கடவுள் ஆணா, பெண்ணா, ஏன் வறுமை, மகிழ்ச்சி எங்கே, சமூகத்தின் விதிமுறை - ஜே கிருஷ்ணமூர்த்தி பதில்கள்

 
ஜே கே

ஜே கிருஷ்ணமூர்த்தி


ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்

 

பயமில்லாத நிலை என்ற பழக்கத்தை நாம் எப்படி பெறுவது?


நீங்கள் பயமில்லாத நிலை என்பதை பழக்கம் என்று கூறுகிறீர்கள். அதை சரியாக கவனியுங்கள். பழக்கம் என்பது தினசரி திரும்ப திரும்ப செய்வதன் மூலம் உருவாகிறது. பயமில்லாத நிலை என்பது பழக்கங்களில் ஒன்றா? இல்லை. வாழ்க்கை, மரணம் என இரண்டையும் நேரடியாக சந்திக்கும்போதுதான் பயமற்ற நிலை உருவாகும். அவற்றை நீங்கள் நேரடியாக பார்த்து அவற்றை ஆய்வு செய்து புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை பற்றிய பயங்களிலிருந்து சுதந்திரம் பெற்று பயமற்ற நிலையை அடைய முடியும்.
நீங்கள் செய்யும் விஷயங்களை பழக்கவழக்கங்கள் என புரிந்துகொண்டீர்கள் என்றால் அது தவறான புரிதல். பழக்கங்களை அடிப்படையாக கொண்டுதான் வாழ்கிறீர்கள் என்றால் நீங்கள் செயல்களை செய்யும் எந்திரமாக வாழ்கிறீர்கள் என்று பொருள். பழக்கவழக்கங்களை தினசரி செய்வது வருவது என்பது உங்களை நீங்களே பாதுகாக்க சுவரைச் சுற்றி கட்டிக்கொள்வது போலத்தான். அதனால் நாம் மனதளவில் பாதுகாப்பாக உணர்கிறோம். ஆனால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், உணர்ச்சிகள், பிரச்னைகள், எதிர்வினைகள் என அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கும்போதுதான் பயத்திலிருந்து சுதந்திரம் பெற்றிருக்கிறோமா என்று தெரியும்.

ஒருவர் எப்படி அறிவுக்கூர்மையைப் பெறுவது?


நீங்கள் கேட்கும் கேள்வி வழியாக என்ன தெரிந்துகொள்ள நினைக்கிறீர்கள். பொதுவாக ஓரிடத்திற்கு செல்ல வழி கேட்பவர்களுக்கு அவர்கள் சென்று சேர வேண்டிய இடம் தெரியும். ஆனால் அதை அடைவதற்கான வழி தெரியாது. அதை அவர்கள் விசாரித்து அறிந்துகொண்டு செல்வார்கள். அறிவுக்கூர்மை என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே, அதை அடையும் வழிகளை என்னிடம் கேட்கிறீர்கள்.

உங்கள் மனதில் பயம் இருந்தால் அறிவுக்கூர்மையாக நீங்கள் வளர்ச்சியடைவது கடினம்.அறிவுக்கூர்மையை வளர்க்கும் காரணிகளான  கூர்மையாக கவனிப்பது, கேள்விகளைக் கேட்பது,  ஆராய்வது ஆகியவற்றை மனதிலுள்ள பயம் தடுத்துவிடும். மனதில் பயமில்லாத நிலைதான் அறிவுக்கூர்மை என்று நான் குறிப்பிடுகிறேன். நீங்கள் நான் எப்படி அறிவுக்கூர்மையுடையவனாக மாறுவது என்று கேள்வி கேட்கிறீர்கள். அறிவுக்கூர்மையை வளர்த்துக்கொள்ளும் முறையைக் கேட்கிறீர்கள். அதை நீங்கள் கற்றாலும் முட்டாளாகத்தான் ஆவீர்கள்.

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?


