கிராமத்தை உயர்த்திய பல் டாக்டர்!
கிராமத்தை உயர்த்திய பல் டாக்டர்!-ச.அன்பரசு
டாக்டர், எஞ்சினியர் என
உயர்கல்வி கற்றவர்கள் அடுத்த அப்டேட்டாக என்ன செய்வார்கள்? ஏதேனும்
எம்பஸி வாசலில் தேவுடு காத்து உடனே பாரீன் நிலத்தில் லைஃப் போட்டை நங்கூரம் பாய்ச்சி
நிறுத்துவதுதான் கனவாக இருக்கும். மகாராஷ்டிராவிலுள்ள பல் டாக்டர்,
தன் கிளினிக்கிலேயே போன் மூலம் மக்களோடு மீட்டிங் போட்டு 70 கிராமங்களுக்கு மேல் சுகாதாரம்,குடிநீர் வசதி ஆகியவற்றை
அவர்களோடு இணைந்து பெற்றுத்தந்துள்ளார்.
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்திலுள்ள சதாரா நகரில்
வாழும் பல்மருத்துவர் அவினாஷ் பொல்தான் அந்த உதாரண மனிதர். அப்போது புனேவில் பாரதீய வித்யா பவன் பல்மருத்துவ கல்லூரியில் அவினாஷ் படித்துக்கொண்டிருந்தார்.
இலவச சிகிச்சைக்காக கிராமங்களிலிருந்து அதிகாலையிலிருந்து காத்திருக்கும்
மக்களைச் சந்தித்த அந்த நொடிதான் அவினாஷின் வாழ்க்கை பற்றிய பார்வையை மாற்றியது.
"என்னிடம் பேசிய விதவைப் பாட்டிக்கு ஈறுகள்
பெரிதாக வீங்கியிருந்தன. இலவச சிகிச்சைக்காக மருத்துவமனை வரவே
தன் வீட்டிலுள்ள பாத்திரங்களை அடகு வைத்துவிட்டு வந்திருந்தாள் என்பதை சொன்ன போது அதிர்ந்து
போனேன்" என்கிறார் அவினாஷ் பொல். கல்வியறிவற்ற,
பிறரின் ஆதரவை எதிர்பார்க்கும் விதவை பெண்களுக்கு உதவும் சஞ்சய்காந்தி
நிராதர் யோஜனா திட்டங்களை விளக்கத் தொடங்கியதோடு, கழிவறைகளையும்
அமைத்து தரும் யோசனைகள் உதவிகளை வழங்குவது அவினாஷின் பொறுப்புணர்வுக்கு சாட்சி.
பல் மருத்துவ படிப்பை சிரத்தையாக நிறைவு செய்த அவினாஷ், சதாரா நகரில் கிளினிக் அமைத்து மருத்துவம் செய்து வந்தாலும், அவரின் நினைவுகள் முழுக்க கிராமத்தில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் ஏழை
மக்களைப் பற்றியே சுழன்றது. அப்போது பெபில்வாடி கிராமத்தைச் சேர்ந்த
இளைஞர் அருணைச் சந்தித்தார். தன் கிராமத்தில் சுகாதார வசதிகளைப்
பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் லட்சியத்துடன் இருந்த அருணின் கோரிக்கையை ஏற்று,
1997 ஆம் ஆண்டு அவினாஷ் பெபில்வாடி சென்றார்.
பெபில்வாடியின் கிராம சபையைக் கூட்டிய அவினாஷ் அரசின்
சுகாதாரத் திட்டங்களை தொண்டை வறளப்பேசினாலும் மக்கள் அதில் இம்மியளவும் ஆர்வம் காட்டவேயில்லை. புதிய முயற்சிகளுக்கு ஏற்படும் புறக்கணிப்பும் ஏளனங்களும் கிடைத்தாலும் அவினாஷ்
முகத்தின் புன்முறுவலும்,மனவலிமையும் அணுவளவும் குறையவில்லை.
தன் நண்பர் அருணோடு இணைந்து பொதுக்கழிவறை ஒன்றை தீவிரமாக கட்டத் தொடங்கினார்.
தன் திட்டத்தை பிராக்டிக்கலாக நிறைவேற்றிக் காட்டியதும் மக்கள் மெல்ல
தங்கள் வீடுகளிலும் கழிவறைகளை அமைக்க அவினாஷிடம் உதவிகளைக் கோரினர். மிகச்சில ஆண்டுகளிலேயே கிராமத்துக்கு திறந்தவெளி கழிப்பறையற்ற கிராமம்(ODF)
என்ற பெயரும் கிடைத்தது என்றால் அதற்கான முழு கிரடிட்டும் அவினாஷூக்கே
சேரும்.
