தடைபடாத காலம் மற்றும் முடிவில்லாத தன்மையும் ஒரு நாளும் 2












பின் எவ்வாறு திரைப்படத்தை நிறைவு செய்தீர்கள்?

      என்னால் அது இயலுவதில்லை. என்னுடைய படங்களைப் பார்த்தீர்கள் என்றால் தெரியும் அவை உண்மையில் நிறைவுறுவதில்லை. அவை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிற நிகழ்வுகள் என்றே கூறுவேன். எ.கா: கட்டப்படும் கட்டிடங்கள் போல. நான் ஒரே படத்திற்கு எத்தனை முறை கதை எழுதியிருக்கிறேன் தெரியுமா? 16 வது முறை ஒரே கதையையே வேறு ஒரு கோணத்தில் படமாக்க எழுதிக்கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு நடந்துகொண்டு இருக்கிறது. கூட்டல் கழித்தல் என கதையினை சிதைக்காமல் மாற்றிக்கொண்டு இருக்கிறேன்.

படப்பிடிப்பு நடைபெறும்போது மெல்ல வாழ்க்கையில் அதனைக் கொண்டு வந்து அதனை மேம்படுத்தல்களை செய்கிறீர்களா? இது ஒரு மாயச்செயல்முறை போலானதா?

      நீங்கள் மிக எளிதாக கூறிவிட்டீர்கள். மாயை என்று. மாயை என்பதற்கான பொருள் என்ன? இரவில் மாயம் என்பதை எப்படி விவரிப்பீர்கள்? அதனை எப்படி மொழிபெயர்ப்பீர்கள்? படப்பிடிப்பின் போது அதனை விளக்க என்ன படத்தினை பயன்படுத்துவீர்கள்?

இதில் முக்கியமான கேள்வி என்பது ‘படத்தினை தேர்ந்தெடுப்பது. வார்த்தைகளை படங்களாக மாற்றுவது – படமாக்குதல் என்பது இவையெல்லாம் சேர்ந்ததுதானே?

      மிகுந்த வேதனை தரும் செயல்முறை இது. இங்கு இழப்புகள் உண்டு என்றாலும் நாம் வென்றேயாகவேண்டும். சரியான படங்கள் காட்சிகளுக்கு கிடைத்தால் அவை உயிர்ப்பாக அமையும். ஆனால் அவை சரியாக அமையாதபோது அவற்றில் போதாமை தோன்றுகிறது. இலக்கியம் போல படங்களை நாம் எழுதிவிட முடியாது. பெலினி இதுபோல மொழிபெயர்க்க முயலும்போது அதில் சிக்கல் ஏற்பட்டால் அக்காட்சியினை இலக்கியம் போல கருதி அதனை விரிவாக கீழே அமர்ந்து அமைதியாக எழுதத்தொடங்குவார் என்பார்கள். அதனை வாசிக்க நன்றாக இருக்கும். ஆனால் அது சினிமா அல்ல. சினிமாவிற்காக சரியான வாய்ப்பாட்டை, படம்பிடிப்பதற்கான மூலத்தை கண்டறிய முயல்கிறேன். அது மிகவும் சிக்கலானதாக இருந்தபோதிலும் கூட.

பிறகெப்படி உங்களது படங்களை நீளமான காட்சிகளுடன் உருவாக்குகிறீர்கள்?

      மிக சிறிய வார்த்தைகளாக எழுதுவேன். நான் நீளமான காட்சிகளை எடுப்பது எப்படி என அனைவரும் அறிவார்கள். என்னோடு இணைந்து பணிபுரிபவர்களுக்கு மட்டுமே நான் ஹெமிங்வே போல சிறிய வார்த்தைகளை மட்டுமே எழுதுவது பற்றித் தெரியும்.

காட்சிகள் குறித்த குறிப்புகள் அல்லது வசனம் மட்டும் எழுதுவீர்களா?

