கிராமத்தை முன்னேற்றிய கலெக்டர் மனைவி



கிராமத்தை முன்னேற்றிய கலெக்டர் மனைவி -.அன்பரசு

ஊரின் பஞ்சாயத்து தலைவர் என்றால் எப்படி இருப்பார்? பயமுறுத்தும் முறுக்கு மீசையை முறுக்கியபடி, மக்களை ஏமாற்றத் தோதான பளீர் வெள்ளைச்சட்டை, எடுபிடிக்கு நான்கு பேர் என்பது போல்தானே! பீகாரின் சிங்வாஹினி கிராமசபை தலைவரான ரிதி ஜெய்ஸ்வால் படாடோபங்களில்லாத மாறுபட்ட தலைவர். சிங்வாஹினி கிராமத்திற்கான பல்வேறு திட்டங்களை மக்களோடு கைகோர்த்து செய்துவரும் தங்கப்பெண்மணி.
பீகாரின் வைஷாலி கிராமத்தில் பிறந்த ரிதுவுக்கு 1996 ஆம் ஆண்டு ஐஏஸ் அதிகாரியான அருண்குமாருடன் திருமணமானது முதல் டெல்லி வாசம். அவ்வப்போது தன் கணவரின் ஊரான சிங்வாஹினிக்கு வந்து செல்லும் சமயத்தில்தான் குடிநீர், மின்சாரம், கழிவறை, சாலைகள் என அடிப்படைத் தேவைகள் கூட இன்றி மக்கள் வேதனைப்படுவதைப் பார்த்து மனம் பதைபதைத்திருக்கிறார்.

உடனே தன் முதல்முயற்சியாக பொகாரோ பகுதியில் பிஎட் முடித்துவிட்டு ஆசிரியையாக பணியாற்றுபவருக்கு, தன் சேமிப்புத்தொகையை மாதந்தோறும் தந்து வறுமையால் பள்ளிக்கு செல்லாத 360 குழந்தைகளுக்கு பாடம் நடத்த ஊக்குவித்திருக்கிறார் ரிது. இதன் விளைவாக, 2015 ஆம் ஆண்டே அக்கிராம வரலாற்றில் மாபெரும் வெற்றியாக 12 மாணவிகள் மேல்நிலைக்கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். பின் கழிவறை சுகாதாரம், பெண்குழந்தை கொலை, இயற்கை விவசாயம் இவற்றை ஊக்குவிக்க விழிப்புணர்வு வீடியோக்களை மக்களுக்கு திரையிட்டு மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
"நான் புதிய முயற்சியில் இறங்கும்போது கிராம மக்கள் பலரும் உன்னால் இதைச் செய்யமுடியாது என்று இடையறாது சொல்வதுண்டு. ஆனால் எனது மனவலிமையை உறுதியாக நம்பினேன். என்னுடைய கனவு தேசத்தை உருவாக்கும் பாதையில் எந்த தடைக்காகவும் மனம் சோராததற்கு முக்கியக்காரணம், என்னை முழுமையாக நம்பி பல்வேறு திட்டங்களுக்கு ஆதரவு தந்த கிராம மக்கள்தான்" என மனமார மக்களுக்கு கிரீடம் சூட்டுகிறார் ரிது ஜெய்ஸ்வால்.

கணவரின் ஆதரவுடன் அவ்வப்போது சிங்வாஹினி கிராமத்தில் பணியாற்றிய ரிது ஜெய்ஸ்வால், பின்னர் அங்கேயே தங்கி பணியாற்றத் தொடங்கியது நல்ல பலன்களை கொடுத்தது. கிராமத்துக்கு முதன்முறையாக மின்சாரவசதிகளை 80 வீடுகளுக்கு மேல் பெற்றுக்கொடுத்து விளக்குகளை ஒளிரவைத்தாலும் அதனைத் தொடர்ந்து மேம்படுத்துவதில் தடுமாற்றம் ஏற்பட்டது. இதற்கான தீர்வைத்தேடியவரை பஞ்சாயத்து தேர்தலில் பங்கேற்க ஆலோசனை கூறியதோடு. 72% ஓட்டுக்களை போட்டு ரிதுஜெய்ஸ்வாலை வெற்றி பெறச்செய்தனர் மக்கள். வெற்றிக்களிப்பில் ஏசி அறையில் குஷன்சேர் போட்டு அமராமல், பெண்கள் ஆர்மி அமைத்து பொதுஇடத்தில் மலம்கழிப்பதை தடுத்ததோடு, மாவட்ட நீதிபதி ராஜீவ் ரோஷன் உதவியோடு 2 ஆயிரம் கழிப்பறைகள் மக்களுக்கு கட்டிக்கொடுத்து திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமம் என பெயர் வாங்கிக் கொடுத்தது இவரின் முக்கிய சாதனை.

