வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்! - ஆச்சர்ய அசாமி சினிமா






ஒரு கிராமத்தின் கனவு - .அன்பரசு

ஹாலிவுட்,பாலிவுட் என அகில உலகமே பில்லியன்களில் காசு பார்க்க கமர்ஷியல் குருமாக்களாக சினிமாக்களை எடுத்து தள்ளிக்கொண்டிருக்க மண்மணத்துடன் எடுக்கப்பட்ட அசாம் திரைப்படம் ஒன்று புகழ்பெற்ற கனடாவின் டொரண்டோ திரைப்பட விழாவில் சைலண்டாக பங்குபெற்று சாதித்திருக்கிறது. படத்தின் இயக்குநரான ரீமாதாஸ் ஒன் வுமன் ஆர்மியாக வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படத்தை எடுத்திருப்பது ஆச்சரியம்.
மும்பையில் நாடகத்திலும், மாடலாக பணியாற்றிய ரீமாதாஸ் தன் சினிமா அனுபவங்களை வைத்தே வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் லொக்கேஷன், அவரது கிராமமான காம்ரூப். நடிகர்களும், அக்கிராமத்தினர்தான். கிராமத்தில் வசிக்கும் சிறுமி துனுவுக்கு கிடார் இசைக்கலைஞர் கனவு. விதவைத்தாய்கூலிவேலைக்கார சகோதரர் என வறுமை சூழலில் அவளது கனவு நிஜமானதா என்பதைச் சொல்லும் படம்தான் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்.



"முழுநீள படத்தை என்னால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை முதலில் கிடையாது. படத்திற்கான முதல்கட்டவேலைகளை நான்கு மாதங்கள் டைம்டேபிள் போட்டு முடித்தபின்பே, கான்ஃபிடன்டாக படத்திற்கான லொக்கேஷன்களை தேடினேன்என புன்னகையுடன் பேசுகிறார் ரீமாதாஸ். 2014 ஆம் ஆண்டு நடிகர்களுக்கு ரிகர்ஸல் முடிந்தவுடன் தொடங்கிய படத்தின் ஷூட்டிங், மூன்று ஆண்டுகளில் 150 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. "ஒத்திகை நான்கு நாட்கள்தான் நடத்தினோம். தினசரி காட்சிகளை எடுக்கும்போதே இம்ப்ரூவ் செய்வதால், படப்பிடிப்பே ஒர்க்ஷாப் போலத்தான் நடந்தது" என படத்தின் சீக்ரெட்ஸ் சொல்கிறார் ரீமா.  

சிறுவயதிலிருந்தே பாலிவுட் சினிமாக்களை தூர்தர்ஷனில் கண்டு வந்ததால் சினிமா மீதான ஆர்வம் இயல்பாகவே ரீமாவுக்கு இருந்தது. தன் இளங்கலைப் படிப்பை குவகாத்தியின் காட்டன் கல்லூரியிலும், புனேவில் சோஷியாலஜி படிப்பையும் முடித்தவர் 2002 இல் மும்பைக்கு பஸ் ஏறினார். நாடக நடிப்பு, மாடலிங் என்று செயல்பட்டவருக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே அசாமுக்கு போய் இயக்குநராக முடிவெடுத்தார் ரீமா

"திரைப்பட பள்ளியில் சினிமா கற்கவில்லை என்பது உண்மைதான். நான் என் சுய அனுபவங்களின் வாயிலாக படங்களை உருவாக்க நினைத்தேன். சினிமாவை முதன்முதலில் உருவாக்கியவர்கள் யாரும் திரைப்பட பள்ளியில் பட்டம் பெற்றவர்களல்ல. இன்று ஆர்வமிருந்தால் இணையத்தில் சினிமா குறித்து ஆல் இன் ஆல் கற்கமுடியும" என உற்சாகமாக பேசுகிறார் ரீமா.

