டிஎன்ஏ தூதர்! -ச.அன்பரசு




டிஎன்ஏ தூதர்! -.அன்பரசு





ஹோமோசெபியன்களான மனித இனம் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி பெற்றுவர டிஎன்ஏ, ஜீன்கள் முக்கிய காரணம். இன்று நாம் பெற்றுள்ள வளர்ச்சி என்பது லட்சக்கணக்கான ஆண்டுகளின் விளைச்சல். அறிவியல் வளர்ச்சி டல்லாக இருந்தபோது, டிஎன்ஏ மற்றும் ஜீன்களில் ஏற்படும் பர்மனன்ட் குளறுபடிகள் முன்பு மருத்துவர்களுக்கு அசகாய சவாலாக இருந்தன. ஆனால் இன்று, மருத்துவத்தில் ஏற்பட்ட அப்டேட் வளர்ச்சி மூலம் டிஎன்ஏவையே எடிட் செய்து நலம் பெறலாம்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யமுனா கிருஷ்ணனும் இத்துறையில் தான் செய்த சாதனைக்குத்தான் இன்ஃபோசிஸ் பவுண்டேஷனின் பிசிகல் சயின்ஸ் 2017 விருதை வென்றிருக்கிறார்.
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியரான யமுனா, டிஎன்ஏ நானோபாட் மூலம் நோயுற்ற செல்களின் வளர்சிதைமாற்றத்தை கண்டறியும் இமேஜிங் டெக்னிக்குத்தான் 22 கேரட் தங்க மெடலோடு, 65 லட்ச ரூபாய் தொகையும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. நானோபாட் என்பது டிஎன்ஏ மூலம் உருவாக்கப்படுகிறது. செல்களையும் மருந்துகளையும் கையாள கைகளும், அதை ரத்தத்தில் கொண்டு சேர்க்க கால்களும் உண்டு. செல்களின் அமைப்பில் சில மாறுதல்களை செய்யவும், ரத்த ஓட்டத்தில் சில மருந்துகளை கொண்டு சேர்க்கவும் தற்போது பயன்பட்டு வருகிறது. கண்களால் பார்க்க முடியாத சைஸிலுள்ள இவை உயிர்செல்களுக்கு தீங்கிழைக்காதவை.

ஜீன்களை எடிட் செய்யும் CRISPR-Cas9 போன்ற ஹைஎண்ட் தொழில்நுட்பங்கள் மிகச்சிக்கலான பிறப்புக்குறைபாடுகளுக்கு உதவினாலும், குறிப்பிட்ட நோய்களின் தன்மையறிந்து அதற்கான சிகிச்சை பெறுவதே இன்றைய அவசரத்தேவை. யமுனா கிருஷ்ணன், நோயுற்ற செல்களின் தன்மையை ஆராய்ந்து அளவிட்டிருக்கிறார். இதன்மூலம் நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சையை பிளான் செய்யலாம்."இக்கண்டுபிடிப்பின் முக்கிய அம்சம், நோயைக் கண்டறிவதோடு அதன் நிலை பற்றிய துல்லிய அளவீட்டையும் பெறமுடியும் என்பதே. இந்த ஆய்வில் செல்லின் தன்மை,நோயின் தீவிரம் ஆகியவற்றையும் அறியலாம்" என தன் நோயறியும் முறையை விளக்குகிறார் யமுனா. நோயுற்ற செல்களை அழிப்பது அல்லது ரீபுரோகிராம் செய்ய முடிவது இம்முறையில் கூடுதல் பிளஸ்பாய்ன்ட்.

யமுனாவின் சோதனை முறைகளில் செல்களிலுள்ள வேதிப்பொருட்களுக்கு ஏற்ப நானோபாட்கள் நிறம் மாறும் இமேஜிங் டெக்னாலஜி இவருக்கு பரிசு பெற்றுத்தந்த லேட்டரல் திங்கிங் ஐடியா. குழந்தைகள் மற்றும் சிறுவர்களைத் தாக்கும் பார்க்கின்சன்,அல்சீமர் உள்ளிட்ட நியூரான் சிதைவு நோய்களை கண்டறியும் ஆய்வு நிறுவனத்தை விரைவில் தொடங்கவிருக்கிறார் யமுனா.

