புத்தக அறிமுகம்! அவன் அவள் அன்லிமிடெட் -நவநீதன்


அவன் அவள் அன்லிமிடெட்
கோகுலவாச நவநீதன்
சூரியன் பதிப்பகம்
ரூ.200


பெண்களின் லவ்வை பெற ஆண்களும், ஆண்களின் செக்யூரிட்டியைப் பெற பெண்களும் காலமெல்லாம் இன்க்ரிமெண்ட் கிடைக்காமல் அலைபாய்வது தினசரி காட்சி. பெண்கள் ஏன் நேரடியாக பேச மாட்டேன்கிறார்கள்? என ஆண்களும், நான் சொல்லாவிட்டால் அவனுக்கு புரியாதா? என பெண்களும் அங்கலாய்ப்பது இன்று உறவுகளில் விரிசல்களையும் உருவாக்கத்தொடங்கிவிட்டது. இங்குதான் கோகுலவாச நவநீதன் தனது ட்ரெண்டிங் வார்த்தைகளோடு புத்தம் புதிய சயின்ஸ் சோதனைகளோடும் களமிறங்கி ஆண்,பெண் வேறுபாடுகளை அன்பாக எழுத்துக்களில் வெண்ணெய் தடவி சுகம் தருகிறார். 

மேல்நாட்டு ஆய்வுகள் அடிப்படையில் கிடுகிடுவென புத்தகங்களை எழுதியிருக்கலாம்தான். ஆனால் மருத்துவர்களின் கருத்துக்களை கேட்டு, அதோடு ஸ்பெஷல் ட்ரெண்டிங் சோதனைகளையும் இணைத்து மூளையின் ஐக்யூ சோதனைகளையும் எளிதாக செய்து படிக்க வைப்பது நவநீதனின் சிம்பிள் ஸ்டைல். படிக்க படிக்க அடுத்தடுத்த சேப்டர்களை நோக்கி பாயவைப்பது அழகழகான அம்சமான டைட்டில்கள்.

மேலும் இதில் கூறப்பட்டிருப்பவை ஆய்வு முடிவுகள் என்பதால், இதுதான், இதைத்தாண்டி இல்லை என கோடு கிழிக்காமல் எழுதியிருக்கிறார் நவநீதன். அதனால் நீங்கள் எப்போது படித்தாலும் நூலிலுள்ள சம்பவங்களோடு உங்கள் லைஃபில் நடந்த விஷயங்களை நினைவுபடுத்தி ஆமாம்ல என தலையசைத்து புன்னகைத்துக் கொள்ள முடிகிறது.

2015 இல் வெளியான இந்நூலை 2018 இல் சுவாரசியம் குறையாமல் படிக்க வைப்பது நவநீதனின் சுருக் நறுக்கென தெறிக்கும் காமெடியுடன் கூடிய வசீகர எழுத்துக்களே. அதிலும் நீண்டகாலம்,குறுகிய கால உறவு பற்றி பேசும்போது எஸ்.டி.ஆர் விளையாட்டு என எழுதியிருப்பார். இதுபோல பக்கத்திற்கு பக்கம் நிறைந்திருக்கும் குறும்பம் குதூகலமும் அத்தியாயங்களை அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் படிக்க வைக்கிறது. இதைப்படித்துவிட்டு உடனே நான் அவனில்லை பார்ட் 3 அளவுக்கு மாறவேண்டாம். சின்ன சின்னதாக தோன்றிய பிரச்னைகள் ட்ரம்ப் - கிம் போல பெரும் சண்டையாக மாறாமலிருக்க உதவும். 
உன்னத உறவுகளை வளர்க்க தயங்காமல் வாங்க வேண்டிய நூல் இது.   

-கோமாளிமேடை டீம்