குற்ற கிராமத்தை திருத்திய வினோபா பாவே ஆசிரம தம்பதி!






குற்ற கிராமத்தை திருத்திய வினோபா பாவே ஆசிரம தம்பதி! -.அன்பரசு

உத்தரப்பிரதேசத்தின் பன்காதாரா கிராமம். வினோபாவே ஆஸ்ரமத்தின் வளாகத்தில் அமைந்துள்ள பள்ளியில் கற்கும் 1400 மாணவர்கள் கோரஸாக வாசிக்கும் ஒலி மனதை மயக்குகிறது. கிராமத்திலுள்ள பெண்களும் சும்மாயில்லை, வீடுகளில் துணிகளை டெட்லைன் குறித்து வைத்து பரபரவென தைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாற்றங்கள் சாத்தியமானதற்கு ஒரே காரணம், 1980 ஆம் ஆண்டு இக்கிராமத்தில் வினோபாவே ஆசிரமத்தை தொடங்கிய ரமேஷ், விம்லா தம்பதியினர்தான்.

காந்தியை முன்னோடியாக கொண்டு சர்வோதயா, பூதான திட்டங்களை நாடு முழுக்க பரப்பிய வினோபாபாவேயின் சமூக சீர்திருத்த கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தார் சாஜஹன்பூரைச்சேர்ந்த இளைஞரான ரமேஷ். பாதயாத்திரை நிகழ்ச்சி ஒன்றில் ஆச்சார்ய வினோபாவைச் சந்தித்ததுதான் ரமேஷின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை.

"நான் மக்களின் யதார்த்த வாழ்வில் பங்கேற்று அவர்களின் பிரச்னைகளை தீர்க்க விரும்பினேன். அப்போதுதான் சாராயம் காய்ச்சுவது தொடர்பான க்ரைம் ரெகார்டுகளில் எப்போதும் இடம்பெற்று வந்த பன்காதாரா(முன்னர் பர்தாரா) கிராமத்தை பற்றி அறிந்தேன். என்னுடைய கொள்கைகளுக்கான சரியான இடமாக அக்கிராமத்தை தேர்ந்தெடுத்தேன்" என புன்னகையுடன் கூறுகிறார் ரமேஷ். இவரின் செயல்பாட்டுக்கு தோள்கொடுத்த துணைவி விம்லா என இருவரும் 1980 ஆம் ஆண்டில் பன்காதாரா கிராமத்தில் சிறிய இடத்தை வாங்கி அதில் வினோபாவே ஆசிரமத்தை தொடங்கினர். அப்போது இவர்களின் பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 3. 29 ஆண்டுகளாக கிராம நல்வாழ்வுக்காக உழைத்த இவரின் பணி ஒவ்வொரு இடத்திலும் சுடர்விடுகிறது.  

"அன்று கிராமத்திலிருந்த ஒவ்வொரு குடும்பமும் குடிசைத்தொழிலைப் போல சாராயம் தயாரித்துக்கொண்டிருந்தது. 5 ரூபாய்க்கு மொலாசஸை வாங்கி, சாராயம் காய்ச்சி 65 ரூபாய்க்கு விற்றால் லாபம் 30 ரூபாய். மது, உடல்நலத்தை பாதிக்கிறது என்ற குற்ற உணர்வுகூட மக்களிடம் இருக்கவில்லை" என அக்காலகட்ட அவலநிலையை பதிவு செய்கிறார் ரமேஷின் மனைவியான விம்லா. ஆசிரமத்தின் முதல் பணியாக பெண்களுக்கான தையல் மூலம் வேலைவாய்ப்பை தந்து சாராயத்தொழிலை கைவிடச்செய்யும் முயற்சியை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் ரமேஷ் விம்லா தம்பதி முன்னெடுத்தது நாளடைவில் பெரும் வெற்றி தந்தது.

