ஜாரவா பழங்குடிகளை அழிக்கும் ரயில்பாதை!








ஜாரவா பழங்குடிகளை அழிக்கும் ரயில்பாதை- இந்தியாவின் சீக்ரெட் பிளான்- .அன்பரசு

ஓர் அரசின் மேலாதிக்கம், மற்றுமொரு நிலப்பரப்பில் வாழும் மக்களின் வளத்தை உறிஞ்சியே வளர்கிறது என்பதற்கு நிகழ்கால சாட்சி அந்தமான் நிக்கோபார் தீவுகள். இந்திய அரசு அங்கு விரைவில் அமைக்கவுள்ள 240 கி.மீ ரயில்பாதை அங்கு ஏற்கனவே வாழிடங்களை இழந்து எஞ்சியுள்ள ஜாரவா ஆதிவாசியினத்தை முற்றிலுமாக துடைத்தழிக்ககூடும் என அச்சம் எழுந்துள்ளது.
வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமானின் தலைநகரான போர்ட்பிளேரிலிருந்து 90 கி.மீ உள்ளே சென்றால் காதம்தலாவிலுள்ள ஹாம்லெட் என்ற ஜாரவா வனப்பகுதி. சூரியன் மறையத் தொடங்கினாலே அங்கு அமைந்துள்ள அரசு பழங்குடி நலவாழ்வு அமைப்பான அந்தமான் ஜன்ஜதி விகாஸ் சமிதி(AAJVS) யின் அலுவலகம் பரபரப்பாகிவிடும். அந்தமானின் ஜாரவா பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் அலுவலகத்தில் பாதுகாப்பாக தங்கவைத்து திருப்பி அனுப்புவதே அங்குள்ள அரசு அதிகாரிகளின் தினசரிபணி. ஜாரவா ஆதிவாசி மக்களின் ஆக்ரோஷம் அப்படியே நம் விராட் கோலி போல. தங்கள் பகுதியின் மீது விமானம் பறந்தாலே அதன் மீது அம்பு எய்யும் ஆயிரம் மடங்கு ஆக்ரோஷம் பிளஸ் மனிதர்கள்!

கரடு முரடு வனவாசிகள்!

ஜாரவா வனப்பகுதியை பிளந்துகொண்டு செல்லும் அந்தமான ட்ரங்க் சாலையிலுள்ள தகவல்பலகையின் எச்சரிக்கைகளை, கவனித்து படித்தால் பீம்புஷ்டி லேகியம் சாப்பிடுபவர்களுக்கும் லைட்டாக தொடை நடுங்கும். முழுநிலவு நாட்களன்று வனப்பகுதியில் குடியேறியுள்ளவர்கள் தங்களின் உயிர் பிழைக்குமா என டாஸ் போட்டு பார்த்தபடி வீட்டில் நடுங்கிக் கிடப்பார்கள். பழமரங்கள், கோழிகள் என கிடைப்பதை இது இனி என் சொத்து பாணியில் ரெய்டு அடித்து  ஆட்டையைப் போடுவது ஜாரவா ஆதிவாசிகளின் ஸ்டைல். பேச்சே கிடையாது; ஏதாவது பேச நினைத்தால், உங்கள் உடல் அம்புகளால் துளைக்கப்பட்டு கடற்புறம் கிடக்கும். அரசே முனைந்து சுற்றுலாவுக்கு பல்வேறு கண்டிஷன்களை விதிப்பது டூரிஸ்டுகளைக் காப்பற்றத்தான்.  ஜாரவா வனப்பகுதியிலுள்ள வீடுகளில் இரவில் கடவுளே வந்து தரிசனத்திற்கு கூப்பிட்டாலும் மக்கள் யாரும் வெளியே வரவேமாட்டார்கள்.
"ஜாரவா மக்களுக்கு நவீன உலகின் சட்டதிட்டங்கள் பற்றி ஏதும் தெரியாது. எந்த விதிகளுக்கும் எல்லைகளுக்கும் அவர்கள் கட்டுப்படுவதில்லை" என்று நடைமுறையை பேசுகிறார் ஆதிம் ஜன்ஜதி விகாஸ் சமிதியின்(AAJVS) அதிகாரி அதுல் மோண்டல். ஆக்ரோஷ வன்முறையோடு சண்டையிட்டாலும் ஜாரவா மக்கள்தான் அந்தமானின் அசல் வனமகன்கள். 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆதிம் ஜன்ஜதி அமைப்பு பழங்குடி மக்களுக்கான நலவாழ்வு திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறது. தற்போது அந்தமானில் வசிப்பவர்கள் பெரும்பாலும் இந்திய சுதந்திரத்தின்போது வங்காள தேசத்திலிருந்து அகதியாக வந்த மக்கள்தான். ஜாரவாக்களின் அம்புகளிலிருந்து இங்குள்ள மக்களை உஷார் செய்பவை வீட்டின் காவல் நாய்களே.


ஆக்கிரமிப்பு படுகொலைகள்!
அந்தமானிலுள்ள ஜாரவா ஆதிவாசிகளின் மீதான தாக்குதல் தொடங்கியது 18 ஆம் நூற்றாண்டில் 1970 ஆம் ஆண்டு ஜாரவா வனப்பகுதியில் அமைக்கப்பட்ட ட்ரங்க் சாலை வழியே பரவிய தொற்றுநோய்கள் ஜாரவா மக்களின் பெரும்பான்மையை வேட்டையாடின. அகதிகளாய் குடியேறிய மக்கள் மெல்ல விலங்குகளை வேட்டையாடத்தொடங்க, அப்போக்கே அந்நிய மக்களுக்கும், ஜாரவாக்களுக்கும் எதிரான கடும் போராக மாறியது. பல்வேறு வேலைகளுக்காக அயல்மக்களை குடியமர்த்திய ஆங்கிலேயர்தான் இதற்கு காரணம். 20 ஆம் நூற்றாண்டில் அரசு, பழங்குடிகளோடு தொடர்புகொள்ள  புகையிலை, மதுபானங்களை ஏராளமாக வழங்கியது அவர்களை அடிமையாக்கியதே தவிர நல்லுறவு இன்றுவரை சாத்தியமாகவில்லை. போதைப்பொருட்களுக்காக நிர்வாணமாக ஜாரவா பெண்கள் ஆடும் வீடியோ காட்சி இதற்கு சாம்பிள்தான். தற்போது அந்த லிஸ்டில் மத்திய அரசின் ரயில்பாதை திட்டம் இணைந்துள்ளது.

இந்தியாவின் சீக்ரெட் பிளான்!

கடந்த பிப்ரவரியில் இந்திய ரயில்வே அமைச்சகம் அந்தமானின் போர்ட் பிளேர் - டிக்லிபூர் வரையிலான 240 கி.மீ தூரத்திற்கு யூனியன் பிரதேசத்தின் முதல் ரயில்பாதையை ஜாரவா வனப்பகுதியில் அமைக்கவிருப்பதாக அறிவித்தது. சாலை மற்றும் கடல் மார்க்க வசதிகளையே மக்கள் அதிகம் பயன்படுத்தாதபோது ரயில்பாதை எதற்கு? என்ற கேள்விக்கு மத்திய அரசு, அந்தமானிலுள்ள 5 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று எம்பி பிஷ்ணு பதா ராய் நாடாளுமன்றத்தில் பதிலளிக்கிறது. போர்ட் பிளேரிலிருந்து - டிக்லிபூருக்கு பஸ், கப்பல் மார்க்கமாக செல்ல 14-24 மணிநேரங்கள் தேவை. புதிய  ரயில்பாதையில் 3 மணிநேரம் போதும். பிராட்கேஜ் ரயில்பாதை அமைக்க செலவு 2,413 கோடி ரூபாய். ரயில்வே தனது 12% லாப அடிப்படையைக் கூட தளர்த்தி இதனை மேற்கொள்ள காரணம், டிக்லிபூரிலிருந்து நூறு கி.மீ தொலைவில் அமைந்துள்ள மியான்மரின் கோகோ தீவிலுள்ள ராணுவத்தளம் அமைத்துள்ள சீனாதான்.அந்தமான் வட்டார அதிகாரப்போட்டியில் இந்தியா களமிறங்க முதல்படியே இந்த அகல ரயில்பாதை. உறுதியாக நஷ்டம் என்று தெரிந்தும் ரயில்பாதை அமைக்க வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

பிஸ்கட்டுகளுக்கு விலை உயிர்!

