காங்கிரஸ் -அன்றும் இன்றும்!







காங்கிரஸ் -அன்றும் இன்றும் - .அன்பரசு




காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு குஜராத் தேர்தலிலும் ஒரு கை பார்த்துவிட்டார். பெற்றது தோல்விதான் என்றாலும் ஜெயித்த பிஜேபியை கலங்கவைக்கும் தோல்வி இது. மூத்தோர்களின் வழிகாட்டுதலில் இளைஞர்கள் வேகம் காட்டும் கட்சியாக காங்கிரஸ் மலர வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் 133 ஆண்டுகால வரலாற்றை ஒரு கிளான்ஸ் பார்த்துவிடுவோம்.

1907
காஷ்மீர் பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான மோதிலால் நேரு, அலகாபாத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் மூலமாக அரசியலில் நுழைந்தார்.

1916
நான்கு ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்கி வழக்குரைஞர் படிப்பை முடித்த ஜவகர்லால் நேரு, இந்தியா திரும்பினார். காஷ்மீரி பெண் கமலா கவுலை மணந்தவர், தந்தையுடன் இணைந்து வழக்குரைஞர் பணியை செய்யத் தொடங்கினார்.

1917
இந்திய சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட தியோசபிகல் சொசைட்டியின் 'ஹோம்ரூல்' அன்னிபெசன்ட் கைது செய்யப்பட்டிருந்தார். நேருவின் அரசியல் ஆர்வம் அதிகரித்த இக்காலகட்டத்தில் அவரின் பிரிய மகள் இந்திரா பிறந்திருந்தார்.

1922
சௌரி சௌராவில் ஏற்பட்ட கலவரத்தினால் ஒத்துழையாமை இயக்கத்தை, காந்தி தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

1923
சுயராஜ்ய கட்சியின் சி.ஆர் தாசுடன் மோதிலால் நேரு இணைந்து மேற்கு வங்காள சட்டசபைத்தேர்தலில் பெரும்பான்மை பலத்தில் போட்டியிட்டு வென்றனர்.

1924
காந்தியின் விருப்பத்துக்கு மாறாக, மோதிலாலும் தாசும் மத்திய சட்டமன்ற கவுன்சிலுக்கு தேர்வானார்கள்.

1928
ஆங்கிலேயே காமன்வெல்த் நாடுகளில் இந்தியாவிற்கு அரசுரிமை அந்தஸ்து தேவை என்று கோரிக்கையை மோதிலால் நேரு ஆங்கில அரசிடன் சமர்ப்பித்தார். மாகாணங்களை குறிப்பிடாமல் மையப்படுத்திய அரசமைப்பு முறையை இவ்வறிக்கை வலியுறுத்தியது.

1929
லாகூரில் காங்கிரஸ் தலைவரான ஜவகர்லால் நேருவின் தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இதில் காங்கிரஸின் கொள்கையாக இந்திய சுதந்திரம் வலியுறுத்தப்பட்டு இந்தியக்கொடி ஏற்றப்பட்டது. ஜனவரி 26 ஆம் தேதியை முழுமையான சுயராஜ்ஜிய தினமாக கடைபிடிக்க மக்களைக் கோரினார் காந்தி.
1930
அரசின் உப்புவரிக்கு எதிராக தண்டியில் காந்தியின் நடைபயண பேரணி தொடங்கியது.
  
1937
இந்திய அரசு சட்டப்படி(1935) நடந்த தேர்தலில் ஜவகர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி முஸ்லீமை நொறுக்கி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் மெகா வெற்றி பெற்றது.
1938
ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், ஆங்கிலேயர்களுடான ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் காந்திக்கும், சுபாஷ் சந்திர போஸூக்கும் கருத்துவேறுபாடுகள் உருவானது

1939
இரண்டாம் உலகப்போர் தொடங்கியது.

1942
ஆகஸ்ட் மாத காங்கிரஸ் மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை முன்னெடுத்த காந்தி, செய் அல்லது செத்துமடி என்ற ஸ்லோகத்தையும் மக்களுக்கு கூறி சுதந்திரப்போராட்டத்தை தொடர உத்வேகப்படுத்தினார்.
தந்தை ஜவகருக்கு பிடிக்கவில்லை என்றாலும் காந்தி பார்சி மணமகன் ஃபெரோஸ் காந்திக்கும், இந்திராவுக்கு திருமணம் நடத்தி வைக்கிறார்.

