இந்தியாவின் முதல் என்ஜிஓ!-ச.அன்பரசு


அபானிந்திரநாத்  தாகூர்



நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கும் இந்தியாவின் முதல் என்ஜிஓ!-.அன்பரசு






இன்று இந்தியாவில் மூலை முடுக்கெங்கும் நிறைந்துள்ள பல்வேறு என்ஜிஓக்கள், சமூகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தந்துவருகின்றன. 1916 ஆம் ஆண்டு கொல்கத்தாவைச் சேர்ந்த சுதேசி தலைவரான சுரேந்திரநாத் பானர்ஜி, மக்களை இணைத்து உருவாக்கிய பெங்கால் ஹோம் இன்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் நூறாண்டு கடந்து இன்றும் நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களின் கலைமுயற்சிகளுக்கு உதவி வருகிறது.

சுதேசி இந்தியா!

இந்தியாவின் முதல் என்ஜிஓவான பெங்கால் ஹோம் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷனின் வயது 101. இந்தியாவை தன் தாயாக நேசித்த கொல்கத்தாவின் சுரேந்திரநாத் பானர்ஜியின் சுதேசி இயக்கத்தின் மூலமாக சிறுதொழில்கள் என்ற பிரிவை வணிகத்தில் உருவாக்கினார். இந்தியாவை தன் பொருட்களுக்கான சந்தையாக காலனி நாடாக மாற்ற முயன்ற கிழக்கிந்திய சுரேந்திரநாத்தின் முயற்சியை எப்படி ஏற்கும்?

இங்கிலாந்தின் வரி தந்திரம்!

அன்று இங்கிலாந்தின் லங்காஷையரிலிருந்து இந்தியாவில் குவிந்த அந்நிய துணிகளின் அளவு 70 சதவிகிதம். இதில் இந்திய துணிகளின் பங்கு 28 சதவிகிதம்தான். இந்தியாவின் சுயசார்பான தொழில்களை புல் பூண்டின்றி நசுக்க ஆங்கிலேயர்கள் வரிகளை ஆயுதமாக்கினர். இந்தியப் பொருட்களுக்கு 70-80% வரிவிதித்து, தங்களுடைய துணிகளை இறக்குமதி செய்ய 2.5% என வரியை கட்டரேட்டில் அமைத்து உள்நாட்டு சந்தையை அழித்ததோடு திட்டமிட்டு பஞ்சத்தையும் ஏற்படுத்தினர். முதல் உலகப்போரின் (1914-1918) காலகட்டத்தில் இந்தியாவிலிருந்த கனிமங்களான மைக்கா, டங்க்ஸ்டன், வெடியுப்பு, மரம், துணி ஆகியவை இங்கிலாந்துக்கு ஏராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டன. அச்சமயத்தில் இந்தியாவில் செயல்பட்டவை நூற்பு மில்களே  அதிகம்.

கலைஞர்களுக்கு ஆக்சிஜன்!

 போருக்கு பின்,  இந்தியாவில் 25 சதவிகிதம் தறிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. மொராக்கோ யாத்ரீகர் பதூதா, வங்காளத்தில் நெய்த மஸ்லின் துணிகளின் பெருமையை தன் குறிப்பில் எழுதியுள்ளார் என்றால் ஆங்கிலேயர்கள் அந்த பிஸினஸை சும்மா விடுவார்களா என்ன? பிரிட்டிஷ் அரசு, இந்தியக் கலைஞர்களின் பொருட்களை சந்தையில் விற்கமுடியாதபடி வரியை ஏற்றி, தேங்கிய சரக்குகளை மலிவு விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் சம்பாதித்தன. அதேநேரத்தில் லாபம் பெறக்காரணமான ஏழை நெசவாளர்கள் வறுமை, பட்டினியால் மெல்ல இறப்பை நெருங்கிக்கொண்டிருந்த சமயம் அது

 பசி,பட்டினியால் சிதைவுக்குள்ளான நெசவாளர்கள் கலைஞர்களின் வாழ்வைக் காக்க கொல்கத்தாவைச் சேர்ந்த ககனேந்திர தாகூர், இவரது சகோதரரான அபா நிந்த்ராநாத் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிஜாய் சந்திர மாஹ்தப் ஆகியோர் கொண்ட குழு முடிவு செய்தது. இதன் முதல் கௌரவ செயலாளராக ஓவியக்கலைஞர் ககனேந்திரநாத் தாகூர் பொறுப்பேற்றார். "சேலையில் வாத்து உள்ளிட்ட பேட்டர்ன் டிசைன்களை முதன்முதலில் பிரிண்ட் செய்து வங்காள கவர்னரின் மனைவி கார்மிசாயலை வியக்க வைத்தார். விரைவிலேயே தாகூரின் டிசைன் அனைவரது மனங்களையும் கொள்ளையடித்துவிட்டது" என்கிறார் பர்த்வான் அரசகுடும்பத்தைச் சேர்ந்த, சங்கத்தின் உறுப்பினரான நந்தினி மாஹ்தப்.

