நூல் அறிமுகம்! பாயும் தமிழகம்


நூல் அறிமுகம்!
பாயும் தமிழகம்
சுசீலா ரவீந்திரன்
தமிழில்: எஸ்.கிருஷ்ணன்
கிழக்கு




இந்தியா அளவிலான ஸ்டார்ட் அப்கள் பற்றி பேசும்போது பலரும் தவறவிடுவது தமிழகத்தின் அமைதியான தொழில்வளர்ச்சி, தொழில்முனைவுகளைத்தான். பாயும் தமிழகம் நூலில் அதனை கவனமெடுத்து எழுதியிருக்கிறார் பத்திரிகையாளர் சுசீலா.  இந்த நூலில் டிவிஎஸ், முருகப்பா, ராம்கோ சிஸ்டம்,  ஏ.சி.முத்தையா, அமால்கமேஷன்ஸ்  ஆகிய முக்கிய தொழில் குழுமங்களைப் பற்றி நுணுக்கமான தகவல்களை எழுதி அவர்களின் வெற்றிக்கதையை சுவாரசியமாக வாசிக்க செய்திருக்கிறார். சுசீலா.

இவர்கள் மட்டும்தான் என்றில்லை, முக்கியமான ஸ்டார்ட்அப் முயற்சிகள், சில தோல்வியுற்றன என்றால் அதில் என்ன பிரச்னை என்பது வரையிலான துல்லியமான தகவல்கள் நூலை வணிகம் தொடர்பான பிரிவில் முக்கியத்துவப்படுத்துகிறது. இதோடு முக்கிய தொழில்நகரங்களில் தொண்ணூறுகளுக்கு பிறகான காலகட்டங்களில் சிகே குழுமம், பிஎஸஜி, சுகுணா புட்ஸ், ஆகியவை எப்படி தாக்குபிடித்து பன்னாட்டு போட்டியாளர்களை சமாளித்தன  என்பது நம் ஜெனரேஷனுக்கு முக்கியமான பிசினஸ் பாடமும் கூட.

 தொழில்நகரங்களின் வளர்ச்சி, வளர்ந்த நிறுவனங்கள், சந்தித்த சவால்கள், சாதனைகள், வருமானம் என அத்தனையும் கில்லட் பிளேடு போல துல்லியமாக நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. அதோடு பிசினஸில் ராஜரத்னம் போன்ற சிலரின் தொழில்முயற்சிகள் ஒட்டுமொத்த வணிக அமைப்பை  எப்படி சிதைத்தன என்பதையும் , அரசின் செபி உள்ளிட்ட அமைப்புகள் எப்படி அதற்கு துணைபோயின என்பதை சுட்டிக்காட்டிய நேர்மை சுசீலாவின் எழுத்தை நேர்த்தியாக்குகிறது.

  இயல்பான தன்னடக்கமா என்று தெரியாதபடி தமிழ்நாட்டின் தொழில் குழுமங்கள் பத்திரிகை பேட்டிகளை தவிர்ப்பது குறித்து வருத்தப்படும் சுசீலா தனது பாயும் தமிழகம் மூலம் அக்குறையை தன்னளவில் போக்க முயற்சித்துள்ளது பாராட்டத்தக்கது. எஸ்.கிருஷ்ணனின் தெவிட்டாத மொழிபெயர்ப்பு இனிமை. தமிழகத்தின் தொழில்வளர்ச்சியை அறிந்துகொள்ள வாசிக்க வேண்டிய நூல் இது என்பதில் சந்தேகமேயில்லை.

-கோமாளிமேடை டீம்

பிரபலமான இடுகைகள்