புத்தம் புது அறிவியல் !





மனதின் ஆற்றல் என்ன செய்யும்?

எக்ஸ்மேன் படத்தில் ஜீன் கிரே, புஷ் படத்தில் நிக் கன்ட் என இரு கேரக்டர்களும் மனோஇயக்கவியல் சக்தியை பயன்படுத்தி கெத்து காட்டுவார்கள்.
1800 ஆண்டுகளின் பிற்பகுதியில் மனதின் ஆற்றலைப் பயன்படுத்தி பொருட்களை தூக்குவது, பறப்பது உள்ளிட்ட விஷயங்களை செய்யமுடியும் என அறிவியல் முறையில் நிரூபிக்கப்பட்டது. எழுத்தாளர் ஆர்தர் கானன் டாயல் எழுத்தாளர், இவற்றை பொய் என நம்பினார்.


1940 இல் ட்யூக் பல்கலைக்கழக பேராசிரியரான ஜே.பி. ரைன் என்று ஆராய்ச்சியாளர் இதுகுறித்து ஆராய்ந்தார். தாயங்களை உருட்டுவது, பொருட்களை நகர்த்துவது ஆகியவற்றை குறிப்பிட்டார். ஆனால் இந்த ஆராய்ச்சியில் பல்வேறு தடுமாற்றங்கள் இருந்ததால் பிற ஆராய்ச்சியாளர்கள் இதனை புறக்கணித்துவிட்டனர். தன் மன இயக்க ஆற்றலால்(ஸ்பூனை வளைப்பது, வாட்ச் கண்ணாடியை உடைப்பது) உலகெங்கும் சாதனைகளைச் செய்தவர், உரி கெல்லர்.  ரஸ்ஸல் டார்க் எழுதிய "The Reality of ESP" (2012, Quest Books) நூல் இது பற்றிய உண்மைகளே ஆதாரப்பூர்வமாக அலசுகிறது.  
2
அரிய சாலமாண்டர் பல்லி!

குவாத்திமாலாவில் அழிந்துவிட்டது என ஆராய்ச்சியாளர்களால் கருதப்பட்ட அரிய சாலமாண்டர் பல்லி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; அதுவும் 42 ஆண்டுகளுக்கு பிறகு. 1975 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆய்வாளர்களின் கண்ணிலேயே படாத சாலமாண்டர் பல்லி தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது கண்டறியப்பட்டுள்ள Bolitoglossa jacksoni என்ற பல்லிக்கு கோல்டன் ஒன்டர் என்று பெயர். Finca San Isidro Amphibian Reserve பகுதி வனக்காவலரான ரமோஸ் லியோன் சாலமாண்டர் பல்லியைக் கண்டறிந்து, படமெடுத்து USAC பல்கலைக்கழக உயிரியலாளர் ஆராய்ச்சியாளரான கார்லோஸ் வாஸ்க்வசுக்கு அனுப்பியிருக்கிறார். பால் இலியாஸ், ஜெர்மி ஜாக்ஸன் என்ற இரு மாணவர்கள்தான் 1975 ஆம் ஆண்டு இரு சாலமாண்டர் பல்லிகளை  Sierra de los Cuchumatanes காட்டில் முதன்முறையாக கண்டறிந்தனர். அழிந்துவிட்ட உயிரிகள் லிஸ்டில் கூட சாலமாண்டர் பல்லிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் புதிய கண்டுபிடிப்பு நம்பிக்கை தந்துள்ளது.    

 3
டிகாப்ரியோவின் பசுமை முதலீடு!

விலங்கு பண்ணைகள் பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடுவது உண்மைதான். அதற்காக சப்வே பர்கரை மெல்லும்போதெல்லாம் உலகத்தை நினைத்து எமோஷனல் ஆக வேண்டாம். டிகாப்ரியோ போல வீகன் பர்கர் நிறுவனத்தில் கூட முதலீடு செய்து கொள்கையை காப்பாற்றலாம். வேர்க்கடலையில் புரதத்தை மூலமாக கொண்ட பர்கர் இது. பீட்ரூட் சாறு பீஃப் பர்கர் போன்ற ஸ்டைலைத் தருகிறது. "சூழலைக்காக்க விலங்கு இறைச்சியிலிருந்து தாவரம் சார்ந்த உணவுகளுக்கு மாறுவது அவசிய முயற்சி" என்கிறார் ஹாலிவுட் நடிகரான டிகாப்ரியோ.

2009 ஆம் ஆண்டு தொடங்கிய உணவு நிறுவனமே, Beyond Meat. இந்நிறுவனத்தின் பொருட்கள், உலகம் முழுவதும் 11 ஆயிரம் கடைகளில் விற்கப்படுகின்றன. டிகாப்ரியோ தனது பவுண்டேஷன் மூலம் பல்வேறு இயற்கை சூழலைக்காக்கும் நிறுவனங்களுக்கு 80 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அளித்து வருகிறார். மாற்று இறைச்சிக்கான சந்தை 2020 இல் 5.2 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்பது சந்தை வல்லுநர்களின் கணிப்பு.
 4
இந்தியர்களின் சூப்பர் டிசைன்!

இன்று மேட் இன் சீனா மூலைமுடுக்கெங்கும் கோலோச்சினாலும் மேட் இன் இந்தியா பொருட்களுக்கான மவுசு தனி. அப்படிப்பட்ட பொருட்களை Pukka Indian என்ற நூலில் ஸ்பெஷலாக  அடையாளப்படுத்தியுள்ளார் ஜான்வி லகோடா நந்தன்.

அம்பாசிடர்

1957 ஆம் ஆண்டு இந்துஸ்தான் மோட்டார்சின் தயாரிப்பு. வெளிநாட்டு கார்களுக்கு தடை இருந்த 1983 ஆம் ஆண்டு வரை இந்தியச்சாலைகளை ஆண்ட நம்ம ஊரு கார் அம்பாசிடர்தான். கொல்கத்தாவில் இன்றும் 33 ஆயிரம் அம்பாசிடர்கள் உழைத்து வருகின்றன. தொண்ணூறுகளின் தாராளமயமாக்கத்திற்கு விற்பனை குறைந்த அம்பாசிடர், 2014 ஆம் ஆண்டு மே மாதம் தயாரிப்பை நிறுத்திக்கொண்டது.

மைசூர் சாண்டல் சோப்பு

கர்நாடகாவின் சந்தனப்பெருமைக்கு சூப்பர் சாம்பிள். 1916 ஆம் ஆண்டு உருவான கர்நாடகா சோப்ஸ் நிறுவனத்தின் பெருமைமிக்க  No.1 சோப். மன்னர் நால்வாடி கிருஷ்ணராஜா உடையாரின் ஐடியா இது. 1960 ஆம் ஆண்டு சூப்பர் பேக்கேஜில் ஷரபா லோகோவுடன் ரிலீசான டிசைன் இன்றும் மாற்றப்படவில்லை. ஒரு ஆண்டுக்கு 450 டன்கள் தயாரிக்கப்படும் மைசூர் சாண்டல் இந்தியர்களின் வாழ்வில் தவிர்க்கமுடியாத அங்கம் கூட.

ஜோலா பை

நமக்கு ஜோல்னா பை. இதன் அதிகாரப்பூர்வ விளம்பர தூதர், மோகன்தாஸ் காந்தி. உப்பு சத்தியாகிரகத்துக்காக அகமதாபாத் - தண்டி வரை 23 நாட்கள் 300 கி.மீ வரை நடைபயணமாக சென்ற காந்தி ஜோலாவை இந்தியாவெங்கும் பிரபலப்படுத்தினார். எளிமையான நூல்பையை பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள்,தீவிர சினிமா இயக்குநர்கள் பின்னாளில் தம் ஆறாம் அறிவின் குறியீடாக மாற்றினர்.