      அதனை நான் எழுதுவது குறுநாவல் போலத்தான் இருக்கும். தொழில்நுட்பரீதியான திரைக்கதை குறித்து நான் ஏதும் எழுதுவது கிடையாது. உண்மையில் என்னுடைய திரைக்கதைகளை நீங்கள் இலக்கியம் போலவே பதிப்பிக்க முடியும். அந்த முறையை மட்டும் நான் கையாள்கிறேன். முதலில் இம்முறையில் கூட அதிகம் எழுதியதில்லை. பயணிக்கும் வீரர்கள் (ஓ தியாஸோஸ், 75) படத்திற்கு திரைக்கதை என்று ஒன்று தனியாக எதுவுமில்லை. முக்கியமான காட்சிகள் குறித்த குறிப்புகளை எழுதி வைத்திருந்தேன்; அதுவும் குறிப்பிட்ட காட்சிகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளுக்கு மட்டும்தான். ஆனால் கடைசி நேரம் வரையில் காலகட்டம் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுவது குறித்து நான் அறியவே இல்லை. படப்பிடிப்பின் போது பல்வேறு விஷயங்கள் குறித்து உருவாக்கினோம். அப்படி உருவானதுதான் ‘பதக்கம்’.

புதிய காட்சிகளை உருவாக்குவது படப்பிடிப்பில் மட்டுமே தொகுப்பு பணியில் அல்ல?
      இல்லை. படப்பிடிப்பில் மட்டுமே. காட்சி படம்பிடிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னால் அல்லது இரண்டு மணி நேரங்கள் முன்னால் புதுக்காட்சி ஒன்றை தீர்வை அடைவது நடந்திருக்கிறது.

ஒவ்வொரு காட்சியும் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை வெளிப்படுத்துகிறதா?

      காட்சியை திறப்பதற்கான சாவி ஒன்றுண்டு. அதை நீங்கள்தான் கண்டறியவேண்டும். சில சமயங்களில் நீங்கள் அதனை கண்டறியவே முடியாது. பயணிக்கும் வீரர்கள் படத்திற்கான எனது குறிப்பு என்பது காகிதத்தைப் பார்த்தால் ஒன்றுமே எழுதப்பட்டிருக்காது.  1939 – 1952 என்று அதனைக் குறிப்பிடலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தை வார்த்தைகளிலிருந்து படமாக எப்படி மாற்றுவது என்பதை நான் அறியவில்லை. படப்பிடிப்புக்கு முந்தைய நாள் அதற்கான தீர்வை நான் கண்டறிந்தேன்.

இப்போதும் எழுதுவது என்பது எளிய சாதாரணமான ஒன்றாக கருதுகிறீர்களா?

      எழுதுவது என்பது எளிமையானதுதான். ஒரு கருத்தை சிறியதாக எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லுத எடுத்துக்கொண்ட விஷயத்தை வெளியே எடுக்கலாம். ஆனால் படப்பிடிப்பு இடங்களில் சில விஷயங்களை சேர்க்கவும், நீக்கவுமான அதிகப் பொறுப்புடைய பணிகளை செய்ய நேருகிறது. அவற்றைத் தாண்டி பல முகங்கள், வீரர்கள், நடிகர்கள், மனிதர்கள் என்று இருக்கிறார்கள். படப்பிடிப்புத்தளம், விதிமுறைகள், அந்த காலநேரம் என தனித்த ஒரு அழகை உணர முடியும்.  ஒரு காட்சி ஒன்றில் ப்ரூனோ தன் காருடன் முக்கியமான சாலையில் ஆர்ப்பாட்டம் காரணமாக காத்திருக்க, அங்கு கோபம், தாமதம் இவற்றையெல்லாம் தாண்டி நேரத்தின் ஒவ்வொரு நிகழ்வும் குறிப்பிட்ட உணர்வைக் கொண்டுள்ளது. மோசமான சூழல் என்பதை உ.தா எடுத்துக்கொண்டால் காட்சிரீதியாக அதனைப் பொருத்தவோ சரி செய்யவோ முடியாது.

எழுதும்போது இருக்கக்கூடிய அழகான தனிமை என்பது இப்போது இல்லாமல் போய்விட்டது?

      ஆமாம். இது குறித்து மக்கள் அனைவருக்கும் நீங்கள் குறிப்பிட வேண்டும். நீங்கள் சினிமா என்பதை தனியாக செய்யமுடியாது. மேலும் நீங்கள் மற்றவர்களுடன் குறிப்பிட்ட நிலையில் தொடர்பு கொள்ளும்போது அவர்களது நேர்த்தி இல்லாத தன்மை குறித்து அறிய முடிகிறது. பங்கேற்பாளர் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? நிகழ்வுக்கு நிகழ்வு இந்த வார்த்தையின் அர்த்தம் மாறிக்கொண்டே இருக்கிறது.

