அள்ளித்தந்த இந்திய வள்ளல்கள்!
அள்ளித்தந்த இந்திய வள்ளல்கள்- ச.அன்பரசு
பணமதிப்பு நீக்கமோ, ஜிஎஸ்டி வரியோ எதுவும் புதிய இந்தியாவில் அள்ளித்தரும் இந்தியர்களின் கருணையை
தடுக்கமுடியவில்லை. நாங்கள் சொல்லவில்லை. சொல்வது சாரிட்டி எய்ட் பவுண்டேஷனின் 2017 ஆம் ஆண்டு
அறிக்கை. 140 நாடுகள் இடம்பெற்றிருந்த லிஸ்ட்டில் இந்தியர்கள்
வள்ளல் தன்மை 2016 ஆம் ஆண்டில் பெற்றிருந்த ரேங்க்
91. இந்த ஆண்டில் சரசரவென பத்து இடங்கள் அடித்து பிடித்து முன்னேறி
81 இடம்பிடித்தது அருட்பெரும் சாதனைதானே!
"கடந்த பத்தாண்டுகளாக கார்ப்பரேட் நிறுவனங்களில்
வாரத்திற்கு ஐந்து நாட்கள்தான் வேலை என்பதால் ஆண்டிற்கு கிடைக்கும் 50 நாட்களும், பொருளாதார வலிமையும் முக்கியக் காரணம்.
தங்களுக்கு கிடைத்த நேரத்தில் மக்கள் சமூகம் குறித்து சிந்தித்ததன் விளைவு
இது" என உற்சாகமாக பேசுகிறார் தான் உற்சவ் விழாவின் தன்னார்வலரான
வெங்கட் கிருஷ்ணன்.
இன்று சோஷியல் தளங்களில் உதவி என பதிவிட்டாலே கருத்துக்கு
இசைந்த இளைஞர் படை பெரும் டீமாய் கிளம்பும் என்பதற்கு சென்னையில் இயற்கை பேரிடர்நிகழ்வுகளே
சாட்சி.
"இன்று நீங்கள் உதவிக்காக உங்கள் சொந்தங்களையோ, நண்பர்களையோ எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனில் அறிமுகமற்ற நண்பர்கள் ஆயிரத்திற்கும் மேல் களத்தில் உதவிக்கு வருவார்கள்.
வார விடுமுறை நாட்களில் பணிபுரிபவர்கள் மெல்ல தன்னார்வ நிறுவனத்தையும்
தங்களின் செயல்பாட்டின் வழியே புரிந்துகொள்கிறார்கள்" என்கிறார்
ILSS அமைப்பின நிறுவனரும், சென்ட்ரல் ஸ்கொயர் பவுண்டேஷன்
ஆலோசகருமான அனு பிரசாத். உண்மையில் நகரமயமாகிவரும் இந்திய மக்கள்
உண்மையில் பிறருக்கு தரும் வள்ளல் எண்ணம் வளர்ந்திருக்கிறதா? என்ஜிஓக்கள் எப்படி செயல்பாடுகளுக்கான மனிதர்களையும், நன்கொடைகளையும் பெறுகிறார் என்பதற்கு மூன்று என்ஜிஓக்களின் ஸ்டோரி இதோ.
கார்டர் சாலை க்ளீன்அப்!
மும்பை நகரில் தினசரி குவியும் கழிவுகளின் எண்ணிக்கை
7,700 மெட்ரிக் டன்கள் என்கிறது மும்பை கார்ப்பரேஷன் அறிக்கை.
மக்கள் பலரும் ஆச்சரியமாக பார்க்கும்படி கடற்கரையோரமாக உள்ள கார்டர்
சாலையின் ஒரு கி.மீ. தூரத்திற்கு
40 தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து சுத்தம் செய்து அதனை பளிச் என மாற்றியுள்ளனர்.
இந்த க்ளீன்அப் நிகழ்வுக்கு ஒருங்கிணைப்பு மும்பையைச் சேர்ந்த அன்யா
ரங்கசுவாமி.
மும்பை பாந்த்ராவின் கார்டர் சாலையில் நான்கு ஆண்டுகளாக
வசித்துவரும் அன்யா, வாக்கிங் செல்லும்போது சாலையில்
கிடந்த குப்பைகள் அருவருப்பைத் தர தினமும் தன்னால் முடிந்தவரை அகற்றத்தொடங்கினார்.
