"உண்மையை உலகிற்கு சொல்வதே பத்திரிகையாளரின் வேலை"





"உண்மையை உலகிற்கு சொல்வதே  பத்திரிகையாளரின் வேலை"
நேர்காணல்: மைக்கேல் ரெசண்டெஸ்
தமிழில்: .அன்பரசு

போஸ்டன் க்ளோப் பத்திரிகையில் புலனாய்வு செய்தியாளராக 20 ஆண்டுகள் பணிபுரிந்த புலிட்ஸர் பரிசு வென்றுள்ள மைக்கேல், பத்திரிகையாளர், ஆசிரியர் என பல்வேறு பதவிகளை திறம்பட வகித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு கத்தோலிக்க சர்ச்சில் நடந்த பாலியல் விவகாரங்களை எழுதியது மைக்கேலின் பெயரை இதழியல் உலகம் தாண்டி பலரது மனதிலும் கவனப்படுத்தியது. பின்னர் வெளியான ஸ்பாட்லைட் படமும் இவரது கட்டுரையைப் பற்றியதேயாகும். அண்மையில் இந்தியாவிற்கு செய்தி மாநாட்டில் கலந்துகொண்ட மைக்கேல் ரெசண்டெஸிடம் பேசினோம்.

அமெரிக்க பத்திரிகைத்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த முக்கிய மாற்றமாக நீங்கள் எதைக் கூறுவீர்கள்?

மிக சிக்கலான காலகட்டம் இது. அமெரிக்காவிலுள்ள பல்வேறு பாரம்பரிய செய்தி நிறுவனங்களும் கூட நிதி நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியவில்லை. நாளிதழ்களின் வருமான வழிகள் அனைத்தும் இணையத்தில் பாதாளத்தில் விழுந்துவிட்டன என்பதுதான் இன்றைய நிலை. பல்வேறு நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை வேலையை விட்டு நீக்குகின்றன, சம்பளத்தை வெட்டுகின்றன என அமெரிக்கா முழுவதும் இதுதான் நிலைமை.  

நிதி நிலைமை பாதிப்பை சீர்செய்வது எப்படி?
செய்தி வெளியிடுவதற்கான புதிய மாடல்களை யோசிக்கவேண்டிய நேரமிது. வணிக நோக்கமற்ற மாடல்கள் மேல் எனக்கு ஆர்வம் திரும்பியுள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற நன்கொடை பெற்று சில அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன எ.கா: Pro Publica, centre for integrity, Centre for Investigative Reporting ஆகியவை சிறப்பாக செயல்படுவதோடு செய்திகளும் நன்றாக இருக்கின்றன. ஆனால் இது சரியானதல்ல. பல்வேறு செய்தி நிறுவனங்களும் நிதியில்லாததால் செய்திகளை சேகரித்து வெளியிடமுடியாமல் தவித்து வருகின்றன. இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட தடுமாற்றம். இதற்கான தீர்வு விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன்.

போஸ்டன் க்ளோப் பத்திரிகையில் இன்றும் 5000 வார்த்தைகளில் எழுதப்பட்ட உங்களது கட்டுரையைப்போல  பரபரப்பாக வாசிக்கப்பட்டது வேறு எதுவுமில்லை. அது பற்றி கூறுங்கள்.

நான் எழுதிய ஸ்பாட்லைட் கட்டுரைகளை மக்கள் வரவேற்றது எனக்கும் ஆச்சர்யம்தான். அதேசமயத்தில் சுவாரசியமாக, வசீகரமான வடிவில், அமர்க்களமாக எழுதப்பட்ட கட்டுரைகளையும் மக்கள் வாசித்தார்கள் என்பதே உண்மை. மக்கள் படிக்க வேண்டும் என்பதற்காக உழைத்து எழுதிய கட்டுரைகளை நேரம் ஒதுக்கி அவர்கள் வாசித்தது எனக்கு மகிழ்ச்சிதான்.

நீங்கள் உங்களது இணையதளத்தில் வாசித்த கட்டுரை எது?

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் தரமற்ற அலட்சிய சிகிச்சைகள் பற்றி ஸ்பாட்லைட் கட்டுரைகளை படித்தேன். அங்கு சிகிச்சை பெறும் பலரும் முதுகெலும்பு அடிபட்டதால் பாதி உடல் செயலிழந்து படுக்கையில் கிடப்பவர்கள். அவர்கள் பற்றிய கட்டுரை இணையத்தில் ஏற்றிய சில மணி நேரங்களிலேயே மருத்துவமனைக்கு பொறுப்பான இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து தூக்கியெறியப்பட்டனர். மற்றகட்டுரைகளை முழுக்க நான் படிக்கவில்லை. ஆனால் மக்கள் அதிகம் படித்த கட்டுரை இதுதான் என உங்களிடம் பெட் கூட கட்டுவேன்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் உள்ள நிலையில் புலனாய்வு செய்திகளை சேகரிப்பது எப்படி அமையும் என நினைக்கிறீர்கள்?

பத்திரிகைப்பணி என்பது இன்று பொருளாதார நசிவில் சிக்கியுள்ளது. அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பம் பிஸினஸ் செய்வதில் பேரார்வம் கொண்டவர்கள். சிக்கல்கள் இருந்தாலும் புலனாய்வு செய்திப்பணிக்கு இது பொற்காலம் என்பேன். இங்கு செய்யவேண்டிய ஏராளபணிகள் காத்துக்கிடக்கின்றன.

உங்களை இம்ப்ரஸ் செய்த செய்திக்கட்டுரைகள் ஏதேனும் உள்ளதா?

அசோசியேட் பிரஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர்கள் அடிமைகள் தயாரிக்கும் கடல் உணவுகள் பற்றி எழுதிய கட்டுரையை வாசித்து பிரம்மித்து போனேன். வடகிழக்கு ஆசியா பகுதியைச் சேர்ந்த அடிமைத் தொழிலாளர்கள் தயாரிக்கும் கடல் உணவான மீன், பல்லாயிரம் கி.மீ கடந்து அமெரிக்கர்களின் டேபிளை வந்தடையும் கதை அது. உண்மையிலேயே அற்புதமான கட்டுரை இது.

கத்தோலிக்க சர்ச் குறித்த ஸ்பாட்லைட் கட்டுரை உங்களை தனித்துவமாக அடையாளம் காட்டியது அதிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?

அதிகாரத்தை தொடர்ந்து தளர்வுறாமல் கேள்வி கேட்பதைத்தான்.

இந்தியாவிற்கு வந்திருக்கும் நோக்கம் என்ன?

ஸ்பாட்லைட் கட்டுரைக்கான முக்கியபணியின் இறுதிகட்டத்தில் இருக்கிறேன். இந்தியப்பயணம் நான்கு நாட்கள்தான். அதை முடித்துவிட்டு உடனே போஸ்டன் செல்லவேண்டும். இந்த மாநாட்டில் சிறந்த நட்புணர்வு கொண்ட மனிதர்களை சந்தித்தேன். நேரமிருந்தால் தாஜ்மஹால் பார்க்க விரும்புகிறேன்.


நன்றி: Vidhi Choudhary, Livemint
நன்றி: முத்தாரம்

தொகுப்பு: கா.சி.வின்சென்ட்

பிரபலமான இடுகைகள்