"இந்துத்துவாவின் அடுத்த குறி நான்தான்" நேர்காணல்: காஞ்சா அய்லய்யா!




"இந்துத்துவாவின் அடுத்த குறி நான்தான்"


நேர்காணல்: எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா, எழுத்தாளர்.

தமிழில்:.அன்பரசு





கன்னடத்தின் முக்கிய எழுத்தாளரான காஞ்சா அய்லய்யா, ஹைதராபாத்திலுள்ள மௌலானா ஆசாத் உருது பல்கலைக்கழகத்தின் சமூககொள்கை ஆய்வு மையத்தின் இயக்குநர். 2009 இல் இவர் எழுதிய 'Post Hindu India' என்ற நூலில் பிராமணர்கள், பனியாக்களைப் பற்றி 'சமூக கடத்தல்வாதிகள்' என்று கூறிய கருத்துகள் கொலைமிரட்டல்கள் வரை புகழ் சம்பாதித்து கொடுத்திருக்கின்றன. அவரின் படைப்பு, கொலைமிரட்டல்கள், நூலின் சர்ச்சைக்குரிய பகுதி குறித்து அவரிடம் பேசினோம்.

"போஸ்ட் இந்து இந்தியா" பற்றி ஏகப்பட்ட சர்சைகள். இதுகுறித்து கூறுங்களேன்.

 ஆர்ய வைசியர்களின் சங்கம் உருவாக்கிய புக்லெட்தான் சர்ச்சைக்கு காரணம். ஆங்கிலத்தில் வெளியான நூலின் தெலுங்கு மொழிபெயர்ப்பின்(2011) குறிப்பிட்ட பகுதியை நூலாக்கி பிரச்னை செய்கிறார்கள். இந்தி, மராத்தியில் வெளியாகியுள்ள இந்நூலின் மையம், தனியார்துறையில் ரிசர்வேஷன் தோல்வி அடைந்ததற்கான காரணங்களை பேசுகிறது. ஜாதிப்பொருளாதார கட்டமைப்பில் வைசியர்கள், சூத்திரர்களின் பங்கு அதிகம். அம்பானி, கிர்லோஸ்கர்,அதானி, லஷ்மி மிட்டல் ஆகியோர் இப்படி உருவானவர்கள்தான். இந்தியாவின் வளங்களை ஆளுமை செய்வது இவர்களே. பிராமணர்கள் கோயில்களை ஆளுகிறார்கள். இதற்கு சிறந்த எ.கா: கேரளாவின் பத்மநாபசுவாமி கோவில். பனியாக்களும், பிராமணர்களும் ராணுவத்தில் பங்களித்ததாக குறிப்புகள் இல்லை.  

உங்களது புத்தகம் ஏன் இவ்வளவு சர்ச்சை ஆகியுள்ளது?

புத்தகம் பல நாளிதழ்களாலும் விமர்சனம் செய்யப்பட்டு நன்றாக விற்பனையாகிக் கொண்டுள்ளது. இதை படித்த வலதுசாரியினர் ஏன் இவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று புரியவில்லை. இன்று இந்துத்துவ ஐடியாவை விமர்சிப்பவர்களை தொடர்ந்து கண்காணித்து அவர்களின் எழுத்தை அல்லது எழுதும் எழுத்தாளர்களையே கொல்வது இயல்பான சூழலாக இந்தியாவில் மாறியுள்ளது சரியானதல்ல.

எப்போது அச்சுறுத்தல்கள் தொடங்கின?

செப்.10 அன்று ராமகிருஷ்ணா, என் நாக்கை வெட்டி எறிவதாகவும் அச்சுறுத்தியதையடுத்து உஸ்மானியா போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கிறேன். பின் செப்.17 அன்று தெலுங்குதேச கட்சியைச் சேர்ந்த டிஜி வெங்கடேஷ், என்னை தூக்கிலிட்டு கொல்வதாக மிரட்டியதற்கு பின், பூபல்பலி சென்று வீட்டுக்கு திரும்பியபோது, கற்கள் ஆயுதங்களுடன் ஆர்ய வைசிய கூலிப்படையினர் என் காரை பின்தொடர்ந்து வந்தனர். அன்று நான் உயிர்பிழைத்ததே என் கார் டிரைவரின் சமயோசித புத்தியால்தான். இச்சம்பவத்தின்போது உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் பீனாவேனி ராமையாவும் உடனிருந்தார்.

உங்கள் மீதான தாக்குதல் முயற்சிகள் இந்துத்துவ வெறியர்களின் முந்தைய தாக்குதல் சம்பவங்கள் போல் நிகழவில்லையே?

ஆர்ய வைசிய அமைப்பு என்பது அமைதியை வலியுறுத்துகிறது. அந்த அமைப்பின் தொண்டர்களை அவர்களின் அரசியல் தலைவர்கள் தூண்டிவிடுவதால் ஏற்படும் பாதகமே, தாக்குதல் முயற்சிகள் என்பதே என் கருத்து.

நீங்கள் உஸ்மானிய பல்கலையில் மாணவராக இருக்கும்போதே தீண்டாமைக்கு எதிராக “Why I Am Not A Hindu” என்ற நூலை எழுதியவர். அப்போது வராத அச்சுறுத்தல்கள் இன்று உங்களுக்கு வருகிறதா?

அன்று இதைப்போல சிக்கலான நிலை உருவாகவில்லை. 2002 ஆம் ஆண்டு சமூகத்தின் ஆன்மிக பாசிஸம் என்ற கட்டுரையை டெக்கன் கிரானிக்கல் நாளிதழில் எழுதினேன். அப்போது ஆட்சியிலிருந்த பாஜக அரசு, பல்கலையிடம் என் எழுத்தை தடுக்க கடுமையாக வற்புறுத்தியது. ஒரு சொற்பொழிவில் பிராமணர்கள் உற்பத்திதுறையில் ஈடுபட்டது வேதக்காலத்திற்கு பின்தான் என பேசியது கடுமையாக எதிர்வினைகளை உருவாக்கியது. என்னை துஷ்டன் என்று பலரும் தூற்றத்தொடங்கி, என் கொடும்பாவியையும் எரித்தார்கள். ஆங்கில கல்வி மீது தீவிரக்காதல் கொண்ட நான், என் ஜாதிப்பெயரை பெயரின் பின்னொட்டாக ஆங்கிலத்தில் சேர்த்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது.

நன்றி:Shankar,frontline.in

தொகுப்பு: அகாசி, கா.சி.வின்சென்ட்

பிரபலமான இடுகைகள்