"பணமதிப்புநீக்கம் பற்றி அரசுதான் கூறவேண்டும்"- தாமஸ் ஃபிரான்கோ

 நேர்காணல்




"பணமதிப்புநீக்க நடவடிக்கையைப் பற்றி அரசுதான் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்"
தாமஸ் ஃபிரான்கோ,AIBOC
தமிழில்: .அன்பரசு

பணமதிப்பு நீக்கம் என்பது, அமல்படுத்தப்பட்ட நான்கு மாதங்களுக்கு வங்கி ஊழியர்களுக்கு கடுமையான பணிச்சுமை தந்தது. அதைப்பற்றி கூறுங்கள்.

பணமதிப்பு நீக்கத்தின் முதல்நாளில் மக்கள் பொறுமையுடன்தான் இருந்தனர். அனைத்து வங்கிகளுக்கும் தேவையான தொகை அனுப்பப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததும் பிரச்னை தீவிரமானது. ஏனெனில் நாட்டிலுள்ள பல வங்கிகளுக்கும் பணம் சென்று சேரவேயில்லை. ரிசர்வ் வங்கி மூலம் கிடைத்த பணத்தையும் வங்கிகளின் பணநிர்வாக அமைப்பு உடனே வங்கிகளுக்கு அனுப்பவில்லை என்பதன் விளைவாக, வங்கிகளில் கி.மீ நீளத்தில் மக்கள் நிற்கத்தொடங்கினார்கள். ஆனால் ரிசர்வ் வங்கி, பணம் கிடைத்துவிட்டது என தொடர்ந்து அறிக்கை வெளியிட மக்களின் கோபம், வங்கி ஊழியர்களின்மேல் திரும்பியது. நிதிஅமைச்சகமும்,ஆர்பிஐயும் தங்கள் பொறுப்பை கைகழுவியதன் விளைவு இது. மக்கள் தங்களின் சேமிப்புத் தொகை கிடைக்காமல் இறந்த துயரம் போலவே, வாடிக்கையாளர்களின் கோப வார்த்தைகளால் மனம் உடைந்து இறந்து போன வங்கி ஊழியர்களும் இதில் உள்ளனர்

பணமதிப்பு நீக்க காலங்களில் ஓவர்டைம் பார்த்த பணியாளர்களுக்கான சம்பளம் இன்னும் கொடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்களா?

உண்மைதான். பெரும்பாலான வங்கிகளில் ஓவர்டைம் சம்பளம் வழங்கப்படவில்லை. விடுமுறை மற்றும் வேலைநாட்களுக்கான சம்பளம் என்பது விதிகளின்படி ஒவ்வொரு வங்கிகளுக்கும் மாறுபடும். எஸ்பிஐ ரூ.5000-6000 வரை நான்கு நாட்களுக்கு வழங்கியது. இதில் சிலர் ரூ.500 முன்பணமாக கொடுத்ததோடு சரி. பிறர் எந்த கூடுதல் தொகையையும் வழங்கவில்லை. வங்கி நிர்வாகங்களோடு இதுகுறித்து பேசிவருகிறோம்.

வங்கிகளின் நிர்வாகச் செலவும் உயர்ந்துவிட்டதாக கூறப்படுகிறதே உண்மையா?

பணமதிப்புநீக்கத்தால் செலவுகள் அதிகமாகி வங்கிகள் திண்டாடுவது உண்மைதான். இது குறித்து நிதி அமைச்சகத்திடம் வங்கிகள் முறையிட்டபோதும், எந்த பலனுமில்லை. ஏடிஎம் பராமரிப்பு, ஊழியர்களுக்கான சம்பளம்,செல்லாத நோட்டுகளை பராமரிக்கும் செலவு என செலவுகள் எகிறி வருகின்றன. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், தினசரி பணப்பரிமாற்ற வணிகம் நிகழாததால் வங்கிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. உண்மையில் இன்று வங்கிகளிடம் பெருமளவு பணம் இருந்தாலும் ஊழியர்களுக்கு தர மறுக்கிறார்கள்.

கடந்த ஆண்டு நவம்பரிலிருந்து இன்றுவரை மக்களின் சேமிப்பை வங்கிகள் பெற்றபின்பும் நாட்டில் பணப்புழக்கம் பெருமளவு அதிகரிக்கவில்லையே?

இந்தியாவின் பொருளாதாரமே காய்ச்சலில் கிடக்கிறது. வாடிக்கையாளர்கள்,செலுத்தும் கடன்கள்,வங்கி பணப்பரிமாற்றம் என அனைத்தும் 50% தேக்கமாகிவிட்டன.வராக்கடன்களும் ஆபத்தான அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விவசாயிகள்,குறுதொழில் அதிபர்கள் அனைவரும் இன்று தங்களின் பொருட்களுக்கான சந்தையை இழந்து தவிக்கின்றனர்.

அதிரடியான பணமதிப்புநீக்க நடவடிக்கையை அரசு மேற்கொள்ள என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

இந்திய அரசு, தான் எடுத்த கடுமையான நடவடிக்கை பற்றி மக்களுக்கு தெளிவுப்படுத்தவேண்டும். கறுப்புபணத்தை ஒழிக்க பணமதிப்புநீக்க நடவடிக்கையை செயல்படுத்தும் அளவு அரசு முட்டாள்தனமானது அல்ல என்பதே என் கருத்து.

நன்றி: V. SRIDHAR, frontline.in

வெளியீட்டு அனுசரணை: முத்தாரம்
தொகுப்பு: கேப்ரியல் வின்சென்ட், ஜமீலா