படமாக்குதலுக்கான சமரசங்களை கடைபிடித்து வருகிறீர்களா?

      ஆமாம். நீங்கள் இங்கே தனியாக எப்போதும் இருக்க முடியாது. எழுதும்போது பல விஷயங்கள் சாத்தியப்படக்கூடும். உடனடியாக எந்த உதவியும் இல்லாமல் முடிவு செய்யப்படுகிறது. எழுதும்போது நீங்கள் பல விஷயங்களை கற்பனை செய்து புதியனவற்றை உருவாக்கி உலகையே உங்களுடையதாக மாற்றிக்கொள்ள முடியும்.

படம் என்பது கலைவடிவம் என்பதை சில இயக்குநர்கள் மறுக்கின்றனர். ஏனெனில் குறிப்பிட்ட தனி மனிதரால் படம் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதே இதற்கு காரணம். இன்று நவீன கருவிகளுடன் படம் என்பது தன் கலை வடிவத்திற்கு திரும்பியது போல் தனிமனிதர் சிந்தித்து இவை அனைத்தையும் செய்து விட முடியும். இவை அனைத்தையும் நீங்கள் நீங்களாகவே செய்துவிட முடியாது. நீங்கள் தானாகவே எதையும் செய்யாமல் வற்புறுத்தலால் சில சமரசங்களுக்கு இணங்கி ஒன்றை உருவாக்குகிறபோது உங்களது ஆழ்ந்த ஈடுபாடு என்பதைவிட குறைவான வெற்றியையே வடிவரீதியாக படம் பெற்றிருக்கும். புதிய முறைகளை நீங்கள் நம்புகிறீர்களா? தனிப்பட்ட ஒருவரின் உருவாக்கமாக கலை என்பது சாத்தியமா? அல்லது இது என்றுமே சாத்தியமில்லை என்று கருதுகிறீர்களா?

      நாம் தயாரிக்கும் உருவாக்கும் விஷயங்களை விட நாம் அதிக புத்திசாலி என்று டிரஃபார்ட் கூறுவார். நிகழ இருக்கும் சமரசங்கள் குறித்து விழிப்போடு இருக்கவேண்டும் என்று அவர் கூறுவார்.  இது எப்படியென்றால் உங்களுக்கு லாட்டரி பரிசு கிடைத்தது என்றால், நீங்கள் கற்பனை செய்த அனைத்தையும் உருவாக்க முடியும். ஆனால் அதன் எதிரேயுள்ள விதிகள் வாழ்க்கை முழுவதும் உங்களைத் துரத்தும். உண்மையில் இந்த விதிகள் தடைகளாக மாறி சிறிது அமைதியைக் கூட ஏற்படுத்துகின்றன. மிக எளிதாக படத்தினை ஒப்புக்கொண்டு விடலாம். ஆனால் அவற்றை உருவாக்கும் காலம் வலி நிறைந்த ஒன்று. பிறகு உடனடியாக படத்தினை திரையிட வேண்டும். உ.தா: திரைப்பட திருவிழாக்களில் அல்லது முன்னே இருக்கும் சாதாரண மக்களுக்குத் திரையிட வேண்டும்.

அந்த தருணத்தில் உங்களுக்கும் திரைப்படத்திற்குமான உறவு நிறைவு பெற்றுவிடுமா?

      இல்லை. மற்றவர்களுடன் உங்களுடைய உறவு நிறைவு பெற்றிருக்கலாம். படத்துடன் உங்களுடைய தனிப்பட்ட உறவு என்பது எப்போதும் முடிந்துவிடாத ஒன்று. சில சமயங்களில் படத்தினை நீங்கள் தனியாக பார்க்கும்போது, அதனுள் உள்ள அமைதியை நீங்கள் உணரமுடியும்.  அதனுள் உள்ள அமைதியை நீங்கள் உணரமுடியும்; அதை அதனை நீங்கள் உருவாக்கியுள்ள வகையில் ஒப்புக்கொள்கிற வகையில்.

