கண்டம் தாண்டி காதலியைத் தேடி அடையும் இளைஞனை தடுக்கும் சொந்த ஊர் மக்கள்! பிரின்ஸ் - அனுதீப்

 









பிரின்ஸ் 
சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ்
இயக்கம் - அனுதீப்
இசை தமன்






தீபாவளிக்கு வந்த படம். போட்டியிட்ட சர்தார் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிட்டது. மிகப்பெரும் வெற்றியா என்று கேட்டால் அதையும் உறுதியாக கூற முடியாது. இந்த வகையில் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடேவைக் கூறுகிறார்கள். 

உலகநாதன் (சத்யராஜ்), அரசு வேலை செய்துவிட்டு பணி ஓய்வு பெற்றுவிட்டு வீட்டில் இருக்கிறார். ஊருக்கு பெரிய மனிதராக காட்டிக்கொள்ள நினைப்பவர், குடியரசு தினம், சுதந்திர தினம் என அனைத்து நிக்ழச்சிகளிலும் தேசியக்கொடியை ஏற்றும் மரியாதையைப் பெற்று வருகிறார். இதை இவருக்கு கொடுத்து தனக்கு தேவையான ஆதரவைப் பெற்றுக்கொள்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த நில உரிமையாளர் பூபதி. கண்ணில்படும் நிலங்களையெல்லாம் காசு கொடுத்து சில சமயம் கொடுக்காமல் வாங்கிக் கொண்டு இருக்கிறார். இதுதான் கதையா என்றால் கதையில் இதுவும் ஒரு பகுதி. 

முக்கியமான கதை என்றால், ஊரில் உள்ள பள்ளியில்தான் நடைபெறுகிறது. அங்கு உலகநாதன் மகனான அன்பு சமூக அறிவியல் ஆசிரியராக வேலை செய்கிறார். அவருக்கு வேலையில் பெரிய ஈடுபாடு கிடையாது. பள்ளிக்கு போவதைவிட சினிமா தியேட்டருக்கு போவதில் ஆர்வம் காட்டுகிறார். இந்த நேரத்தில்தான் அவரது பள்ளிக்கு, ஜெஸிகா என்ற இங்கிலாந்து பெண் வேலைக்கு வருகிறார். அவர் வேறுயாருமல்ல, அன்புவின் ஊரில் உள்ள பிரெஞ்சு காலனியில் வாழுகிற ஆங்கிலேயர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரைப் பார்த்ததும் அன்பு காதலில் விழுகிறார். ஆனால் அதை ஜெஸிகா ஏற்பதில்லை. இந்த நேரத்தில், ஜெஸிகாவின் அப்பா அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமாக நிலத்தை விற்றுவிட்டு இங்கிலாந்திற்கு திரும்பிச்செல்ல நினைக்கிறார். ஆனால் அந்த நிலத்தை காசு கொடுக்காமல் ஏமாற்றி வாங்கிவிட நினைக்கிறார் பூபதி. இந்த நிலப்பிரச்னைக்குள் அன்பு - ஜெஸிகாவின் காதல் மாட்டிக்கொள்ள என்ன ஆனது என்பதே இறுதிக் காட்சி. 

இறுதிக்காட்சி என்பதால் பெரிதாக பதற்றப்படவோ, பரபரப்பாகவோ வேண்டியதில்லை. படம் முழுக்க சிறுபிள்ளைத்தனமான காமெடிதான். நீங்க லவ் மேரேஜா, அரேஞ்சுடு மேரேஜா என்றால் பதில் ரெஜிஸ்டர் மேரேஜ் என்று வந்தால் எப்படியிருக்கும்? 

இப்படித்தான் படம் நெடுக நகைச்சுவைக் காட்சிகள் வருகின்றன. படத்தில் உறுத்தலாக அமைந்த விஷயம், ஜெஸிகா தன்னைச்சுற்றியுள்ள உலகை புரிந்துகொண்டவளாக இருக்கிறாள். ஆனால் தன்னை காதலிப்பதாக சொல்லும் அன்பு, எந்த அறிவும் இல்லாதவராக இருக்கிறார். இவரை காதலிப்பது என்பதை காட்சியாக பார்த்தாலும் பொருந்தவில்லை. ஜாதி ரத்னாலு தெலுங்குப் படத்தில் நாயகன், அவன் நண்பர்கள், காதலி என அனைவருமே அசட்டுத்தனமாக இருப்பார்கள். பேசுவார்கள். அளவுதான் மாறும். 

ஆனால் இங்கு ஜெஸிகா நடைமுறை வாழ்க்கையைப் புரிந்துகொண்ட அதைத் தாண்டிய புத்தி கொண்டவர். ஆனால் அவர்,  தன்னை கவர நினைக்கும் மாணவர்களின் கைத்தட்டுகளைப் பெற்றுக்கொடுத்த ஒரே காரணத்திற்காக அன்புவை காதலிப்பது என்பது பொருந்தவில்லை. 

மற்றபடி கதை நடைபெறும் ஊர், மனிதர்கள் எல்லோருமே அனுதீப்பின் தனியாக உலகைச் சேர்ந்தவர்கள். எனவே, இதில் நகைச்சுவையும் அவரது பாணியில் உள்ளது.  எல்லோருமே தங்களது பங்களிப்பிற்கு ஏற்ப கிடைத்த இடத்தில் நடித்திருக்கிறார்கள். படம் தியேட்டரைவிட டிவிகளில் ஓடிடி யில் ஓடினால் நகைச்சுவை புரிபட வாய்ப்புள்ளது. 

தேசப்பற்றைவிட மனிதநேயம்தான் முக்கியம் என்ற கருத்தை படம் சொல்லுகிறது. ஆனால் சொல்லும் காட்சிகள் வலுவாக அமையவில்லை. சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்கள், எழுதிய பாடல்களை கேலி செய்வது நன்றாக இருக்கிறது. ஒருவகையில் படம் இப்படி கிண்டல் செய்வதற்குத்தான் எடுத்தார்களோ என்று கூட நம்பலாம். சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் நடித்ததை பற்றி நிறைய விமர்சனங்கள் வருகிறது. அவர் வேலைக்காரன் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்தது போல வர்த்தகரீதியாக ஓடவில்லை. 


தனி உலக காமெடி 

கோமாளிமேடை டீம் 




கருத்துகள்