சேகரவீராசாமியின் தன்னம்பிகை கதை! - ச.அன்பரசு




வீல்சேர் டென்னிஸ் - சேகர் வீராசாமியின் தன்னம்பிக்கை கதை!-.அன்பரசு

கடந்த டிசம்பர் மாதத்தில் பெங்களூருவில் நடந்த தபேபுயா ஓபன் வீல்சேர் டென்னிஸ் போட்டியின் ஃபைனல். சேகர் வீராசாமி மற்றும் பாலச்சந்தர் இருவீரர்களுக்குமிடையேயான அனல் பறக்கும் நீயா, நானா? சர்வீஸ்களால் பார்வையாளர்கள் கண்ணிமைக்கவும் மறந்து போனார்கள். பாலச்சந்தரின் தவறுகளை பயன்படுத்திக்கொண்ட சேகர், ஃபோர்ஹேண்ட் சர்வீஸ்களால் அநாயசமாக வென்றபோது எழுந்த கரகோஷங்கள் அவரின் ஆயுள் வலிகளையும் ஒரு நிமிடம் மறக்கவைத்தது.

டென்னிஸ் கோர்ட் தாண்டிய வலிகளையும் சுமந்துதான் சேகர் தபேபுயா ஓபனில் சொல்லியடித்தார். பின்னே, அர்ப்பணிப்பான விளையாட்டை விளையாட சேகர் தன் இடது காலையே வெட்ட நேர்ந்ததை விட வேறு வேதனை என்ன வேண்டும்?
தினக்கூலியான சேகரின் தந்தைக்கு, அவரை பள்ளிக்கு பசிக்காமல் சோறிட்டு அனுப்பக்கூட இயலாத வறுமை. வயிற்றை அமைதிபடுத்த பத்து வயதிலேயே வெள்ளி விளக்குகளுக்கு பாலீஷ் செய்யும்வேலையில் சேர்ந்தார் சேகர். அப்போது அவரின் நண்பர் டென்னிஸ் போட்டிக்கு பந்துக்களை பொறுக்கித்தரும் வேலைக்கு கூப்பிட்டார். எக்ஸ்ட்ரா காசு கிடைக்குமே? உடனே அழைப்பை ஏற்றார்.

கோர்ட்டில் டென்னிஸ் மட்டையில் பட்டு பறக்கும் பந்துகள் பரவசம் தர, உற்சாகமாக வேலை செய்ய, விரைவில் கோச்சின் உதவியாளரானார். அப்போதுதான் அந்த ஷாக் நிகழ்வு நடந்தது. 2005 ஆம் ஆண்டு நண்பரின் பைக்கில் ஜாலியாக ரைட் சென்றபோது எதிரில் வந்த வாகனம் மோதிய விபத்தில் இடதுகால் முற்றாக சிதைந்தது. சேகர் வலியில் கதற கதற அவரின் இடதுகால் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. "அன்று நடந்த ஆக்சிடன்டை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது." என குரல் கம்ம பேசுகிறார் சேகர். ஆறுமாதங்கள் படுக்கையில் கனவுகள் பொய்த்துப்போன அழுகையோடு கிடந்தவரை தேற்றியது கூரியர் ஏஜென்சியில் வேலை செய்த இவரது மூத்த அண்ணன்தான்.

டென்னிஸ் அசோசியேஷன்(KSLTA) மீண்டும் இவரை பணிக்கு அழைத்தாலும் பணியை திரும்ப தொடர ஆட்டோ பிடித்துசெல்வது அவ்வளவு எளிதானதாக இல்லை. 2010 ஆம் ஆண்டு வீல்சேர் டென்னிஸ் போட்டிக்கு செலக்ட் ஆனார் சேகர். "டென்னிசின் விளையாட்டு டெக்னிக்குகளைக் கற்றிருந்தேன் என்றாலும் வீல்சேரை எப்படி நகர்த்தி விளையாடுவது பழகுவதற்கு முதலில் தடுமாற்றமாக இருந்தது" என்றவர் அடுத்த ஆண்டில் தேசிய அளவிலான போட்டியில் வீல்சேரை கச்சிதமாக நகர்த்தி 50 ஆயிரம் ரூபாய் வென்றதில் புதைந்திருக்கிறது இவரின் ஆன்ம பூர்வமான உழைப்பு

