ஓ..ஓ.. கிக்கு ஏறுதே! கிறுகிறுக்க வைக்கும் விஸ்கி பிஸினஸ்!
ஓ..ஓ.. கிக்கு ஏறுதே!
கிறுகிறுக்க வைக்கும் விஸ்கி பிஸினஸ்! -ச.அன்பரசு
பிறப்புக்கும் இறப்புக்கும் ஆதார் அட்டை இணைப்பு, குபீர் விலை ஏற்றத்தில் ரேஷன் லெவி சர்க்கரை,கடலை மிட்டாய்க்கும்
ஜிஎஸ்டி வரி என தினசரி ஹைப்பர் டென்ஷனில் காஸ்மோபாலிடன் நகரங்களில் பற்களைக்கடித்தபடி
வாழும் இந்திய குடிமகன்கள் தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள என்னதான் செய்கிறார்கள்?
மகிழ்ச்சி பரவசமோ, தோல்வியின் துயரமோ தமிழக அரசின்
டாஸ்மாக் பார் சரக்குகள்தான் புதிய இந்தியாவில் அடுத்த நாளை எதிர்கொள்ள மக்களை கடைத்தேற்றுகிறது.
மதுவிலக்கு பிரசாரங்களை புறங்கையால் ஒதுக்கி உலகில்
உற்பத்தியாகும் விஸ்கியில் 48% குடித்து அந்த பிஸினஸை எவரெஸ்ட்
உச்சத்துக்கு நகர்த்தியுள்ளது நம் இந்தியர்களின் தன்னிகரற்ற சாதனை. விஸ்கி தயாரிப்பில் அமெரிக்காவையும் பின்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது புதிய
இந்தியாவின் எனர்ஜி மொமன்ட்.
டெல்லியின் பகாரஞ்சனிலுள்ள தனியார் பாரில் 25 மில்லி (ஒரு பெக் விஸ்கி) ரூ.50
முதல் 5 ஸ்டார் ஹோட்டல்களில் ரூ. 1,500(ஸ்மால்) வரை பட்டாசாக விற்கிறது. இதில் அயல்சரக்குகளை உள்நாட்டில் தயாரிக்கும் IMFL பிரிவு
வாடிக்கையாளர்களே அதிகம். இதோடு லிமிடெட் எடிஷனில் சிங்கிள் மால்ட்
விஸ்கியும் தற்போது ஃபேமஸாகி வருகிறது. "கடந்த பத்தாண்டுகளாக
மதுபானத்துறை சீராக வளர்ந்து வருகிறது. இதில் ராஜாவாக கோலோச்சுவது
விஸ்கி மட்டுமே" என்கிறார் 1948 ஆம்
ஆண்டில் தொடங்கிய அம்ரூத் டிஸ்டில்லர்ஸின் இயக்குநர் திரிவிக்ரம் ஜி நிகாம்.
உற்சாகபானத்திலும் பெண்களுக்கு கோட்டா இல்லாவிட்டால் எப்படி?
வோட்கா மார்ட்டினி,கேரி பிராட்ஷா ஆகிய பானங்கள்
பெண்களின் ஸ்பெஷல் சாய்ஸ்.
சமூகம், மதம் ஆகிய தடைகளைத்
தாண்டி 19 மில்லியன் இளைஞர்கள் இவ்வாண்டு மது அருந்துவதற்கான
சட்டப்பூர்வ வயதை எட்டியிருப்பது மது நிறுவனங்களை ஏகத்துக்கும் குஷிப்படுத்தியுள்ளது.
"இந்தியாவில் மதுபானத் தேவையின் முதல் சாய்ஸ், IMFL தான். பீர் மற்றும் ஒயின்களைத் தவிர்த்து பிற மதுவகைகளை
விற்கும் இவ்வகை மார்க்கெட் மிகப்பெரியது" என வாய்ப்புகளை
அடுக்குகிறார் நிகாம்.
2016 ஆம் ஆண்டு மதுபானச்சந்தை மதிப்பு
1.84 ட்ரில்லியன் என்கிறது குளோபல் டேட்டா அமைப்பின் அறிக்கை.