சர்க்கா

கிபி 500-1000 காலகட்டத்தில் தோன்றிய நவீன இ்ந்தியாவின் ஐகான். இதன் தூதரும் காந்திதான். மில்கள் தொழிலாளர்களை வஞ்சிக்க, தற்சார்பு பொருளாதாரத்தின் அடையாளமாக மக்கள் நூற்கத்தொடங்கிய ராட்டைக்கு 1931 ஆம் ஆண்டு தேசிய அங்கீகாரம் கிடைத்தது. பின்னர் வெள்ளையர்களுக்கு  எதிரான போராட்டத்தில் சுயாட்சியின் லோகோவாக மாறிய பெருமை ராட்டைக்கு உண்டு.

ஆட்டோமீட்டர்

கைதட்டியும் விசிலடித்தும் அழைத்தால் உடனே விர்ரென யூடர்ன் போட்டு பயணிகளை ஏற்றும் ஆட்டோக்களின் மெட்டல் மீட்டர்(1977). மீட்டரில் கி.மீ மற்றும் அதற்கான தொகை காட்டும் விஷயங்கள் இருக்கும். சூடு வைத்த மீட்டர் விர்ரென விலை கூட்டியதால் பல இடங்களிலும் ஏற்பட்ட பஞ்சாயத்துகள் ஏராளம். தவறுகள் இருந்தாலும் டிசைன் இந்தியாவாக்கும் என நாம் பெருமைப்படலாம்; தப்பில்லை ப்ரோ.


 5
AI கார்!

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்த எலக்ட்ரானிக் கண்காட்சியில் டொயொட்டோவின் புதிய ஏஐ கார் அறிமுகமானது. "எங்களது புதிய காரில் பயன்படுத்தியுள்ள ஏஐ தொழில்நுட்பம், வாடிக்கையாளர்களுக்கு புதிய வசீகரமாக இருக்கும்" என உற்சாகிறார் டொயொட்டோவின் பொதுமேலாளரான மகோட்டோ ஒகாபே.

தானியங்கி மற்றும் ஏஐ கார்கள் உருவாக்கத்திற்கு டொயொட்டோ 1 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்குள் உருவாக்கும் கார்களுக்கான பட்ஜெட். ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ செல்லும் கான்செப்ட் ஐ மாடல் காரில், ட்ரைவரின் முக பாவனைகளை உணர்ந்து அலர்ட் செய்யும் வசதி உண்டு. ஃபோர்டு,செவ்ரலெட் உள்ளிட்ட கார் நிறுவனங்களும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் உதவியுடன் ஏஐ கோதாவில் குதித்துள்ளன.


6
கனவு நகரம் நியோம்!

எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் எல்லைப்புறத்தில் அமையவிருக்கும் தொழில்நகரமான நியோம், 26,500 .கி.மீ, உயிரியல், நீர், உணவு, பொழுதுபோக்கு ஆகியவற்றை முக்கியமாக கொண்டது.

நியோம் முழுக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலத்தால் இயங்கவிருக்கிறது.

சவுதி அரசு, உள்ளூர், வெளிநாட்டு முதலீடுகள் என அரை ட்ரில்லியன் டாலர்களுக்கு மேல் செலவு செய்து நியோம் உருவாக்கப்படவிருக்கிறது.

சீமன்ஸ் ஏஜி, அல்கோவா இன்க் ஆகிய இரு நிறுவனங்களின் முன்னாள் இயக்குநரான கிளாஸ் க்ளெய்ன்பீல்டு இத்திட்டத்தின் இயக்குநர்.

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை இணைக்கும் மையமாக நியோம் சிட்டி 2025 ஆம் ஆண்டுக்குள் செயல்படும்.

தொகுப்பு: வஹீலா மெஹ்ரான்




பிரபலமான இடுகைகள்