பட்டினி கிடப்பவருக்கு உணவு கொடுத்தால் அன்பாகாதா? ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்

 









அகம் புறம்

ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் 


வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் என்ன?

வாழ்க்கைதான். நீங்கள் வாழ்க்கையை எப்படியாக உருவாக்கிக் கொள்ளவேண்டுமென நினைக்கிறீர்களோ அதுவேதான்.

ஒருவரின் வாழ்க்கையில் லட்சியம், குறிக்கோள் என்பது என்ன? அதாவது தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையில் உள்ள லட்சியத்தைப் பற்றி பேசவில்லை. பொதுவாக அனைவரின் வாழ்க்கையில் உள்ள லட்சியத்தைப் பற்றி கேட்கிறேன்.

லட்சியத்தை எப்படி கண்டுபிடிப்பீர்கள். யார் அதை உங்களுக்கு காட்டுவார்கள்? வாசிப்பதன் மூலம் அறிந்துவிடமுடியும் என நினைக்கிறீர்களா?  ஒரு எழுத்தாளர் லட்சியம் என்பதை தான் புரிந்துகொண்ட முறையில் எழுதுவார். இன்னொரு எழுத்தாளர் இன்னொரு முறையை பின்பற்றுவார். கஷ்டத்தில் உள்ள மனிதனைச் சென்று லட்சியம் என்னவென்று கேட்டால் மகிழ்ச்சியாக வாழ்வது என்பான். பசியில் இருப்பவனைக் கேட்டால், வயிறு நிறைந்திருப்பது என்பான், பெண்ணைக் கேட்டால், குழந்தை பெற்றுக்கொள்வது என்பாள், அரசியல்வாதியைக் கேட்டால், முக்கியமான அரசியல் தலைவராக ஆக வேண்டும் என்பார். சன்னியாசியைக் கேட்டால் அவருக்கு கடவுளைக் காண்பது அடைவது லட்சியம் என்பார். லட்சியம், இலக்கு என்பது பாதுகாப்ப, வசதி  என்பதாக உருவாகியுள்ளது. இந்த விஷயத்தில் ஒருவருக்கு சந்தேகம், வாழ்க்கை, பதற்றம், பயம் என ஏதுமே இருக்காது.

நாம் பெறும் விஷயங்கள் நிரந்தரமாக இருக்கவேண்டும் என்பதுதானே அனைவரின் ஆசையாக உள்ளது. அனைத்து மனிதர்களின் வாழ்க்கையிலும் பொதுவான லட்சியம் என்பது   நம்பிக்கை, பாதுகாப்பு, நிரந்தரத்தன்மை ஆகிய மூன்று விஷயங்கள் முக்கியமாக உள்ளது. இவைதானா என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். அப்படியென்றால் உங்களை நீங்களே கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். மனதில் மேலோட்டமாக நிறைய மாயைகள் இருக்கும். வலி, வேதனை, பேராசை, நம்பிக்கை, பயம் ஆகியவற்றைக் கடந்து சென்றால் உண்மையில் நீங்கள் தேடுவது என்ன என்பது உங்களுக்கே தெரியும். அதை சமரசமின்றி தேடினால் நீங்களே கண்டுபிடிக்கலாம்.

ஒரு மனிதர் பட்டினியாக கிடக்கும்போது  நான் அவருக்கு உதவுகிறேன். இது பேராசையா அல்லது அன்பா?

நீங்களும் செய்யும் செயலின் நோக்கத்தைப் பொறுத்தே அது அமையும். அரசியல்வாதி ஏழையின் பட்டினிக்கு உதவுவதாக கூறுகிறார். பின்னாளில்  அவர் டெல்லியில் பெரிய வீட்டில் தங்கியிருக்கிறார். தன்னை பிறருக்கு உதவுபவராகவே  காட்டிக்கொள்கிறார். உண்மையில் அது அன்பா, உங்களுக்கு இது புரிகிறதா?

நான் உதவி செய்து ஒருவரின் பட்டினியை போக்குகிறேன். அது அன்பு கிடையாதா?

ஒருவர் பசியோடு இருக்கிறார். நீங்கள் அவருக்கு உணவு கொடுத்து உதவுகிறீர்கள். இது அன்பா? நீங்கள் எதற்கு அவருக்கு உதவுகிறீர்கள்? உதவி செய்யவேண்டும் என்ற ஆசையைத் தவிர வேறெதுவும் இல்லாமல் நீங்கள் அவருக்கு உதவினீர்களா? அவருக்கு உதவும்போது வேறு எதுவும் மனதில் தோன்றவில்லையா? உடனே ஆம், இல்லை என்று கூறவேண்டாம். உணவு கொடுத்து உதவியதில் வேறு ஏதும் காரணங்கள் அதாவது, அரசியல் அல்லது அகம், புறம் என எப்படி இருந்தாலும் அது அன்பு ஆகாது. ஒருவருக்கு உதவுவதன் மூலம் நீங்கள் பிறரால் பாராட்டப்படுகிறீர்களா அல்லது உங்கள் நண்பர்கள் உங்களை டெல்லிக்கு போக உதவுவார்களா? இப்படி ஏதேனும் நோக்கம் மனதில் இருந்தால் அது அன்பு கிடையாது. ஒருவருக்கு உணவளித்துவிட்டு அதற்காக எந்த பயனையும் எதிர்பார்க்காமல் இருந்தால் அதை அன்பென கூறலாம். அவருக்கு உணவளித்தும் அவர் உங்களுக்கு செய்த உதவி மேல் நன்றியுணர்வு இல்லாமல் இருக்கிறார்களா? அப்படி இருந்து உங்களுக்கு காயம்பட்டது போல இருக்கிறதா அப்படியென்றால் அந்த செயலை அன்புடன் நீங்கள் செய்யவில்லை என்றாகிறது.

நீங்கள் செய்யும் உதவியை பெற்றவர் உங்களை புகழ்கிறார், ஊரில் உள்ளவர்கள் புகழ்கிறார்கள் என்றால் அதைக்கேட்டு உங்களுக்கும் மகிழ்ச்சியான உணர்வு ஏற்படுகிறதா அப்படியென்றால் நீங்கள் பரிவுணர்வோடு ஒருவருக்கு உதவவில்லை.எனவே ஒருவர் மற்றொருவருக்கு உதவுகிறார் என்றால் அதற்கான உள்நோக்கம் காரணம் பற்றி கவனமாக இருக்கவேண்டும்.

 

லைஃப் அகேட் நூலில் இருந்து….


கருத்துகள்