அறிவின் பிரகாசம்: தயா - நூல்வெளி2 - ப்ராட்லி ஜேம்ஸ்
தயா
எம்.டி.வாசுதேவன் நாயர்
தமிழில்: உதயசங்கர் - சசிதரன்
பாரதி புத்தகாலயம்
ப.64 விலை ரூ.25
தயா எனும் இந்த நூல் சிறுவர் குறுநாவல் வகைப்பட்டது. பல்வேறு திருப்பங்களுடன் அனைவரும் வாசிக்கும் வண்ணம் இருப்பதே இந்த நூலின் சிறப்பு என்று கூறலாம்.
கதை : கையில் இருக்கும் பொருளின் மதிப்பு இழந்துவிடும் போதுதான் தெரியும் என்பது இதன் மையச்சரடு. பெரும் செல்வந்தர் ஒருவர் பலருக்கு தான தர்மம் செய்து வாழ்ந்து வருகிறார் என்றாலும் தனக்கு பின்னால் தன் பெயர் சொல்லும் விதம் பிள்ளை என்று நினைக்க ஒரு பிள்ளை பிறக்கிறது. அந்த சந்தோஷத்தோடு மனைவி இறந்த துக்கத்தையும் எதிர்கொண்டு சமாளித்து அவனை நல்லமுறையில் வளர்க்க முயற்சிக்கிறார். ஆனால் அவனுக்கு(மன்சூர்) என்ன முயற்சி செய்தாலும் கல்வியில் கவனம் செல்வதில்லை. இந்த நிலையில் வயது முதிர்ந்து தன் உயிர் பிரியும் வேளையில் மன்சூரின் தந்தை அவனிடம் வாழ்வில் தான் கண்டறிந்த அனுபவ சொல் ஒன்றைச் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார்.
இளம் வயதில் எல்லையில்லாத பணம் என்னவெல்லாம் செய்யுமோ அத்தனையும் மன்சூர் செய்கிறான். ஒரு நல்ல நாளில் அத்தனை பணமும் காலியாக குபீர் நண்பர்களும் கூடாரத்தை பிடுங்கிக்கொண்டு ஓட அவன் ஓட்டாண்டியாகிறான். குடியிருந்த வீடும் ஜப்திக்கு வருகிறது. இந்த நேரத்தில் அங்கு வாழும் அடிமைப்பெண் தயா என்பவள் அவனுக்கு ஒரு யோசனை சொல்கிறாள். அவள் கூறிய யோசனைப்படி நடந்து வியாபாரம் செய்து விட்டதெல்லாம் மன்சூர் பிடித்தானா? வாழ்வில் அவன் கடைபிடிக்கத்தவறிய முக்கியமான கொள்கை என்ன என்பதையும் அறிந்துகொண்டானா என்பதை திடுக் திருப்பங்களோடு கூறும் கதைதான் தயா.
இதில் தயா என்னும் அடிமைப்பெண்தான் நாயகி. அவளைச்சுற்றித்தான் கதையே நடக்கிறது. அவளுக்கு அவளது உடல் அழகு தரும் நம்பிக்கையை விட கல்வி தரும் தைரியமும் துணிச்சலும் அளவில்லாதது. அதைக்கொண்டே தன்னை மன்சூரிடமிருந்து கடத்திக்கொண்டு போன ஆலிஷாஹர் எனும் பெண் போகியிடமிருந்து தப்புகிறாள். தப்புவது அதை விட கொடியவனான மின்னல் ஜவான் எனும் திருடனுடன். அங்கிருந்தும் தனது புத்தியால் தப்புகிறாள். அங்குமிங்கும் தேடியலைந்தும் மன்சூர் காணவில்லை.
தயாவின் புத்தி பல இடங்களில் காப்பாற்றினாலும் அவளது அழகு பல இடர்களுக்கு காரணமாக, தன்னை ஆண்போல வேடமிட்டு காட்டிக்கொள்கிறாள். தனது சாமார்த்திய புத்தியின் மூலம் குறுநாட்டு மன்னரின் அன்பைப் பெற்று தனது திறமையை நிரூபித்து தலைமை அமைச்சராகிறாள். அங்கும் சில அமைப்புகளை திட்டமிட்டு ஏற்படுத்தி மன்சூரைக் கண்டறிய முயல்கிறாள்.
பேராசை வேண்டாம் என்று தயா முன்னமே போதிக்கிறாள் ஆனால் மன்சூர் அதைக் கேட்காததனால் வெளியுலகம் தெரியாததனால் தன் வாழ்விற்கான செல்வமாகிய தயாவை இழந்து அலைந்து திரிந்து ஒருநாள் தயா அமைச்சராக இருக்கும் நாட்டிற்கே வருகிறான். அவர்கள் இணைந்தார்களா? அவளைத் தப்பவிட்ட மின்னல் ஜவான் எனும் திருடன், ஆலிஷாஹர் எனும் கொள்ளையன் ஆகியோர் என்ன செய்தார்கள்? என்பதையெல்லாம் அறிய நீங்கள் இந்த குறுநாவலை வாசித்தே ஆகவேண்டும்.
கதையில் சிறுவர்களுக்கான நீதி கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்பதை தனியாக கூறாமல் கதையோடு இணைத்து கூறிவிடுகிறார் ஆசிரியர். மொழிபெயர்ப்பிற்கான மொழியும் பிரச்சனை ஏற்படுத்தாமல் எளிமையானதாகவும் பொதுவானதாகவும் இருக்கிறது.
பயணம் குறித்த கதை. அதற்கான பல திருப்பங்களை தவறவிடாமல் நேர்த்தியான கூறிச்செல்லும் கதை என்று வசிகரீக்கிறது.