பழங்குடிகள் தனியாக வாழ்ந்தாலும் வளங்களை மோப்பம் பிடித்துவிட்ட நாடுகள் சும்மாயிருக்குமா? 1789 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று ஆங்கில சர்வேயர் ஆர்.ஹெச்.கோல்ப்ரூக் தெற்கு அந்தமானின் கடற்புறத்திலிருந்த நெக்ரிடோ குடும்பத்தைச் சேர்ந்த ஆதிவாசி மனிதனைப் பார்த்தார். அம்பினால் தாக்காமல், பயந்து ஓடாமல் நின்றவனிடம் கத்தி, பிஸ்கட்டுகளை கொடுத்தார். அவன் வெகுளித்தனம் பிளஸ் ஆசையோடு அதைப் பெற்ற அக்கணம், பழங்குடிகள் வீழ்ச்சியின் தொடக்கப்புள்ளி. 1856 ஆம் ஆண்டு அந்தமானை வளைத்த ஆங்கிலேயர் அதனை காலனி நாடாக மாற்றினர். பழங்குடியினரின் அம்புகளை ஆங்கிலேயர் துப்பாக்கிகளால் மௌனமாக்கியது ரத்தம் தோய்ந்த துயர வரலாறு. இதில் அந்தமானிலிருந்த எந்த பழங்குடியினரும் விதிவிலக்கல்ல. "1780 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் வருகையின்போது அந்தமானீஸ் மக்களின் எண்ணிக்கை 2 ஆயிரம். ஆங்கிலேயர் முழுமையாக அந்தமானை கைப்பற்றியபோது பல்வேறு நோய்களால் மரணித்தவர்கள் போக மிச்சமிருந்தது , அந்தமானீஸ் மக்கள் 625 பேர்தான்" என தகவல்களை விவரிக்கிறார் பழங்குடியினர் ஆய்வாளர் ஜார்ஜ் வெபர். அந்தமானில் அமைக்கப்பட்ட சிறையில் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட தண்டனைக் கைதிகளால் பரவிய மஞ்சள் காமாலை, தட்டம்மை, நிமோனியா மற்றும் பால்வினை ஆகிய நோய்களால் பழங்குடியினர் ஏராளமானோர் மரணித்தனர். சுதந்திரமடைந்த பின்னரும் பழங்குடியினரின் வாழிடம் அழிக்கப்படுவது மாறவில்லை என்பதற்கு அந்தமான் ட்ரங்க் சாலையும், தற்போது அமைக்கப்படவிருக்கும் ரயில்பாதையும் நிகழ்கால சாம்பிள்கள்

  
ஜாரவாக்கள் எங்கே?

"அதிக மக்கள் தொகையிலிருந்து ஜாரவா இனம் தொடர்ந்து குறைந்துவருவது அவ்வினம் விரைவில் அழிந்துவிட வாய்ப்புள்ளது என்பதற்கு சான்று. தற்போது ஜாரவா இனத்தில் 471 பேர் உள்ளனர்." என துல்லிய தகவல்களோடு பேசும் மருத்துவர் ரத்தன் சந்திர கர், தன் ஜாரவா மக்கள் தொகையை அதிகரிக்கும் சாத்தியங்களை  பழங்குடி மக்களின் நல்வாழ்வு துறை இயக்குநராக பணிபுரிந்தபோது முயற்சித்த அர்ப்பணிப்பான மனிதரும் கூட. ஜாரவா வனப்பகுதியை அழிக்காமல் ரயில்பாதை சாத்தியமேயில்லை என அந்தமான் க்ரானிக்கல் பத்திரிகை ஆசிரியர் டெனிஸ் கில்ஸ் மற்றும் டிவி24 சேனலின் ஜான் ராபர்ட் பாபுவும் உறுதியாக பேசுகின்றனர்.
"இந்தியா ஜாரவா வனப்பகுதியில் ரயில்பாதை அமைத்தால் இனி ஜாரவா பழங்குடிகளைப் பற்றிப் பேச அவசியமேயில்லை" என நறுக்கென பேசுகிறார் அந்தமான் நிக்கோபார் ஈகோலஜி சொசைட்டி(SANE) தலைவர் சமீர் ஆச்சார்யா. 1990 களில் வனப்பகுதியை அழித்து உருவாக்கப்பட்ட அந்தமான் ட்ரங்க் சாலையை அமைப்பதற்கு எதிராக பாம்பே இயற்கை வரலாற்று சங்கத்தையும், பல்வேறு தன்னார்வ அமைப்புகளையும் ஒன்றிணைத்து போராடியவர்களில் முக்கியமான தன்னார்வலர் இவர். "வெளியிலிருந்து வந்தவர்களால்தான் அந்தமானீஸ், ஆங்கே உள்ளிட்ட பழங்குடிகள் மதுபானம், போதை, விபச்சாரம் என ஈடுபட்டு அவர்களின் இனமே பெருமளவில் அழிந்தது. ட்ரங்க் சாலை பழங்குடிகளுக்கு ஏற்படுத்திய அழிவை ரயில்பாதை அதிவேகமாக்கும்" என்று ஆவேசமாக பேசும் மதுமுகர்ஜி The Land of Naked People:Encounters With stone Age Islanders நூலின் ஆசிரியராவார்.  