நீங்கள் உருவாக்கியுள்ள படம் குறித்து உங்களுக்கு மகிழ்ச்சி உள்ளதா? அதில் அமைதியைப் பெற்றுள்ளீர்களா?

      நான் என்னுடைய படங்களை பெரும்பாலும் பார்ப்பதில்லை. அப்படி பார்க்கும் சமயங்களில் நான் உருவாக்கிய வேறுபட்ட தன்மையில் அமைந்த எனக்கு பிடிக்காதவற்றை காண்கிறேன். முதலில் என்னுடைய படங்களை பார்க்கும் எனக்கு எவ்வித மகிழ்ச்சியும் ஏற்படவில்லை என்றாலும் பின் மெல்ல  அதில் உள்ள வாழ்க்கை தெரியத் தொடங்கியது. இப்போது சற்று பரவாயில்லை என்று அவை தோன்றுகிறது.  மூடுபனிநிலம் (டோபியோ ஸ்டின் ஒமிச்சிலி, 88) படத்தினை மிகச் சிறந்த நெருக்கமான அனுபவம் கொடுக்கும் படமாக நான் உருவாக்கியதில் கூறுவேன். நான் அப்படத்தை மிகவும் விரும்புகிறேன்.

நீங்கள் அப்படத்தினை தனியாக உருவாக்கவில்லை அல்லது முன்னதாக அறிந்திருக்கலாம் மூளை என்பது குறிப்பிட்ட எல்லைகளைக் கொண்டிருக்கிறது..

      உங்களுக்குத் தெரியுமா? அனைத்திற்கும் எல்லைகள் உண்டு. சில குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து உரையாடிக்கொண்டு இருக்கிறோம். இவை ஒரு கலைஞனுக்கு உதவலாம் அல்லது விழிப்புணர்வான ஒரு செயல் உண்மையில் உருவாவதை தடை செய்யக்கூட முடியும். 

அல்லது கருத்து மையம் குறித்து எவ்வளவு விழிப்புணர்வு தங்களுக்கு உள்ளது?

      நான் உருவாக்கிய எல்லைக்கோடு தொடர்பான படங்களின் மையக்கருத்தாக எவை உள்ளன என்று கேட்கிறீர்களா?

நான் கூறுவது மையக்கருத்து பற்றியதே. அது குறிப்பிட்ட வரம்பினைக் கொண்டதே. சில வரம்புகளை நீங்கள் உங்கள் மேல் சுமத்திக்கொள்கிறீர்கள் என்கிறேன்.

      எல்லைகள் என்பவை என்னைப்பொறுத்தவரையில் புவியியல் தொடர்பான கருத்துகள் அல்ல. மேலும் அந்த எல்லைகள் கலையில் வரம்புகளை குறிப்பாக எண்ணவில்லை. எல்லைகள் இங்கேயும் உள்ள பிரிவினைகோடு, அன்றும் இன்றுமாக இடையில் பிரிந்து செல்கிறது. வாழ்க்கை மற்றும் இறப்பு ஆகியவற்றினிடையே உள்ள எல்லைக்கோடு குறித்த கேள்வி எனலாம். அது ஒரு பிரிவினைக்கோடு: இறக்கப்போகும் ஒரு மனிதனின் கடைசி நாள் என்றால் நீங்கள் அந்நாளை எப்படி கடப்பீர்கள்? தொடர்ந்து என்ன நடக்கும்? மிச்சமுள்ள நேரங்களில் நாம் என்ன செய்யப்போகிறோம்? அல்லது உங்களை மெல்ல அழைத்துச் செல்லப்படுவதற்கு அனுமதிப்பது, தற்செயல் நிகழ்வுகளுக்கு உங்களை வெளிப்படுத்திக் கொள்ளுதல். ஒருவரை பின் தொடர்தல், புதிய மனிதர்களை சந்தித்தல், எதிர்வரும் அனைத்திற்கும் தயாராக தன்னைத் திறந்து வைத்திருப்பது, எதிர்பாராத நிகழ்வுகளின் கூடவே தொடர்பற்று, பின் தொடர்பு கொள்வது என்பது குறைந்தபட்சமானதாக இருக்கலாம்.