இதில் விஸ்கியின் பங்கு மட்டும் 60%. 2007-2017 வரை விஸ்கி நுகர்வு 80.2 மில்லியனிலிருந்து
-193.1 மில்லியனாக உயர்ந்துள்ளதை உலக ஒயின் மற்றும் மதுபான ஆராய்ச்சி
மைய(IWSR) அறிக்கை குறிப்பிடுகிறது. 157 மில்லியன் லிட்டர் விஸ்கியை இந்தியர்கள் அருந்தியுள்ளனர். பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் மதுபான நுகர்வு 399 மில்லியன்
லிட்டராக அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் கடந்த ஆண்டு விஸ்கி
நுகர்வு மட்டும் 189.7 மில்லியன் லிட்டர்கள். இதில் 98.24% விஸ்கி தயாரிப்பு மேட் இன் இந்தியா என்பது
காலரை உயர்த்திக்கொள்ளும் பெருமைதானே!
விஸ்கி ரெடி!
பார்லி,சோளம்,அரிசி ஆகியவற்றை வெந்நீரில் ஊறவைத்து பெறப்படும் இனிப்பான நீர்மத்திற்கு வோர்ட்
என்று பெயர். இந்நீர்மம் பிறகு புளிக்கவைக்கும் தொட்டிகளில் நிரப்பப்பட்டு,
இதிலுள்ள சர்க்கரையை உடைக்க ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது. இதுவே பின்னர் இரண்டு அல்லது மூன்றுமுறை டிஸ்டிலேஷன்(ஆவியாதல்) செய்து, சுவையூட்ட ஓக்
பேரல்களில் அடைக்கப்பட்டால் சுதி சுத்தமான ரெடி டூ ட்ரிங்க் விஸ்கி ரெடி.
இந்தியாவில் ரெடியாகும் விஸ்கிகளுக்கு மூலாதாரம், சர்க்கரை எடுக்கப்பட்ட கரும்புச்சக்கைகள்தான். நீரில்
புளிக்கவைத்து பின்னர் கொதிக்க வைத்து பெறப்படும் ஆல்கஹால் நொதிக்கவைத்து ஆவியாதல்
முறையில் நியூட்ரலான எரிசாராயம் கிடைக்கிறது. IMFL இன் தயாரிப்பு
முறையான இதில் ப்ளேவர்,நிறத்திற்காக ஸ்காட்ச் சிறிதளவு சேர்க்கப்பட்டால்
பெருமைக்குரிய மேட் இன் இந்தியா விஸ்கி ஆகமொத்தம் தயார். "தானியம் மற்றும் மொலாசஸிலிருந்து
தயாரிக்கப்படும் விஸ்கிக்கு துல்லியமாக டிஸ்டிலேஷன் செய்வதுதான் வேறுபாடு. மொலாசஸ் என்றால் ஆல்கஹால் துல்லியமாக ஆவியாதல் முறையில் பெறப்படும்.
ஆனால் தானியத்தில் அது முழுமையாகாமல் பேரல்களில் அடைக்கப்படும்"
என தீர்க்கமாக பேசுகிறார் நிகாம். இவரின் அம்ரூத்
டிஸ்டில்லர்ஸ், 25 நாடுகளுக்கு மதுபானங்களை ஏற்றுமதி செய்கிறது.
ஆண்டுக்கு 35 ஆயிரம் லிட்டர் விஸ்கி தயாரிக்கும்
நிறுவனம், விஸ்கி பைபிள் கையேட்டில்(2010) மூன்றாவது சிறந்த விஸ்கி நிறுவனமாக இடம்பெற்றுள்ளது.
விஸ்கிக்கும் ரூல்ஸ் உண்டு!
ஸ்காட்லாந்தில் தயாரிக்கப்படும் விஸ்கிக்கு ஸ்காட்ச்
என்று பெயர். இது ஸ்காட்லாந்து தவிர்த்து வேறெங்கும் தயாரிக்கப்படுவதில்லை.
மதுபானங்களின் தயாரிப்புக்கு ஐரோப்பா,அமெரிக்கா,ஜப்பான்,ஆஸ்திரேலியா என அனைத்து நாடுகளிலும் கெடுபிடி
விதிகள் உண்டு. தயாரிப்பு,சுவை என அனைத்தும்
நாட்டுக்கு நாடு மாறுபடும். ஸ்காட்ச் விஸ்கிக்கு மரபேரல்களில்
3 ஆண்டு அடைவுக்காலம் கட்டாயம்(ஸ்காட்லாந்து),
பார்பன் விஸ்கிக்கு ஓக் மர பேரல்கள் அவசியம்(அமெரிக்கா),
நியூட்ரல் ஸ்ப்ரிட் மற்றும் முதல் கிரேட் ஸ்ப்ரிட் கலந்து விஸ்கி தயாரிப்பு(இந்தியா) ஆகியவை இதற்கு உதாரணம்.
2016 ஆம் ஆண்டு இந்திய அரசு மதுபானத்தை வரிக்குட்பட்ட
உணவுப்பொருளாக மாற்றி FSSAI பட்டியலில் இணைத்துள்ளது.
இந்தியாவில் மதுபானம் ஆவியாதல் வெப்பம் காரணமாக வேகமாக நிகழ்வதால் தயாரித்தவுடன்
மரபேரல்களில் அடைக்கப்படாமல் சுடச்சுட சேல்ஸூக்கு அனுப்பப்பட்டுவிடுகிறது. சுவை கூடாத முதிர்ச்சியுறாத விஸ்கி என்பது ஏற்றுமதி மார்க்கெட்டில் மதிக்கப்படுவதில்லை.
விஸ்கி ஹிஸ்டரி!
இந்தியாவில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு உத்தரவிட்ட
டையரின் அப்பா, எட்வர்டு டையர் 1820 ஆம்
ஆண்டில் இமாலயத்தில் காசவ்லி என்ற இடத்தில் விஸ்கி ஃபேக்டரியை அமைத்தார். கடல் மட்டத்திலிருந்து 6 ஆயிரம் அடி உயரத்திலிருந்த இந்த
இடம், ஸ்காட்லாந்துக்கு நிகரான சூழலும் நீர்வளமும் கொண்டிருந்தது
என்பதால், நூறாண்டுகளாக இங்கு தயாரிக்கப்பட்ட குவாலிட்டியான விஸ்கிக்கு
செம மவுசு.
ஸ்காட்லாந்தில் பார்லி,அமெரிக்காவில் சோளம்,கம்பு, ஆசிய
நாடுகளில் அரிசி, இந்தியாவில் கரும்பு என பல்வேறு நாடுகளில் விவசாயப்
பொருட்கள் மதுபானத்தின் மூலமாக, உபரி வருமானமாக பயன்பட்டு வருகின்றன.
இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு பெங்களூரின் விட்டல்
மல்லையா, யுனைடெட் பிரிவரீஸ் என்ற நிறுவனத்தை வாங்கினார்.
பின்னாளில் இந்நிறுவனம் ராயல் சேலஞ்ச், மெக்டௌல்No.1
ஆகிய பிராண்ட்களின் மூலம் 60% இந்திய சந்தையை பிடித்தது.
தற்போது இந்நிறுவனத்தை டியாஜியோ இந்தியா வாங்கியுள்ளது.
IMFL பிரிவில் மது விற்பனை அதிகரிக்க முக்கிய
காரணம், இறக்குமதி மதுபானங்களின் மீது குவியும் டஜன் கணக்கிலான
வரிகள். உள்நாட்டு மதுவகைகளுக்கு மாநில அரசு விதிக்கும் வரிகள்
மட்டுமே. ஆனால் இறக்குமதி மதுபானங்களுக்கு மத்திய,மாநில அரசின் வரிகள் 150% என்பது பெரும்சுமையாக மாறி,
மக்களை எட்டும்போது விலை உயர்வு 500% உயர்கிறது.
