்கள் செய்தாலும் கூடவே விவசாயத்தையும் செய்துகொண்டு இதனையும் ஓரிருவர் செய்கிறார்கள். இது வெறும் ஒரு மரத்தின் கதையாக மட்டும் முடிவதில்லை. அதன் மேல்  படர்ந்துள்ள கொடி போல, அதில் வசிக்கும் பறவை போல  அதனை வாழ்க்கையாக கொண்ட ஒரு சமுதாயத்தின் முழு வாழ்வையுமே சொல்ல வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை.

கருத்துகள்