இம்முறை மூலம் 50 அரிய லைசோசோம்(LSD) குறைபாட்டு பிரச்னைகளை கண்டறிய முடியும். "இன்போசிஸ் பவுண்டேஷனின் விருது தொகையையும் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்த ஐடியா இருக்கிறது.நியூரான் தொடர்பான சிக்கல்களை முன்னரே கண்டறிந்தால் விலைமதிப்பற்ற குழந்தைகளின் வாழ்க்கையைக் காப்பாற்ற முடியுமே!" என பேச்சில் நம்பிக்கை குளுக்கோஸ் ஏற்றுகிறார் இன்வென்ஷன் இளவரசி யமுனா. சென்னை பல்கலையில் பிஎஸ்சி, பெங்களூருவில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் மையத்தில் எம்எஸ், பிஹெச்டி முடித்தவர் தேசிய உயிரியல் மையத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். செல்களிலுள்ள நியூக்ளிக் அமிலம் தொடர்பாக நானோ அமைப்புகளை உருவாக்கும் இவரது ஆய்வுச்சாதனைகளைப் பாராட்டி, சாந்தி ஸ்வரூப்(2013), போஸ்டன் யங் சயின்டிஸ்ட்(2012) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. "எனது ஆராய்ச்சியின் பயன்கள் அமெரிக்க, ஐரோப்பா மக்களைத்தாண்டி சீனா,இந்தியா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதி மக்களுக்கும் சென்று சேரவேண்டும் என்பதே என் ஆசை." என்று புன்னகைக்கிறார் ஆராய்ச்சியாளர் யமுனா கிருஷ்ணன்.

அறிவியலுக்கு பரிசு!

2008 ஆம் ஆண்டு முதன்முதலாக இன்ஃபோசிஸ் பரிசு  கணிதப்பிரிவில் வழங்கப்பட்டது. பின்னர் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்ஃபோசிஸ் சயின்ஸ் பவுண்டேஷன் மூலம் ஆண்டுதோறும் கணிப்பொறி அறிவியல்,கணிதம், இயற்பியல், வாழ்வறிவியல், சமூக அறிவியல்,மனிதநேயம் ஆகிய ஆறு பிரிவுகளில் தகுதியான ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் செலக்ட் செய்யப்பட்டு பரிசுகளை வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள். தேர்வாகும் ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 65 லட்ச ரூபாய் பரிசுத்தொகையோடு மெடல் வழங்கப்படுகிறது. இங்கு பரிசு பெறும் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் தங்களுடைய ஆய்வு பற்றி உரையாற்றுவது இளம் மாணவர்களை ஊக்குவிக்கும் சயின்ஸ் டானிக். அறிவியல் ஆய்வு கலாசாரத்தை பிரசாரம் செய்வதே இன்ஃபோசிஸ் சயின்ஸ் அமைப்பின் லட்சியம்.




நானோபாட்ஸ்

1959 ஆம் ஆண்டு அமெரிக்க இயற்பியலாளரான ரிச்சர்ட் ஃபெய்மன், எழுதிய  There's Plenty of Room at the Bottom என்ற கட்டுரையில் நானோபாட் பற்றிய ஐடியாவை முதன்முதலில் வெளியிட்டார். 10−9 meters  அளவுள்ள மைக்ரோஸ்கோப்பில் காணும் அளவுள்ள ரோபோ. முதலில் ஆய்வுநோக்கில் உதவினாலும் இன்று சிகிச்சைக்கு பயன்படத் தொடங்கிவிட்டன. உடலின் ரத்தத்தில் செலுத்தப்படும் நானோபாட்ஸை ஃப்ளூரோஸ்கோப், எக்ஸ்ரே, மைக்ரோவேவ்ஸ்,வெப்பம் மூலம் கண்காணிக்க முடியும். இதிலுள்ள மைக்ரோ கேமரா படங்களை எடுக்கவும், உள்ளேயுள்ள மருந்து அல்லது செல்கள் சிகிச்சைக்கும், நானோபாட்டின் பின்னாலிலுள்ள கம்பிகள் ரத்தத்தில் நீந்தி சரியான திசையில் செல்லவும் உதவுகிறது. கேன்சர் செல்களை அழிக்க, தகவல்கள் அறிய, சிகிச்சைக்கான புதிய எளிய பொருளாக பயன்படுகிறது. அமெரிக்கா,கனடா,இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் செய்த சர்வேயில் 2020 ஆம் ஆண்டில் நானோடெக்னாலஜி துறையின் யூக வளர்ச்சி 75.8 பில்லியன் டாலர்கள்.
. (researchandmarkets.com தகவல்படி)
நன்றி: குங்குமம்
தொகுப்பு: விக்டர் காமெஸி   
  
  

  

பிரபலமான இடுகைகள்