கனவை நிறைவேற்ற உதவியவர்களை தேடிச்சென்று நன்றி சொன்னால்... தேங்க்யூ - விக்ரம்குமார்

 












தேங்க்யூ

சைதன்யா அக்கினேனி, மாளவிகா நாயர், ராஷி கண்ணா

தனது குறிக்கோளில் சமரசமே இல்லாமல் முன்னேறுபவன், அதற்காக உறவுகளை உதறித்தள்ளினால் என்னாகும் என்பதே தேங்க்யூ.

படம் மனிதர்களைப் பற்றிய நல்லுணர்வுகளை ஏற்படுத்த முயல்கிறது. அந்த வகையில் பாராட்டத்தக்கது.

அபிராம் வைத்யா என்ற ஆப் ஒன்றை உருவாக்குகிறார். அவர் அமெரிக்காவில் வேலையில் சேரவே வருகிறார். ஆனால் அங்கு வந்து ஸ்டார்ட்அப்பாக வைத்யா நிறுவனத்தைத் தொடங்கி வெற்றி பெறுகிறார். இதற்கான முதலீட்டை அவரது  அபியின் காதலியும் எதிர்கால மனைவியுமான பிரியா கொடுக்கிறார். நாட்கள் செல்ல செல்ல நான்தான் அனைத்தையும் செய்தேன். இதில் பிறருக்கு எந்த பங்கும் இல்லை என்ற ஈகோ அபியிடம் தலைதூக்குகிறது. இதனால் நிறுவனத்தை தொடக்க காலத்தில் உருவாக்கிய  தன் நண்பர்களை வேலையில் இருந்து தூக்குகிறான். நாம் சாதித்தோம் என்பதை தான் சாதித்தேன் என மீட்டிங் ஹாலில் உள்ள போர்டில் மாற்றி எழுதும் அளவுக்கு தலைகனம் உச்சத்திற்கு செல்கிறது.

இதனால் பிரியா அபியை விட்டு விலகுகிறாள்.  ஒன்றாக சேர்ந்து வாழ்வதால், உறவிலிருந்து விலகும்போது பிரியா கர்ப்பமாக இருக்கிறாள். அதைக்கூட அபியிடம் சொல்லுவதில்லை. தன்னை அமெரிக்காவிற்கு வரவழைத்த கன்சல்டன்சியைச் சேர்ந்தவருக்கு கூட உதவி செய்ய அபி நினைப்பதில்லை. அவரை ஒட்டுண்ணி என்கிறான். இதனால் நொந்துபோன கன்சல்டன்சியைச் சேர்ந்த இயக்குநர், மெல்ல வருந்தி மாரடைப்பு வந்து இறக்கிறார். அப்போது வரும் போன் அழைப்பு, அபிக்கு தான் செய்த தவறை புரியவைக்கிறது. அவனது  வாழ்க்கையில் அவனின் கனவுக்கு உதவிய பல மனிதர்களை சென்று மீண்டும் சந்திக்கிறான். அதிலிருந்து அவன் பெறுவது என்ன என்பதே கதையின் இறுதிப்பகுதி.

ராஷி கண்ணாவின் நடிப்பு பற்றி சொல்ல ஏதுமில்லை. கிடைத்த வாய்ப்பில் பள்ளி கால மாணவியாக மாளவிகா நாயர் நன்றாக நடித்திருக்கிறார். அபியோடு ஓடிச்சென்று வாழலாம் என்று நினைத்து ரயில் நிலையத்தில் அவனோடு பேசும் காட்சி சிறப்பாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. தனது காதலனை அவனது கனவை நிறைவேற்றுவதற்காக அவள்  விட்டுக்கொடுத்துவிட்டு அழுதபடி செல்கிறாள். இதற்கான பின்விளைவாக அவளது அப்பா, அவளுடன் பேசுவதை நிறுத்திவிடுகிறார்.

 

அபி, 17 ஆண்டுகள் ஆன பிறகு தனது முன்னாள் காதலி, கல்லூரியில் உருவான வலுவான நினைத்தாலே ரத்தம் கொதிக்கும் எதிரி ஆகியோரை சந்தித்துவிட்டு திரும்பி அமெரிக்கா வருகிறான். தான் செய்த தவறுகளை திருத்திக்கொள்கிறான்.   தான் செய்த தவறுகளை வார்த்தைகள் மட்டுமல்லாது செயலாலும் திருத்திக்கொள்ள முயல்கிறான். இதற்குப் பிறகு பிரியா அபியை ஏற்றாளா, அபியின் தொழில்வாழ்க்கை என்னவானது என்பதே இறுதிக் காட்சி.

தமனின் இசையில் பள்ளிக்கால வாழ்க்கையில் வரும் தீம்தன னனனா பாடல் மட்டுமே தேறுகிறது.

நமக்கு கனவு இருக்கலாம். ஆனால் அது கனவாக இருக்காமல் நிஜமாக நிறைய பேர் உதவி செய்திருக்கலாம். நேரடியாக சிலர், மறைமுகமாக சிலர் என உதவியிருக்கலாம். அவர்களுக்கு நன்றி சொல்வதே சிறப்பு. அதுதான் நம்மை உருவாக்கியது என சொல்லுகிறார் இயக்குநர் விக்ரம் குமார்.

அனைவருக்கும் நன்றி!

கோமாளிமேடை டீம்   


கருத்துகள்