பெண்களை காக்கும் சக்திவாஹினி!




பெண்களை காக்கும் சக்திவாஹினி! -.அன்பரசு


"பெண்களைக்கு எதிரான வன்முறை செயல்களின்போது அதன் சாட்சியாக அமர்ந்திருக்காமல், அதனை எதிர்த்து நில்லுங்கள்" என்பது .நா சபையின் முன்னாள் செயலாளரான பான்கி மூனின் நல்வாக்கு. வரும் நவ.25-டிச.10 வரையுள்ள பதினாறு நாட்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மனித உரிமைக்கானவையாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான டூ இசட் வன்முறைகளுக்கு எதிராக சட்ட உதவிக்கரம் நீட்டி உதவுகிறது சக்தி வாஹினி அமைப்பு. 2001 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் ரவிகாந்த்,நிஷிகாந்த்,ரிஷிகாந்த் ஆகிய மூன்று பிரதர்ஸின் ஐடியா இது. "எங்களது ஏரியாவில் சுரங்கப்பணியாளர்கள் அதிகம். தினசரி குடித்துவிட்டு பெண்களை அடித்து நொறுக்கி சண்டையிடுவதை பார்த்து, அப்பெண்களை காக்க உருவானதுதான் சக்திவாஹினி" என மலர்ச்சியாக பேசுகிறார் ரிஷிகாந்த்.

மூன்று சகோதரர்களும் தம் தந்தையின் ஓய்வூதிய தொகையை வைத்தே சக்திவாஹினியை தொடங்கியுள்ளனர். பின்னர் நிதிச்சிக்கல்கள் ஏற்பட்டாலும் மனம்தளராது அமைப்பை வழிநடத்தி சென்ற மூவரின் மன உறுதி ஆச்சர்யமானது. தனக்கு நேர்ந்த வன்முறை கொடுமைகளை சொல்லத்தயங்கும் கிராமப்புறங்களிலிருந்து அமைப்பின் பணிகளை தொடங்கியவர்கள், 2004 ஆம் ஆண்டு HIV/AIDS பாதிப்பு கொண்ட பெண்களுக்கு ஆதரவு, வன்முறை, பெண்குழந்தைகள் கடத்தல், கௌரவக்கொலைகள் என பல்வேறு அநீதிச் செயல்பாடுகளுக்கு எதிராக நெஞ்சுறுதியுடன் போராடத்தொடங்கினர்

"சக்தி வாஹினியின் லட்சியமே குரலற்றவர்களுக்கு குரலாக ஒலிப்பதுதான். உடல்,மனம்,பாலியல் என பாதிக்கப்பட்ட பெண் தன் உணர்வுகளை எப்படி வெளிக்காட்டுவாள்? அத்தகைய பெண்களுக்கு ஜனநாயகவழியில் நீதி தேடித்தர முயற்சிக்கிறோம்" என உற்சாகமாக பேசுகிறார் ரிஷி.

இன்று சக்திவாஹினி தொடங்கப்பட்டு  17 ஆண்டுகளாகின்றன. தற்போது இவ்வமைப்பு ஆறு மாநிலங்களில் கிளைவிரித்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப வன்முறைக்குள்ளான பெண்களின் துயர்கண்ணீரைத் துடைத்து 600 க்கும் மேற்பட்ட கௌரவக்கொலைகளை தடுத்து ஊக்கமுடன் செயல்பட்டுவருவது பெருமைப்படத்தக்க சமூகப்பணி

2013 ஆம் ஆண்டு சக்திவாஹினியின் சமூகப்பணிகளுக்கு மணிமகுடமாக அமெரிக்காவின் வாஷிங்டனில் Vital Voices Global awards விழாவில், சாலிடரிட்டரி விருது கிடைத்தது. "எங்களுடைய இந்த அமைப்பு உருவானதற்கு எங்கள் பெற்றோர்தான் காரணம். கல்விச்செல்வத்தை எங்களுக்கு அளித்தவர்கள் பெண்கள் மீதான அக்கறையை எங்கள் மனதில் ஊட்டியது இன்றைய எங்கள் செயல்பாட்டுக்கு உற்சாக உரம்" என நெகிழ்ச்சியாகிறார் நிஷிகாந்த். அமைப்பு தொடங்கியபோது ஹரியானாவில் ஆண்,பெண் பாலின விகிதம் கடுமையாக சரிவடைந்திருந்தது. பெண்குழந்தைகளை கருக்கொலை செய்வது இயல்பானதாக இருந்ததையும், பெண்குழந்தைகளை பாலியல்தொழிலுக்கு கடத்துவதையும் தடுப்பதை முக்கிய பணியாக கொண்டு குழுக்களை இணைத்து செயல்பட்டிருக்கிறது சக்திவாஹினி

"முதலில் கடுமையான கேலிகளை, புறக்கணிப்புகளை சந்தித்தாலும் கிராமப்புறங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க சிறுவர்கள், ஆண்களுக்கு பயிற்சிவகுப்புகளை நடத்துவதில் பின்வாங்கவில்லை. ஏனெனில் பின்வரும் தலைமுறைக்கு ஒளிவிளக்காக பெண்கள் இருப்பார்கள். எங்களைத் தொடர்ந்து இயக்குவதும் இந்த அக்கறையே" என உறுதியான குரலில் பேசுகிறார் ரிஷிகாந்த். தங்கள் செயல்பாட்டின் முக்கிய நிகழ்வாக, 15 ஆயிரம் காவல்துறையினருக்கு பயிற்சியளித்து சாதித்துள்ளனர். பெண்கள் சக்தி எழுக!


பெண்களின் குரல் வைடல் வாய்ஸ்!

வைடல் வாய்ஸ் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும் பெண்களுக்கு மட்டுமேயான ஸ்பெஷல் விருதுகள். இதில் மனித உரிமைகள், அரசியல் சீர்திருத்தம்,பெண்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு பாடும் அமைப்புகள், தனிநபர்களுக்கு வாஷிங்டனிலுள்ள கென்னடி ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெறும் விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. ஆங்கில நடிகர் பென் அஃப்ளெக்,அரசியல்வாதி ஹிலாரி கிளிண்டன், ஜோர்டான் அரசி ராணியா ஆகியோருக்கு வைடல் வாய்ஸ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் தாய் நிறுவனமான சாரிட்டி நேவிகேட்டரில் 13,870 தானதாரர்கள் இணைந்து, 8.9 மில்லியன் டாலர்கள் தொகையை அளித்துள்ளனர். இதில் 58,726 பேர் பொருட்களாகவும், 7,907 பேர் கல்வி, மருத்துவம் என சேவையாக உதவிகளை வழங்கியுள்ளனர்.


குடும்ப வன்முறை!
குடும்ப வன்முறை வழக்குகள் - 1 கோடி.
பெண்கள் தற்கொலை வழக்குகள் - 3,034(2014), 4,060(2015)
வன்முறை வளர்ச்சி -34%
தாக்குதலுக்குள்ளான பெண்கள்- 88,467(2005-2015) இறப்பு - 7,634
குடும்பவன்முறை வழக்குகள் (PWDVA 2005படி) - 426(2014),461(2015)
(National Crime Records Bureau (NCRB) 2015படி)


 தொகுப்பு: முகேஷ், ரிதுபானி குமார்