பின்னர் அவரது தோழிகளின் யோசனைப்படி பிளானை ஃபேஸ்புக்கில் ஏற்ற,
பதிவு வைரலாகி குவிந்த உதவிகளின் மூலம் நடந்ததுதான் மேலே நீங்கள் படித்த
மேஜிக் சுத்தம். "பத்து வாரங்கள் வீக் எண்டில் நடைபெற்ற
சுத்தப்பணிகள் இவை. ஆறு வயது குழந்தையிலிருந்து அறுபது வயது பெண்மணி
வரை ஏறத்தாழ நாற்பது பேர் தூய்மைப்பணிக்கு வந்தது என்னால் நம்பவே முடியவில்லை"
என்கிறார் அன்யா ஆச்சர்யம் விலகாமல். பலரும் பாந்த்ரா
பகுதிக்கு வெளியே புனே உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தூய்மை பணிக்கு வந்ததுதான் ஸ்பெஷல்.
தனியொருவராக செய்வதைவிட குழுவாக செய்யும் பணியில் திருப்தியும் அதன்
தாக்கமும் பெரியது என்பது அன்யா கற்ற பாடம்.
ராபின்ஹூட் ஆர்மி!
இது சண்டைபோடும் ஆர்மியல்ல. ஏழை எளியோரின் பசிபோக்கும் படை. "போர்ச்சுக்கலில்
லிஸ்பனில் வாழ்ந்தபோது ரீஃபுட் அமைப்பின் பணிகளை
பார்த்து தொடங்கிய அமைப்பு இது. முதல்நாளில் டெல்லியிலுள்ள
150 நபர்களுக்கு பசி தீர்த்தோம்" என்கிறார்
2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ராபின்ஹூட்(RHA) ஆர்மி அமைப்பின் துணைநிறுவனரான நீல் கோஸ். இன்று இந்தியாவின்
48 நகரங்களில் மாதத்திற்கு 2 லட்சத்திற்கும் அதிக
மக்களின் பசி தீர்க்குமளவு வளர்ந்திருக்கிறது ராபின்ஹூட் ஆர்மி.
ஹோட்டல்களில் மீதமாகும் உணவுகளைப் பெற்று மக்களுக்கு
வழங்க நீல் கோஸூக்கு இங்கும் கைகொடுத்தது சோஷியல்தளங்கள்தான்.
12,300 தன்னார்வலர்களின் உதவியுடன் டெல்லியில் 25 ஹோட்டல்களின் ஆதரவைப் பெற்று ஏழைகளின் பசி தீர்க்க உழைக்கிறது ராபின்ஹூட் ஆர்மி.
"கடந்தாண்டு லத்தூரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்காக, உதவி
தேவைப்பட்டபோது 75 ஆயிரம் லிட்டர் குடிநீர் கேன்களை மக்களுக்கு
சப்ளை செய்த தருணம் முக்கியமானது" என்கிறார் சோஷியல்தளங்களுக்கு
பொறுப்பாளரான ஆருஷி பத்ரா. கடந்த சுதந்திர தினத்திலிருந்து ஒரு
கோடிப்பேருக்கு உணவு என்பதே எதிர்கால திட்டமாக ராபின்ஹூட் ஆர்மி பிரசாரம் செய்யத்தொடங்கியுள்ளது.
"புதிய சவாலான திட்டங்களை முன்வைத்து ஊக்கமாக செயல்படுவதுதான் எங்கள்
வெற்றிக்கு காரணம்" என்கிறார் நீல் கோஸ்.
டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதி மாடர்ன் பப்ளிக்
ஸ்கூலில் மாணவர்கள் கொண்டுவரும் உணவு கடந்த இரு ஆண்டுகளாக வீணாவதில்லை. அவை அனைத்தும் நீட்டாக பாக்கெட் செய்யப்பட்டு ரொட்டி வங்கிக்கு செல்கின்றன.