இதில் இளம் அல்பேனிய ஜன்னல் சுத்தம் செய்பவர் உடன் வரும் சந்திப்பு அப்படிப்பட்டதா? கடத்தப்பட்டு விற்கப்படும் குழந்தைக்கான பொறுப்பினை உடனே ஏற்கிறீர்கள், அதற்கான சரியான காரணம் உரிமை என்ன இருக்கிறது?

      ஆமாம். இதுபோன்ற சந்திப்புகளில் என்ன நிகழும்? இதில் என்ன வளர்ச்சி கிடைக்கும்? அனைத்துமேவா? எதுவுமில்லை. இன்று என் வயதில் இழப்பு குறித்த தேவையான கருத்துகளை தேடுவதன் தேவை உள்ளது. வாழ்க்கையினை மீண்டும் ஆய்வு செய்வது போலத்தான் இது. வாழ்க்கையினை ஒரு புதிய வெளிச்சத்தில் பார்ப்பது, விழிப்புணர்வான தன்மையில் இறப்பு குறித்த சிந்தனைகளினால் அமைதியினை உருவாக்கிக்கொள்ள முடியும்.

இன்றைக்கும் கடந்த கால வாழ்க்கைக்கும் இடையே இறக்கும் மனிதன் குறித்த பேசும் மொழி எதுவேனும் இருக்கிறதா?

      அவன் தன் வாழ்நாள் முழுவதும் தன்னைப்பற்றியும் தன்வேலை வாழ்க்கை, தன் மனைவி, தன் கவிதைகள் குறித்து தீவிரமாக சிந்தித்து வந்தவன் ஆவான்.

அவன் ஒரு கவிஞன். கதை உண்மையிலேயே உண்மையான மனிதரை அடிப்படையாக கொண்டதுதானா?

      கவிஞர் மற்றும் எழுத்தாளரும் கூட. கிரீசில் பெரிதும் அறியப்பட்ட புகழ்பெற்றவரும் கூடத்தான். ஆனால் இப்படம் ஒரு மனிதன் உயிரோடு  இருப்பது இல்லாதது குறித்தல்ல. அவன் ஒரு உண்மையான கதாபாத்திரமல்ல. அவன் தனியாக இல்லை என்பதை குறித்து உணர்வதேயில்லை. எனவே தன் வாழ்க்கையை இழக்கிறான். தன் வாழ்க்கையிலுள்ள மற்ற மனிதர்களை அவர்களது மதிப்பு குறித்து அவன் உணருவதேயில்லை. இது பொதுவான மனிதர்களையும் குறிக்கும்.

அவன் காணத்தவறுவது என்ன?

      அவன் உண்மையான தரமான மனிதர்களின் தொடர்புகளின் முக்கியத்துவத்தை உணருவதேயில்லை. மனிதர்களை பார்ப்பதற்கு அங்கீகரிப்பதற்கு அவன் நேரம் ஒதுக்குவதே இல்லை. கடந்த கால வாழ்க்கையின் ஒரு நாளை நீங்கள் இதில் பார்க்கமுடியும்.

அப்படியென்றால் படமானது இரு நாட்கள் குறித்தது. இன்று மற்றும் இறந்த காலத்தின் ஒரு நாள்...?

      ஆமாம். இதில் இருநாட்கள் இணைந்துள்ளன. அவன் உறவு கொண்டுள்ள பெண், கடந் காலத்தினுடனான உறவு இன்று போக்குவரத்து விளக்கு அருகில் உள்ள சிறுவனுடன் கொண்டுள்ள உறவு என பிறகு நீங்கள் விடைபெறுதல் என்பதை தொடர்ச்சியாக காணமுடியும்.

அப்போது படத்தில் காட்டப்படும் எல்லைக்கோடு என்பது பருப்பொருள் தொடர்பானதல்ல. அல்பேனியாவிற்கு அகதியாக வரும் சிறுவனுக்கு அது ஏதும் செய்வதில்லை?

      இல்லவே இல்லை. வாழ்க்கை மற்றும் இறப்பு என இரண்டிற்கும் இடையேயான எல்லைக்கோடு அது. அவற்றின் இரு எல்லைகளுக்குள் நாம் இணைக்கப்பட்டுள்ளோம்.