காடுகளை பாதுகாக்க அதை நேசிக்கும் பளியன் செய்யும் கொலை - கானகன் - லஷ்மி சரவணக்குமார்

 கானகன் (நாவல்)
லஷ்மி சரவணக்குமார்

 

பளியர்களின் வாழ்க்கையை பேசும் நாவல். பளியக்குடிகள் காடுகளை நேசித்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு வேலை என்பது விவசாயம் சார்ந்த்துதான். அதுவும் கூட காட்டின் இயல்பறிந்து நடப்பதுதான். அதை அழித்து தன் வழிக்கு கொண்டு வருவது அல்ல. ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்காமலா இருக்கும்? அப்படியான அழிவுகளை தொடங்கி வைப்பவனாக இருக்கிறான் தங்கப்பன். நாவல் முழுக்க வரும் பாத்திரம் வேட்டைக்காரரான தங்கப்பன்தான். இவன்தான் வேட்டை என்பதை வாழ்நாள் முழுக்க தொடரும் தன்னை மறக்கும் நிலையாக, பாலுறவு போன்று பார்க்கும் மனிதன். இதனால்தான் தங்கப்பனுக்கு வேட்டை என்பது முக்கியமான ஒன்று. இந்த வேட்டையாடும் வெறியான மனநிலையை கஞ்சா தோட்ட முதலாளிகள், விவசாய பண்ணைக்காரர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

நாவலின் முதல் காட்சியே காட்டின் அழிவைத் தொடங்கி வைக்கும் நிகழ்வுதான். காட்டின் உணவுச்சங்கிலியை பாதுகாக்கும் குட்டி ஈன்ற பெண் புலியை வேட்டையாடி கொல்கிறார்கள். அதில் தங்கப்பன், மாட்டுப் பண்ணை நடத்தும் அன்சாரிக்காக புலியை வேட்டையாடுகிறான். இதில் ஏற்படும் வினை அதற்கான விளைவை காடு தங்கப்பனின் வளர்ப்பு மகனான வாசி மூலம் திருப்பிக் கொடுத்து சமன் செய்யும். அதுதான் நாவலை முக்கியமானதாக மாற்றுகிறது.

நாவலின் முக்கியப் பாத்திரங்களாக காடுகளை நேசித்து பித்தமேறி திரியும் சடையன், வேட்டை ஆர்வம் தீவிரம் ஆக அதற்கேற்ப தங்கப்பனை தனது துணையாக்கிக் கொள்ளும் சடையனின் மனைவி செல்லாயி,  மூன்றாவதாக செல்லாயி வந்தாலும் அவளது குழந்தையான வாசியை தங்களது  குழந்தையாகவே நினைத்து வளர்க்கிறார்கள் தங்கப்பனின் மனைவிகளான மாரி, சகாய ராணி, பழங்குடிகளுக்கான முன்னே நின்று அனைத்து பாதிப்புகளையும் பார்த்து மனம் குலையும் பளியர் தலைவர் பூசணி, வாசியின் சித்தப்பா மகனான கட்டையன், மாட்டுப்பண்ணை நடத்தியபடி தங்கப்பனோடு திரியும் அன்சாரி, அண்ணன் சொன்ன சொல்லைக் கேட்டு நடக்கும் தம்பி தமீம், காட்டை வேட்டையாடி தனது சொத்தாக மாற்றிக்கொள்ள நினைக்கும் கஞ்சா தோட்ட முதலாளி, அதற்கு காசு வாங்கிக்கொண்டு துணைபோகும் வனத்துறை, காட்டின் வளங்களை கொள்ளையடிக்க வரும் தொண்டு நிறுவனங்கள், அதை தடுத்து அரசியல் பிரச்னையாக்கி பழங்குடிகளை காக்க முயலும் இடதுசாரி கட்சிகள் என நிறைய விஷயங்களை நூலில் பேசுகிறார்கள். நாவல் முழுக்க பெருமளவு வரும் பாத்திரம் என்றால் அது தங்கப்பன்தான். ஏனெனில் இவர்தான் காட்டில் உள்ள இயற்கை வளத்தை அழிப்பதற்கான முதல் விதையை ஊன்றுகிறார். இதன் விளைவுகளை பளிச்சி பார்த்து பதிலடி கொடுப்பாள் என பளியர்கள் காத்திருக்கிறார்கள்.  உண்மையில் அவர்கள் அதைப்பற்றி கவலைப்படும் நிலையில் இல்லை. ஏனெனில் விவசாயம் இல்லாத நேரங்களில் அவர்கள் காசு கிடைக்கிறது என காட்டை அழித்துப் போடப்பட்ட கஞ்சாத் தோட்ட வேலைக்கை போகிறார்கள். இதில் வேறுபட்ட மனிதராக பிறரைப் பற்றி கவலைப்படுபவராக இருப்பது பித்து பிடித்த சடையன், பளியக்குடி தலைவரான பூசணி மட்டுமே . இவர்களின் வரிசையில் பின்னாளில் மெல்ல வாசி வந்து இணைகிறான்.

