திருமணம் நிச்சயிக்கப்பட்ட எட்டு மாதத்திற்குள் பேஷன் டிசைனராகி தன்னை நிரூபிக்கும் பெண்! மெரிசே மெரிசே - இயக்கம் பவன் குமார்

 















மெரிசே மெரிசே

தெலுங்கு

தமிழ் டப் 



படத்தில் உள்ள ஆந்திரதேச ஊர்களை பொள்ளாச்சி, சென்னை என மொழிபெயர்த்தவர்கள் படத்தின் டைட்டிலை அப்படியே விட்டு விட்டார்கள்.  படத்தில் வேறு விஷயங்கள் ஏதுமில்லை. பெண் தனக்கான அடையாளத்தை உருவாக்க எந்தளவு கஷ்டப்படுகிறாள். அதற்காக அவள் படும் பாடுகளே கதை. இதில் பெரிதாக நாயகனுக்கு வேலை கிடையாது. நாயகனின் பெயர் சித்து, நாயகி பெயர் வெண்ணிலா. படத்தின் முதல் காட்சியிலேயே பெண்ணுக்கு கல்யாண நிச்சயம் ஆகிவிடுகிறது. அப்போது பெண் பிகாம் படித்துக்கொண்டிருக்கிறாள். அம்மா இல்லாத பெண். அப்பா மட்டும்தான். எனவே, அவர் நிறைய வரதட்சிணை கொடுத்துத்தான் பெண்ணை மணமுடிக்க நினைத்திருக்கிறார். அப்போது எட்டுமாதம் கழித்து  தான் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக மாப்பிள்ளை சொல்லுகிறார். அப்போதே பெண்ணின் தந்தை எட்டு மாதமா என திடுக்கிடுகிறார். ஆனால் மாப்பிள்ளை அவரை சமாதானப்படுத்துகிறார். அப்போதே கதை ஏறத்தாழ புரிந்துவிடுகிறது. வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அந்தப் பெண் கிடைக்கமாட்டாள் என்பது. இந்த இடைவெளியில் பிகாம் படிப்பை பாதியில் நிறுத்திய பெண், தனது உறவினர் வீட்டுக்கென சென்னைக்கு செல்கிறாள். அங்கு அவளது வாழ்க்கை மாறுகிறது.

அங்குதான் அவள் உடை வடிவமைப்பதில் தனக்குள்ள ஆர்வம் பற்றி தானே அறிகிறாள். எனவே, கல்யாணம் செய்துகொண்டு கணவரின் பணத்தை வாங்கி வாழ்வதை விட தனக்கான அடையாளம் என்பது தானே உருவாக்கியதாக இருக்கவேண்டுமென நினைக்கிறாள். அதை உருவாக்க முயற்சிக்கிறாள். இதற்கான அனைத்து உசுப்பேத்தல்களையும் வெண்ணிலாவின் உறவினர் பெண்ணே செய்கிறார். இந்த நேரத்தில்தான் பெங்களூருவில் இருந்து ஸ்டார்ட்அப்  நிறுவனம் தொடங்கி தோற்றுப்போன சித்து சென்னைக்கு வருகிறார். இவர் பெற்றோர் பெரிய பணக்கார ர்கள். வேலைக்கு போகாமலேயே அ வர்களது குடும்ப தொழிலை செய்தாலே போதும் என அப்பா சொன்னபோதும் தனக்கு விருப்பமானதைத்தான் தான் செய்வேன் என சித்து உறுதியாக இருக்கிறான். விடுமுறை போல நினைத்துக்கொண்டு சென்னைக்கு வருகிறான். நண்பனின் அபார்ட்மெண்ட்டில் தங்கி எப்போதும் மது, கிடைத்த பெண்ணுடன் சந்தோஷமாக இருக்க காண்டம் என வாழ்கிறான். இந்த நேரத்தில்தான் அவன் வெண்ணிலாவைப் பார்க்கிறான். அவளுக்கு சித்துவின் நண்பன் ஸ்கூட்டி ஒன்றை விற்கிறான். பிறகு ஒரு விபத்தில் வெண்ணிலாவின் தோழிக்கு உதவுகிறான். பிறகு அவளது ஃபேஷன் டிசைனிங் தொழிலுக்கும் மெல்ல உதவுகிறான். அவனுடன் இருக்கும்போது வெண்ணிலா பாதுகாப்போடு ஊக்கத்தையும் பெறுகிறாள்.

படத்தில் இருவரும் தங்களது காதலைப் பற்றி ஏதும் சொல்லாமலேயே ஒன்றாக இணைவதுதான் முக்கியமானது.

படத்தில் இறுதிக்காட்சி சரியாக அமையவில்லை. படத்தில் உருப்படியான விஷயம் என்றால், நாயகியின் தேர்வுதான். கன்னக்குழி அழகியின் பெயர் ஸ்வேதா அவஸ்தி. சற்று நடிக்கவும் முயன்றிருக்கிறார். இவர் அணிந்து வரும் ஆடைகள் சிறப்பானவை. சித்துவைப் பொறுத்தவரை இயக்குநருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. அவரின் பாத்திரத்திற்கு நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்களை அதிகப்படுத்தி ஆளுமைக் கொலையே செய்துவிடுகிறார். புனிதம் என்று ஒருவனைக் காட்டவேண்டியதில்லை. ஆனால் அதற்காக காண்டமை பர்சில் வைத்துக்கொண்டு காதலிக்கும் பெண்ணுடன் சினிமா பார்க்க வரும் காட்சி , அடிப்படையான நம்பிக்கையைக் குலைக்கிறது. நாயகியான வெண்ணிலாவை உயர்வாக காட்ட நினைத்திருக்கிறார். நினைத்ததை செய்தும் காட்டியிருக்கிறார் இயக்குநர் பவன். ஆனால் இதற்காக அவர் அமைத்த காட்சிகளில் உற்சாகமோ, ஊக்கமோ இல்லை. இறுதிக்காட்சியில் வெண்ணிலா எடுத்த முடிவு பற்றி அவரது அப்பா ஏதும் பேசவில்லை. அப்பாவுக்காகத்தான் பெண் அத்தனை நேரமும் வருங்கால கணவரின் எரிச்சலான கண்ட்ரோல் பேச்சுகளை பொறுத்துக்கொள்கிறார். ஆனால் அதை அப்பா புரிந்துகொள்ள எந்த காட்சியும் இல்லை. தாயின் அன்பு பற்றி சொன்னவர்கள் அப்பாவின் பாசம் பற்றி எள் அளவுகூட பேசவில்லை.

வென்றது பெண், தோற்றது அவளைச்சுற்றி இருந்த அனைவரும்….

கோமாளிமேடை டீம்

 

 

 

 

 

 

 

 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்