எனவே தரமான விஸ்கியின் சுவையை அறிவது இந்தியர்களுக்கு எட்டாத ஒன்றாக
மாறுகிறது."இந்தியாவில் ஸ்காட்ச் விஸ்கிக்கு சுங்க வரி
160% உட்பட சிக்கலான வரிகளை விதிப்பதால், தொழில்வளர்ச்சி
இருந்தாலும் பல்வேறு மதுபான நிறுவனங்கள் இந்தியாவை தவிர்க்கின்றன.விஸ்கியை பல்க்காக கொள்முதல் செய்து அதனை இந்தியாவில் பாட்டிலில் அடைத்து விற்பது
விலையை பெருமளவு குறைக்கும்" என ஐடியா கொடுக்கிறார் பகார்டி
நிறுவனத்தைச் சேர்ந்த அன்சுமான் கோயங்கா. 2016-2021 ஆம் ஆண்டில்
மதுபான உற்பத்தியில் இந்தியா 5.1% ஏற்றம் காண வாய்ப்புள்ளது என்கிற
குளோபல் டேட்டாவை கணக்கில் கொண்டால், தரமான விஸ்கி நிறுவனங்கள்
உள்நாடுகளிலும் உருவாகி உலகளவில் அணிவகுக்க வாய்ப்புள்ளது.
மயக்கும் மது!
2016 ஆம் ஆண்டு மதுச்சந்தை - 1.84 ட்ரில்லியன்
2020 ஆம் ஆண்டில் உயரும் மதுச்சந்தை மதிப்பு
- 2.36 ட்ரில்லியன்
மது விற்பனையில் முதலிடம் - விஸ்கி(193.12மி.ன்)
பிற மதுவகைகள் - பிராந்தி(68.85
மி.ன்), ரம்(41.31
மி.ன்),வோட்கா(7.67
மி.ன்), பிற வகைகள்(3.11
மி.ன்)
விஸ்கி மொழி!
Angel's Share: விஸ்கியை பேரல்களில் அடைக்கும்போது ஆவியாதலால் ஏற்படும் தோராய இழப்பு 2%.
20 ஆண்டுகள் பழமையான விஸ்கியில் 40% இழப்பு ஏற்படும்.
Bottled in Origin: ஸ்காட்ச் விஸ்கி சட்டப்படி(2009), ஸ்காட்ச் விஸ்கியை
பல்க்காக இறக்குமதி செய்து, பாட்டிலில் அடைத்து அந்நாட்டின் உள்நாட்டு
சந்தையில் விற்பார்கள்.எ.கா: வாட் 69, அமெரிக்காவின் Jim Beam.
No Age Statements(NAS): சில விஸ்கிகள்
தயாரித்தவுடன் குடித்தால்தான் கிக்காக இருக்கும் என்பதால், தயாரிக்கப்பட்டு
எத்தனை நாட்கள் ஆனது என்ற டீட்டெய்ல் லேபிளிலில் இருக்காது.
Single Malt
பார்லியில் தயாரிக்கப்படும் விஸ்கி, எக்ஸ்க்ளூசிவ்வாக பானை மூலம் டிஸ்டிலேஷன் செய்யப்படுகிறது. இதில் கூடுதலாக காரமல்(E150) நிறத்திற்காக பயன்படுகிறது.
சிங்கிள் மால்ட் அந்தஸ்து பெற, 700 லிட்டர் கொள்ளளவு
கொண்ட ஓக் பேரலில் மூன்று ஆண்டுகள் விஸ்கி கவனமாக பராமரிக்கப்பட வேண்டும்.
Whisky
ஸ்காட் நாட்டினர் உச்சரிக்கும் லீகல் வார்த்தை இதுதான்.அமெரிக்கா மற்றும் அயர்லாந்து விஸ்கிகளை தவிர்த்து பிற தயாரிப்புகள் இப்பெயரைச்
சூடியே ரிலீசாகின்றன. Whiskey என்பது 18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் குடியேறிய அயர்லாந்து அகதிகளால் விஸ்கிக்கு
உருவான பெயர். ஐரிஷ் பெயருக்கு, ஸ்காட்லாந்தின்
செல்டிக் எழுத்து வடிவம் என்பதால் கூடுதல் e இணைந்துள்ளது.
நன்றி: குங்குமம்
தொகுப்பு: கோமாளிமேடை டீம்