மெருகேறும் வாழ்வு!

அன்றிலிருந்து இன்றுவரை பெங்கால் இன்டஸ்ட்ரீஸ் அமைப்பின் முக்கியப்பணி, அந்நியப்பொருட்களை தவிர்த்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமே. கிராமத்திலுள்ள கலைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களின் படைப்புகளை விற்க உதவியது இவ்வமைப்பு. தாகூர் சகோதரர்கள் கலைஞர்களின் படைப்புகளில் அதீத சிரத்தை, நேர்த்தியை புகுத்தி எலைட் வாடிக்கையாளர்களின் கவனத்தையும் மேக்னட்டாய் ஈர்த்து விற்பனையை பெருக்கினர்.

தற்போது ராஸ்பெகாரி அவென்யூவில் செயல்பட்டுவரும் பெங்கால் அசோசியேஷன், Banglanatak.com  என்ற அமைப்புடன் இணைந்து தொன்மையான நாடக கலைவடிவங்களை மீட்டெடுக்க முயற்சிக்கிறது. அதோடு, 'படசித்ரா' என்ற பிராண்டில் டீஷர்ட்டுகள், ட்ரவுசர்கள்,மஃப்ளர்கள், குஷன் கவர்களை தயாரிக்கின்றனர். ரோஷனாரா என்ற ரேயான்-பருத்தி இழையில் போர்ச்சுகீசிய வேலைப்பாடுகள் கொண்ட புடவைகள் சூப்பர் ஸ்பெஷல். "எங்களுடைய கலைஞர்களுக்கு போர்ச்சுகீசிய கட்வொர்க் வேலைப்பாடுகளை கற்றுத்தந்து வருகிறோம்" என்று விவரிக்கிறார் நந்தினி.

பாரம்பரிய விருட்ஷம்!

BHIA கடை முதலில் ஹாக் மார்க்கெட்டில் அமைக்கப்பட்டது. சந்தைக்கு வரும் மக்கள் கடைக்கு வருவார்கள் எனக்கருதிய ககன்தாகூர் ஐடியா இது. சுதந்திரத்திற்கு பிறகு சௌரிங்கி சாலைக்கு கடை இடம்பெயர்ந்தது. பிறகு, பத்தாண்டு காலம் காமக் சாலையில் விஸ்தார கட்டிடத்தில் செயல்பட்டது இக்கடை தற்போது, ராஸ்பெகாரி அவென்யூவில் மாடர்ன் அழகில் அமைக்கப்பட்டுள்ளது.


ககனேந்திரநாத் தாகூர்!


மேற்கு வங்காளத்தின் இளவரசரான துவர்க்கநாத் தாகூரின் கொள்ளுப்பேரன் ககன்(1867-1938).ராயல் வம்சத்து வாரிசான ககனேந்திர தாகூர் மிகச்சிறந்த ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்டும் கூட. அபனிந்திரநாத் மற்றும் ககன் வங்காள கலைப்பள்ளியில் படித்து சாதித்த முக்கிய படைப்பாளிகள். வாட்டர்கலர் ஓவியரான ஹரிநாராயண் பந்தோபாத்யாயவிடம் ஓவிய அடிப்படைகளை கற்றவர், பின்னாளில் தனது சகோதரருடன் இணைந்து Indian Society of Oriental Art அமைப்பைத் தொடங்கினார். Rupam(1906-1910) எனும் கலை இதழை தொடங்கி நடத்தினார். நாடகம்,குழந்தைகள் இலக்கியம் ஆகியவற்றில் படைப்புகளை தந்த ககன், ரவீந்திரநாத் தாகூரின் ஜீவன்ஸ்மிருதி(1912) நூலை தனது பாணியில் ஓவியங்களாக வரைந்தது முக்கிய முயற்சி. க்யூபிச முறைகளில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்ட இன்றும் நினைவுகூரப்படும் ஆளுமை ககனேந்திரநாத் தாகூர்.  

நன்றி: குங்குமம்
தொகுப்பு: ஜமீலா, கல்யாண் கொனெட்டா