2015 ஆம் ஆண்டு டெல்லியின் ஆசாத்பூர்
மார்க்கெட்டில் ராஜ்குமார் பாட்டியா, சுதீர் பெரானி மற்றும் நண்பர்களால்
தொடங்கப்பட்ட ரொட்டி பேங்க், இன்று தினசரி 3 ஆயிரம் பாக்கெட்டுகள் உணவை 58 மையங்கள் வழியாக இந்தியா
முழுக்க விநியோகிக்கிறது. இதில் மாடர்ன் பப்ளிக் பள்ளியின் பங்கு
மட்டுமே 700 பாக்கெட்டுகள். "பிறந்தநாள்,
விழாக்களின்போது உணவு தேவைக்கு அதிகமாக குவியும். பள்ளி விடுமுறையாக இருக்கும்போது ஏற்படும் பற்றாக்குறையை சமாளிப்பதே பெரிய
சவால்" என்கிறார் பெரானி.
ரொட்டி பேங்கின்
வெற்றியால் இந்தியாவெங்கும் பல்வேறு இடங்களில் இதே பெயரில் அல்லது கானா பேங்க் எனவும்
தொடங்கப்பட்டிருப்பதே திட்டத்தின் வெற்றிக்கு சாட்சி. "எங்களது
பிளான் மாடல், அல்லது பெயர் என எதை பயன்படுத்தினாலும் எங்களுக்கு
ஆட்சேபனையில்லை. மக்களின் பசியை யார் தீர்த்தால் என்ன?"
என பக்குவமாக பேசுகிறார் ராஜ்குமார் பாட்டியா. சிறுவயதிலேயே மாணவர்களின் மனதில் நல்ல விஷயங்களை பதித்தால் பிறருக்கு பகிரும்
குணத்தை வளர்க்கலாம் என்பது இவர்கள் கற்றுக்கொண்ட அனுபவம். தானம்
உலகிற்கே நல்லது!
தான கொண்டாட்டம்!
மார்ச் 2009 ஆம்
ஆண்டு விளம்பர ஏஜன்சியான EuroRSCG India வால் தொடங்கப்பட்ட பகிர்தலைக் கொண்டாடும் விழா.அக்டோபர்
2-8 நாட்கள் என ஆண்டுதோறும் ஏழு நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவிற்கு
Joy of Giving Week(தற்போது
DaanUtsav) என்பது முந்தைய பெயர். இந்தியாவைச் சேர்ந்த என்ஜிஓக்களின் தன்னார்வலர்கள் ஒருங்கிணைத்து நடத்தும்
விழா இது. ஒரு வாரம் நடைபெறும் விழாவில் ஆட்டோ டிரைவரிலிருந்து
கார்ப்பரேட் சிஇஓக்கள் வரை பங்கேற்று தங்களால் முடிந்த உதவிகளை(பணம்,நேரம்,திறன்கள்) பிறருக்கு வழங்கலாம். 2016 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள
200 நகரங்கள் தான விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நாடு
முழுவதும் நடத்தி பலகோடி நன்கொடைகளையும் பெற்று பிறருக்கு வழங்கினர்.
ராபின்ஹூட் ஆர்மி
பண உதவிகளுக்கு நோ சொல்லி உதவுபவர்களின் நேரம் மட்டுமே
தேவை என பசி தீர்த்து உணவு வீணாவதைத் தடுக்கும் அமைப்பு. 48
நகரங்களிலுள்ள 12 ஆயிரத்து 350 உறுப்பினர்கள் இதுவரை 34 லட்சத்து 36 ஆயிரத்து 531 ஏழை எளியர்களின் பசித்தீயை அணைத்திருக்கிறார்கள்.
இதன் தன்னார்வலர்கள் அனைவரும் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களே.
இதில் தொடக்க கல்வியை பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு அளிக்கிறது ராபின்ஹூட்
அகாடமி. பத்தொன்பது நகரங்களில் வார இறுதியில் கல்வி போதிக்கும்
அமைப்பு இதுவரை 1250 குழந்தைகளுக்கு கல்வி வெளிச்சம் பாய்ச்சியுள்ளனர்.
ரொட்டிபேங்க்
வேலை கேட்டு வந்த மனிதர், காசை மறுத்து சாப்பிட ரொட்டி கேட்ட நிகழ்வால் டெல்லியிலுள்ள ஆஸத்பூர் மார்க்கெட்டில்
2015 ஆம் ஆண்டு ராஜ்குமார்,சுதீர், சோனிக் ஆகிய நண்பர்களால் உருவான அமைப்பு. டெல்லியில்
பத்து மையங்களுடன் பல்வேறு ஊடக அமைப்புகளின் உதவியுடன் ஏழைகளின் பசி தீர்க்க உழைத்து
வருகிறது.
நன்றி: குங்குமம்