 2009 ஆம் ஆண்டு Pratha என்ற குறும்படத்தை இயக்கியவர், 2011 இல் Antardrishti  என்று முழுநீள படத்தை கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் அத்தனைக்கும் தில்லாக பொறுப்பேற்று 33 நாட்களில் உருவாக்கினார். இப்படத்திற்கு கேமரா, எடிட்டிங் அத்தனையும் கிராமத்தினரின் பங்களிப்பே.கமர்ஷியலாக படம் ஜெயிக்காவிட்டாலும் தனிப்பட்ட திருப்தி, சுதந்திரம் என்பது ரீமாதாஸின் சினிமா கொள்கை. "இன்றைய இயக்குநர்கள் படத்தில் கதைசொல்வதை முற்றிலும் புதிய ஸ்டைல்களில் முயற்சிக்கிறார்கள்.பார்வையாளர்களின் விருப்பங்களைத் தாண்டி தமது கதைகளை நேர்த்தியாக உருவாக்குகிறார்கள்" என்கிறார் வில்லேஜ் ராக்ஸ்டார் படத்தில் நடித்துள்ள நாடக நடிகரான குலாடா பட்டாச்சார்யா. அசாம்மொழி படங்களுக்கான விளம்பரம், வணிகம் ஆகியவற்றில் முன்னேற்றம் பற்றாக்குறை என்பது அசாமிய திரைப்பட ஆர்வலர்களின் ஆதங்கம்ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதியான கலாடியா கிராமம் ரீமாதாஸ் உள்ளிட்டோரின் முயற்சியால் அசாமிய திரைப்படங்களின் சொர்க்கபுரியாக மாறிவருகிறது.


வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்!

அசாமில் துனு என்ற பத்துவயது சிறுமி விதவைத்தாய் மற்றும் தன் அண்ணனோடு ஃப்யூச்சரில் கிடார் இசைக்கலைஞர் ஆவேன் என்ற கனவோடு வாழ்ந்துவருகிறாள். கிராமத்து நண்பர்களை ஆர்கனைஸ் செய்து மியூசிக் பேண்ட் அமைப்பது லட்சியம். சின்னச்சின்ன வேலைகள் செய்து குடும்ப பாரத்தை  ஏற்கிறாள் துனு.கணவனை இழந்த விதவைப்பெண்ணைக் காட்டி துனுவை அவள் அம்மா வேலைக்குச்செல்ல தூண்டும் காட்சி, வெள்ளத்தில் விளைச்சல் இழந்த அம்மாவுக்கு துனு தன் உண்டியலில் கிடார் வாங்க வைத்திருக்கும் தன்சேமிப்பை கொடுக்கும் காட்சி, துனு மற்றும் அவளின் பிரிய ஆடு முனு வரும் காட்சி, துனு பெரியவளாவது, இறுதியில் முகத்தில் தன் மகளுக்காக வாங்கிய கிடாரை கையில் வைத்தபடி அவளின் தாய் நடந்துசெல்லும் காட்சி என மனதை நெகிழவைக்கும் காட்சிகள் அநேகம்.





அசாமிய சினிமா!

நம்மூர் கோலிவுட் போல 82 தியேட்டர்களைக் கொண்டுள்ள அசாமியமொழி சினிமாவின் பெயர் ஜாலிவுட். 1935 ஆம் ஆண்டு ஜோதி பிரசாத் அகர்வாலா என்ற இயக்குநரின் Joymoti என்ற படம்தான் அசாமிய சினிமாவின் முதல்படம். பாபேந்திரநாத் சைகியா, ஜானு பருவா ஆகிய முத்திரை இயக்குநர்களால் அசாம் சினிமா மெல்ல முன்னேறிவருகிறது. உள்ளூர்மொழியில் எடுத்தாலும் பாலிவுட் சாயல் அசாமிய படங்களில் அதிகம் உண்டு. முக்கிய பட நிறுவனங்கள் ASFFDC, AM Television, Dolphin Films Pvt. Ltd2016 ஆம் ஆண்டு வெளியான படங்களின் எண்ணிக்கை 21. பாக்ஸ் ஆபீஸ் வருமானம் 5 கோடி. வடகிழக்கு மாநில இளைஞர்களை திரைப்படத்துறையில் ஊக்குவிக்கும்விதமாக பிரம்மபுத்திரா திரைப்படவிழாவை தத்வா கிரியேஷன் என்ற தனியார் அமைப்பு 2013 ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது


தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
  



பிரபலமான இடுகைகள்