கிராமங்களின் முக்கிய, அவசியத்தேவை என்ன என்று ஆய்வு செய்வது, பிளானை திட்டமிட்டு
அதற்கான குறைந்த பட்ச நிதியை மக்களிடம் பெறுவது, பின்னரே அரசுகளிடம்
நிதியுதவி என்பது அவினாஷின் விக்டரி பிளான். "மக்களிடம்
நிதி பெறுவது அத்திட்டத்தின் மீது அவர்களுக்கு கவனமும் பொறுப்பும் வரவேண்டும் என்பதற்காக
மட்டுமே. அரசு திட்டங்கள் பலவும் எடுபடாமல் போனதற்கு முக்கியக்
காரணம், அவை மக்களின் பங்களிப்புடன் நிறைவேறவில்லை என்பதுதான்"
என லாஜிக் பிடித்து பேசுகிறார் அவினாஷ். தன் கிளினிக்கு
வரும் நோயாளிகளிடம் கழிவறை இல்லாத வீடுகளைப் பற்றி அறிந்துகொண்டு அக்கிராமத்துக்கு
சென்று அவர்களின் இடத்திற்கேற்ப கழிவறையை காம்பேக்ட்டாக அமைத்து கொடுப்பதுதான் டாக்டர்
அவினாஷின் ஸ்டைல். கழிவறை ஓகே. ஆனால் அதனை
க்ளீனாக வைத்திருக்க தண்ணீர் வேண்டுமே? அதற்கு அவினாஷ் செய்த
முயற்சிகள்தான் இவரை கிராமத்தினர் 'பானியாச்சா டாக்டர்'
என்று செல்லமாக அழைக்க காரணம்.
பேச்சு மட்டுமல்ல களப்பணியிலும் புலிதான் என்பதை
நிரூபிக்கும் விதமாக சதாரா நகரில் பத்து கோடி லிட்டர் நீரைத் தேக்கும்விதமாக நீர்த்தேக்கத்தை
மக்களை ஒருங்கிணைத்து உருவாக்கியிருக்கிறார் டாக்டர் அவினாஷ்.
பைசுகாலே,கிர்கசல்,பன்வான்,ஜாகன்காவோன்,வேலு, ஜல்னாவிலுள்ள
அகோலதேவ்,கானேவாடி, அவுரங்காபாத்தின் கிங்காவோன்
ஆகிய நீர்த்தேக்கங்களையும் புனரமைத்து மழைநீரை சேமிக்கும்படி மாற்றியிருக்கிறார் தண்ணீர்
டாக்டர் அவினாஷ். 15 கிணறுகளையும் இரண்டு ஆழ்துளைக் கிணறுகளையும்
இணைக்கும் பணியில் துடிப்பாக செயல்பட்டு வருபவர், கடந்த
19 ஆண்டுகளில் 70 கிராமங்களின் நீர்ப்பஞ்சத்தை
போக்கியுள்ளார்.
"மருத்துவ பணியின்போது கிராமத்திலிருந்து
அழைப்புகள் வரும். மருத்துவப் பணியை முடித்தபிறகு, கிராமத்துக்கு சென்று பிரச்னைகளை தீர்க்க முயற்சிக்கிறேன். கல்வி கற்ற இளைஞர்கள் கிராமத்தின் பிரச்னைகளை ஆராய்ந்து தீர்க்கலாம்.
நம் பிரச்னைகளை நம் கரங்கள் தீர்க்க முடிவதை பார்க்கும் மேஜிக் தருணம்
அது" என உற்சாகமாக பேசும் அவினாஷ், தற்போது இந்தி திரைப்பட நடிகர் நானா பட்னாகர்,ஆமிர்கான்
ஆகியோரின் என்ஜிஓக்களுக்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். "புகழ்பெற்ற நடிகர்கள் கிராமப்புற மனிதர்களின் முன்னேற்றத்தில் கொண்டுள்ள ஆர்வம்,
பிற துறையைச் சேர்ந்த மனிதர்களையும் சமூகப்பணிக்கு அழைத்துவரக் கிடைத்த
அரிய வாய்ப்பு" என நெகிழ்ச்சியாக பேசும் அவினாஷ்,
ராஜஸ்தானின் நீர்ப்பஞ்சத்தை போக்குவதற்கான திட்டங்களை உருவாக்கி வருகிறார்.
சுகாதார இந்தியா!
திறந்தவெளி கழிப்பறை ஒழிப்பு - 2
லட்சம் கிராமங்கள், 147 மாவட்டங்கள்.
2017 ஆம் ஆண்டில் திறந்தவெளி கழிவறை ஒழிப்பு-1,13,000
கிராமங்கள்(2017)
தூய்மை மாநிலங்கள் - ஹரியானா,உத்தரகாண்ட்,சிக்கிம்,இமாச்சல பிரதேசம்,கேரளா.
(Ministry of Drinking
Water and Sanitation (MDWS) 2017 தகவல்படி)
வஞ்சம் தீர்க்கும் பஞ்சம்!
மழைப்பொழிவு இழப்பு -
59%(முந்தைய ஆண்டுகளைவிட)
உள்நாட்டு உற்பத்தி
-7.9%(2014), 5.7%(2017)
உணவு உற்பத்தியில் முன்னணி- ஹரியானா,பஞ்சாப்,உத்தரப்பிரதேசம்,மத்தியப்பிரதேசம்
முன்னணி மாநிலங்களின் மழை இழப்பு-
6%(ஜூன்-செப்)
(India Meteorological Department (IMD) 2017 தகவல்படி)
தொகுப்பு: ஜெய கார்த்திக், விஷால் மஞ்சு