ஆசிரம செயல்பாடுகளில் மக்கள் பங்காற்றுவதோடு, டெய்லரிங் தொழிலும் தினசரி 20 ரூபாய் வருமானம் கிடைத்தது. அதோடு மக்களின் நம்பிக்கை பெற்று முன்னேறிய வினோபாவே ஆசிரமம், அப்பகுதியில் தொடங்கிய வினோபாவே வித்யாபீடம் இன்று இன்டர்மீடியேட் கல்லூரியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி தரும் நிறுவனமாக வளர்ந்ததன் பின்னணியில் ரமேஷ்-விம்லா தம்பதியினரின் அசுர உழைப்பும் தொலைநோக்கு சிந்தனையும் வேராக இருந்தது. ஆசிரமத்தின் தற்சார்பு திட்டங்களின் மூலம் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அரசு உதவியை நாடாமல் உணவும் வழங்கப்படுவது அசத்தல். 100 கற்றல் மையங்கள் மூலம் கல்வி, 40 பெண்கள் மையத்தின் மூலம் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான கல்வியும் உணவும் வழங்கப்படுவது சமூகத்திற்கான அரும்பணி.

"இருள் குறித்து குறை சொல்வதைவிட அதனை நீக்க விளக்கை ஏற்றுவதே சிறந்தது என்பதே எங்கள் ஆசிரம கொள்கை" என கோரஸாக சொல்லும் தம்பதிகளின் உழைப்பு, 11 ஏக்கர்களாக விரிவான ஆசிரமத்தின் நடைபெறும் பல்வேறு செயல்பாடுகளிலேயே தெரிகிறது. 1995 ஆம் ஆண்டில் பட்டுப்புழு, மண்புழு வளர்ப்பு, எம்ப்ராய்டரி, கம்பளம் நெய்வது, காய்கறி விவசாயம், பால்பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றில் பெண்கள் ஊக்குவிக்கப்பட்டனர். தற்போது உத்தரப்பிரதேசத்திலுள்ள 32 மாவட்டங்களில் 1100 பேர் வினோபா பாவே சேவா சங்கத்தின் தற்சார்பு வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பொறுப்பேற்று, முழுமூச்சாக ஈடுபாட்டுடன்  செய்துவருகின்றனர். விளைவு, பன்காதாரா கிராமம் தவிர்த்து 20 கிராமங்களை பூரண மதுவிலக்கு பகுதிகளாக மாறியுள்ளது இவர்களின் தன்னிகரற்ற சாதனை.   
   " உலகிலுள்ள மனிதர்களை ஒன்றாக பாவித்து மனிதநேய சேவைகளை செய்யவேண்டும் என்பதே வினோபாபாவேயின் தனித்துவக் கொள்கை. நாங்கள் அக்கருத்தில் நம்பிக்கை வைத்து சில செயல்பாடுகளை முயற்சித்தோம். எங்கள் வாழ்க்கை முழுவதும் இச்செயல்பாட்டை தொடர ஆசை. எங்களுடைய கனவை யாரும் தனக்கான லட்சியமாகவும் பின்தொடரவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமும் கூட" என புன்னகையோடு பேசுகின்றனர் வினோபா பாவேயின் கொள்கை செயல்பாட்டு வீரர்களான ரமேஷ் - விம்லா தம்பதியினர்.

திட்டங்கள் புதுசு!
1980-1985 - மக்களின் மனநிலையை மாற்ற பிரசாரம்
1985-1990- அரசு திட்டங்களை பிரசாரம் செய்தல்
1990-1995 - பால் உற்பத்தி உள்ளிட்ட தற்சார்பு திட்டங்கள் தொடக்கம்
ராதா திட்டம் - 13,830(கிராம சுகாதாரப்பணி பயிற்சியாளர்கள்)
தேவகி திட்டம் - 2,120(பிரசவ செவிலியர்கள்)
AAROH திட்டம் - கணவன் மனைவி சமஉரிமை சொத்து.
SAN UP திட்டம் - சூழல் கேடற்ற விவசாயம்


பரிசுகள் பெற்ற பணிகள்
நேஷனல் யூத் விருது(2004,2005) நபார்டு வங்கியின் SHG விருது, காந்தி புரஸ்கார் விருது, ஜன்பத் ரத்தன்(2004), ஸ்வயம் சித்தா விருது, மகிளா சிரோமணி விருது, மாத்ரா சக்தி சம்மான், பிரகிருதி ராமா விருது.

தொகுப்பு: ரஜித் பெலகெண்டா, லூதர் எடன்பர்க்
 





பிரபலமான இடுகைகள்