எப்போது நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தீர்கள் என்று நினைவிருக்கிறதா? நீங்கள் சோகமாக, வேதனையில் இருந்த நிலையை அறிந்திருப்பீர்கள். உங்களது உடல் அளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் வலியை நினைவில் வைத்திருப்பீர்கள். ஒருவர் உங்களை அடித்து உதைத்திருக்கலாம் அல்லது உங்கள் மீது கோபமாக இருக்கலாம். இதன் காரணமாக வேதனையான துயரமான அனுபவங்களை அறிந்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருந்தீர்கள் என்பதை அறிவீர்களா? உங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதை எப்போதும் அறிந்திருக்கிறீர்களா? உண்மையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை உணரமுடியாத விழிப்புணர்வற்ற நிலையில்தான் இருந்திருப்பீர்கள்.
அப்படி மகிழ்ச்சியாக இருப்பதை உணர்ந்தால் அதை தக்கவைத்துக்கொள்ள நினைத்திருப்பீர்கள் அல்லவா? ஆனால் பெரும்பாலான மனிதர்கள் கடும் வேதனைகளை அனுபவிக்கிறீர்கள். இதற்கு காரணம், மகிழ்ச்சி என்றும் நீங்கள் நம்பும் அனுபவங்களுக்கு செல்ல நினைக்கிறீர்கள். நான் இந்த வாரம் மகிழ்ச்சியாக இருந்தேன். இந்த ஒருநாள் மகிழ்ச்சியாக செலவழிதேன் என்று கூற முடியுமா? ஏனெனில் மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களில் உங்களையே மறந்து விழிப்புணர்வற்று இருக்கிறீர்கள். அதுதான் மகிழ்ச்சியின் அழகு….
 

மனிதன், சமூகத்தில் பல்வேறு பயங்களிலிருந்து விலகி அதேசமயம் அவனது வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்வது சாத்தியமா?

 
சமூகம் என்பது என்ன? சில மதிப்பீடுகள், சில தொகுப்புகளான விதிமுறைகள், பண்பாடுகள், கட்டுப்பாடுகள் அப்படித்தானே? நீங்கள் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு நடைமுறைரீதியாக இருக்க முடியுமா என்று என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள்? ஏன் முடியாது? நீங்கள் இந்த சமூகத்தில் அதற்கான விதிமுறைகளுக்கு உட்பட்டு வாழ்ந்து வருகிறீர்கள். நீங்கள் இப்போது உங்களை சுதந்திரமானவராக உணர்கிறீர்களா? நடைமுறை ரீதியாக வாழ்வது என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள். அதற்கு என்ன அர்த்தம்? காசு பணம் சம்பாதிப்பதை குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் உலகில் பல்வேறு செயல்களை செய்து பிழைத்துக்கொள்ள முடியும்.  ஆனால் நீங்கள் சுதந்திரமானவராக இருந்தால் பிழைப்புக்கான வழியை எளிதாக தேர்ந்தெடுக்க முடியுமே? இது நடைமுறை சாத்தியமான வாய்ப்பு இல்லையா? நீங்கள் உங்கள் சுதந்திரத்தை கைவிட்டு ஏற்கெனவே உள்ள விதிமுறைகளுக்கு பொருத்தமாக உங்களை மாற்றிக்கொள்ள விரும்புகிறீர்களா?  இந்த வழிமுறையில் நீங்கள் மருத்துவராக, வழக்குரைஞராக, தூய்மை பணியாளராக கூட பணி செய்து வாழ முடியும். நீங்கள் சுதந்திரமானவராக இருந்தால், அறிவுக்கூர்மையைப் பெற்று உங்களுக்குத் தேவையான வழிமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். பண்பாடுகளை விலக்கிவிட்டு உங்களுக்கு பிடித்த விஷயங்களை தேர்ந்தெடுப்பது சாத்தியம்தான். நீங்கள் செய்யும் செயலை பெற்றோர் அல்லது சமூகமே கூட ஏற்காமல் இருக்கலாம். அறிவுக்கூர்மையோடு உங்களுக்கான ஏற்ற செயலைத் தீர்மானித்துக் கொண்டு இயங்குகிறீர்கள். மேம்பட்ட அறிவுடன் மனிதர்கள் இயங்குவது இப்படித்தான் இருக்க முடியும்.