1944
இந்திரா-ஃபெரோஸ் தம்பதிக்கு ராஜீவ்காந்தி பிறந்த தருணத்தில், காங்கிரஸ் இயக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட  சைமன் கமிஷன் முற்றாக நிராகரித்தது.
1946
இந்திராவின் இரண்டாவது குழந்தை சஞ்சய் காந்தி பிறந்தார். இங்கிலாந்து பிரதமர் கிளமண்ட் அட்லீ, இந்தியாவில் அமைச்சரவை அமைக்க செய்த முயற்சிகள் தோல்வியுற்றன.        
1947
வைஸ்ராய் மௌண்ட்பேட்டன், நேரு,வல்லபாய் படேல்,ராஜாஜி ஆகியோரை பிரிவினை தொடர்பாக சமரசம் செய்து இந்தியாவின் ஆட்சிப்பொறுப்பை ஏற்கச்செய்தார். நாட்டின் முதல் பிரதமராக நேரு அமர்ந்த சமயத்தில் காஷ்மீர் மாநிலம் தொடர்பாக பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டு முடிவடைந்திருந்தது.
1959
பல்வேறு கண்டனங்கள், சர்ச்சைகளை கடந்து தன் மகள் இந்திராவுக்கு அமைச்சரவை பதவி அளிக்காமல், காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமித்தார் நேரு.

1962
பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் மாபெரும் வெற்றிபெற வைத்தார் நேரு. ஆனால் சீனாவுடனான எல்லைக்கோடு தொடர்பாக நடந்த போரில் இந்தியா,  படுதோல்வியுற்றதால் நேரு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

1963
காங்கிரஸ் கட்சியை புதுப்பிக்க தமிழ்நாடு முதல்வராகவும், இருந்த கே.காமராஜ்  பதவி விலகினார். இவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய்,ஜெகஜீவன் ராம்,பிஜூ பட்நாயக் ஆகியோரும் கட்சி பதவிகளிலிருந்து விலகினர். காமராஜர், மீண்டும் காங்கிரஸ் கட்சித்தலைவரானார்.

1964
நேரு இறக்க, லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதமரானார். 1965 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் மூண்டபோது, சாஸ்திரி எழுப்பிய 'ஜெய் ஜவான், ஜெய் கிஸான்' ஸ்லோகன் மக்களின் மனதில் உத்வேகம் மூட்டிய மந்திரச்சொல்.

1966
பாகிஸ்தானுடன் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில்(ஜனவரி 10) கையெழுத்திட்ட சாஸ்திரி, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். பின், காமராஜரின் பரிந்துரையால் இந்திரா இந்தியாவின் பிரதமர் இருக்கையில் அமர்ந்தார்.

1967
காங்கிரஸ் கட்சி, தேர்தலில் 50 சதவிகித தொகுதிகளை இழந்தது. இந்திரா தன் பதவியை அரும்பாடுபட்டு தக்கவைத்துக்கொண்டு இளைய தலைவர்களிடம் உதவி கோரினார். பின்னர் இரு ஆண்டுகளுக்கு பிறகு தனியார் வங்கிகளை அரசுடமையாக்கினார்.
1971
வறுமை ஒழிப்பு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல இந்திராகாந்தி 'Haribi Hatao' முழக்கத்தை இந்தியாவெங்கும் பிரசாரம் செய்தார். இம்முறை ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் பரிதாபகரமாக தோற்று சரணடைந்தது. வங்காளதேசம் புதிய நாடாக உருவாகி சுதந்திரக்காற்றை சுவாசிக்கத் தொடங்கியது இந்த ஆண்டுதான்.

