நூல் அறிமுகம்! எனது போராட்டம் - ஹிட்லர்
எனது போராட்டம்
ஹிட்லர்
தமிழில்: கோலாலம்பூர் சுப்ரமணியம்
சாந்தா பப்ளிஷர்ஸ்
ரூ.200
மெயின் கெம்ப் என்ற நூலை இன்றும் புத்தக திருவிழாவில் தேடித்திரிபவர்கள் உண்டு. யூதர்களை கொன்றழித்தவர், சாத்தானின் நரவடிவம் என்றெல்லாம் கூறப்பட்டது இந்த கவர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம். மெயின் கெம்ப் நூல், ஜெர்மானியர்களுக்கு திருமண பரிசாக வழங்கப்பட்டது என்று கூறுவார்கள். அப்படியென்ன இந்த நூலில் இருக்கிறது.
அடால்ஃப் ஹிட்லரின் சிறுவயது தொடங்கி 1926 ஆம் ஆண்டு அவரது அபேதவாத தொழிற்கட்சி கலைக்கப்படும்வரை தனது அனுபவங்களை இந்நூலில் பேசியுள்ளார் ஆசிரியர். ஹிட்லர் தனது கருத்துக்களை நூல் வழியே வாசித்து உருவாக்கிக் கொண்டது மகிழ்ச்சிக்குரியது. என்றாலும் அரசியலில் ஈடுபடும்போது அதை தூக்கி எறிந்து விடுங்கள் என வாசகர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
தேசத்தை வஞ்சனையற்று நேசித்த ஹிட்லரைப் பற்றி இந்நூலில் தெளிவாக உணர முடியும்படி மொழிபெயர்ப்பு மொழி உள்ளது. இளமையில் படிக்கும்போதே பல்வேறு அமைப்புகள், நிகழ்வுகளில் கலந்துகொண்டு மக்களிடம் பேசுவது குறித்த திறமையை வளர்த்துக்கொண்ட ஹிட்லரின் திறமை மூக்கில் விரலை வைக்க வைக்கிறது. அரசியல் கொள்கை என்பதை புத்தகங்கள, அரசியல் கிடைக்கிற எந்த விஷயங்களையும் விடாமல் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுவது ஹிட்லரின் வாழ்க்கை வழி நாம் கற்கவேண்டிய அவசியப்பாடம்.
நூலிலயே தான் ஜெயிக்க என்னென்ன கருத்துகளை பயன்படுத்தினேன், ஏன் அப்படி பயன்படுத்தவேண்டும் என்பது பற்றிய விளக்கங்களும், பிராக்டிகல் வெற்றிகளும் நம்மை வாசிக்க உற்சாகப்படுத்துகிறது. ஹிட்லர் யூதர்களை கொன்றார் என்பதோடு பலரும் முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார்கள். ஆனால் அவருக்கு கள்ள மௌனம் சாதித்து ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள், தேவாலய ஆட்கள் என பலரும் குற்றவாளிகளே. அதேநேரம் பிற நாடுகளை காலனிகளாக்கி அம்மக்களின் ரத்தம் உறிஞ்சும் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளும் மேன்மையானவை அல்ல. இதுதொடர்பாக வர்செய்ல்ஸ் அத்தியாயத்தில் கருத்துக்களை எழுதியுள்ளார் ஹிட்லர
சிறுவயதில் மனதில் உருவாகும் எண்ணங்கள் பிற்கால வாழ்வை எப்படி தலைகீழாக்கும் என்பதற்கு ஹிட்லரே உதாரணம். நாட்டுப்பற்று என்ற விஷயத்தில் ஹிட்லரை குறைத்து மதிப்பிடவே முடியாது என்பது அவர் உருவாக்கிய அரசு திட்டங்களின் வழியே புரிந்துகொள்ள முடியும். பிரசார வழிமுறைகள், கட்சி, அதற்கான கொள்கைகள் என அனைத்தும் ஹிட்லரே பிளான் செய்தார் என்பது ஆச்சர்யமான செய்தி.
-கோமாளிமேடை டீம்