விபத்துகளுக்கு க்ரீன் சிக்னல்?





விபத்துகளுக்கு க்ரீன் சிக்னல்?- மக்களை காவு கொடுக்கும் ரயில்துறை அலட்சியம்- .அன்பரசு

1919 ஆம் ஆண்டு பஞ்சாபில் ஜெனரல் டயரால் நடத்தப்பட்ட ஜாலியன்வாலாபாக் படுகொலையை இன்றும் நெஞ்சு விம்ம குரல் தழுதழுக்க பேசிவருகிறோம். சரி, அது ஆங்கிலேய ஆட்சியின் அநீதி. சுதந்திரமான புதிய இந்தியாவில் தினசரி நம் கண்முன்னே நிகழும் ரயில் விபத்துகளின் மரணங்களுக்கு பலியாகும் மக்கள், அதற்கு காரணமான அதிகாரிகள், பணியாளர்கள் என ஒருவர்கூட தண்டிக்கப்படுவதில்லை என்ற உண்மை தெரியுமா உங்களுக்கு? நடந்த ட்ரெயின் விபத்துகளின் மனிதர்களின் பங்கு 80%. இவ்வாண்டு மட்டும் 238 பேர் ரயில் விபத்துகளில் பலியாயினர். அதிலும் கடந்த மார்ச்சில் பலியானவர்கள் 50 க்கும் மேல்.






விபத்துகளின் சுனாமி!

1988 ஆம் கேரளாவின் பெருமான்பால ரயில்தடம்புரள்வு(பலி 105) தொடங்கி உ.பி ஃபிரோஷாபாத்(1995,பலி358), பஞ்சாப் கன்னா(1998,பலி212),வங்கம் கெய்சல்(1999பலி400), கேரளா கடலுங்குடி(2001,பலி57), பீகார் ரஃபிகன்ச்(2002,140), .பி(2016,பலி150) என பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 422 பேர். இதில் கெய்சல் ரயில்விபத்துக்காக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் டிஸ்மிஸ் ஆனது தவிர்த்து பிற விபத்துகளில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என்பது ஷாக் உண்மை

தொழில்நுட்ப கோளாறு என சிம்பிளாக சொல்லி அரசியல்வாதிகள் பதவியில் ஓட்டிக்கொண்டாலும் பலியான உயிர்களுக்கு யார் பொறுப்பு? ஆகஸ்ட்மாதம், .பி மாநிலத்தில் நடந்த ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பதவி விலகினார். அதோடு விபத்துக்கு பொறுப்பான மூன்று அதிகாரிகளுக்கு லீவ் கொடுக்கப்பட்டு, ட்ராக்மேன் உள்ளிட்ட குரூப் சி பணியாளர்கள் 13 பேர்கள் என்கொயரி இன்றி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

 "பணிவிதிகள் 14(ii) படி அரசு என்கொயரி இன்றி பணியாளர்களை நீக்குவது சட்டவிரோதம். அப்பீலில் நிற்காது" என்கிறார் ரயில்வே ஃபெடரேஷனைச் சேர்ந்த கோபால் மிஸ்ரா. இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது,மக்கள் ஏன் இறக்கிறோம் என்று தெரியாமல் செத்தாலும், காரணமான குற்றவாளிகளுக்கு அணுவளவு தண்டனையும் இல்லை என்பதே. டெண்டர் தாமதம், நிதிப்பற்றாக்குறை, நெருக்கடி போக்குவரத்து என்ற காரணங்களோடு மாவோயிஸ்ட், ஐஎஸ்ஐ ஆகிய காரணங்களும் தண்டனையில் இருந்து தப்ப ரயில்வே அதிகாரிகளின் வாய்வசம் எப்போதும் இருக்க சட்டம் என்ன செய்துவிடும்?




குற்றமுண்டு; தண்டனை இல்லை!

