சென்னை புத்தக திருவிழா 2018! நோர்வீஜீயன் வுட்- ஹாருகி முரகாமி




புத்தக அறிமுகம்நோர்வீஜியன் வுட்ஹாருகி முரகாமிஎதிர்வெளியீடுரூ.350






டோரு வாட்டனபி என்ற ஜப்பானிய இளைஞனின் பள்ளி, கல்லூரிப்பருவ காதலும் காதல் நிமித்தமுமான வாழ்க்கையே நோர்வீஜியன் வுட் நாவலாக நம்மை வசீகரிக்கிறது.

டோரு வாட்டனபி, கிஸூ, நவோகோ, நவகாசா, ஹாட்சுமி, ரெய்கோ, மிடோரி ஆகியோர் மட்டுமே முதன்மை பாத்திரங்கள். இவர்களுக்கிடையேயான உரையாடல்கள் வழியே கனவுபோல காலம் நகர்கிறது. இன்பமும் துன்பமுமான வெறுமை நிலை நம் மனதில் சீனாவின் மாசுபட்ட காற்றைப் போல நீங்காமல் படிகிறது.

கிஸூவின் தற்கொலை ஆர்ப்பாட்டமின்றி சாதாரணமாக சில வரிகளில் முடிந்துவிடுகிறது. அவன் எவ்வளவோ முயன்றும் நவோகோவுடன் உறவு கொள்ள முடியாத தோல்வி பற்றிய காரணங்கள்  திடீர் தற்கொலையை மீண்டும் நினைவுபடுத்தியபடியே இருக்கிறது. டோரு வாட்டனபி நினைவுகளின் தாக்குதலுக்குட்பட்டாலும் சுயநிலை மாறாத பாத்திரம். நவோகோ, ரெய்கோ, மிடோரி(செக்ஸ் அல்ல முத்தம் மட்டும்) என பிறரின் மனநிலை அறிந்து அச்சூழலுக்கு உவப்பானதை செய்கிறான். பாரில் அறிமுகமாகும் காதல் தோல்வி பெண்ணுடன் உடலுறவு கொள்வது உட்பட. இதை எப்படி புரிந்துகொள்வது எனில், மனதின் சுமை இறக்க உடலுறவின் நெகிழ்ச்சி தேவைப்படுகிறது. அதை வாட்டனபி நிறைவாக தியானம் போல நூல் முழுக்க செய்கிறான். ஆனால் மிடோரியிடம் மட்டும் அவளாக விரும்பினாலு்ம் தவிர்க்கிறான். அங்கே மிக நேர்மையான விருப்பத்தேர்வான காதல் மட்டுமே இருக்கிற தன்மை வாட்டனபியை தடுக்கிறது. நவோகோவுடன் உறவு நீடிக்கும்போதும்  மிடோரியுடனான காதல் துளிர்க்கிறது. இதை கடிதம் வழியே ஒப்புக்கொள்ளும் வாட்டனபியின் நேர்மை அற்புதம்.

அதேசமயம் வாட்டனபி உதாரண புருஷன் கிடையாது. நவாகாசாவுடன் பெண்களையும் ருசிபார்க்க தயங்குவதில்லை. உண்மையில் நவோகோவுடனான பைத்திய ருசி காட்டிய காதல் பெரும்வலியாய் மனதையும் உடலையும் அழுத்த டோரு பெண்களின் உடலின் வழியே புகுந்து வெளியேற நினைக்கிறேன். ஆனால் அது வலிக்கு தீர்வில்லை என்பதை உணர்கிறான். பின்னாளில் நவோகோவின் பிறந்தநாளில் அவளின் அறையில் கொள்ளும் வலியும் பேரானந்தமுமான உடலுறவு என்றும் நினைவில் வைத்துக்கொள்ளும்படியாக மிஞ்சுகிறது. அதன்பின்னர் நவோகோ குடும்ப பாரம்பரியமாக வரும் மனநிலை மற்றும் உடல்நிலை கோளாறுகளில் சிக்குகிறாள். காம உந்துதலின் போதும் யோனி நனையாத துரதிர்ஷ்டம் அவளின் தற்கொலையில் முடிகிறது. ஒருவகையில் அது டோரு,மிடோரி, ரெய்கோ ஆகியோருக்கு புதிய தொடக்கம்.

மிடோரி தந்தை உருகுவே சென்று திரும்பும்போது அந்திமத்தை நெருங்குகிற நிலையில் சாய்ந்துகொள்ளும் தோளாக இருப்பது டோரு மட்டுமே. பல்வேறு வாக்குறுதிகள், மௌனங்கள் என டோருவுக்கு வாய்ப்புகளை கொடுத்தும் ஏன் முத்தங்கள், உடலுறவுக்கு அழைத்தும் சம்மதிக்காத  புதுமை அவளை மயக்குகிறது. பின்னாளில் மனதை அடக்கி டோருவோடு பேசாத தருணம், கூட அவனை அலைகழிதலை ரசிப்பதுதான். அதாவது தான் தேவையா? என்று. க்ளைமேக்ஸ் ரகசியமாக முடிகிறது. தமிழ்சினிமா போல சுபம் போட்டு முடிப்பது முரகாமியின் ஸ்டைல் கிடையாது. மிடோரியிடம் பேசுவதோடு கதை அப்படியே முடிகிறது.

வாழ்க்கை, எதிர்காலம், பயணம், தத்துவம், மனித உறவுகளின் சிக்கல், சிடுக்கல்களை அனைத்தும் இதில் பேசுகிற ஆசிரியர் அதனை கனவு போலவே கட்டமைக்கிறார். இதில் எதிர்ப்பார்த்த எதிர்பாராத அனைத்தும் உண்டு.நவோகோவின் இறுதிச்சடங்குக்கு பின்னர்  டோருவின் பயணம் ஒரு உதாரணம். நல்ல புக், கெட்டபுக், ரேட்டிங் இதெல்லாம் முரகாமியின் நூல்களுக்கு தேவையில்லை. புதிய அனுபவத்தை பருகத் தயாரா? கண்ணைக்கட்டிக்கொள்ளுங்கள். குதித்துவிடுங்கள். மற்றதை முரகாமி பார்த்துக்கொள்வார்.

-கோமாளிமேடை டீம்
சென்னை புத்தகத்திருவிழாவில் வாங்கிய நூல் 2018
நன்றி: கே.என்.சிவராமன்(முதன்மை ஆசிரியர், குங்குமம்)