1996 ஆம் ஆண்டு ஜாரவா இனத்தினர் காதம்தலா கிராத்திலுள்ள பிஜோய் பரோய் என்பவரின் தோட்டத்திலுள்ள பழமரங்களிலுள்ள பழங்களை பறித்துக்கொண்டு செல்லும்போது, அக்கூட்டத்திலிருந்த சிறுவன் ஒருவன் கால் முறிந்து கீழே விழுந்துவிட்டான். அவனை அரசு மருத்துவமனையில 5 மாதம் வைத்து சிகிச்சையளித்தனர். அப்போது அவனுக்கு டிவி,ரேடியோ ஆகியவற்றை காட்டி உணவுகளை வழங்கி புதிய உலகினை அறிமுகப்படுத்த முயன்றனர். என்மெய் என்ற அவனின் மூலம் ஜாரவா பழங்குடிகள் சிறிது நெருங்கிவந்தனர். என்மெய் என்ற அச்சிறுவனுக்கு இன்று நடுத்தர வயது. "தனியாக வாழ்ந்து வரும் அவர் காட்டை விட்டு வெளியே அபூர்வமாகவே வெளியே வருவார். தன் உணவுக்காக மீன்களை பிடித்துக்கொண்டு காட்டுக்குள் திரும்பிவிடுவார்என தகவல் கூறுகிறார் அதுல் மோண்டல். 2002 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் சுற்றுலாவுக்கான கட்டுப்பாடுகளை விதித்தாலும், அரசு இதனை முறையாக அமல்படுத்தாதலால் தனியாரின் சுற்றுலா வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. தனக்கான உலகில் அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்த மனிதர்களின் வாழிடங்களை அழித்து ஒரு பாக்கெட் சிப்ஸ், பிஸ்கட்டிற்காக பிச்சை எடுக்க வைத்துவிட்டது அரசு. ஜாரவா மக்களிடம் இப்போது மிச்சமிருப்பது உயிர் மட்டும்தான்!     

அந்தமான் ஹிஸ்டரி
உருவானது - நவம்பர் 1, 1956
பரப்பு - 8, 249 கி.மீ.
மக்கள்தொகை - 3,80,500 இந்து(69.44%), கிறிஸ்தவர்கள்(21.7%), முஸ்லீம்(8.51%)
அதிகாரப்பூர்வ மொழிகள் - இந்தி, தமிழ், பெங்காளி, தெலுங்கு, ஆங்கிலம் 

பழங்குடி இனங்கள்!
அந்தமானீஸ்
18 ஆம் நூற்றாண்டில் இம்மக்களின் எண்ணிக்கை 10 ஆயிரம். பின் 1900 இல் 625 ஆக குறைந்தது. 1999 ஆம் ஆண்டு கணக்கிடப்பட்டபோது 41 பேர்களே அந்தமானீஸ் இனத்தில் மிச்சம்.

நன்றி: குங்குமம்