பழங்குடி மனிதன் குல்லுபாயை துரத்த அலையும் மாபியா குழு! குலு குலு - ரத்னகுமார்
குலுகுலு
சந்தானம், பிரதீப் ராவத், தீனா
இசை சந்தோஷ் நாராயணன்
இயக்கம் ரத்னகுமார்
மதிமாறன் என்ற இளைஞன் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு ஊருக்கு வருகிறான்.
அவனுக்கு அப்பா தன் மீது பாசம் காட்டவில்லை என்று வருத்தம். இதனால் தான் கடத்தப்பட்டது
போல நாடகமாடுகிறான். இதில், ஏற்படும் குளறுபடிகளால் மதிமாறனை இலங்கை தமிழ் ஆட்கள் கடத்திப்
போகிறார்கள். இவர்களை மீட்க ஊருக்கே உதவி செய்யும் கூகுள் என்பவரை மதிமாறனின் நண்பர்கள்
தேடிப்போகிறார்கள். அதேநேரம் டேவிட், ராபர்ட் என்ற மாபியா கும்பல், இறந்துபோன தந்தைக்கு
பிறந்த பெண்ணை அதாவது அவர்களது தங்கையை தேடிப்பிடித்து கொல்ல நினைக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே புள்ளியில்
சந்திப்பதுதான் படத்தின் இறுதிக் காட்சி.
கூகுள் என்ற குல்லு பாய் ஆக சந்தானம் நடித்திருக்கிறார். படம் நெடுக அவல
நகைச்சுவை அதிகம். அதில் பெரும்பகுதி குல்லு பாயின் செயல்களை ஒட்டித்தான் நடக்கிறது.
அமேசான் மழைக்காட்டிலிருந்து வந்த பழங்குடி மனிதன். மொழியை தொலைத்துவிட்டு அந்த வருத்தம்
தாளாமல் மதிமாறனின் நண்பர்களோடு அழுவது உருக்கமான காட்சி.
பாடல்களில் எல்லாம் வெடிக்கும் நகைச்சுவை இசைக்கு சந்தோஷ் நாரயணன் தான் காரணம். படத்திற்கு
பொருத்தமான பாடல்களை இசைத்திருக்கிறார். மொத்தம் மூன்று பாடல்தான். அவையும் காட்சிகளோடு
பார்த்தால் நன்றாக இருக்கிறது. மாட்னா காலி பாடல் ரசிக்கும் வகையில் காட்சிபடுத்தியிருக்கிறார்கள்.
மொழி அரசியல், சுயநலமான மனிதர்கள், சமூக வலைத்தளத்தில் உள்ள மனிதர்களின்
போலித்தனம் என நிறைய விஷயங்களை படத்தில் இயக்குநர் கூறியிருக்கிறார். படம் வெளியான
நேரம் எப்படியோ, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் படம் காட்சி ரீதியாக சிவகார்த்திகேயன்
நடித்த டாக்டர் படத்திற்கு நிகரான அவலநகைச்சுவையைக் கொண்டுள்ளது.
படத்தில் பழங்குடியாக நடித்துள்ள சந்தானம், பல்வேறு உதவிகளை செய்து அவமானப்பட்டுக்கொண்டு
இருக்கும் பாத்திரம் என்பதால், சண்டை போடும் காட்சி கூட அவருக்கு பெரிதாக இல்லை. கருணை
நிரம்பியவராக எளிதில் உணர்ச்சிவசப்படுபவராக உள்ளதால் பாத்திரத்தை அப்படி வடிவமைத்துள்ளார்கள்
போல. அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.
குறிப்பிட்ட ஒருவரை மையப்படுத்தாமல் நிறைய பாத்திரங்களின் கதையை சொல்ல
முயன்றிருக்கிறார் இயக்குநர். அதுவே படத்தின் தனித்தன்மை என்று கூறலாம்.
நிதானமாக பார்த்தால் ரசிக்க கூடிய படம்தான் இது.
மனிதம் வற்றாது!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக