பெண்களால் எழும் நாகலாந்து!




பெண்களால் எழும் நாகலாந்து!- .அன்பரசு

அற்புதமான சரமதி மலைத்தொடரை தன் அடையாளமாக  கொண்ட நாகலாந்து, அசாம்அருணாசலப் பிரதேசம்,மியான்மரை ஆகிய நாடுகளுக்கு எல்லைப்புறநாடு. விவசாயத்தை முதன்மையாக கொண்ட இந்நாட்டில் 16 பழங்குடிகள் உண்டு என்றாலும் பெண்கள் அரசியல் உட்பட நிர்வாக அமைப்பில் இல்லாதது வேதனை.

கடந்த 2005 ஆம் ஆண்டு நாகர்பாரி கிராமசபை கவுன்சில் தலைவர் தேர்தலில் ஆணாதிக்கவாதிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மக்களால் தலைவராக தேர்வான டோகலி கிகோன் என்ற பெண்மணி மட்டுமே கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் கிராமசபைக்கு தேர்வாகி வந்த ஒரே பெண். பதவிக்கு செலக்ட் ஆனபோதும் இவர்தான் கிராமசபை கவுன்சிலில் இடம்பெற்ற ஒரே ஒரு அரிய பெண்ணும் கூட. "தேர்தலின்போது ஆண்கள் தொடர்ந்து என் நம்பிக்கையை குலைக்கவே முயற்சித்தனர். சிறைக்கு, ராணுவ முகாமுக்கு எப்படி ஒரு பெண் செல்லமுடியும்? என்று கேள்வி கேட்டனர். ஆனால் தேர்தலில் வென்று இவை அனைத்தையும் நான் செய்துகாட்டியிருக்கிறேனே" என உற்சாகமாக பேசுகிறார் கிகோன்.

1963 ஆம் ஆண்டு தனிமாநில அந்தஸ்து கிடைத்து 16 ஆவது மாநிலமாக நாகலாந்து உருவானதிலிருந்து அமரர் ரானோ எம்.ஷைசா(1977) தவிர யாரும் வேறெந்த பெண்மணியும் மக்களவையில் நுழையவில்லை. இதிலிருந்தே பெண்களை பொதுவாழ்வில் அனுமதிக்காக நாகலாந்தின் ஆணாதிக்க சமூகத்தை புரிந்துகொள்ளலாம். தன் கிராமத்தினருகில் இருந்த பழமையான ஏரியை ஆக்கிரமிப்பிலிருந்து அகற்ற கிகோன் சென்றபோது, ஆக்கிரமிப்பாளர்கள் அவரை கடுமையாக தாக்கி, மேலாடையை கிழித்து மானபங்கப்படுத்திய நிகழ்வு இதற்கு சின்ன சாம்பிள். கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அமைச்சரவையில் பெண்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் 33% இட ஒதுக்கீடு சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாகா பழங்குடி அமைப்புகள் ஏற்படுத்திய கலவரத்தில் 2 பேர் முதலமைச்சர் டி.ஆர்.செலியாங் வீட்டுக்கு அருகில் சுடப்பட கலவரம் உச்சமாகி முதலமைச்சர் பதவி துறக்கநேரிட்டது. அதோடு, தேர்தலில் நாமினேஷன் செய்திருந்த பெண் வேட்பாளர்களை JCC,NTAC Kohima ஆகிய அமைப்புகள் மிரட்ட, அவர்களும் தம் மனுக்களை வாபஸ் பெறும் அவலம் நடந்தேறியது ஜனநாயக களங்கம்.

"NMA அமைப்பில் பல்வேறு பழங்குடி பிரிவு பெண்கள் உறுப்பினராகியிருந்தனர். பழங்குடி அமைப்பில் இனி நீங்கள் இடம்பெற முடியாது என பெண்களை இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் மிரட்ட, திருமணமான பெண்கள் என்ன செய்வார்கள்? அரசும் தேர்தல் முடிவை நிறுத்திவைக்க நாங்களும் இட ஒதுக்கீட்டுக்கான பெண்கள் அமைப்பை கலைத்துவிட தீர்மானிக்கும் நிலை உருவானது" என விரக்தியான குரலில் பேசுகிறார் NMA வின் தலைமை ஆலோசகரும் நாகலாந்து பல்கலைக்கழக ஆசிரியரான ரோஸ்மேரி ஸூவிச்சு.

வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலும் பெண்களுக்கு இதேநிலைதான். "தாய்வழிச்சமூகமான மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் நாகலாந்து போன்றுதான் என்றாலும் கல்வி கற்கும் பெண்கள் மெல்ல ஜனநாயக வழியில் தம் உரிமைக்கு குரல்கொடுக்க தொடங்கியுள்ளது நம்பிக்கை தருகிறதுஎன்கிறார் மணிப்பூர் பல்கலையைச் சேர்ந்த விஜயலட்சுமி பிராரா. இதில் அரசின் பெண்களுக்கான இட ஒதுக்கீடு கடந்து, 371(A) எனும் மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து தகுதியையும் நாகாபழங்குடி அமைப்புகள் கடுமையாக எதிர்க்கின்றன. "இந்தியாவிலுள்ள பிற மாநில பெண்கள் போல அரசியலுக்கு பெண்கள் வரலாமே? எதற்கு இட ஒதுக்கீடு" என பாம்பாய் சீறுகிறார் நாகா ஹோகோ அமைப்பின் தலைவரான சுபா ஆசுகும். நாகலாந்தில் உள்ள முக்கிய முடிவுகளை எடுக்கும் எந்த அமைப்பிலும் பெண்களுக்கு இடமில்லை என்பதே சுடும் நிஜம்.

முதலில் சர்ச்சுகளில் தொடங்கிய NMA அமைப்புக்கு சமூக சீர்திருத்தங்களே லட்சியம். 33 வயதாகும் இந்த அமைப்பு குடிபோதை, போதைப்பொருள் என 1980 களில் நோயாக பரவிய பிரச்னைகளை தீர்க்க முயற்சித்தது. இதன் தொண்டர்களின் செல்லப்பெயர் அம்மா. "சமூகத்தின் பிரச்னைகளை ஆண்களுடன் இணைந்து போராடி தீர்ப்பதுதான் எங்களது நோக்கம். சமூக பிரச்னைகளை தீர்த்து அதன்வழியாக பெண்களுக்கான அரசியல் தீண்டாமையை நீக்க முயற்சித்தோம்" என்கிறார் NMA தலைவரான அபியூ மேரு. 2006 ஆம் ஆண்டு பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா உருவானாலும் ராணுவமயமாக்க பிரச்னையால் பெண்கள் தங்களுக்கான அரசியல் உரிமையை பேச முடியவில்லை. உடல்நலம், பிரசவகால மரணம் குறித்த வழக்குகளும் அன்று கோர்ட்டில் ஏராளமாக தேங்கியிருந்தன. மேலும் நாகாலாந்து பெண்களுக்கு நிலச்சொத்துரிமை கிடையாது. திருமணமாகி விவகாரத்து ஆனால், குழந்தைகளும் சொத்துக்களும் கணவருக்கு மட்டுமே. வீட்டின் ஓடு கூட பெண்ணுக்கு கிடையாது என்ற சிச்சுவேஷனை நினைத்து பாருங்கள்!

"ஆணாதிக்க சமூகம் என்பதால் பெண்கள் வேறு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரை மணந்தால், முன்னோர்களின் நிலம் அப்பெண்ணுக்கு கிடையாது என்பது நியாயமா? குடும்பம் என்பது பெண்களுக்கு தாராள உரிமை என்றாலும் பொருளாதாரம், அரசியல் என்று வரும்போது பெண்களுக்கு எந்த சான்ஸும் கிடைப்பதில்லை. இந்த உரிமைக்காக தற்போது போராடிவருகிறோம்" என்கிறார் வாட்சு முங்டாங் அமைப்பைச் சேர்ந்த அமெனியா சஷி

பெண்களின் மீதான வன்முறை மற்றும் மனித உரிமைகளை காப்பதற்கான 1983 ஆம் ஆண்டு தோன்றிய இவ்வமைப்பு, விவசாய பெண்களுக்கு பல்வேறு செமினார் வகுப்புகளோடு, பொருட்களை மார்க்கெட்டிங் செய்வது வரை உதவிகளை வழங்குகிறது. கிழக்கு நாகலாந்தில் வறுமை சூழலால், சிறுமிகளை வீட்டு வேலைக்கும், பாலியல் தொழிலுக்காக கடத்துவதும் அதிகம். இதைத்தடுக்க Enwo எனும் என்ஜிஓ களமிறங்கியுள்ளது. "பெண்கள் இயக்கம் முறையாக வளர்ச்சிபெறவில்லை. எனவேதான் குழுக்களாக இன்றும் திரள முடியவில்லை. பெண்களில் பலருக்கும் நாட்டில் என்ன நிகழ்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வு கிடையாது" என எதார்த்தமாக பேசுகிறார் ஜூலியன் மேடோம். அரசியல், வன்முறை தாண்டி பெண்களின் குரல் இன்று நாகலாந்தின் தெருக்களில் ஓங்கி ஒலிக்கத்தொடங்கிவிட்டது மாற்றம் முன்னேற்றத்திற்கான ஜனநாயக முதல்படி.

தொகுப்பு: ஹாட்சுமி, நாகாசவா