சிலர் வறுமையான சூழ்நிலையில் இருக்கிறார்கள். பிறர் வளமையான செழிப்பான சூழலில் வாழ்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு?


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். என்னை கேள்வி கேட்டு பதிலுக்கு காத்திருப்பதை விட நீங்களே இதற்கான பதிலை தேடி கண்டுபிடிக்கலாமே? நீங்கள் கர்மாவை நம்புகிறீர்களா? முற்பிறப்பில் செய்த நன்மைகளுக்கு நீங்கள் இப்போது வசதியாக வாழ்கிறீர்கள். அதேபோல அப்பிறப்பில் செய்த தீமைகளுக்கு ஒருவர் வறுமையில் உழல்கிறார். அவ்வளவுதானே? நீங்கள் சொன்ன விஷயங்கள் மிகவும் சிக்கலானவை. ஒருவர் வறுமையில் இருக்கிறார் என்றால் அது சமூகத்தின் பிரச்னை, கோளாறு. சமூகத்தில் உள்ள மனிதர்கள் பேராசை கொண்டவர்களாக, தன்னை மட்டுமே உயரத்தில் முதல் இடத்தில் அமர்த்திக்க்கொள்ளவேண்டும் என சுயநலம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். நாம் அனைவருமே முதலிடம் செல்லவேண்டும் என்ற ஏணியில் தொற்றிக்கொண்டுதான் இருக்கிறோம். இதனால் என்ன நடக்கிறது. இதனால் சிலர் தங்கள் சுயநலத்திற்காக பிறரை அழிக்கிறார்கள். இதனால்தான் எனக்கு மட்டும் வாழ்க்கை ஏன் மோசமாக இருக்கிறது? உனக்கு சக்தி இருக்கிறது. ஆனால் எனக்கு இல்லை  என சிலர் புலம்புகிறார்கள். முதலிடம் என்ற பேராசையில் ஏணியில் தொங்கும் அனைவருமே நோய்வாய்ப்பட்டவர்கள்தான். வெற்றிபெறவேண்டும் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் பணக்காரர்கள் அல்லது ஏழைகள் என மனிதர்கள் எப்படி மாறுகிறார்கள்.
அந்த ஏணியில் உள்ளவர்களை கீழே தள்ளி அவர்களின் வாழ்க்கையை அழித்துத்தான் முதலிடத்தைப் பெறவேண்டும், அல்லது குறைந்தபட்சம் பிறரை முந்தவேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே இது நம் மனதிலுள்ள பிரச்னை. இதற்கும் கர்மாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
 

கடவுள் என்பவர் ஆணா, பெண்ணா அல்லது மர்மமான ஒருவரா?


நான் இப்போதுதான் உங்கள் கேள்விக்கு பதில் கூறினேன். உங்கள் கேள்வியைப் பார்த்தால், எனது பதிலை கவனிக்காதது போல தெரிகிறது. இந்த நாடு ஆண்களுக்கு முன்னுரிமை கொடுத்து மேலாண்மையாக செயல்படுகிறது. நான இப்போது கடவுள் என்பது பெண் என்று பதில் கூறினால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நான் கூறிய பதிலை உடனே மறுப்பீர்கள். ஏனெனில் உங்கள் மனதில் கடவுள் என்றால் ஆண் என பதிந்து வைத்திருக்கிறீர்கள். எனவே நீங்கள் உங்களை முதலில் கண்டுபிடித்து அறியவேண்டும். அதற்கு முன்னால் அனைத்து முன்முடிவுகளிலிருந்தும் வெளியே வருவது முக்கியம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை