புத்தக அறிமுகம்! இந்திராகாந்தி





புத்தக அறிமுகம்!
இந்திராகாந்தி
இந்தர் மல்ஹோத்ரா
தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி
என்பிடி
ரூ.80





இந்திராகாந்தி பற்றி ஏராளமான நூல்கள் புகழ்ந்தும் தூற்றியும் வந்திருக்கின்றன. இந்தர் மல்ஹோத்ரா வேறுபடுவது, இந்திராவின் குடும்பம், அரசியல் என அவர் செயல்பாடு இயல்பை விட்டு எப்போது தடம் மாறுகிறதோ அப்போது கண்டிக்கவும், அரசியல் லாபம் கொண்ட மக்கள் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போதும் பாராட்டுவதில்தான். இந்திராவின் வாழ்க்கையை ஒரே வார்த்தையில் கூறவேண்டுமென்றால் போராட்டம் எனலாம். குடும்பம், அரசியல், திருமணம், அங்கீகாரம், வெற்றி என அனைத்திற்கும்  பாரம்பரிய கிரீடத்தை சுமந்து பெறவில்லை. காந்தி,நேரு என அனைத்து தலைவர்களையும் தாண்டிய புகழை தன் செயல்பாடுகளால் எப்படி ஏற்படுத்தினார் என்பதை அறிய வாசிக்க வேண்டிய நூல் இது.

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் நேரு என்று கருதாமல், நேரு தன் மனைவி கமலாவை நடத்தியவிதம் குறித்து சம்பவங்கள் கைக்கட்சி உறுப்பினராக இருந்தாலுமே பெரும் அதிர்ச்சியை தரும். அதில் இந்திரா தன் அம்மா கமலாவுக்கு ஆதரவாகவே இருக்கிறார். ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களின் தாக்குதலையும் தனியாக சமாளிக்கும் அளவுக்கு, பின்னாளில் இது அப்படியே கட்சி,அரசியல் என அனைத்து தளங்களிலும் நடைபெறும் என அப்போது இந்திரா நினைத்திருக்க மாட்டார்.

தனது மனதிலுள்ள கருத்துக்களை பகிர்ந்துகொள்ளக்கூட ஆளில்லாமல் போவது கணவர் ஃபெரோஸ் காந்தியின் மறைவுக்கு பிறகு நடைபெறும் துயர நிலை. அதையும் சமாளித்து எழுபவருக்கு கட்சியில் பதவிகளை எட்டிப்பிடிக்கும் ஆவலில் துரோகம் செய்யும் தானா சேர்ந்த காக்கை கூட்டத்தையும் மேய்க்கும் வேலை கிடைக்கிறது. அரசியல் நிகழ்வுகளை உப்பும் உறைப்புமாக மல்ஹோத்ரா பரபரவென சொல்லிச் செல்கிறார். தந்தை நேரு, கமலாவை இழந்தபிறகு அவரை கவனித்துக்கொள்ள முயலும் இந்திரா அதற்கு பணயமாக வைப்பது தன் இல்லற வாழ்வை என்று வாசிக்கும்போது நம் மனதில் இருள் கவிழ்கிறது. பஞ்சம் ஏற்படும்போது உதவிக்காக அமெரிக்காவிடம் உதவி கேட்பது, அதற்காக அவர்கள் இந்திராவை நுட்பமாக அவமானப்படுத்துவது என பதிவுகளை படிக்கும்போது கண்ணீர் கசியாத கண்களே இருக்கமுடியாது.

தன் மகன் சஞ்சய் காந்தியை நம்பிய நொடியிலிருந்து இந்திராவின் அரசியல் வாழ்க்கை இருள் படிந்ததாகிறது. இது மக்கள் கார் மாருதி ஊழல், எமர்ஜென்சி நிலை என மாறாத களங்கத்தை ஏற்படுத்தினாலும் மல்ஹோத்ரா கூறுவது போல, எதிர்ப்பவர்களை யாரையும் முற்றாக அழிக்கவில்லை என்பதே நிஜம். பின்னாளில் தேர்தலை அறிவித்து  அதில் தோல்வியுறுவதற்கான காரணமும் நெகிழ்ச்சி.

மொரார்ஜி தேசாயின் விமர்சனங்களையும், சரண்சிங், சித்தரஞ்ச சங்கர் ரே , பன்சிலால் உள்ளிட்டோரின் துரோக லாப தாவல்களையும் சமாளித்து தேர்தலில் வெல்வது அரசியல் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி போல பரபரக்கிறது. காங்கிரஸ் தவிர்த்து பிற ஆட்சிகளை மேற்கு வங்கம், ஆந்திரா, கேரளா என சாத்தியமான அனைத்து இடங்களிலும் கலைத்து ஆட்சியைப் பிடிக்கும் இந்திராவின் அராஜக வழியை மோடி அப்படியே பின்தொடர்கிறார். வங்கிகள் தேசியமயம், சிம்லா ஒப்பந்தம், அணுகுண்டு சோதனை, மாருதி கார் எமர்ஜென்சி, ஆட்சி கலைப்பு, வங்காளதேசம் உருவாக்கம்  என பிளஸ், மைனஸ்  பக்கங்கள் இந்திராவுக்கும் உண்டு. அதைத்தாண்டியும் அவரை நாம் நினைவுகூர்வது அவர் ஏழை மக்களை சிறிதேனும் தன் ஆட்சி காலத்தில் நினைவுகூர்ந்தார் என்பதால்தான். இன்று இந்திராகாந்தி மக்கள் மனதில் நிலையாக வாழ்வது நல்வாழ்வு விஷயங்களை ஊக்கப்படுத்திய மனதால் மட்டுமே.

உங்களை மக்கள் எப்படி நினைக்க வேண்டும் என்று கேட்டால், என்னைப் பற்றி அறிந்த மக்களே அதனை முடிவு செய்வார்கள் என தைரியமாக சொல்லும் இந்திராவிடம் உண்டு.இந்தியாவை அந்நிய நாடுகளுக்கு அஞ்சாமல் முன்னேற்றப்பாதையில் சுக்கானைப் பிடித்து செலுத்திய  பயமறியாத துணிச்சலும் தைரியமும்தான் இ்ந்திரா. நூலில் கண்ணையன் தட்சிணாமூர்த்தியான் செழுமையான மொழிபெயர்ப்பில் நாம் அறிவது இதைத்தான்.

-கோமாளிமேடை டீம்

சென்னை புத்தகத்திருவிழா 2018