"விவசாய தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுத்தர முயன்றபோது பண்ணையார்களின் கொலைமிரட்டல் அழைப்புகள் ஏராளம் வந்தன. பொதுவிநியோகமுறை உள்ளிட்ட விஷயங்கள் முதலில் தடுமாற்றமாக இருந்தாலும் கல்வியின் உதவியால் அதனை துல்லியமாக புரிந்துகொண்டேன்" என உற்சாகமாக பேசுகிறார் ரிது ஜெய்ஸ்வால்.  
குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க அரசு நிதி பற்றாக்குறையாக, மக்களிடம் சிறிது தொகை பெற்று கூடுதலாக தன் சொந்த தொகையையும் சேர்த்து அதனை செம்மை செய்திருக்கிறார் ரிது. பொதுவிநியோக முறையில் பல்வேறு தகிடுதத்தங்கள் நிகழ்வது பஞ்சாயத்து தலைவரான ரிதுவின் காதுக்கு வர, உடனே டீம் ஒன்றை அமைத்து ஆக்சனில் இறங்கியவர் 14 ஆயிரம் ரேஷன்கார்டுகளை திரும்ப பெற்று என்கொயரி செய்து தவறுகளை சீர்திருத்தியது நம்பமுடியாத கம்பீரச் சாதனை.



கிராமத்திலுள்ள 9 பள்ளிகளில் சரியான நேரத்திற்கு வராத ஆசிரியர்களை பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் பள்ளி கேட்டுக்கு முன்னே நின்று வரவேற்பது உள்ளிட்ட அற்புத ஐடியாக்களின் மூலம் தவறை சரி செய்த ரிது, பெண்களுக்கு தையல்பயிற்சி மையம், ஆண்களுக்கு செல்போன் ரிப்பேர் பயிற்சிமையங்களை தொடங்கியதோடு, பல்வேறு என்ஜிஓக்களை அழைத்து கிராம மக்களுக்கு தொழில்பயிற்சி அளித்துள்ளார். இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின்(ICAR) குழுவின் மூலம் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு பல்வேறு சிறப்பான சுயதொழில் பயிற்சிகளையும் தர உதவியது ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை அமைக்கும் லட்சிய செயல்பாடுகளுக்கு சாட்சி.
இவரின் செயல்பாடுகளுக்கு அங்கீகாரமாக 2016 ஆம் ஆண்டு பாரதீய சத்ரா சன்ஷத் என்ற அமைப்பு 'Uccha Shikshit Aadarsh Yuva Sarpanch Puraskar '  விருதளித்து கௌரவித்துள்ளது. பீகாரைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்களில் முதன்முறையாக இவ்விருதைப் பெறுபவர், ரிது ஜெய்ஸ்வால் மட்டுமே. "ஊழல்,நோய்,ஜாதி,பேராசை பயமின்றி நிம்மதியாக தினசரி என்னுடைய கிராமத்து மக்கள் உறங்கவேண்டும் என்பதே என்னுடைய ஆசை" என புன்னகைக்கிறார் ரிது ஜெய்ஸ்வால். மக்கள் சூப்பர்ஸ்டார் நீங்கள்தான் ரிது


பாரதீய சத்ரா சன்ஷத்!

2011 ஆம் ஆண்டு ராகுல் வி காரத் என்பவரால் உருவான பாரதீய சத்ரா சன்ஷத், 29 மாநிலங்களில் 400 பல்கலைக்கழகங்களிலுள்ள 25 ஆயிரம் மாணவர்களுக்கு(18-25 வயதுக்குட்பட்ட) பொதுவாழ்வில் ஈடுபட பயிற்சியளிக்கும் அரசியல் சார்பற்ற தன்னார்வ அமைப்பு. இந்தியாவின் ஜனநாயக அரசியல் அமைப்பில் படித்த இளைஞர்களைக் பங்கேற்கச்செய்யும் விதமாக அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள், விருதுகள் உள்ளிட்டவற்றையும் இவ்வமைப்பு ஸ்பெஷலாக அளிக்கிறது. வலுவான சுயசார்பான தலைமையையும் உறுதியான கொள்கைகளையும் உருவாக்கி இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே பாரதீய சத்ரா சன்ஷத்தின் லட்சியம்.

தொகுப்பு: மகேஷ் யாதவ், பிட்டு காஷ்யப்