குரூப் சி தொழிலாளர்களை எளிதில் வேலையிலிருந்து நீக்கிவிடும் அமைச்சர்கள், அதிகாரிகள் ரயில்வே துறையில் அடிப்படை பிரச்னைகளை பற்றி மறந்தும் மூச்சுவிடுவதில்லை. "அமைச்சர் ஸ்டோர் அலுவலர் பணிக்கு தகுதியில்லாதவரை நியமித்தால் என்னாகும்? அந்த தவறுக்கு அமைச்சர்தானே பொறுப்பு" என்கிறார் ரயில்வே பாதுகாப்பு இயக்ககத்தின் அதிகாரியான இந்திரா கோஷ். அலட்சியத்தால் நடந்த ரயில் விபத்துகளாக 1999 ஆம் ஆண்டு கெய்சலில் நடந்த பிரம்மபுத்திரா ரயில் மற்றும் அவாத் அசாம் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் மோதிய விபத்தை குறிப்பிடுகிறார் இந்திரா. 400 பயணிகளை காவு வாங்கிய இவ்விபத்தில் குற்றவாளிகளான 35 அதிகாரிகள் ஒருவர் கூட சிறையில் அடைக்கப்படவில்லை. மக்களின் கண்டனத்தால் ரயில்வே அமைச்சரான நிதிஷ்குமார் பதவி விலக நேரிட்டது.

சிக்னல் தவறால் ஏற்பட்ட கெய்சல் விபத்தில் ப்ரைம் குற்றவாளிகளாக 17 பேர்களும், இரண்டாவது பிரிவில் எட்டுபேர்கள், மூன்றாவதாக பத்து பேர்கள் என நீதிபதி ஜி.என்.ராயால் அறிவிக்கப்பட்டாலும் முக்கிய குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு பிறர் விடுவிக்கப்பட்டனர். பின் சிபிஐ வழக்கை தீரவிசாரித்து ஆறுபேரை குற்றவாளிகள் என நிரூபித்தது. கோர்ட்டில் இவர்களுக்கு இரண்டாண்டு சிறைதண்டணையும் ஃபைனும் விதிக்கப்பட்டாலும், உடனே பெயில் கொடுத்து, அப்பீல் செய்ய சான்ஸூம் கொடுத்தது. பிறகு கோர்ட்டும்,சிபிஐயும் இந்த வழக்கை கண்டுகொள்ளவே இல்லை. குற்றவாளிகள் தற்காலிக பணிவிடுப்பில் உள்ளனர். அண்மையில் மும்பையின் எல்பைன்ஸ்டோன் ஸ்டேஷனில் நெரிசலில் இருபத்து மூன்று பேர் பலியான சம்பவத்தில் என்கொயரி நடைபெறுகிறது. நீதி கிடைக்க புதிய  ரயில்வே அமைச்சரான பியூஸ்கோயலே பொறுப்பு.

டெல்லி மெட்ரோ முதலிடம்!  

மும்பை புறநகர் ரயிலைவிட, டெல்லி மெட்ரோ ரயில் பாதுகாப்பு விஷயத்தில் செம அப்டேட். 2016-2017 ஆம் ஆண்டு 218 கி.மீ பயணதூரத்தில் ஆயிரம் மில்லியன் பயணிகளை சுமந்துள்ளது டெல்லி மெட்ரோ ரயில். தினசரி 2.76 மில்லியன் பயணிகள். மும்பையின் புறநகர் ரயில்களில் ஏற்படும் இறப்பு(200-14) மூவாயிரம் என்பது மிக அதிகம். தண்டவாளங்களை நடந்து கடப்பது, பிளாட்பார இடைவெளியில் விழுவது, ஓடும் ரயிலில் ஏறி அடிபடுவது என விபத்துகள் அநேகம். மும்பை புறநகர் ரயில் அளவு பயணிகளை சுமக்கும் டெல்லி மெட்ரோ, தனது அட்வான்ஸ்டு வசதிகளால் விபத்துகளின்றி ஆச்சரியப்படுத்துகிறது. "மும்பை புறநகர் ரயில்களின் பராமரிப்பை டெல்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது இதற்கு தீர்வாகலாம்" என ஆலோசனை தெரிவிக்கிறார் இந்திய ரயில்வேயின் முன்னால் நிதி ஆலோசகரான ஆர்.சிவதாசன். தற்போது மும்பை-அகமதாபாத் ஹைஸ்பீட் ரயில் திட்டம்(HSR), புறநகர்ரயில் பிரச்னைகளை குறைக்க வாய்ப்புள்ளது.

மாற்றமில்லை பிரச்னைகளுண்டு!

1853 ஆம் ஆண்டு தானே டூ போரிபந்தர் வரை சென்றதுதான் இந்தியாவின் முதல் ரயில் ஜர்னி. 1892 ஆம் ஆண்டு பாந்த்ரா - பேக் பே(Marineline-churchgate ) வரை சென்ற ட்ரெயின்தான் முதல் உள்ளூர் ட்ரெயின். "ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் தந்து வெளியேறும்போது நாற்பதாயிரம் கி.மீ ரயில்பாதை இருந்தது. எழுபது ஆண்டுகளுக்கு பிறகு நாம் இருபதாயிரம் கி.மீ மட்டுமே ரயில் ட்ராக்கை விரிவாக்கியுள்ளோம். பல இருப்புபாதைகள் சுதந்திரத்திற்கு முந்தையவை என்பதால் இன்றைய தேவையை அவை எப்படி நிறைவேற்றும்?" என பளீர் உண்மை பேசுகிறார் ரயில் பயணிகள் ஆலோசனை கமிட்டியைச் சேர்ந்த ராஜிவ் சிங்கால்.

"மும்பை தொடர்ந்து வளர்ந்து வருகிற நகரம். 1964 ஆம் ஆண்டே ஹார்பரோடு இணைக்கும் ட்ரெயின் பற்றி பேசினாலும் திட்டம் பிராக்டிக்கலுக்கு வரவில்லை. மேலும் மோனோ,மெட்ரோ என ரயில் போக்குவரத்தில் நாம் முயற்சித்துள்ள பிளான்களும் மிக குறைவு" என ஆழமாக பேசுகிறார் ரயில் வரலாற்று அறிஞரும் எழுத்தாளருமான ராஜேந்திர அக்லேகர். புறநகர் ரயில்களை ரயில்வே அமைச்சகம் சுமையாக கருதுகிறது. மேலும் ரயில்வே அதிகாரிகளுக்கு நிலப்பரப்புரீதியான முக்கியத்துவம் தெரியாது என்பதால் திட்டங்கள் பேப்பரிலிருந்து கண்முன்னே நிஜமாகாமல் தடுமாறுகின்றன.

"1986 ஆம் ஆண்டு வணிகச்சட்டப்படி புறநகர்ரயில்துறை நகர மேம்பாட்டுத்துறையின் கீழ் வருவதால், நாங்கள் ரயில்களை மேம்படுத்த பிளான்களை உருவாக்கும்போதெல்லாம் மும்பை நகர வளர்ச்சி ஆணையம் அதற்கு முட்டுக்கட்டை போடுவது வழக்கம். நவி மும்பை வளருவதால் பெலாபூர் வரை ட்ரெயின் வசதியை மக்கள் விரும்புகிறார்கள். மோனோரயில் அல்லது மெட்ரோ இதற்கு தீர்வு" என்கிறார் மத்திய ரயில்வேயின் முன்னாள் பொது மேலாளர் சுபோத் ஜெயின். பாதுகாப்பான கதவுகளைக் கொண்ட, பாலங்களில் செல்லும் ரயில், பாலங்களை இணைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் இருந்தாலும் எதிர்காலத்தில் அவை சாத்தியமானால் மட்டுமே நிஜம்.      
   

ரயில் டேட்டா!

மும்பை புறநகர் ரயில் தடம் - 376 கி.மீ 136(ஸ்டேஷன்கள்), 2905(தினசரி ட்ரிப்)
பயணிகளின் அளவு - 8.5 மில்லியன்
தினசரி விபத்து இறப்பு - 9
புறநகர் ரயில் விபத்து(2010-14) - 33,445, 17,638(மும்பை)
மும்பை விபத்து இறப்பு விகிதம்(2010-14)- 52.74%
விபத்து இழப்பீடு(2010-15) - 181 கோடி
மூன்றாண்டு விபத்து இறப்புகள் - 3,429(2014), 3,159(2015), 3,209(2016)


மைனஸ் பக்கங்கள்!

மும்பை புறநகர் பெண்பயணிகள் - 6.5 லட்சம்
எமர்ஜென்சி வசதி இன்மை, சுரங்கத்தில், கம்பார்ட்மெண்டில் லைட்டுகள் இல்லை, பற்றாக்குறை வெய்ட்டிங் ரூம், கழிவறை பற்றாக்குறை, முறையான அறிவிப்பு இன்மை என மும்பை புறநகர் வழித்தடத்தில் புகார்கள் குவிகின்றன.


டாப் 5 ரயில் போக்குவரத்து!

பெய்ஜிங் - 6 மில்லியன்(பயணிகள்)
சாவ் பாலோ - 7.4 மில்லியன்
மும்பை - 8.5 மில்லியன்
டோக்கியோ - 8.7 மில்லியன்

லண்டன் - 3.6 மில்லியன்


தொகுப்பு: ரமேஷ் தாகூர், ஷிவானி