"பரிசுத்தொகை 50 ஆயிரத்தை வாழ்நாளில் முதன்முதலாக கையில் பெற்றதை இன்றுமே கூட நினைக்கும்போது உடல் சிலிர்க்கிறது" என நினைவுகூர்ந்து பேசுகிறார் சேகர்.
முழுக்குடும்பத்தையும் போட்டோ எடுக்கவே புகைப்படக்காரர் வாசலில் நிற்கும் நெருக்கடியான சிறிய வீட்டில் சேகர் வீராசாமி, தன் அம்மா, மனைவி இரு குழந்தைகளுடன் வசிக்கிறார்.
காலையில் 5 மணிக்கு டென்னிஸ் பயிற்சிக்கு செல்பவர், குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வாழ்வாதார வேலைக்கு செல்கிறார். பாரீன் போட்டிகளில் (மலேசியா,பேங்காக்) கலந்துகொள்கிறார் என்றாலும் அனைத்தும் கடன்களாலேயே சாத்தியமாகிறது. "கிடைக்கும் ஸ்பான்ஸர்ஷிப் உதவிகள் உணவுக்கும், தங்குமிடத்திற்கும் சரியாக போய்விடுகிறது. போக்குவரத்து செலவுக்கு கடன் வாங்குவதை தவிர வேறெந்த ஆப்ஷனும் என்னிடமில்லை" என்று மெல்லிய புன்னகையுடன் பேசிய சேகரின் டஜன் சாம்பியன் கோப்பைகள் அட்டைப் பெட்டியை நிரப்பி இருந்தன.
திறமையான கோச், தரமான வீல்சேர்,ஸ்பான்ஸர்ஷிப் கிடைக்காதது என குறைகள் நீண்டாலும் தன் ஆர்வத்தால், வலுவான ஆட்டத்தால் அனைத்தையும் நம் கண்முன் மறக்கவைப்பது சேகர் வீராசாமியின் ஸ்பெஷல் ஆட்டத்திறன். தேசியப்போட்டிகளில் ஒற்றையர்,கலப்பு இரட்டையர் என 4 வெற்றிகள். தென் ஆப்பிரிக்காவில் நடந்த இன்டர்நேஷனல் போட்டியிலும் வெற்றி. கடந்தாண்டு தாய்லாந்தில் நடந்த பேங்காக் போட்டியிலும் வெற்றி வாகை சூடியுள்ளார்.  
 
"எனக்கு டென்னிஸைத் தவிர வேறொன்றும் தெரியாது" என சொல்லிவிட்டு நிறைந்த மனதுடன் சிரிக்கிறார் இந்தியாவின் நெ.1 வீல்சேர் டென்னிஸ் வீரர் சேகர் வீராசாமி.


வீல்சேர் டென்னிஸ்!

1970 ஆம்ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் விமானியான பிராட் பார்க்ஸ் மற்றும் அவரது நண்பரான மின்னேபிராக்கர் ஆகியோரின் கண்டுபிடிப்பே வீல்சேர் டென்னிஸ். இவர்கள் இருவரும் விபத்துகளால் கால்களை இழந்தவர்கள். 1982 இல் இப்போட்டியை பிரான்ஸ் முதல் நாடாக ஏற்றது. டென்னிஸ் போட்டியின் ரூல்ஸ்கள் அப்படியே டிட்டோ. ஆனால் பந்து இருமுறை கோர்ட்டில் பிட்ச் ஆகலாம் என்ற சிற்சில கூடுதல் விதிகள் உண்டு. 1992 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த பாராலிம்பிக்கில் முழுமையான விளையாட்டாக வீல்சேர் டென்னிஸ் தரம் உயர்ந்து உலகெங்கும் பிரபலமானதுஉலக டென்னிஸ் ஃபெடரேஷன் கடந்தாண்டு நடத்திய போட்டியின் பரிசு 2 மில்லியன். இதில் Grand Slams,Masters,ITF Super Series,ITF 1,2,3 Series,ITF Futures Series ஆகியவை முக்கியமானவை. 2014 ஆம் ஆண்டு ஆஸ்தா அமைப்பின் சுனில் ஜெயின் AITA ஆதரவுடன் வீல்சேர் டென்னிஸ் போட்டிகளை(IWTT) நடத்திவருகிறார்.

நன்றி: குங்குமம்
தொகுப்பு: ஜமீலா, ஆலன் வான்கா


பிரபலமான இடுகைகள்