பறவை டாக்டர்!





பறவை டாக்டர்! -.அன்பரசு



உலகெங்கும் வல்லரசு கனவு நாட்டுக்கு நாடு தீயாய் பரவி வருவதால், காடுகள் அழிந்து விண்ணுயரக் கட்டிடங்களாகவும் தொழிற்சாலைகளாகவும், மக்களுக்கான குடியிருப்புகளாகவும் மாறிவருகின்றன. இதன் விளைவாக 90% உலகில் அழிந்துவிட்ட பறவை இனங்களில் ஒன்றுதான் கானமயில். இன்று உலகில் மொத்தமுள்ள கானமயில்களின் எண்ணிக்கை வெறும் 250 மட்டுமே. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட கானமயில்கள் ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

உணவு பற்றாக்குறை, வாழிடம் அழிவு, இறைச்சி வேட்டை ஆகியவற்றைக் கடந்து கானமயில்களை காப்பாற்றி வருவதில் டாக்டர் பிரமோத் பாட்டீலின் பங்கை யாரும் மறுக்க முடியாது. இந்தியாவில் பதினாறு மாநிலங்களில் ஏகபோகமாக வாழ்ந்த கானமயில் இன்று அரிதாக தட்டுப்படுவது மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில்தான். ராஜஸ்தான் பாலைவனத்தில் 19 ஆயிரத்து 728 .கி.மீ பரப்பளவில் கானமயில்கள் வாழ்கின்றன என இந்தியாவின் வைல்ட்லைஃப் சொசைட்டியின் 2016 அறிக்கை கூறுகிறது.

"2003 ஆம் ஆண்டு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதுதான் முதன்முதலாக கானமயிலை பார்த்தேன். அப்போதே அப்பறவை மீது காதல் கொண்டு, பின்தொடர தொடங்கிவிட்டேன். WWF ஒருங்கிணைத்த பறவை முகாம்களில் பங்கெடுத்திருக்கிறேன். நெருப்புக்கோழி போன்ற பறவையை வகுப்பு நண்பன் பார்த்ததாக கூற, அப்பறவையைக் காண காத்திருந்து பறவை பார்க்கமுடியாமல் விரக்தியோடு கிளம்பியபோது திடுக்கென புல்வெளியில் வந்திறங்கிய கானமயிலை முதன்முதலாக சந்தித்தேன்என உற்சாகமாக பேசும் பிரமோத் பாட்டீலின் சூழலியல் செயல்பாடுகளுக்கு அவரது குடும்பத்தினரும் க்ரீன் சிக்னல் காட்டியது அடுத்த ஆச்சர்யம்

பின்னர் பள்ளிப்படிப்போடு பறவை சரணாலயங்களுக்கு கிடைத்த நேரங்களிலெல்லாம் சென்று வந்து குறிப்புகளை எழுதி பறவைகளின் படங்களை நீரில் சூரிய ஒளி துல்லியத்துடன் வரைந்தவர் பின்னர் நிசார்க் எனும் சூழலியல் அமைப்புடன் இணைந்து தன்னார்வலராக செயல்படத் தொடங்கினார்.
மருத்துவம் கற்று சிகிச்சை செய்துவந்த பிரமோத், கானமயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவதைக் கண்டு, பறவைகளை முழு முனைப்பாக காக்க தன் மருத்துவசேவையை கைவிட்டது அவரது வாழ்வின் முக்கிய தருணம். ராஜஸ்தானின் தார் பாலைவன பறவைகள் காப்பகத்தில் கானமயில்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க, உள்ளூர் மக்களை அணுகிய பிரமோத், மருத்துவ வசதியில்லாத ஏழை எளியவர்களுக்கு மருத்துவசிகிச்சைகளை உளமாற செய்யத்தொடங்கினார். இதன் விளைவாக உள்ளூர் மக்களின் நம்பிக்கை பெற்றவர், பேர்ட்லைஃப் இன்டர்நேஷனல், ராயல் சொசைட்டி, பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி ஆகிய அமைப்புகளின் உதவியுடன் பள்ளிகளில் கானமயில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி சாதித்ததன் விளைவாக கானமயில்களின் எண்ணிக்கை தற்போது பெருகிவருகிறது. 2015 ஆம் ஆண்டு பிரமோத் பாட்டீலின் அர்ப்பணிப்பான பணிகளுக்கு Whitely(Whitely Foundation for Nature)  எனும் பசுமை ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் நிகழ்வு.

"விருதைப் பெற்றாலும் ஒற்றை மனிதராக பறவைகளைக் காப்பது சாத்தியமில்லாத ஒன்று. இந்த விருது அங்கீகாரத்தின் மூலம் உலகளாவிய இயற்கைநேய அமைப்புகள், மனிதர்களின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.இதன் மூலம் உள்ளூர் பிரச்னைகளுக்கு உலகளாவிய தீர்வு கிடைக்கும்" என நம்பிக்கையோடு பேசுகிறார் டாக்டர் பிரமோத் பாட்டீல்.

கிராமங்களைச் சேர்ந்த ஐயாயிரம் மக்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி கானமயில்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் -ஜூன், ஜூலை -செப்டம்பர் ஆகிய காலகட்டங்களில் அவை முட்டையிடும் பகுதிகளில் வனத்துறை உதவியுடன் கண்காணிப்பை பலப்படுத்தி கானமயில்களை அழிவை கட்டுப்படுத்தியிருக்கிறார் பிரமோத். யுனெஸ்கோ பாரம்பரிய இடம் என்ற அந்தஸ்து பெற்ற ராஜஸ்தான் தேசிய பூங்காவில் இகோ டூரிசம் என்ற பிளானை அமல்படுத்தி கிராம மக்களின் வருமானத்திற்கும் கதவு திறந்தது பிரமோத்தின் மக்கள் நல மகா பணி. "கிராம மக்களை அணுக எனது மருத்துவபடிப்பு உதவியது. வனத்துறை அதிகாரிகளான ஒய்எல்பி ராவ், என்கே ராவ், பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டியின்(BNHS) ஆசாத் ரஹ்மான் ஆகியோர் எனக்கு தந்த ஆதரவால் கானமயில்களை பாதுகாக்க முடிந்தது. கானமயில்களின் இயற்கை எதிரிகளான நாய், நரி, பன்றி, இடும்பு ஆகியவற்றிடமிருந்தும் பாதுகாக்க திட்டங்களை தீட்டி வருகிறோம்" என தீர்க்கமாக பேசுகிறார் பசுமை டாக்டர் பிரமோத் பாட்டீல்

பசுமை ஆஸ்கர்!
1994 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த நிதியாளரான எட்வர்ட் வொய்ட்லேவினால் தொடங்கப்பட்டது வொய்ட்லே இயற்கை பாதுகாப்பு அமைப்பு. வளரும் நாடுகளில் சூழல் பணிகளை முன்னெடுக்கும் மனிதர்களுக்கு ஆண்டுதோறும் விருதளித்து பாராட்டி, அவர்களின் பணிகளைத் தொடர 35-50 ஆயிரம் பவுண்டுகள்(தொடக்கத்தில் 15 ஆயிரம் பவுண்டுகள்.) நிதியுதவியும் பயிற்சியையும் அளிக்கிறது. ஆண்டுதோறும் வொய்ட்லே விருதை இங்கிலாந்து எலிசபெத் ராணியின் மகள் அன்னா, ராயல் ஜியோகிராபிகல் சொசைட்டியில் தன் கரங்களால் வழங்குகிறார். HSBC,Thomson Reuters,WWF ஆகியோர் இவ்வமைப்பின் முக்கிய ஸ்பான்சர்கள்.



அழிவில் இந்தியப்பறவைகள்!
Great Indian Bustard, Red Headed Vulture, Forest Owlet, Spoon Billed Sandpiper
Jerdon’s Courser, Bengal Florican, White Bellied Heron, Himalayan Quail, Sociable Lapwingm, Siberian Crane
 தொகுப்பு: கா.சி.வின்சென்ட், லோக்கல் ப்ரூஸ்லீ


       

 
        




பிரபலமான இடுகைகள்