1974
பிரதமர் இந்திராவின் தலைமையில் இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியது. ரயில்வே ஸ்ட்ரைக், பொருளாதார பற்றாக்குறை இந்தியாவை மூச்சுத்திணறவைத்துக் கொண்டிருந்த சூழலில் சிக்கிம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

1975
எமர்ஜென்சிக்கு எதிரான வழக்கில் இந்திரா பின்னடைவை சந்தித்தார். காங்கிரஸ் கட்சித்தலைவர் டிகே பரூவா, 'Indira is India' என்ற ஸ்லோகனை முன்னெடுத்தார். தனது ஆக்ரோஷ அரசியல் செயல்பாடுகளால் சஞ்சய்காந்தியின் மீதான நன்மதிப்பு கெட்டது.  
1980
பல்வேறு பிரச்னைகளை சமாளித்த இந்திரா, மீண்டும் மக்கள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தார். பஞ்சாப் பிரச்னை, விமான விபத்தில் சஞ்சய்காந்தி மரணம் ஆகியவை இந்திராவின் மன உறுதியை சோதித்தன. ராஜிவ்காந்தி, அம்மா இந்திராவுக்கு பக்கபலமாக அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.
1984
இந்திரா தனது சீக்கிய பாதுகாவலர்களாலேயே சுடப்பட்டார். உடனே பிரதமராக பதவியேற்ற ராஜிவ்காந்தி 400 க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்களுடன் காங்கிரஸ் கட்சியையும் ஆட்சியையும் கையகப்படுத்தினார். 52 ஆவது சட்டத்திருத்தமாக கட்சிதாவல் தடைச்சட்டத்தையும் வெற்றிகரமாக கொண்டுவந்தார்.    
1987
ஃபோபர்ஸ் ஊழலால் பிரதமர் ராஜிவ்காந்தியின் செல்வாக்கு குலைந்ததோடு, கட்சியும் சிதைந்துபோனது. பின் இரு ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஒன்றிணைய வி.பி.சிங் தலைமையிலான ஆட்சி தொடங்கியது.
1991
ராஜிவ்காந்தி விடுதலைப்புலியினரால் படுகொலை செய்யப்பட்டார். கட்சியின் தலைவர் பிளஸ் பிரதமராக பி.வி.நரசிம்மராவ் பதவியேற்றார். உலகமயமாக்கம், தாராளமயமாக்கம் உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைகளை தனது அரசு மூலம் அமல்படுத்தினார்.

1996
காங்கிரஸ் கட்சித்தலைவராக சீதாராம் கேசரி, வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹெச்.டி.தேவகௌடாவின் ஐக்கிய முன்னணி அரசு தோற்றபின், கேசரியை தேர்தலில் காங்கிரசின் முகமாக சோனியாகாந்தி முன்னிலைப்படுத்தினார்.

1997
ராஜிவ்காந்தியின் படுகொலை குறித்த ஜெயின் கமிஷன் அறிக்கை வெளிவரும் வரையில் ஐ.கே.குஜ்ரால் பிரதமராக தொடர காங்கிரஸ் ஆதரவளித்து பின்னாளில் ஆதரவைக் கைவிட்டது.

1999
காங்கிரஸ் கட்சித்தலைவரான சோனியாகாந்தியின் ஆட்சியமைக்கும் முயற்சிகள் படுதோல்வியடைய, பிஜேபி ஆட்சிக்கட்டில் ஏற, அடல்பிகாரி வாஜ்பாய் பிரதமரானார்

2004
சோனியா காந்தி, பிஜேபியை எதிர்க்க மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்கி தேர்தலில் வெற்றிபெற்றார். ஆனால் பிரதமரானது, காங்கிரஸ் தொண்டர்கள் கூட எதிர்பார்க்காத முன்னாள் நிதியமைச்சரான மன்மோகன்சிங். 2009 ஆம் ஆண்டும் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தாலும் பூதமாய் எழுந்த ஊழல் புகார்கள் கட்சியின் புகழை குழிதோண்டி புதைத்தன.

2017
காங்கிரஸ் கட்சித்தலைவராக உள்ள சோனியாகாந்தியின் உடல்நலம் தொடர்ந்து சிக்கலாகி வரும் நிலையில் புதிய தலைவர் ரேஸில் ராகுல்காந்தி முன்னணியில் இருக்கிறார்.

 தொகுப்பு : குருஜி பிரசாத், சரண் வடாலா