 

வாசி, தங்கப்பனோடு சேர்ந்து வேட்டை பழகுகிறான். அதை பழகும்போதுதான் தான் முழுமையாக வேட்டைக்காரனாக இருக்க முடியாது என்பதை உணர்கிறான். இதை அவன் கருங்குரங்குகளை வேட்டையாடி உடலை எடுத்துச்சென்று விற்கும் நேரத்தில் உணர்கிறான். உடனே அவன் பளியக்குடிக்கு வந்துவிடுகிறான். அதேநேரம் வாசி தன்னை அவனது தந்தையாக ஏற்கவில்லை என்பது தங்கப்பனுக்கு பெரும் மனக்குலைவை ஏற்படுத்துகிறது. வாசி, பளியக்குடியைச் சேர்ந்தவன். அவனோடு வாழ்ந்து குழந்தையை வயிற்றில் வளர்த்து வரும் செல்லாயி கூட பளிச்சி. ஆனால் தங்கப்ப்பனின் குடிசையில் தங்கி அவனது மனைவிகளின் கைகளில் சாப்பிடும் வாசி அவனை வளர்ப்புத்தந்தை என்று கூட நினைப்பதில்லை. இந்த வேறுபாடு கானகன் நாவலை வேறு ஒரு தன்மையில் மாற்றுகிறது. இரு பாத்திரங்களுக்கு இடையில் கனன்று   எழும் விரோதம் இறுதியில் ஒருவரையொருவர் பலிகொள்ளும் தன்மை கொண்டது. வாசியை தங்கப்பன் வெறுப்பதற்கு இன்னொரு காரணம், காட்டோடு விலங்குகளோடு அவன் கொண்டுள்ள இணக்கமான தன்மை.

வாசி அவனது தந்தையான சடையனின் வேட்டைக்காக காட்டுக்குச் செல்லும் இயல்பைக் கொண்டது. அவனது பிள்ளை அதே தன்மையில் காட்டை நேசிப்பவனாக இருக்கிறான். இதுதான் தங்கப்பனுக்கு பயத்தைக் கொடுக்கிறது.  வேட்டையாடுவதில் தனக்கு வாரிசாக வாசி இருக்கவேண்டுமென தங்கப்பன் விரும்புகிறான். அவனுக்கு பெண் குழந்தை பிறப்பதால், அவளை வாரிசாக தான் வளர்த்தெடுக்க முடியாது என்பதை தங்கப்பன் உணரும்போது வாசி, அவனைவிட்டு வெகு தொலைவு சென்றுவிடுகிறான்.

நாவலில் உறவுகளின் போதாமைகளை வாழ்வின் போக்கில் ஏற்றுக்கொள்ளும் நிறைய இடங்கள் உள்ளன. வாசி தன்னை சடையன் மகனாக முதல்முறையாக உணர்ந்து அடையாளம் கண்டு அவனைக் கண்டு பேச காட்டில் அலைந்து திரியும் காட்சி, மாரி, சகாய ராணி ஆகியோர் செல்லாயிக்காக தங்களை புறக்கணிக்கும் கணவன் தங்கப்பன்னை சகித்துக்கொள்வது, இவர்களின் மனக்குமுறல்களை செல்லாயி ஒருமுறை உணர்ந்து பாலுறவு முனகல்களை கேட்க முடியாமல் பள்ளக்குடிக்கு செல்வது, காடுகளை அழிக்க முயலும் செயல்பாடுகளை பார்த்து சடையன் பதறிக்கொண்டு அங்கும் இங்குமாக பட்டாம்பூச்சி பறக்கிறது என்று சொல்லிக்கொண்டு செல்வது,

பிறகு தனது மனைவிக்கு குழந்தை பிறந்திருக்கிறது என அவளது குடிக்குச் சென்று குழந்தையை அள்ளிக் கொஞ்சுவது, அவனின் வருகையால் செல்லாயிக்கு  ஏற்படும் பரிதவிப்பும் பரவச அனுபவமும்; இதே அனுபவத்தை அவள் வாசியிடம் அவனது அருகாமையில் உணர்வது, தங்கப்பன் குடிபோதையில் புலியின் தாக்குதலுக்குட்பட்டு வேட்டைக்கு செல்லாமல் தனக்குள்ளே குமைந்து கொண்டு இருப்பது, பிறகு தனது செயலுக்கு வருந்தி இறப்பை முழுமையாக ஒப்புக்கொடுத்து நிற்பது, அமைதியாக வன அதிகாரிகளுக்கு இசைந்து செல்லும் பூசனி பணத்தை வாங்கிக்கொண்டு பளியர் குடிகளை அதிகாரிகள் அடித்து நொறுக்கி சிதைக்க கோபம் பொறுக்கமுடியாமல் அவர்களை கட்டி வைத்து உதைப்பது என நாவலில் ஆச்சரியமான நிறைய சம்பவங்கள் வாசிக்கும்போது காட்சிகளாகவே விரிகின்றன.

கானகன் நாவல் தங்கப்பனின் எழுச்சி, வீழ்ச்சியை மட்டுமே சொல்லுகிறது. இதில் வாசியின் திறனை, காடுகளின் மீதான பாசத்தை உணரும் இடம் என்பது யானைகளை அழியாமல் சுடப்படாமல் காப்பதுதான். கானகன் தங்கப்பன் என்ற வேட்டைக்காரனின் வாழ்க்கையையொட்டி காடுகள் அழிந்து வருவதை சொல்லுகிறது. வாசிக்கு இந்த நாவல் போதாது… காடாளன் என்ற பெயரில் வாசியின் கதை, காடுகளைக் காக்கும் போராட்டத்தை சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது. எதிர்காலத்தில் லஷ்மி சரவணக்குமார் அதை செய்வார் என நம்புவோம்.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை