கிச்சன் சினிமா அன்றும் இன்றும்! - 360 டிகிரி டூர்
கிச்சன் சினிமா- ச.அன்பரசு
இன்றைய சினிமா ட்ரெண்டில் சினிமா சற்றே போரடித்தால்
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பதிவுகளுக்குள் உடனே நுழைந்து விடுகிறார்கள்.
அதுவும் அரைத்த மாவாய் இருந்தால் ஏசி தூக்கம் எங்கு வாய்க்கும் என தூங்கிவிடும்
சான்ஸ் அதிகம். கரகர ஆக்சன், பரபர த்ரில்
படங்களில் மேற்கண்ட விஷயங்கள் நடப்பது குறைவு. ஆக்சன்,
த்ரில்லர், க்ரைம் கடந்து கிச்சன் கான்செப்ட் கதைகளும்
சினிமாவில் ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளன.
இந்தியில் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கும்
செஃப், மலையாளத்தில் உஸ்தாத் ஹோட்டல், சால்ட்
அண்ட் பெப்பர், அங்கமாலி டையரீஸ் தமிழில் உன் சமையலறையில் ஆகிய
படங்களை கூறலாம்.
சமையல் ஸ்டோரிகள் சினிமாவில் நுழைந்த ஹிஸ்டரி அறிந்தால்
படிக்கும்போதே கமகமக்குமே? 1942
ஆம் ஆண்டு ரிலீசான ரொட்டி எனும் மெஹ்பூப்கானின் இந்திப்படமே கிச்சன்
சினிமாக்களின் ஆரம்பம். அதன் பின் சத்யஜித்ரேயின்
Goopy Gyne Bagha Byne(1969) படத்தில் மிகப்பெரும் விருந்து காட்சி வெகு
பிரபலம்.
அடுத்து, வங்கப்படத்தின் ரீமேக்கான
Bawarchi(1972) என்ற படத்தையும் 2012 இல் வெளியான
Luv Shuv Tey Chicken Khurana என்ற படத்தையும் குறிப்பிடலாம்.
இப்படத்தில் குணால் கபூர், தான் கண்டுபிடிக்கும்
சீக்ரெட் சிக்கன் ரெசிபி மூலம் தன் குடும்பத்தின் தாபா பிசினஸையே மீட்டெடுப்பதுதான்
கதை. இதே ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த உஸ்தாத் ஹோட்டல்,
கமர்ஷியலாகவும் விமர்சனரீதியாகவும் பின்னியது. இதன் கான்செப்ட்டும் துல்கர், சமையல் என்பதை படிப்பு
கடந்து அதன் ஆன்மா என்ன என்பதை ஹோட்டல் நடத்தும் தன் தாத்தா திலகன் மூலம் அறிகிறார்.
சுலைமணி கட்டன்சாயா, கோழிக்கோடு சிக்கன் பிரியாணி
என ரசனையாக காட்சிப்படுத்தப்பட படம்.
ஆகஸ்டில் ரிலீசான
Maachher Jhol, புகழ்பெற்ற செஃப்பான தேவ் டி, நோயுற்ற
தன் அம்மாவின் ஆசைக்காக மீன்கறி செய்து தர போராடுவதுதான் கதையே. " உணவு என்பது நம் ஆன்மாவோடு இணைந்த நினைவுகளாகவே மாறியவை. உங்கள் பாட்டி உங்களுக்கு கொடுத்த பாயசம், பர்த்டேவின்
போது உங்கள் நண்பர் பரிசாக கொடுத்த இனிப்பு என்பதை நீங்கள் கச்சிதமாக ஞாபகம் வைத்திருப்பீர்கள்.
அதுதான் உணவின் சக்தி" என்கிறார் மச்செர்
ஜோல் பட இயக்குநரான பிரதிம் டி குப்தா.
சமையல் மந்திரம்!
கிச்சன் சினிமா என்பது குறிப்பிட்ட நாட்டு படங்களுக்கு
மட்டுமேயான தீம் கிடையாது. உலகளவில் சமையலை மையமாக கொண்ட படங்கள்
ஏராளமாக உள்ளன. இத்தாலிய படமான Big Night(1996) இரு சகோதரர்களின் வாழ்க்கை பற்றியது. நியூயார்க்கில்
தங்களது ஹோட்டலை பரஸ்பர சண்டையுடனே நடத்தி வருவார்கள். அடுத்து,
ஆஸ்கர் வென்ற Babette's Feast(1987) படத்தில் வரும்
பிரமாண்ட விருந்து காட்சி, ஜப்பானிய படமான
Tampopo(1985) வரும் சூப் தயாரிப்பு காட்சி நாக்கில் எச்சில் ஊறவைக்கும்.
1994 ஆம் ஆண்டு வெளியான ஆங் லீயின் Eat Drink Man
Woman(1994) படம் வாழ்க்கை, உணவு இரண்டிலும் ஆர்வமிழந்த
வயதான செஃப் பற்றி கதை. ஆசிய படங்களில் உணவை மையப்படுத்தாத கதை
என்றாலும், அதனை முக்கியப்படுத்தி காட்சியப்படுத்தியது தற்செயலல்ல.
