சீதாராம் யெச்சூரி நேர்காணல்

பி.ஜே.பி, இந்து வாக்குவங்கியைக் கைப்பற்ற பிரிப்பது, உடைப்பது, உருவாக்குவது என்றே இயங்கி வருகிறது

                                                    ஆங்கிலத்தில் சஞ்சய் பஸக்,நம்ரதா பிஜி அகுஜா
                                                     தமிழில் ரிச்சர்ட் மஹாதேவ், வின்சென்ட் காபோ

















ஜவஹர்லால் நேரு பல்கலையில் தேசத்திற்கு எதிரான வாசகங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

இந்த விவகாரம் தொடங்கிய முதல்நாளிலிருந்து அந்த கோஷங்களை   எழுப்பியவர்களைக் கண்டறிந்து, உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில்  அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க கோரி வருகிறோம். ஆனால் எந்த கைதும் இல்லை? என்னதான் நடைபெறுகிறது? உங்களிடம் தேசத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் குறித்து ஆதாரங்கள் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கவேண்டியதுதானே? ஆனால் அதைவிட்டு விட்டு பல்கலைக்கழகத்திற்கு எதிரான வெறுப்பினைத் தூண்டும் பிரசாரங்கள் எதற்கு எழுப்பப்படுகிறது? ஒன்றை மனதில் கொள்ளுங்கள். இது பல்கலைக்கழகத்தோடு நின்றுவிடாது. இது ஒரு தொடக்கம்தான். 

வேறு சக்திகள் அரசினை இயக்குவதாக கூறுகிறீர்களா?

இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம்தான் அரசிற்கு வழிகாட்டி வருகிறது. 

சற்று விரிவாக கூற முடியுமா?

தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நிறுவனம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களினை கைப்பற்றுவது மட்டுமல்லாது ஜாதி அரசியலிலும் பி.ஜே.பி ஈடுபடுகிறது. ஹைதராபாத்தில் தலித் மாணவர்களில் ஒருவர் தற்கொலை செய்யத் தூண்டப்பட்ட நிகழ்வும் இதற்கு ஒரு உதாரணம்தான். இதுபோன்ற நிகழ்வுதான் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திலும் நடந்து வருகிறது. ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியாவின் கல்வித்திட்டத்தை இந்துத்துவ தத்துவத்திற்கு ஆதரவாக மாற்றி இந்துக்களின் நாடாகவே சகிப்புத்தன்மையற்ற, பாசிஸ தேசமாக மாற்ற துடிக்கிறது பி.ஜே.பி.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் இடம் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறதே....

அது அரசு கூறிவருகிற ஒன்று. நான் அவர்களிடம் கேட்பது அதற்கான ஆதாரங்களைத்தான். அவர்கள் கூறிய ஆதாரங்கள் அனைத்தும் புனையப்பட்ட ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டதால்தான் அப்பல்கலைக்கழகத்தின் மீது பலரும் தாக்குதல் தொடுக்க காரணமாகி விட்டது. பல்கலைக்கழகம் தேசத்திற்கு எதிரான சிந்தனைகளின் இடமா என்ன?  பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்திக்கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தினர், பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர்கள், பாதுகாப்பு தொடர்பான சிந்தனைக்குழுக்கள் என அனைவருமே இந்த பல்கலையில் இருந்து வந்தவர்கள்தான். இந்திய குடிமைத்துறை, இந்திய காவல்துறை, வெளியுறவுத்துறை, ஊடகம், அரசியல், ஆராய்ச்சி நிறுவனங்கள் என பல இடங்களிலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்தான் நிறைந்திருப்பார்கள். இதனைத்தான் ஒருமுறை சர்தார் வல்லபாய் படேல் நமது நாட்டை பாதுகாக்கும் இருப்பு வளையமாக ஒன்றிணைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.


தேசியவாதம் என்பது பாசிஸத்தின் ஒரு குணம். நமது அரசு அதை நோக்கி பயணிப்பதாக நினைக்கிறீர்களா?

நாங்கள் கூறுவதும் அதேதான். அதீத தேசப்பற்றும், தேசியவாதமும் ஹிட்லரால் முன்னர் பயன்படுத்தப்பட்டது. ஹிட்லரின் கட்சி பெயர் தேசிய சமூகவாத கட்சியாகும். இன்று ஐரோப்பாவில் தேசியவாதம் என்ற வார்த்தை சரியான வார்த்தை கிடையாது. அதனைக் கூறுபவர்கள் குறிப்பிட்ட பலன்களைக் கருதி கூறும் குறிப்பிட்ட குழுக்களே ஆவர். இந்தியாவில் இப்படி தேசியவாதம் பேசுபவர்கள் தங்கள் கருத்தை ஏற்காதவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தி நாம், அவர்கள் என பிளவுபடுத்துதலை தொடர்கின்றனர். 

அரசு தேசியவாதம் பேசுவதில் என்ன தவறிருக்கிறது?

ஹிட்லர், முசோலினி போன்றவர்களின் அரசுகளைப்போலவே நமது அரசும் தேசியவாதம் எனும் அட்டையை கையில் ஏந்தியுள்ளது. அரசுக்கு இரண்டு முக்கியமான பொறுப்புகள் உள்ளது. ஒன்று கல்வி அமைப்பு. இந்திய வரலாற்றோடு, புராணத்தை கலப்பதும், இந்திய தத்துவத்தை நீக்கி இறையியலை சேர்ப்பதுமாக செயல்படுகிறது. 

இரண்டாவது, அரசு திட்டங்களின் பல்வேறு தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதாகும். பொருளாதாரம், வெளியுறவுக்கொள்கை, மற்றவர்களுடன் உறவை நிர்வகிப்பது உள்ளிட்ட பல விஷயங்களிலும் அரசு இழிவான தோல்வியைத் தழுவியுள்ளது. 

