சட்டம் என்பது கற்களில் பொறிக்கப்பட்டதல்ல; மக்கள் அதனை புரிந்துகொள்ள முடியும்

சட்டம் என்பது கற்களில் பொறிக்கப்பட்டதல்ல; மக்கள் அதனை புரிந்துகொள்ள முடியும்

கோர்ட் பட இயக்குநர் சைதன்யா தம்ஹனே
ஆங்கில மூலம்: மாணிக் சர்மா
தமிழில்: வின்சென்ட் காபோ











கோர்ட் படத்தில் நாராயண் காம்ளே எனும் சமூக செயல்பாட்டாளர் தன் அறுபது வயதில் மும்பை தெருக்களில் சிறுநாடக இசைக்குழுவிற்கு தலைமை தாங்கி நகரத்தின் தொழிலாளர்கள் பிரச்சனைகளை அனைவரும் அறியும் விதமாக செயல்பாடுகளை மேற்கொள்கிறார். காம்ளே தனது பாடல்களினால் மலமள்ளும் தொழிலாளர் ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டி வழக்கு பதிவுசெய்யப்படுகிறது. அடுத்து அவ்வழக்கின் விசாரணை, அதில் அதில் பங்கேற்கும் விசித்திரமான மனிதர்களான அரசு வழக்குரைஞர் (நியூடன்) நீதிபதி (சதவர்தே), பிரதிவாதி தரப்பு வழக்குரைஞர் (வினய் வோரா) ஆகியோரின் வாழ்க்கையை பின் தொடர்கிறது கதை.

கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவரும் கோர்ட் படமானது அண்மையில் தேசியவிருதினையும் வென்றுள்ளது.

கோர்ட் படத்தினை உருவாக்கும் முன் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

      ஆங்கிலப்பட்டதாரியான நான் எனது பதினேழு வயதிலிருந்து எழுதுவது தொடர்பான விஷயங்களில் ஆர்வம் கொண்டிருந்தேன். 19 வயதில் எனது தனிப்பட்ட ஆர்வத்தினை பின்தொடர்ந்து அது தொடர்பான பணிகளைச் செய்யத் தொடங்கினேன். 2005 இல் நான் தயாரித்து இயக்கிய ‘நான்கடி திட்டம் எனும் படமும் இம்முறையில் உருவானதுதான். 2009 இல் ‘டென்மார்க்கில் பழுப்பு நிற யானைகள் எனும் நாடகத்தை எழுதினேன். ஒரு ஆண்டிற்குப் பிறகு ‘ஆறு இழைகள் எனும் குறும்படம் ஒன்றை இயக்கினேன். ஆனால் இந்த முயற்சிகள் நான் வருமானம் பெற சிறிதும்  உதவவில்லை. இது வீட்டில் எனக்கு கடுமையான மன அழுத்தத்தினை ஏற்படுத்தியது. என் வாழ்க்கையில் மிக மோசமான விரக்தியான காலகட்டம் அது. ஒரு சாதாரண அலுவலக வேலைக்கு என் ஆன்மாவை விற்க விரும்பவில்லை எனினும் வேறு வழியிலும் எனக்கு பணம் கிடைக்கவில்லை. எனது 24 ஆவது வயதில் இப்படத்திற்கான புள்ளி தோன்றி மெல்ல வடிவெடுக்கத் தொடங்கியது.

கோர்ட் படத்தின் உருவாக்கத்தில் உங்களது தனி அனுபவம் உள்ளதா? பல்வேறு விஷயங்களின் ஒன்றிணைவு தூண்டுதலாக அமைந்து உருவானதா?

      பலவிஷயங்களின் தூண்டுகோலில்தான் படம் உருவானது. நான் சில வழக்குகளை பின் தொடர்ந்தேன் என்றாலும் வணிக சினிமாவில் பொதுவாக காட்டப்படும் மிகை நாடகத்தனம் மிகுந்த  கீழ் நீதிமன்ற விசாரணைகளில்தான் எனது கவனம் சென்றது. நாட்டுப்புற பாடல்களைப் பாடுவதில் சிறந்து விளங்கிய கலைஞரான சம்பாஜி பகத் எனக்கு மிகவும் பிடித்தமானவர். இவற்றோடு  ஜிதன் மாஞ்சி என்பவரின் ஆள்மாறாட்ட வழக்கு ஒன்றினை கவனித்து வந்த போது  நீதித்துறை மீதான பகடியாக அதனை மாற்ற ஆர்வம் எழுந்தது. இவற்றைத் தாண்டி பல செயல்பாட்டாளர்கள் வழக்குரைஞர்கள், நாளிதழ் செய்திகள் என தினமும் பேசி, வாசித்து வருவது பழக்கமாக கொண்டிருந்தேன். படம் உருவாகத்தொடங்கும்  முன் ஓராண்டு அதற்கான ஆராய்ச்சி செய்தேன்.
      படத்தின் மைய இழையாக பிரிவு 306 இல் வரும் ஒருவரின் தற்கொலைக்கு துணை நிற்பது குறித்த கருத்துகள்  மீது கடுமையான தாக்குதல் தொடுப்பது போல் இருக்கிறது. நாட்டின் உயர்ந்த நீதிமன்றங்கள் கூட இதில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கமுடியவில்லை என்பது எதார்த்தமாக இருக்கிறது. சரி, இந்த வல்லுநர்களை விட்டுவிடுவோம். இதனை சிக்கலான உளவியல் சார்ந்த ஒன்றாக கருதி அணுகுவோம். அந்த இடத்தில் நீங்கள் எதுவும் கூறவில்லை? சட்டம் குறித்த ஆராய்ச்சியில் நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?
      படத்திற்கு தேவையான விஷயங்களை முதலிலேயை பட்டியலிட்டுவிட்டேன். தெகல்கா இதழில் எஸ். ஆனந்த் எழுதியிருந்த பாதாளச்சாக்கடை அள்ளும் தொழிலாளர்கள் குறித்த பதிவு எனக்கு பிடித்திருந்தது. தற்கொலை குறித்த செய்திகளையும் அறிந்திருந்த படியால் இரண்டையும் ஒன்றாக இணைக்க முயன்றேன். சட்டச்சிக்கல்களை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்படவும் ஆதாரமாகவும் கொள்ளவில்லை. படத்தின் மையத்தை மானிடவியல் குறித்ததாக அதனினும் அதிகமாக கூறலாம். ஆனால் எந்திரத்தனமாக அதனை அணுகி காணக்கூடாது. நான் பேசிய மனிதர்களிடமிருந்து அனுபவப் பூர்வமாக பெற்ற ஒரு விஷயத்தை உங்களுக்கு கூறுகிறேன். இது வெறும் தற்கொலைக்கு துணை நிற்பது தொடர்பான படம் மட்டுமல்ல. சட்டம் என்பது கல்லில் பொறிக்கப்பட்ட ஒன்றல்ல. அது அனைவராலும் புரிந்துகொள்ளப்படக்கூடிய ஒன்றேயாகும். கோர்ட் படம் இதனை விரிவாகவே கூறுகிறது.
      மக்களின் முன் முடிவுகள், பார்வைக்கோணங்கள் ஒரு எழுத்தை அதன் உண்மை பொருளிலிருந்து தாண்டி அதனை அடர்த்தியாக மாற்றுகிறது. அதன் நான் படத்தில் வெளிப்படுத்தவில்லை அல்லது அறியாத ஒன்று என்றோ உங்களிடம் வெளிப்படுத்த அவசியமில்லை என்று கருதுகிறேன்.

கோர்ட் போன்ற எதார்த்த படங்களுக்கு, அதன் எதார்த்தமான சூழலுக்கு பொருத்தமான நடிப்பை வழங்கவேண்டிய தேவை நடிகர்களுக்கு உண்டு. உண்மையில் இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு நடிப்பு என்பது எந்தளவு சிக்கலாக இருந்தது? உங்களுக்கு திருப்தி தரும் நடிப்பினை பெற என்ன செய்யவேண்டி இருந்தது?

      படத்தினை மிகவும் கவனமாகவே உருவாக்க வேண்டியிருந்தது. எதார்த்தமான நடிப்பை நடிகர்களிடமிருந்து பெறுவது அவ்வளவு எளிதான ஒன்றாகவெல்லாம் இருந்துவிடவில்லை.  உண்மையைக் கூறவேண்டுமெனில் படத்தினை உருவாக்குவதில் முக்கியமான சிக்கலாகவே அப்பகுதி இருந்தது. நடிப்பில் இலக்கண இசைவான லயம் இருக்கவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் படத்தின் நடிகர்கள் எண்ணிக்கையில் மிக அதிகம். மேலும் அதில் 80% நபர்கள் முறையான நடிகர்கள் அல்ல. அவர்கள் பெரும்பாலோர் முதன்முதலில் இப்போதுதான் கேமராவினைப் பார்க்கிறார்கள். சொற்ப நடிகர்கள் மட்டுமே நாடக அனுபவம் கொண்டவர்கள். ஆயிரத்து 800 பேருக்கு தேர்வு வைத்து அவர்களது தகவல்களை தொகுத்து இதற்கென 10 மாதங்கள் செலவழித்து நடிகர்களைத் தேர்ந்தெடுத்தோம். முழுநீளமான காட்சியாக எடுத்துக்கொண்டிருந்ததால் தொகுப்புபணியில் நடிப்பின் குறைகளை மறைக்கவே முடியாது. எனவே படப்பிடிப்பின்போது ஒரு நடிகர் தவறிழைத்தால் மீண்டும் படப்பிடிப்பை முதலிலிருந்தே தொடங்கவேண்டும். எனவே தவறுகளால் நாற்பது ஐம்பது முறை காட்சியினை எடுத்தாலும் ஒரு நாளில் ஒரு காட்சி மட்டுமே சரியாக எடுக்க முடிந்தது. இது அனைவரின் பொறுமைக்கு பெரிய சவாலாக இருந்தது. எதார்த்தத்த சூழலிற்கு நாங்கள் கொடுத்த விலைதான் அது.

கோர்ட் படம் தான் கையாள்கிற கதையைச் சுற்றியுள்ள புற விஷயங்களை மட்டுமே பேசுகிறது. கதையின் எப்பகுதியிலாவது தங்களது கருத்தை கூற மற்ற இயக்குநர்கள் முயல்வது போல இப்படத்தில் நீங்கள் முயற்சிக்கவில்லையா?

      இதற்கு இரு பகுதிகளாக பதில் கூறுகிறேன். முதலில் இப்படத்தின் குறிக்கோள் என்பது ஏதும் கிடையாது. இங்கு தனித்த முற்றிலுமான உண்மை என்று ஏதும் கிடையாது. எனவே கலையின் பகுதியாக அதனை உருவாக்குபவரின் கருத்தியல் வெளிப்பாடு என்பது அதில் இருந்தேதான் தீரும். பொதுவாக வணிக சினிமாவில் இது தெளிவாகவே அறியமுடிகிற ஒன்றுதான். ஆனால் இயக்குநரின் விழிப்புணர்வு அல்லது விழிப்புணர்வற்ற நிலையில் அவரது ஒரு கருத்து படத்தில் திணிக்கப்படுகிறது என்பதை நினைத்துப் பார்க்கவே கடினமாக உள்ளது.
      இரண்டாவதாக, படத்தின் கதையை எழுதும்போது வலுவான ஒரு கருத்தை செய்தியை முன்வைக்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு சார்புநிலையாக நிற்கவேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த இலக்கு என்பதை நோக்கிய ஈர்ப்பு இருக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இது தவிர்த்து படம் உருவாக்குவது குறித்து நான் சிந்திக்கவில்லை.  இதனை நீங்கள் கருத்தியல் புனைவு என்று அழைக்கலாம்.

கோர்ட் படத்தை உருவாக்கியதில் எது மிகவும் சிக்கலான பகுதியாக இருந்தது? எழுதும்போதா? பயிற்சி இல்லாத நடிகர்களை நடிக்க வைத்தபோதா? உங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நீளமான காட்சிகளை திரும்ப திரும்ப இயக்கிய தருணமா?

      உண்மையைக் கூறவேண்டுமெனில் திரைக்கதை எழுதும் பகுதியைத்தான் அப்படி கூற முடியும். உலகிலேயே எழுதுவது என்பது மிகவும் தனிமையான சில சமயங்கள் எனக்கே வெறுப்பூட்டுகிற ஒன்றாக மாறிவிட்டது. படப்பிடிப்பின்போது உங்களைச் சுற்றி நூறுபேர் இருப்பார்கள். ஆனால் மூலவடிவம் கிடைக்க போராடிக்கொண்டு இருக்கும்போது பெரும் மன உளைச்சலாக இருக்கும். மிகவும் தனிமையாக என்னை உணரச்செய்தது அதுதான்.

நீங்கள் உங்களை தனித்துவமான இயக்குநராக உணர்கிறீர்களா? இன்று படங்களை உருவாக்குபவர்களின் படங்கள் முதலில் முக்கியமானவையாகவும் பின்னர் அவை அறிவுப்பூர்வமானதாகவும் உள்ளது?

      நான் இது குறித்தெல்லாம் சிந்தித்ததேயில்லை. என்னையே தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருப்பேன். நான் என்ன உணர்கிறேன். செய்கிறேன் என்பது குறித்த கவனம் எனக்குண்டு. தீர்மானிக்கப்பட்ட வாய்ப்பாடுகள் ஏதும் என்னிடமில்லை.

      ஆனந்த் காந்தி முன்பு உங்களை ஆதரித்து வந்தார். தற்போது வினய் சுக்லா மற்றும் குஷ்பு ரன்கா ஆகியோர் (ஆனந்த் காந்தியுடன் ஷிப் ஆப் தீஸியஸ் படத்தில் பணிபுரிந்தவர்கள்) எடுத்த ஆவணப்படம் இந்த ஆண்டு வெளிவர இருக்கிறது. உங்களது நண்பர்கள் வலது – இடது மையம் என இருக்கிறார்கள். திரைப்படம் உருவாக்குவது குறித்து நாடு போதுமான விழிப்புணர்வை பெற்றிருப்பதாக மாற்றம் நிகழ்த்துள்ளதாக உணர்கிறீர்களா?

      நாங்கள் இருவருமே நண்பர்கள். ஆனந்த் எப்போதும் எனக்கு உறுதுணையாகவே உள்ளார். நான் ஒன்றின் மனசாட்சியினை மாற்றுவது அல்லது ஒன்றின் முகவராக இருப்பது அவசியமில்லை என்றே நினைக்கிறேன். புதிய, சோதனை முயற்சியிலான படங்கள் வெளியாக அதன் இயக்குநர்களுக்கு இடம் கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன். வணிகரீதியான சினிமாக்களுக்கு எதிரான குரலாக இவை தொடர்ந்து இயங்குகின்றன. இந்த முறையில் எடுக்கப்படும் படங்கள் பலநிலைகளைத் தாண்டி அதில் ஈடுபடும் ஒவ்வொருவரும் அதனைக் கொண்டே வாழ முடியும் என்ற நிலைமை உருவாகி வரவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாக உள்ளது.

தங்களின் படமானது நாட்டின் வெளியே பல பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இம்மாதத்திற்கு வெளியாகும் கோர்ட் படத்தினை மக்கள் அனைவரும் ஏன் பார்க்கவேண்டும்?

      எளிமையான பதில் ஒன்றைக் கூறுகிறேன். வேடிக்கையாக கூட இது இருக்கும். நல்ல நகைச்சுவையை விரும்புகிறீர்களா? படத்தினைப் பாருங்கள். 
                                          நன்றி: கேரவன் இணையதளம்