வாங் கர் வெய் யின் the Mood For Love(2000) கதையின் கேரக்டர்கள் சாப்பிடும் வெள்ளைநிற
நூடுல்ஸ் மகிழ்ச்சியற்ற மனநிலை கொண்ட கதாபாத்திரத்தையும், திருமதி
சான் நூடுல்ஸ் வாங்கும் காட்சியும் இசையும் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை.
"எனது லன்ச்பாக்ஸ் படத்தின் கேரக்டர்கள் இருவரும் படம் முழுக்க
நேரில் சந்திப்பதேயில்லை. அவர்களுக்கிடையேயான உறவு தோன்றுவதற்கான
பிளாட்பார்ம் உணவு மட்டுமே" என்று புன்னகையுடன் பேசுகிறார்
லன்ச்பாக்ஸ்(2013) இந்திப்படத்தின் இயக்குநரான ரித்தேஷ் பத்ரா.
உணவு அழகாக டெக்கரேட் செய்து இருக்கவேண்டியதெல்லாம்
அவசியமில்லை என்பதை முகத்தில் அறைந்தது போல உணர்த்திய படம் அங்கமாலி டையரீஸ்.
"உணவை மிகவும் கிளாமராக காட்டக்கூடாது என்று நினைத்தோம்.
அங்கமாலியில் பன்றிக்கறி சாப்பிடும் கலாசாரம், பழக்கம் எப்படி இருக்கிறதோ அப்படியே படம்பிடித்தோம்." என்கிறார் படத்தின் இயக்குநரான லில்லி ஜோஸ். படத்தில்
பன்றி, முயல் ஏன் பாம்பு இறைச்சி கூட உண்டு. இப்படத்திலிருந்து வேறுபட்டு அமைந்த படம் ஆதித்ய விக்ரம் சென்குப்தாவின்
Asha Jaoar Majhe. தினசரி ஆபீஸ்
செல்லும் தம்பதிகள் வீட்டுக்கு வந்து மீன்கறி செய்யும் காட்சிகள், மீனை வெட்டுவது, மீத கழிவை பூனை சாப்பிடுவது இந்திய சினிமாவிலேயே
நீளமான சமையல் காட்சிகள் இப்படத்தில்தான் உள்ளன. கருப்பு வெள்ளையில்
படம் பிடிக்கப்பட்ட காட்சியை தியேட்டரில் பார்க்கும்போது, நாக்கில்
உமிழ்நீர் சுனாமி. "சில பொருட்களின் மணத்தை மூக்கு நுகர்ந்த
அடுத்த செகண்டே நம் பழைய நினைவுகளுக்கு சென்றுவிடுகிறோம். கிச்சனின்
எண்ணெய் தெறித்த சுவர் கூட நம்மை பால்யத்துக்கு கைப்பிடித்து கூட்டிச்செல்வதுதான் மிராக்கிள்"
என தீர்க்கமாக பேசுகிறார் இயக்குநர் சென்குப்தா.
சமையலின் ஆக்கிரமிப்பு சினிமா மட்டுமல்ல, டிவிகளிலும் கிச்சன் சூப்பர்ஸ்டார், மாஸ்டர் செஃப் என
வளர்ந்துவருகிறது. "இன்று மக்கள் தாம் சாப்பிடும் உணவை விட
அதனை நன்கு கவனிக்கத்தொடங்கியுள்ளார்கள்" என்கிறார் செஃப்
பட இயக்குநரான ராஜா மேனன்.
"ஐரோப்பிய ஓவியங்களில் நன்றாக கவனித்து பார்த்தீர்களெனில்
இறைச்சியும், காய்கறிகளும் டேபிளில் கச்சிதமாக வைக்கப்பட்டிருக்கும்.
அதற்கு வளமை, பேராசை என இரு அர்த்தங்கள் உண்டு.
ஆனால் இந்திய கலையில் அவை இடம்பெற்றிருக்காது" என்கிறார் கொல்கத்தாவிலுள்ள ஜாதவ்பூர் பல்கலையில் திரைப்படத்துறை துணை பேராசிரியரான
மதுஜா முகர்ஜி.
இறைச்சி சாப்பிடுவது, உணவை
வீணாக்குவதை ரொட்டி படத்தில் மெஹ்பூப்கான் காட்சிபடுத்தியிருப்பது குறித்தும் இதற்கு
உதாராணமாக எடுத்துக்காட்டி பேசுகிறார் இவர். "நிறைய படங்களில்
உணவு என்பது காதல் அல்லது செக்ஸ் வழியில் ஆண்மைக்கான பிரசாரமாக எடுக்கப்படுகின்றன"
என தில்லாக பேசுகிறார் Film and Culture: Genre Study நூலாசிரியர் ஜேம்ஸ் ஆர்.கெல்லர். இனி ரியலாக ஃப்ரெஷ்ஷாக உணவு தியேட்டரில் மணக்க காட்டினால்தான் கிச்சன் சினிமா
பிளாக்பஸ்டர் தகுதியை எட்டும்.
தொகுப்பு: ஆலன் வான்கா, கா.சி.வின்சென்ட்