மத்திய பல்கலைக்கழகங்களில் தேசியக்கொடியை ஏந்தி நிற்பதை எதிர்க்கிறீர்களா?

மனிதவளத்துறை மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி 207 அடி நீளத்தில் தேசியக்கொடியை மத்திய பல்கலைக்கழகத்தில் ஏந்தி நிற்பதாக கூறியுள்ளார். அமைச்சர் தான் கூறுவதை செய்யட்டும் ஆனால் அதனை விட முக்கியமாக நம் மனதில் உள்ள தேசியக்கொடி என்பது மிகப்பெரிய, தாராளமானது. அதனை அவர் முதலில் கண்டுபிடிக்கவேண்டும். 

இந்த விவகாரத்தில் இடதுசாரிக்கட்சிகள் இதில் நேரடியாக கலந்துகொள்ளாமல் அறிக்கைகள் மட்டும் தருவதாக விமர்சனம் உள்ளதே?

முதல்நாள் பல்கலைக்கழகத்தில் தொடங்கியபோதே நாங்கள் அங்கு சென்றுவிட்டோம். இந்த போராட்டத்தை நாங்கள் உடனிருந்தே தொடங்கினோம். பிப்ரவரி 18, வியாழனன்று, அரசுக்கு எதிரான பேரணியைத் தொடங்கினோம். இதுபோல ஒரு பேரணியை அண்மையில் யாருமே பார்த்ததில்லை. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ரோஜா பூக்களுடன் சாலையில் பேரணியாக நடந்து வந்தனர். எனவே இதனை இடதுசாரிகளின் இயக்கம் என்றோ அல்லது மற்ற கட்சிகளின் இயக்கம் என்றோ கருத வேண்டியதில்லை. இது மக்களின் இயக்கம்.

உங்களுக்கு ஆதரவு தர முன்வந்தவர்கள் யார்?

சனிக்கிழமை குடியரசுத்தலைவரை சந்தித்து ஜ. நே. பல்கலை பிரச்சினை குறித்து பேசினோம். ஒருங்கிணைந்த ஜனதாதள், ராஷ்டிரிய ஜனதாதள், தேசிய காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் எங்களுடன் இணைந்து நிற்கின்றன. ராகுல் காந்தி எங்களுடன் ஜ.நே.ப. த்திற்கு வந்தார். 

உத்திரப்பிரதேசத்திற்குப் பிறகு பி.ஜே.பி . மேற்கு வங்கம், அசாம் போன்ற இடங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்காக செய்யும் வேலைகள் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக. பி.ஜே.பி. அதீத தேசப்பற்று, இனக்குழு வாதம் ஆகியவற்றை  தேர்தலில் வாக்கு பெறுவதற்கான கருவிகளாகவே பயன்படுத்தி வருகிறது. இல்லையெனில் எதற்கு இனக்குழு மீதான வெறுப்பினை தீவிரமாக பரப்ப வேண்டும்? அரசியலில் மிகமோசமான வகையை கையில் எடுத்துள்ளனர். மேற்கு வங்கம், கேரளா, அசாம் பகுதியில் முஸ்லீம் மக்கள் கணிசமான அளவில் இருப்பதால் இதுபோன்ற செயல்பாடுகள் பி.ஜே.பியினருக்கு வெற்றியைத் தேடித்தரலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்து வாக்குகளைப் பெறவே பிரிப்பது, பிளவுபடுத்துவது, இணைப்பது என்பதை தொடர்ந்து செய்து வருகின்றனர். 

அதீத நாட்டுப்பற்று, ஊழல் என்பனவற்றுள் ஒருவர் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கவேண்டுமென்றால் அவர் எதை தேர்ந்தெடுக்கலாம்?

அதீத நாட்டுப்பற்று கொண்டவர்கள் ஊழலில் ஈடுபடமாட்டார்கள் என்று யார் கூறியது? தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த முதல் ஆறு மாதங்களில் இந்திய ப்ரீமியர் லீக் ஊழல், வியாபம் ஊழல், சட்டீஸ்கரின் அரிசி ஊழல், மகராஷ்டிராவில் நடந்த ஊழல்கள் இவையெல்லாம் அவர்களது ஆட்சியில் நடந்தவைதான். 
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திரமோடி முன்னர் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கையே முந்தி விட்டார் என்று பேசியிருக்கிறேன். ஐக்கிய  முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்யும்போது ஊழல்கள் வெளியே வந்தது அவர்கள் ஆட்சி செய்த 7 வது ஆண்டில்தான். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியோ ஆட்சிக்கு வந்த ஏழாவது மாதத்தில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் மாட்டிக்கொண்டது. நாட்டுப்பற்றும் தேசியவாதமும் எதிரெதிராக நிற்க முடியாது.தேசியவாதம், அதீத நாட்டுப்பற்று, இவையோடு மக்களுக்கு  எதிரான பொருளாதார நிலைப்பாடுகள் என அனைத்தும் ஒன்றாக மாற வாய்ப்புகள் உண்டு. 

 திரு. மோடி இந்துத்துவ சக்திகளை  தடுப்பதில்  தோல்வியடைந்துவிட்டார் என்கிறீர்களா?

அரசின் அனுமதி இல்லாமல் எதுவும் இங்கே நடந்துவிடமுடியாது. ஆர்.எஸ்.எஸ் -ன் அரசியல் கரம்தான் மோடியின் அரசு.

நன்றி: டெக்கன் கிரானிக்கல், 21, பிப்ரவரி, 2016, சண்டே இன்டர்வியூ